சமீபத்திய பதிவுகள்

கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்:விஜயகாந்த் வற்புறுத்தல்

>> Thursday, October 9, 2008

 
 
lankasri.comதே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ்நாட்டில் சமீப காலமாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்த தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும் கிறிஸ்துவ மக்கள் தாக்கப்படுவதும் இதுவரையில் இல்லாத,அதே நேரத்தில் கண்டிக்கத்தக்கச் செயல்களாகும்.

பலதரப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு காலம்காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அண்ணன் தம்பிகளாக, அக்காள்,தங்கைகளாக இன்றும் இருந்து வருகின்றனர்.

இந்த நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சிறு தீப்பொறியாக இருந்த இந்த சம்பவங்கள் பெருந்தீயாக மாறியுள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஒரு தரப்பினரை ஆதரித்தால் மற்ற தரப்பினரின் வாக்குகள் போய்விடும் என்று அரசு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தக் கூடாது. யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே போன்று காவல் துறையினரும் நடுநிலையோடு இயங்க வேண்டியது அவசியம். அரசியல் தலையீடு காரணமாக காலம் தாழ்த்துவதோ அல்லது அப்பாவி மக்கள் மீது வழக்கு போடுவதோ கூடாது. காவல் துறையில் கறுப்பு ஆடுகள் இருந்தால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை முழு சுதந்திரத்தோடு செயல்பட அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவர் களும் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற உணர்வு, எல்லாதரப்பு மக்களுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் வகுப்புக் கலவரங்களுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பது கடந்த கால நிகழ்ச்சிகளிலிருந்து தமிழ்நாடு அரசுக்குத் தெரியும். அத்தகைய இடங்களில் கோவில்களானாலும், மசூதி களானாலும்,தேவாலயங்களானாலும் அரசு முன் கூட்டியே பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்க முடியும். அரசின் உளவுத்துறை எதிர்க்கட்சியினரை கண்காணிக்கப்பயன் படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. உயிர் என்பது விலை மதிக்க முடியாது ஒன்று. குடும்பத் தலைவர் போய்விட்டால் குடும்பமே தெருவில் நிற்க வேண்டி வரும்.

மதம் என்பது அவரவரது நம்பிக்கையைப்பொருத்தது. யார் எந்த மதத்தை கடை பிடித்தாலும் அவர்கள் அனைவரும் சமாதானமாக வாழக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பது அரசின் கடமையாகும். எல்லோரும் இந்தியர்கள் என்பது வெறும் முழக்கமாக இருக்கக் கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படவும், எந்த சாராரும் புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு பெற சமவாய்ப்பு அளித்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் பன்மைச் சமுதாயமாக இயங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சணியமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP