சமீபத்திய பதிவுகள்

புலிகளின் முழு பெலத்தையும் வைத்து போரிடாத மர்மம் என்ன? ஒரு சிறிய ஆய்வு

>> Sunday, February 15, 2009

புலிகள் தமது முழுப் பலத்தையும் பாவிக்கின்றார்களா?
 
.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன.

இரண்டாவது கடிதத்தில் ""புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்" என்கின்ற ஒரு "செய்தியை" குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகையிட வேண்டும் என்றும், "தமிழீழமே இந்தியாவின் உண்மையான நட்பு நாடு" என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு "ஆலோசனையையும்" கூறியிருந்தார். இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் என்னுடைய சில கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும், வளங்களையும் பயன்படுத்தி போரிடுகின்றார்கள் என்னும் செய்தியை தன்னுடைய ஊகிப்பின் அடிப்படையில் கூறவதாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் "வன்னியின் உண்மை நிலை இதுதான்" என்று உறுதியான முறையில் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவது போன்று விடுதலைப் புலிகள் ஒரு போதும் போரிடுவது இல்லை.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி போரிட்டால், அது எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும். தமது பலத்தை பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டே விடுதலைப் புலிகள் போரை எதிர்கொள்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நடத்திய போர்களும் உண்டு. உதாரணமாக ஓயாத அலைகள் மூன்றைச் சொல்லலாம். அதில் விடுதலைப் புலிகளின் அனைத்துப் படையணிகளும், அனைத்து விதமான ஆயுதங்களும், வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார்.

குடாரப்பு தரையிறக்கத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1500 போராளிகளையும் அவர்களின் ஆயுதங்களையும், அவர்களுக்கு தேவையான மற்றைய பொருட்களையும் கடலால் கொண்டு சென்று இறக்க வேண்டும். இந்தப் பணிகளை செய்வதற்கு நுற்றுக் கணக்கான படகுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பல சண்டைப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் சிறப்புத் தளபதி சூசை பிரிகேடியர் பால்ராஜிடம் கூறிய தகவல் இதுதான். "உங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மட்டுதான் எம்மிடம் உள்ள எரிபொருள் போதும்". அதாவது குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அவர்களை மீண்டும் கடலால் அழைத்து வர முடியாது. தம்மிடம் உள்ள கடைசி வளங்களையும் பயன்படுத்தி ஓயாத அலைகள் மூன்றை விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.

அனைத்து வளங்களைப் பயன்படுத்தினாலும், அடி வாங்கித் தோற்றோடிய சிறிலங்காப் படைகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பதில் தாக்குதல் எதையும் பெரியளவில் செய்ய முடியாது என்பதை சரியாக கணித்தே அதைச் செய்தார்கள். அதே வேளை அனைத்து வளங்களையும் பாவித்து விட்டு நிற்கின்றோம் என்னும் எச்சரிக்கை உணர்வே விடுதலைப் புலிகளை யாழ் குடாவிற்குள் தொடர்ந்தும் முன்னேறாது தடுத்தது.

பின்பு சிறிலங்கா அரசு உலகநாடுகளிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் உட்பட பல நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்கள் மீது படைநடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இழப்புக்களை சந்தித்த விடுதலைப் புலிகள் அப் பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டி நேர்ந்தது.

ஆயினும் சில மாதங்கள் கழித்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் சிறந்த திட்டமிடலோடு எதிர்கொண்டு சிறிலங்காப் படைகளை ஒரு பொறிக்குள் வீழ்த்தி பெரும் அழிவுக்கு உள்ளாக்கி முறியடித்தார்கள். ஏற்கனவே ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட இழப்போடு, தீச்சுவாலை முறியடிப்பும் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலும் சேர்ந்து சிறிலங்காப் படையினரை முடக்கிப் போட்டது.

தம்முடைய நடவடிக்கை சிறிலங்காப் படைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் எழ விடாமல் செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, விடுதலைப் புலிகள் தமது முழ வளங்களையும் ஒருங்கிணைத்து பெரும் சமர்களை செய்வார்கள். சிறிலங்காப் படைகள் முடங்கிக் கிடக்கும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமது படையணிகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் தற்காப்புச் சண்டைகள் என்றாலும் சரி, வலிந்த தாக்குதல்கள் என்றாலும் சரி, விடுதலைப் புலிகள் தமது அனைத்து வளங்களையும் பலத்தையும் பயன்படுத்துவது சரியான உத்தியாக அமையாது என்றே கருதப்படுகின்றது. இன்றைக்கு விடுதலைப் புலிகள் தமது அனைத்து படையணிகளையும், வளங்களையும் பயன்படுத்தி சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தால், விடுதலைப் புலிகளால் பல பகுதிகளை மீட்க முடியும். சிறிலங்காப் படைகளும் பின்வாங்கி ஓடும்.

ஆனால் சிறிலங்காவிற்கு முண்டுகொடுத்து போரை நேரடியாக நடத்தும் இந்தியாவும், மற்றைய உதவிகளை செய்து வரும் வல்லரசு நாடுகளும் உடனடியாகவே சிறிலங்காப் படைகளை மீளப் பலப்படுத்தி விடும். தன்னுடைய படையினரை நேரடியாக களத்தில் இறக்கியிருக்கும் இந்தியாவும் உடனடியாகவே மேலதிக படையினரை தருவித்து ஆட்பலப் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும்.

தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் படையணிகளையும் களம் இறக்கி பெரும் சண்டையை நடத்திய விடுதலைப் புலிகள் ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் கண்டிருக்கக் கூடிய சேதங்களை சரி செய்வதற்குள் சிறிலங்காப் படைகள் மீண்டும் அசுர பலத்தோடு எழுந்து நிற்கும். இப்பொழுது மீண்டும் தாக்குதல் நடத்தி பலவீனப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடித்தும் விடுவார்கள்.

ஆகவே அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய சண்டை, கடைசியில் அவர்களுக்கு பாதகமாக முடியக் கூடிய நிலையே தற்பொழுது காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது கடைசிப் பலத்தையும் பயன்படுத்தி போரிட வேண்டும் என்றுதான் சிறிலங்காவும், அதன் நட்பு சக்திகளும் விரும்புகின்றன. ஆனால் அதை விடுதலைப் புலிகள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் தமது பலத்தை முடிந்தளவு பாதுகாத்தபடியே, போரின் எல்லைகளை விரிவுபடுத்தி, எதிரிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தபடி போரை நீடித்துக் கொண்டு போவார்கள் என்பதே இன்றைக்கு எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. இந்திய அரசு இந்தப் போரில் இருந்து விலகும் வரை இதைத் தவிர வேறு வழியேதும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்திய அரசை இந்தப் போரில் இருந்து விலகச் செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டியதே அனைத்துத் தமிழர்கள் முன் உள்ள பெரும் பணியாக இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்று திரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அது மட்டுமே போதுமானது அன்று. உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ள அரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக் கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை.

ஒரு நாடு தன்னுடைய நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த நாட்டில் வாழும் ஒரு சிறு தொகையைக் கொண்ட புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் குறிப்பிடக் கூடிய அழுத்தம் எதையும் கொடுக்க முடியாது. மின்னஞ்சல்கள் அதற்கான குப்பைத்தொட்டிக்குள் போனால், கடிதங்களும் அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டிக்குள் போகும். அவ்வளவுதான்.

"தமிழீழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பன்" என்று இந்தியாவிற்கு விளங்கப்படுத்தலாம் என்று நம்புவதும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றது. நாம் சொல்லும் காரணங்கள் இந்தியாவிற்கு புரியவில்லை என்று உண்மையிலேயே யாராவது நம்புகின்றீர்களா? இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அத்தனை முட்டாள்களா?

தன்னுடைய நலன்களை முன்னிலைப்படுத்தும் இந்திய அதிகார மையம் இந்திய அரசை வழிநடத்துவதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம். இவர்களுடைய நலன்கள் வேறு வகையானவை. பனிப்போர் காலத்தில் இருந்த இந்திய நாட்டின் நலன்களைப் பற்றி நாம் இன்றைக்கும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதும் இல்லை.

"நாங்கள்தான் உங்கள் நண்பன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் வருமே தவிர, வேறு ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

தமிழீழம் உருவாவது இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால நோக்கில் தமது இருப்பைப் தமிழீழத்தின் உருவாக்கம் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆட்சியைக் குழப்புவதற்கு இவர்கள் செய்கின்ற சதி வேலைகளும் இது போன்ற கருத்தின் அடிப்படையிலானதே.

இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு ஏற்றபடி எம்மால் நடக்க முடியாது என்பதும், அப்படிச் செய்வதானது எமது விடுதலைப் போராட்டத்தையே காவு கொடுப்பதற்கு ஒப்பானது என்பதுமே யதார்த்த நிலையாக இருக்கின்றது.

இந்த நிலையில் இந்திய மக்களினதும், உலக மக்களினதும் மனச் சாட்சியைத் தட்டியெழுப்பும்படியான அறப் போராட்டங்களை தொடர்வதோடு, தமிழ்நாட்டிலும் உலகின் மற்றைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்திய சிறிலங்கா அரசுகளின் இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொள்வதுதான் இன்று எமக்கு முன் உள்ள வழி.

http://www.swisstamilweb.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

4 கருத்துரைகள்:

anna February 15, 2009 at 10:19 PM  

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

வி.சபேசன் February 16, 2009 at 4:16 AM  

வணக்கம்,
இந்தக் கட்டுரையின் உண்மையான மூலம் இதுவாகும்:

http://www.webeelam.net
http://www.webeelam.net/?p=382

தெய்வமகன் February 16, 2009 at 4:35 AM  

உங்கள் தகவலுக்கு நன்றி

Anonymous February 16, 2009 at 7:49 AM  

Do you know what is the real situation in Wanni? NO
There is no independent reports.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP