சமீபத்திய பதிவுகள்

மொகாலி டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா இமாலய வெற்றி 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை நொறுக்கியது

>> Tuesday, October 21, 2008




மொகாலி, அக்.22-

மொகாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பந்தாடியது.

மொகாலி டெஸ்ட்

ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பெங்களூரில் நடந்த முதலாவது டெஸ்ட் `டிரா' ஆனது. அதை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 469 ரன்களும், ஆஸ்திரேலியா 268 ரன்களும் எடுத்தன.

இதன் பின்னர் 201 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் 42 ரன்களுடனும், ஹேடின் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜாகீர்கான் அசத்தல்

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியாவின் தாக்குதலில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் சரிந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹேடினை (37 ரன்) சாய்த்த, ஜாகீர்கான் தனது அடுத்த ஓவரில் கேமரூன் ஒயிட் (1 ரன்), பிரெட்லீ (0) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஜாகீருக்கு ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக ஸ்லிப்பில் 4 பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் அவரது `ஹாட்ரிக்'வாய்ப்பை ஜான்சன் தடுத்து விட்டார்.

9-வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் கிளார்க்-ஜான்சன் ஜோடி இந்தியாவின் வெற்றியை சிறிது நேரம் தாமதப்படுத்தியது. இறுதியில் இவர்களை புதுமுக சுழற் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, காலி செய்தார். ஜான்சன் 26 ரன்னிலும் (44 பந்து, 4 பவுண்டரி), மைக்கேல் கிளார்க் 69 ரன்னிலும் (152 பந்து, 9 பவுண்டரி) வெளியேற, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது.

இந்தியா அபார வெற்றி

இதனால் இந்திய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் பிரமிப்பான வெற்றியை ருசித்தது. டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை தவிர்த்து, அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு கிடைத்த இமாலய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பாக 1996-ம் ஆண்டு கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே, இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

2-வது இன்னிங்சில் இந்திய தரப்பில் ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து அதிரடியாக 170 ரன்கள் (92, 68) குவித்த இந்திய பொறுப்பு கேப்டன் டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

லாராவின் சாதனையை முறியடித்து டெஸ்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கருக்கும், மொகாலியில் தனது கடைசி டெஸ்டில் ஆடிய சவுரவ் கங்குலிக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.





இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 469

ஆஸ்திரேலியா 268

2-வது இன்னிங்ஸ்

இந்தியா-314/3 டிக்ளேர்

ஆஸ்திரேலியா

ஹைடன் எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன்சிங் 29

கேடிச் (சி) தெண்டுல்கர் (பி) ஹர்பஜன்சிங் 20

பாண்டிங் (பி) இஷாந்த் 2

ஹஸ்ஸி எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன்சிங் 1

மைக்கேல் கிளார்க் (சி) ஷேவாக் (பி) மிஸ்ரா 69

வாட்சன் எல்.பி.டபிள்ï (பி) இஷாந்த் 2

ஹேடின் (பி) ஜாகீர்கான் 37

ஒயிட் (சி) டோனி (பி) ஜாகீர்கான் 1

பிரெட்லீ (பி) ஜாகீÖகான் 0

ஜான்சன் (சி) அண்ட் (பி) மிஸ்ரா 26

சிடில் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (64.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 195

விக்கெட் வீழ்ச்சி: 1-49, 2-50, 3-52, 4-52, 5-58, 6-142, 7-144, 8-144, 9-194

பந்து வீச்சு விவரம்

ஜாகீர்கான் 15-3-71-3

இஷாந்த் ஷர்மா 13-4-42-2

ஹர்பஜன்சிங் 20-3-36-3

அமித் மிஸ்ரா 11.4-2-35-2

ஷேவாக் 5-2-7-0

பாக்ஸ் செய்தி

சாதனை துளிகள்

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இந்த டெஸ்டில் 106 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுக டெஸ்டிலேயே 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது இந்திய வீரர் அமித் மிஸ்ரா ஆவார்.

*ஜாகீர்கான் நேற்று பந்து வீசுகையில், 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்டில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது இந்திய வீரர் ஜாகீர்கான் ஆவார். இதற்கு முன்பாக ரவி சாஸ்திரி, கபில்தேவ், கும்பிளே ஆகியோர் இந்த சிறப்பை பெற்றிருக்கிறார்கள்.

*கும்பிளே காயமடைந்ததால் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தற்காலிகமாக ஏற்ற டோனி தலைமையில் இந்தியா வரலாற்று வெற்றியை சுவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டிலும் டோனி தலைமையில் இந்தியா வென்றிருக்கிறது. கேப்டன் பொறுப்பில் முதல் 2 டெஸ்டிலேயே வெற்றியை தேடித்தந்த 3-வது இந்திய கேப்டன் டோனி ஆவார். முன்னதாக தெண்டுல்கர், கங்குலி தலைமை ஏற்ற போதும் முதல் 2 டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

*டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 3-வது விக்கெட் கீப்பர் கேப்டன் டோனி ஆவார். இதற்கு முன்பாக ஜிம்பாப்வே வீரர்கள் ஆன்டி பிளவர் (பாகிஸ்தான் எதிராக, 1994-95), தைபு (வங்காளதேசம் எதிராக, 2004-05) ஆகியோர் மேற்கண்ட பெருமைக்குரியவர்கள்.

*இந்திய மண்ணில், இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 38 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா 12 வெற்றி பெற்றிருக்கின்றன. 13 ஆட்டம் `டிரா'வும், ஒரு டெஸ்ட் `டை'யிலும் முடிந்துள்ளன. பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இதுவரை 3 டெஸ்ட் விளையாடி உள்ளது. இதில் 2-ல் தோற்று உள்ளது. மற்றொன்று `டிரா' ஆகியிருக்கிறது.

அதிக ரன்கள் வித்தியாசத்தில இந்தியாவின் வெற்றிகள்

வெற்றி ரன் எதிரணி மைதானம் ஆண்டு

320 ஆஸ்திரேலியா மொகாலி 2008

280 தென்அப்பிரிக்கா கான்பூர் 1996

279 இங்கிலாந்து லீட்ஸ் 1986

272 நிïசிலாந்து ஆக்லாந்து 1968

259 இலங்கை ஆமதாபாத் 2005

255 வெஸ்ட் இண்டீஸ் சென்னை 1988

235 இலங்கை கொழும்பு 1993

222 ஆஸ்திரேலியா மெல்போர்ன் 1977

216 நிïசிலாந்து சென்னை 1976

212 பாகிஸ்தான் டெல்லி 1999
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP