சமீபத்திய பதிவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதிகார வெற்றிடமும்

>> Wednesday, June 3, 2009

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதிகார வெற்றிடமும்....குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக அரிதேவா:

 
 
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் அதிகாரம் சிங்கள இனத்தினது எனக் கருதப்படக்கூடிய வகையில் மாற்றம் அடைந்தது.  நாடோன்றின் அரசஅதிகாரம், குறித்த இனம் ஒன்றினால் மட்டுமே அனுபவிக்கப்படும் போது பல்லினங்கள் வாழும் நாட்டில் பிரச்சினைகள் தோன்றும்.  தோன்றுகின்றன.  இனங்களின் தனித்தன்மைகளுக்கு பாதுகாப்பும் உரிமையும் அளிக்கப்படவேண்டும்.   அரசு இன அடிப்படையில் இயங்க முடியாது.  ஆனால் இலங்கையில்  அரசு அவ்வாறே இயங்குகிறது.
 
தமிழர்கள் தாம் சிங்களவர்களால் ஆளப்படுவதாக உணரத்தொடங்கினர்.  மிக ஆரம்பத்திலேயே இந்த உணர்வை உறுதிப்படுத்தும் புறநிலையான காரணிகள் அறியப்பட்டன. அதிகாரத்தில் சிறுபான்மை இனங்களுக்கு பங்கு இல்லை.  பெரும்பான்மை இனத்தைச் சார்ந்து, சலுகைகளை மட்டுமே பெறமுடியும் என்னும் நிலை தமிழர்களைத் தங்களுக்கென அதிகாரத்தை பெறவேண்டும் என்னும் எண்ணக்கருவை நோக்கித் தள்ளியது.
 
மனிதரை மிருக நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சித்தால் அதிகாரம் என்பது மிருக நிலையின் அடிப்படையான பண்பென்பதை அறியலாம்.  மிருகங்கள் தமது சமூகத்திற்குள்ளும் சகசமூகங்களுடனும் தமது வாழிட எல்லைக்குள்ளும் வெளியிலும் மிகத் தெளிவான அதிகாரப்போட்டியினைக் கொண்டுள்ளன.

மிருகங்களின் அதிகாரப் போட்டி வெற்றி அல்லது தோல்வியினால் தீர்த்து வைக்கப்படுகிறது.  மனிதர்களின் அதிகாரப் போட்டியும் வெற்றி அல்லது தோல்வி என்ற முறையில் அணுகப்படுவது வியப்புக்குரியதல்ல. 
 
தமிழர்கள் தமக்கான அதிகாரத்தைத் தேடத் தொடங்கிய போது தமிழர்களிடையே பல போராட்டக் குழுக்கள் தோன்றின.  காலப்போக்கில் அவை கரைந்து தமிழ்ச் சமூகத்தினுள் இருந்த சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய அமைப்புக்களாக மாறின.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்  தமிழர்கள் தமது அதிகாரத்தை வேண்டி நின்றது மட்டுமல்ல அது எத்தகையதாக இருக்க வேண்டும் எனச் சிந்தித்ததும் தான்.   அதிகாரப் போட்டி என்பது அதிகாரத்தின் பண்புகள் குறித்த கேள்வியுடனும் இணைந்திருந்தது.  அதிகாரம் என்பது சமூக அதிகாரம் பொருளாதார அதிகாரம் அரசியல் அதிகாரம் எனவிரிவடையும்.  தனிமனித உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடையே நிலவும் அதிகாரம் மற்றும் குடும்பத்துள் நிலவும் அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து சமூக அதிகாரமாக விரிவடைகிறது.  ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு சமூகப் பிரிவினருக்குள்ளும் மேற்குறித்த மூன்று வகையான அதிகார அம்சங்களைக் காணமுடியும்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் எவ்வாறு சகல இனங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டுமோ அது போலவே போராடும் ஒரு இனத்துக்குள் இருக்கும் சகல சமூகப் பிரிவுகளுக்கும் சரியான அதிகாரப்பகிர்வும் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனம் ஒன்றின் முழுச்சக்தியையும் ஒன்றிணைக்க முடியும்.

ஒரு அமைப்பு ஒரு இனத்தின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுக்கும் போது அதன் அழிவுடன் அபாயகரமானதொரு  அதிகாரவெற்றிடம் தோன்றுகிறது. இது வெற்றிகொண்ட இனத்திற்கு வாய்ப்பான சூழ்நிலையைத் தந்துவிடுகிறது.
 
உதாரணமாக ஒரு பேச்சுக்கு பலஸ்தீனத்தில் கமாஸ் முற்றுமுழுதாக அழிக்கப்படுகிறது என வைத்துக்கொண்டால் இதனைத் தொடர்ந்து பலஸ்தீன மக்களின் மத்தியில் ஒரு அதிகார வெற்றிடம் தோன்றப்போவதில்லை.பலஸ்தீன மக்களின் அதிகாரம் எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதில் அவர்களுக்கு முரண்பாடு தோன்றலாம் அது வேறு.
 
80 களில் மேலெழுந்து வந்த பிரதான  விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளை அல்லது கருத்தியல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நின்றதைக் காணமுடிந்தது. ஆனால் இவை சரியான முறையில் ஒரு ஜக்கிய முன்னணியாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. 

உதாரணமாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அத்தகைய இணக்கப்பாடு ஒரு கால கட்டத்தில் அடையப்பட்டிருந்தது.  அந்தக்காலகட்டமே பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பொற்காலமுமாக இருந்தது.

ஆரம்பத்தில் இருந்த பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய தமிழர் விடுதலை இயக்கங்களின் ஜக்கிய முன்னணிக்கான சாத்தியம் என்னென்ன காரணங்களால்  சாத்தியமற்றுப் போனது என மீள்வாசிப்புச்செய்வது புதிய படிப்பினைகளைத்தரலாம்.

எந்த இனத்துக்குள்ளும் பல்வேறு கருத்தியல்கள் நிலவும். இவை ஒரு சமூகம் தன்னை மீள்வாசிப்புச்செய்யும் போது இயக்கமடையத் தொடங்கும். இந்த இயக்கங்களின் இயக்கவியலை சரியான முறையில் ஒன்றிணைக்கக் கூடிய சனநாயக ரீதியான அணுகுமுறை மட்டுமே ஒரு இனத்தை முன்னோக்கித்தள்ளும்; எந்த இடர்ப்பாடுகளுக்குள்ளும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படிப்படியாக அங்கீகரிக்கப்படாத ஆனால் உறுதியான அதிகாரத்தை மெதுவாக எடுத்துக்கொண்டது. 

விடுதலைப்புலிகள் தமது அதிகாரத்தை ஏனைய ஸ்தாபனங்களை அழித்து ஸ்தாபிப்பதில் வெற்றி அடைந்தனர்.  ஈரோசைத் தவிர எனைய ஸ்தாபனங்கள் தமக்குள் ஏற்கனவே அதிகாரப் போட்டி காரணமாக அழியத்தொடங்கியும் இருந்தன.  இது விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுபடுத்தியது எனலாம்.

தமிழ்ப் பகுதிகளில் இயங்கிய இலங்கைச் சிங்கள அரசஅதிகாரத்தின் மீது தமிழர்களின் அங்கீகரிக்கப்படாத அதிகாரம் நிழலாகப்படியத் தொடங்கியது.  தமிழர்களின் இந்த நிழல் அதிகாரத்தைத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சிங்கள அதிகாரம் இயலாமையுடன் பார்த்து நின்றது.

இலங்கை இராணுவம் பொலிஸ் மட்டுமல்ல சிவில் நிர்வாக அதிகாரிகளும் முடக்கப்பட்டனர். தமிழ் நிழல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு நீங்கினர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.  காலப்போக்கில் தமிழ் பிரதேசங்களின் இலங்கை அரசின் அதிகாரிகள் தமிழ் நிழல் நிர்வாகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரலாயினர். இலங்கைக்குள் நிகழத்தொடங்கிய இந்த அதிகாரப் போட்டி தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் பரிமாணங்களில்  மாற்றங்களைக் கொண்டுவந்தது.

விடுதலைப்புலிகள் மிகத் தெளிவான அதிகார நிலையை எடுக்க முன்னர் அதேநேரம் சிங்கள அரசு அதிகாரம் வலுவிழந்து இருந்த நேரம் தமிழ் சமூகத்துள்  பல்வேறு அம்சங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன.

குறிப்பாக மொழி உணர்வும் பயன்பாடும், சமூகத்தில் பெண்ணின் நிலை, சாதிய முரண்பாடுகள் வர்க்க முரண்பாடுகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தில் தீர்மானகரமான சக்தியாக வளர்ச்சி அடைந்த போது இனத்துக்குள் பல்வேறு பிரிவினருக்கும் இருக்கக்கூடிய அதிகார உரிமையையும் பங்கீட்டையும் அங்கீகரிக்கும் சனநாயக நிலையை எடுக்காமல் எல்லைகளை விடுவிக்கும் இராணுவ அணுகுமுறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.  இது 80 களில் தோன்றிய எழுச்சியைச் சிதறடித்து அன்றைய இளைஞர்களின் ஒரு பகுதியினரைப் போராட்டக் களத்தில் இருந்து அகற்றியது.

தமிழ் அதிகாரத்துள் ஒரு காலத்தில் ஆழமாக கேள்விக்குள்ளாக்கப்பட்ட பல்வேறு விடையங்கள் விடுதலைப்புலிகளால் பின்னர் ஆழமாகக் கேள்விக்குட்படுத்தப்படவில்லை.  ஆனாலும் அவர்கள் கொண்டிருந்த அதிகார எல்லைக்குள் அவற்றைப் பற்றி முணுமுணுப்பவர்களாவது இருக்கவே செய்தனர். அல்லது அவர்கள் சக பயணிகளாகவிருந்தனர்.
 
 
குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களுக்கென இருந்த "கடமைகளுக்கு" புறம்பான விடையங்களைச் செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டனர்.

இன்றைக்கு எற்பட்டுள்ள அதிகார வெற்றிடத்தால் மிக மிகப் பாதிப்புக்குள்ளாகப் போகிறவர்களும் பெண்களே.குறிப்பாகப் போராளிப் பெண்களே.

சமூகத்தின் சகல பிரிவினரையும் போரில் இணைப்பதற்காக அவர்களுக்கிடையில் இருந்த முரண்பாடுகள் பேசப்படாது விடப்பட்டன.

தமிழ் அதிகார எல்லைக்குள் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு இருக்கக்கூடிய அதிகார உரிமை பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட துரதிஸ்டவசமான நிலையும் இக்காலகட்டத்திலேயே தோன்றியது.

தமிழ் அதிகாரம் பற்றி பேசுகிற ஒவ்வொரு கணமும் சனநாயகம் பற்றிய எண்ணக்கருவும் இணைந்தே வரவேண்டும். 

அதிகாரத்தை பிரயோகிக்கும் போதே சனநாயகத்தையும் உறுதிசெய்ய வேண்டியது அவசியம். இதனால்தான் எந்த அரசியல் அமைப்பிலும் இது தொடர்பான விளக்கங்களும் விபரிப்புக்களும் வரையறைகளும் உள்ளன.  இவற்றை நன்கு விளங்கி ஆட்சி செய்ய வேண்டியது அரசாங்கங்களினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.  இலங்கையின் எந்த அரசாங்கங்களும் இப்பொறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை.  துரதிஸ்டவசமாக விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள்ளும் இப்பொறுப்புணர்வு இருக்கவிலை.

பிழையான அதிகார அமைப்புக்குள் மக்களை வாழ நிர்ப்பந்தித்தால் அல்லது வாழப்பழக்கப்படுத்தினால் அதிகார வெற்றிடம் ஒன்று ஏற்படும் போது மக்கள் முன்பிருந்த அதிகார அமைப்பை நிபந்தனைகள் அற்று ஏற்றுக்கொள்ளும் மரத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மாற்றீடான அதிகாரம், தான் எந்த வகையில் முன்பிருந்த அதிகாரத்திற்கு மாற்றீடு என்பதையும் உணர்த்த வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த பன்முகத்தன்மையான அதிகார ஒருங்கிணைப்பிற்கான சாத்தியம் சிதைக்கப்பட்டு ஒருமுகமான அதிகார அமைப்பு விடுதலைப்புலிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.  விடுதலைப்புலிகளின் எல்லைகள் பரந்திருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நீதி நிர்வாக பொருளாதாரக் கட்டமைப்புக்களின் தன்மை குறித்து ஆழமான விமர்சனத்தை அதனை நன்கறிந்தவர்கள்  செய்யவேண்டும்.

அவர்களின் சட்டமூலத்தொகுப்பில் இலங்கை அரசுடன் ஒப்பிடும்போது முற்போக்கான அம்சங்கள் இருந்ததாக முன்பு பேசப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் அரசு அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் என்னும் ஸ்தாபனத்தின் நலன்களைப் பேணுவதற்காகவே தொழிற்பட்டதையும் காணமுடிந்தது.

ஒரு விடுதலை அமைப்பு அரசாக பரிமாணம் கொள்ள முயன்றது. ஆனால் பரிணாமம் அடையவில்லை. அது சாத்தியமும் இல்லை. என்னேனில் அரசுருவாக்கம் நான் முன்பு கூறிய மூவகை அதிகாரங்களின் கூட்டிணைவுடன் சம்பந்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பதாக மாறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் ஈழம் கிடைத்திருப்பின் சாத்தியமாக இருந்திருக்கலாம்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமோ அல்லது அங்கீகரிக்கப்படாத அதிகாரமோ அல்லது நிழல் அதிகாரமோ எதுவாயினும் சரி அது ஒரு முழுமையான அதிகாரமாக வளர்ச்சியடைவது தனியே எல்லைகளை விடுவிப்பதுடன் மட்டும் சாத்தியமாகி விடுவதில்லை.

சமூக அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் சரியான முறையில் சனநாயக ரீதியான பங்கீட்டுடன் இணைக்கப்பட்டு எல்லைகளும் விடுவிக்கப்படும் போதுதான் ஒரு நாடு உருவாகிறது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான தோல்வி விடுதலைப்புலிகளின் அழிவல்ல.  பதிலாகத் தமிழர்கள் தங்களின் சுய அதிகார உணர்வை இழந்ததுதான்.
 
.
இங்கு சொல்லப்படுகிற  அதிகார உணர்வு என்பது மற்ற இனத்தை  கொல்லும் உணர்வல்ல.  இன்னொரு இனத்தின் உரிமைகளைப் பறிக்கும் அதிகாரமல்ல. பதிலாக நாம் என்று நிமிர்ந்து நிற்கும் சுய தன்னம்பிக்கை பற்றிய உணர்வு‐கூட்டுணர்வு இதனை ஒரு சமூகம் இழக்கும் போது அது அரசியல் ரீதியில் சிதறிவிடுகிறது.
அந்தச்சிதறலை நாங்கள் இன்று பார்கிறோம் அனுபவிக்கிறோம்.

முழமையான அதிகாரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு எல்லைகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் பெளதிக எல்லைகளில் தங்கி இருக்காத முக்கியமான அம்சங்களை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கவனிக்கத்தவறியதின் விளைவே இன்றைக்கு தோன்றியுள்ள அதிகார வெற்றிடத்துள் தமிழர்கள் தலைகுனிந்து நிற்கக் காரணம்.

ஒரு இனம் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய சனநாயகச் சிந்தனை அதன் சமூக அதிகாரத்திற்கு மிக அவசியமாகும்.
 
 
தமிழ் சமூகத்தின் திறந்த தன்மை, உரையாடற் பண்பு, சேர்ந்து வேலை செய்யும் தன்மை, கேள்வி கேட்டல் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் ஏன் தவறவிட்டோம்.
 
விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விடுகிறார்கள்.  விடுதலைப்புலிகள் சனநாயகத்தை விரும்பியிருக்கவில்லை என்பது உண்மை.  ஆனால் சனநாயக மறுப்பை விடுதலைப்புலிகளே தொடங்கி வைத்ததாக யாரும் கூறுவார்களேயானால் அவர்கள் கோத்தபாயவோடு தேனீர் அருந்தலாம்.

தமிழ்ச்சமூகத்தினுள் தனிநபர் மற்றும் குடும்ப உறவகளுக்குள் நிலவுகிற அதிகாரத்தை புறநிலையாக நின்று அது எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை நாங்கள் அவதானிப்போமாயின் இலங்கையின் துயரத்திற்கான காரணத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.குடும்ப உறவுகளுக்குள் குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு சனநாயகமாக இருப்பதில்லை.

மாணவன் ஆசிரியருக்குப்பயம். ஆசிரியர் அதிபருக்கு பயம். அதிபர் அதிகாரிக்கு பயம். அதிகாரி மேலதிகாரிக்கு பயம். மேலதிகாரி அமைச்சருக்கு பயம். அமைச்சர் சனாதிபதிக்குபயம். சனாதிபதியோ எவருக்கும் பயம் இல்லை.

இப்படிப்பட்ட  அதிகார அடுக்குள்ளேயே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். மேலும் இவ்வதிகார அடுக்கின் ஒவ்வொரு தட்டுகளிலும் இருப்போருக்குள் தமக்குள் சேர்ந்து வேலை செய்தலும் சாத்தியப்படுவதில்லை.
 
அதிகாரத்தை நாட்டை அல்லது சமூகத்தை கட்டுக் கோப்புடன் இயக்கப் பயன்படுத்தாமல் தனிநபர்களும் கட்சிகளும் தமது  சுயநலன்களை அடைய பயன் படுத்தப்படும்  போக்கே உலகெங்கும் அவதானிக்கப்படுகிறது.
 
அதிகாரமும் சனநாயகமும்  ஒரு நாணயக்குற்றியின் இரண்டு பக்கங்கள். அது இரண்டாகப் பிளக்கப்பட்டு தத்தமது தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.  மக்களோ செல்லாக் காசாகி நிற்கிறார்கள்.

தமிழர்களிடம் தோன்றியுள்ள அதிகார வெற்றிடம் வெறுமனே ஒரு அரசியல் வெற்றிடம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே அதை மீண்டும் நிரப்புவது எவ்வளவு கடினம் என்பது புரியும்.

இனிமேல் குறுகிய காலத்துள் தனிநாடு ஒன்றை அடைவதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கென ஒரு அதிகாரத்தை ஸ்தாபிக்க முடியும் என்பது பகற்கனவாகும்.
எனவே யதார்த்தத்தில் எஞ்சியுள்ள தெரிவுகள் இவையே:
 
• இலங்கை என்ற முழுமைக்குள் கிடைக்கக்கூடிய அதிகாரப்பகிர்வு.
 
• இலங்கை என்ற முழுமைக்குள் எந்தவித அரசியல் வேண்டுகோளும் இன்றி ஏற்கனவே உள்ள அரசியல் அதிகாரத்தை எற்றுக்கொண்டு வாழ்வது.
 
பிராந்திய மற்றும் உள்நாட்டு அரசியற்சூழ்நிலைகளை அவதானிக்கும் போது யதார்த்தத்தில் தமிழர்களுக்கு இந்தத் தெரிவே எஞ்சியுள்ளது. இலங்கையில் இருக்கும் எந்தச்சிங்களக்கட்சியும் தமிழர்களுடன் இதய சுத்தியுடன் அதிகாரத்தைப்பகிர்ந்துகொள்ளக்கூடியவை அல்ல.

மீள்குடியேற்றம் புணர்வாழ்வு நிவாரணம் ஆகிய மூன்றுக்குள்ளும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் புதைக்கப்பட்டு விடும். சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப்பகிர்வாவது சாத்தியம். ஆனால் பிராந்திய அரசுகள் யுத்தமற்ற இலங்கையை நிர்ப்பந்தங்கள் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற திறந்த சந்தையாக்க  மட்டுமே முயற்சி செய்வார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி அவர்கள் கவலைப்படப்போவதிலை.
 
சிங்கள் பெளத்த பேரினவாத அரசு தனது சனநாயகமற்ற அதிகாரத்தைப் பேணுவதற்காக எதையும் செய்யும் நிலையில் உள்ளது.தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசியம் முழுமூச்சுடன் மீண்டும் அரசியல் ரீதியாக எழக்கூடிய சகல வழிகளையும் அடைக்கவே முயற்சி செய்யும்.

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழர்களின் பிரதிநிதித்துவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூடுமானவரை செயலிழக்கச் செய்யவும் உடைக்கவும் இந்த அரசாங்கம் முயற்சி செய்யும்.

இதுவரை காலமும் அரசுடன் இணைந்திருந்த இராணுவக் குழுக்களை இவ்வரசாங்கம் உடன் கலைக்கப்போவதில்லை. மாறாக இவற்றை தன்னைச்சார்ந்து சலுகைகளைப்பெறும் அரசியல்வாதிகளாக மாற்றுவதுடன் தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதை  இவர்களின் உதவியுடன் தடுக்கவும் செய்யும். இக்குழுக்களைப் பயன்படுத்தித் தேர்தல் காலங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சனநாயக மீறல்களிலும் ஈடுபடக்கூடும்.  மேலும் இந்தக் குழுக்கள் யுத்த காலத்தில் எந்தக் கொள்கைகளும் இன்றி அரசு சார்ந்து தமது இருப்பைப் பேணிக் கொண்டவைகள் என்பதுடன் இவையும் சனநாயக உரிமைகளைக் கோரமான முறையில் நசுக்கியவையே. இத்தகைய அமைப்புக்கள் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை ஒருங்கிணைத்து வலுவான கோரிக்கைகளை வைக்கும் சக்திகளாக மேலெழ முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னைய காலங்களில் இருந்த அரசியல் வியாபாரமே( தமிழ் நாட்டில்‐இந்தியாவில் உள்ளது போன்று) இனி வடக்கு கிழக்கில் தலைதூக்கும். 
 
ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிகழும் அரசியல் வியாபாரங்களைப் பற்றி எவரும் சொல்லத்தேவையில்லை.  வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் அரசியல் சந்தையாகவே கருதப்படுகிறது.  ஆனால் அது நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட சந்தையாகவிருக்கிறது.  ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதியை மையப்படுத்தியே அரசியற்சந்தை உள்ளது.

அறிவுபூர்வமான அணுகுமுறைகள் இன்றி அரசியல் பொருளாதார சமூக கட்டுமானங்களை அதிகார போதையில் சுயலாபங்களுக்காக அரசியல்வாதிகள் சிதைக்கின்றனர்.  அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தில் இருப்பது.  தேர்தல் தோல்விகளைச் தவிர்ப்பதற்காக எதையும் செய்கிற நிலமையே உள்ளது.

இதை இங்கு சொல்வதன் நோக்கம் என்னவெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிலவுகிற பாராளுமன்ற அதிகாரம் என்பது சனநாயகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அதிகாரமாகும்.
 
இத்தகைய பாராளுமன்றக்கலாசாரத்துள் தமிழர்கள் வேறோரு சனநாயக கலாச்சாரத்தை மக்களின் நலன்களை மையப்படுத்திய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவருதல் மிகக் கடினமாகும்.

தமக்குள் இருக்கிற பல்வேறு சமூகப் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகிற அரசியல் கட்சிகளை உருவாக்குவதும் அவற்றுக்கிடையே ஜக்கியத்தை கொண்டுவருவதும் மிக மோசமான ஒடுக்குமுறைக்குச் சவால் விடுக்குமொன்றாக  மாறலாம்.  முற்றிலும் புதிய கோணத்தில் பாராளுமன்ற அரசியலை அணுகும் அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்குத் தேவை. ஏனேனில் இன்னொரு அமிர்தலிங்கமோ இருக்கிற ஆனந்தசங்கரியோ தமிழர்களுக்குத் தேவை இல்லை.

சிங்களசமூகத்திற்குள் இருக்கக்கூடிய சனநாய சக்திகளை, ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் இங்கு அவசியமாகும்.
 
தமிழ் மக்கள் தங்களுக்குள் வலுவான சனநாயக ஐக்கிய முன்ணனி ஒன்றை உருவாக்காத வரை சிங்கள பௌத்த பேரினவாதம் பேயாட்டமாடவே செய்யும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் விட்டுச்சென்ற தமிழர்களின் அதிகாரம் என்ற தேன்கிண்ணத்துள் தமிழர்களின் குருதியை நிரப்பி அது குடிக்கவே செய்யும்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP