சமீபத்திய பதிவுகள்

நான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறான்

>> Friday, July 10, 2009

நான் பிரபாகரணாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறான்
 

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது....

இந்தியாவின் தேசியப் பத்திரிகையான 'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்,  இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார்

'த ஹிந்து' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்.

என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த பிரச்சனை பற்றி உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? "எமது நாட்டின் சுதந்திரமே பிரதானமானது. நாடு பிரிக்கப்படவோ, இறையாண்மை பாதிக்கப்படவோ என்றுமே நான் அனுமதிக்க மாட்டேன்.... அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் மதிப்பு கொடுப்பேன், யார் மீதும் அழுத்தம் கொடுப்பதைத் தடுப்பேன், ஒவ்வொரு தனி நபரினதும் சமூகத்தினதும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவேன்" என்று கூறுகிறது உங்கள் 2005 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம். இந்தக் கொள்கையில் "பிரிபடாத இலங்கை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் "கௌரவமான அமைதி" என்பன உங்கள் 'அடிப்படை அரசியல் நோக்கங்கள்" எனக் குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே நீங்கள் பதவியேற்றபோது உண்மையில் உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது. ஒரு திட்டமுமே இருக்கவில்லையா, தாக்குதல் ஒன்றுக்கு போவது போல இருந்ததாக தோன்றுகிறதே.

மஹிந்த: நான் தமிழ் மக்களின் உணர்வுகளை நசிக்க விரும்பவில்லை. ஆனால் பயங்கரவாதம் பற்றி ஆரம்பத்தில் இருந்தே நான் மிகவும் தெளிவாக இருந்தேன். இதனால் தான், நான் வெற்றிகாணப் போகிறேன் என அறிந்துகொண்ட உடனும், கோத்தவைக் கூப்பிட்டு,  " நீ இனி போக முடியாது. இங்கேயே தங்கிக் கொள்" என்று கூறினேன். வெற்றி காணுவதற்கு தயாராக இருந்தவர்களை படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாகத் தேர்ந்தெடுத்தேன்.

அதன்பின்னர் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு செய்தி அனுப்பினேன். "நீங்கள் விரும்பும் எதனையும் நீங்கள் பெறலாம். அதற்காக ஏன் எதிர்த்து சண்டை பிடிக்கிறீர்கள், தேர்தல் வைக்கலாமா? இப்போது ஆயுதங்கள் வைத்துள்ள குழு நீங்கள் தான். தேர்தலில் உங்களைத் தேர்ந்தெடுக்கும்படி மக்களைக் கேளுங்கள். மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நபருடன் பேச்சுக்கு நான் தயாரல்ல" என்று புலிகளுக்குக் கூறினேன். அனால் பிரபாகரன் பெரியதொரு பிழையைச் செய்துவிட்டார். நான் ஒரு யதார்த்தவாதி, நடைமுறைக்கு ஒத்துப்போபவர் என்று அவர் கூறினார்.


லலித் வீரதுங்க (ஜனாதிபதியின் செயலாளர்; ல.வீ): மேன்மை தங்கிய ஜனாதிபதி நவம்பர் 19 இல் பதவியேற்றார். அவர் தனது பதவியேற்பு உரையில், அந்த மனுசனை பேச்சுக்கு அழைத்தார். பின்னர் பிரபாகரனின் நவம்பர் 27 மாவீரர் உரையில், ஜனாதிபதி ஒரு யதார்த்தவாதி, நடைமுறைக்கு ஒத்துப்போபவர் என்று குறிப்பிட்டார். இதை அவர் சொன்னபோது, ஜனாதிபதி ஒரு உரையில் "அந்த கடைசிக் கட்டம் வரை நடந்து செல்ல என்னால் முடியும்" என்று கூறினார். பின்னர், டிசம்பர் 5 இல், ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் தமது சகாக்களுக்கு சாப்பாடுகளைக் கொண்டுசென்ற அப்பாவிப் படையினர் 13 பேரை அவர்கள் தாக்கினார்கள். இப்படித்தான் இது தொடங்கியது.

மஹிந்த: அதன் பிறகும் நான் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அதன் பின்னர் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன்.  அதற்கப்புறம்தான் எனது பாதுகாப்பைத் தொடங்கினேன் என்றுதான் நான் சொல்லுவேன். அதன் பின்னர் நாங்கள் எங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோத்த கூறினார். நான் சொன்னேன்: "உனக்கு என்ன வேண்டும்? தயாராகு" என்று. ஆனாலும் அவர்கள் (புலிகள்) பின்னால் சென்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் தெற்கில் ஒன்று கூடத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன். பிறகு, புலிகளை "இதைச் செய்ய வேண்டாம். என்னைச் சுவரில் மோத வைக்காதீர்கள்" என்று எச்சரித்தேன்.

லலித் வீரதுங்க: அதன்பின் அவர்களின் தலைவர் ஒருவரைச் சந்திக்கும்படி என்னை அனுப்பினீர்கள்.

மஹிந்த: நான் இவரை அனுப்பினேன். ஜெயராஜையும் (ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை) அனுப்பினேன்.

லலித் வீரதுங்க: 2006 இல், ஒரு சோதனைக்கும் என்னை உள்ளாக்காமல் பல சோதனைச் சாவடிகள் ஊடாகச் சென்றேன். ஜனாதிபதி அவர்கள் கூறினார்: "சும்மா போங்கள். உங்களை ஒருவருக்கும் அடையாளம் காட்ட வேண்டாம்" என்று. பிறகு அவர்களுக்கு இவர் கூறினார்: "நான் ஒருவரை அனுப்பினேன். அவர் யார் என்பதைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே" என்று.

மஹிந்த: நான் பாதுகாப்பு ஆட்களைக் கூப்பிட்டுச் சொனேன்: " ஒரு மனிதரை நான் அங்கு அனுப்ப என்னால் முடிகிறது என்றால், என்ன... உங்கள் பாதுகாப்பு? என்று. பல மாதங்கள் கழித்துத் தான் அவர்களிடம் கேட்டேன்: "இவர் தான் அங்கு போன ஆள். அது உங்களுக்கு தெரியுமா?" என்று.

லலித் வீரதுங்க: அந்த அளவுக்கு அவர் போய்விட்டார்.

என்.ராம்: பலவீனங்கள் என்ன என்று பார்ப்பதற்கு?

லலித் வீரதுங்க: இல்லை, சமரசப் பேச்சுக்கு.

மஹிந்த: சமரசத்துக்கும், பலவீனங்களைப் பார்ப்பதற்கும்! பிறகு ஜெயராஜை அனுப்பினேன். அவர்களிடம் சில உள்வீட்டு ரகசியங்களை அவர்களுக்கு விளங்கியிருந்த சிங்களத்தில் அவர் கூறினார். "நீங்கள் கொல்லப்படுவீர்கள்"

என்.ராம்: அதற்குப் பிறகு மாவிலாறு சம்பவம் நடந்தது.

மஹிந்த: அவர்கள் எனக்கு பச்சைக் கொடி காட்டிய நேரம் அது!

என்.ராம்: ஆனால் அதற்கு, அதாவது ஆகஸ்ட் 2006 இற்கு முன்னரே நீங்கள் நன்றாகத் தயாராகிவிட்டீர்கள்?

மஹிந்த: ஆம். ஆனால் அதற்கு முன்னர், அவர்கள் ராணுவ கட்டளைத் தளபதியைக் கொல்ல முயற்சித்தார்கள்.

லலித் வீரதுங்க: ஏப்பிரல் 2006 இல் அவர்கள் ராணுவ கட்டளைத் தளபதியை படுகொலை செய்ய முயன்றபோது, ஜனாதிபதி சொன்னார் "எச்சரிக்கை போல சும்மா ஒரு தடவை மட்டும் வெடி அடியுங்கள், பின்னர் அதை நிற்பாட்டுங்கள்" என்று.

மஹிந்த: ஆம், நான் சொன்னேன்: "ஒரே ஒருமுறை செய்யும் படி சொன்னேன்". நாங்கள் சரியான கவனமாக இருந்தோம். பேச்சுக்கள் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு எங்களால் முடிந்ததெல்லாவற்றையும் செய்தோம்.

லலித் வீரதுங்க: ஜெனீவாவிலும் மற்ற இடங்களிலும் ஒரு முமையான சமரசப்பேச்சுத் தொடர் நடந்தது. அவர்கள் குறைந்தது இந்தப் பேச்சுக்களில் பேசக்கூட விரும்பவில்லை.

மஹிந்த: எனவே இந்த ராணுவ நடவடிக்கையானது சமரசப் பேச்சுக்கள் இல்லாமலோ அல்லது ஒரு காரணமும் இல்லாமலோ வரவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நான் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகிக் கொண்டுதான் இருந்தேன். எனக்குத் தெரிந்திருந்தது - நீங்கள் பாருங்கள், ஏனெனில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரசததைத் தொடங்க ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது

லலித் வீரதுங்க: இது சம்பந்தமாக ஜனாதிபதி திரு சொல்ஹெய்முடன் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் பற்றி உங்களுக்குச் சொல்ல என்னை விடுங்கள். அங்கே நானும் இருந்தேன், கிட்டத்தட்ட மார்ச் 2006 ஆக இருக்க வேண்டும், இவர் ஜனாதிபதி ஆகிய பின்னர், மேதகு ஜனாதிபதியைச் சந்திக்க திரு சொல்ஹெய்ம் வந்து பேசும்போது மற்ற விடயங்களுக்கு நடுவே அவர் சொன்னார்: "பிரபாகரன் ஒரு ராணுவ மேதை, அவர் செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்" என்று. மேலும் அது இது என்று நிறையச் சொன்னார். ஜனாதிபதி சொன்னார்: "அவர் வடக்கில் உள்ள காடுகளில் இருந்து வந்தவர். நான் தெற்கில் உள்ள காடுகளில் இருந்து வந்தவன். பார்க்கலாம் யார் வெற்றி பெறுவார்கள் என்று!". இது ஒரு தீர்க்க தரிசனமான பேச்சு. பின்னர் நியூயோர்க்கில் அமைச்சர் சொல்ஹெய்மைச் சந்தித்த ஜனாதிபதி இந்த ராணுவ மேதை, வடக்கு தெற்கு காடுகள் மற்றும் யார் வெல்வது போன்ற பேச்சுக்கள் பற்றியெல்லாம் அவருக்கு நினைவூட்டினார். அந்த நேரம், அதாவது 2007 இல் கிழக்கு எமது கட்டுப்பாட்டுக்குக் கீழ வந்திருந்தது, எனவே ஜனாதிபதி "வடக்கில் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். இதேதான்" என்று கூறினார்.

என்.ராம்: புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள், நீங்கள் பாரிய அடி கொடுக்கக் கூடியதாக அவர்களின் சில விஷயங்களில் ஓட்டை உள்ளது என்ற எண்ணம் எப்போது முதன் முதலில் உங்களுக்கு வந்தது?

குறைத்து மதிப்பிடுவது இல்லை.

மஹிந்த: ஆரம்பத்தில் இருந்தே! படைப் பிடிவினர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு தேவையானது எல்லாவற்றையும் நீங்கள் கொடுத்தால் எங்கள் ஆட்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ஏனெனில் புலிகள் காண்பிப்பது எல்லாம் உண்மையானவை அல்ல என்ற உணர்வு என்றுமே எனக்கு இருந்தது. ஆனால் ஒரு வழியில், நாங்கள் செய்தது பிழை. அவர்களிடம் நிறைய ஆட்கள் இருந்தார்கள், ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் இலங்கையை அல்ல தென் இந்தியாவையே தாக்கியிருந்திருக்கக் கூடும். அவர்கள் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்கள் சும்மா இலங்கையைத் தாக்கக் கூடிய அளவுக்கு மட்டுமல்ல! எங்கள் ஆயுதப் படையினர் கண்டுபிடித்துள்ள ஆயுதங்களின் அளவு நம்பமுடியாத அளவுக்கு உள்ளன. எங்கள் புலனாய்வாளர்கள் சொன்னார்கள், "அவர்களிடம் 15,000 பேர் மட்டுமே உள்ளார்கள்" என்று. எனக்கு அப்போதே தெரியும் இந்த எண்ணிக்கை பிழை என்று. நான் ஒரேயொரு மூலத்தில் தங்கியிருக்கவில்லை. அதைவிட எல்.டி.டி.ஈயினர் கூடுதலாக வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். எப்போதுமே நான் எல்.டி.டி.ஈயினரைக் குறைத்து மதிப்பிட்டதே இல்லை.

என்.ராம்: ஆகவே உலகிலேயே அவர்கள் ஈவு இரக்கமற்ற மிகவும் சக்திவாய்ந்த ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்தார்கள் எனக் கூறுகிறீர்கள்.

மஹிந்த: ஆம், உலகிலேயே ஈவு இரக்கமற்ற அதிகூடிய செல்வம் மிக்க பயங்கரவாத இயக்கம். அதோடு நிறைய ஆயுதங்கள் கொண்டிருந்த, நன்கு பயிற்சி பெற்றவர்கள்.

என்.ராம்: அவர்களின் கடைசித் தந்திரம் என்ன என்று நினைக்கிறீர்கள்? எல்.டி.டி.ஈ தலைவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் பிரபாகரன் ஒரு சிறு கடற்கரைப்பகுதியில் வளைக்கப்பட்டார். இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்கள் துணிகரமான எதிர்த் தாக்குதல் ஒன்றை நடத்த எண்ணியிருந்ததாக ஜெயராஜ் எழுதியுள்ளார்.

மஹிந்த: நான் நினைக்கிறேன், அவர்கள் தப்பிப் போகவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தார்கள் என்று. கடைசிக் கட்டத்தில், சிலர் வந்து தம்மைக் கூட்டிச் செல்வார்கள் என்று அவர்கள் காத்துக் கிடந்தார்கள். இல்லாவிட்டால், அவர்கள் அங்கு சென்றிருக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. ஏனெனில், அவர்களிடம் கடற்புலிகள் தளம் உள்ளது: கப்பல் ஒன்றை ஏன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக்கூட மிக அண்மையில் கொண்டுவரக்கூடிய ஒரே இடம் அதுவே. அவர்களுக்கான மிகச் சிறந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்: ஒரு பக்கம் கடல், பின்னர் கடலேரி, அங்கு ஒரு சிறிய நிலத்துண்டு இருந்தது. ஆனால் பின்னர் அது அவர்கள் தெரிவு செய்த இடமாக இருக்கவில்லை: அவர்கள் அதைத் தெரிவு செய்திருந்தார்கள், ஆனால் படையினர் அவர்களை அங்கு செல்லப் பண்ணினார்கள். பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் படையினரால் அறிவிக்கப்பட்டன. கிளிநொச்சிக்குப் பிறகு, "பாதுகாப்பு வலயங்கள், எனவே அங்கு செல்லவும்" என்று அவர்கள் சொன்னார்கள். எனவே அனைவரும் அங்கு சென்றார்கள். ஐ.நாடுகளாலோ அல்லது வேறு யாராலுமோ குறிக்கப்பட்ட இடங்களல்ல இவை; இவை எங்கள் படையினராலேயே குறிக்கப்பட்டன. அனைத்து விடயங்களுமே அவர்களை ஒரு மூலைக்குக் கொண்டு வருவதற்கு எங்கள் படைகளால் திட்டமிடப்பட்டன. ராணுவத்தினர் வடக்கில் இருந்து தெற்குக்கும், தெற்கில் இருந்து வடக்குக்கும் அனைத்து பக்கங்களிலும் முன்னேறிக் கொண்டு இருந்தார்கள். ஆகவே எங்களின் தந்திரத்தாலேயே அவர்கள் ஒரு மூலைக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.

லலித் வீரதுங்க: 2009, ஜனவரி ஒன்றில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது. பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மே 19 இல் முடிந்துவிட்டன. எனவே அதற்கிடையில் நிறைய நேரம் இருந்தது.

மஹிந்த: ஆம், பாரம்பரிய போர் ஒன்றில் ஏன் சண்டைபிடித்தார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பிரபாகரன் பதுங்கு குழிக்குள் சென்றிருக்க முடியும். நான் தலைவராக இருந்திருந்தேன் என்றால், நான் பதுங்கு குழிக்குள் சென்றிருப்பேன், காடுகளுக்குள் இருந்திருப்பேன் - அதாவது கெரில்லா சண்டை. இதை அவர்களால் செய்ய முடியவில்லை, ஏனெனில் நாங்கள், எங்கள் ராணுவத்தினர் காடுகளைத் தம்வசப்படுத்தி இருந்தனர். இதில் அவர்கள் எல்.டி.டி.ஈயினரை விட கெட்டிக்காரர்கள். சிறப்பு அதிரடிப்படையினர், நீண்ட நாள் சண்டையில் ஈடுபட்ட படையினர், சிறிய குழுவினர் அதாவது குழு 8 ஆகியோருக்கு நன்றி. அது நன்கே வேலை செய்தது. மேலும் எங்கள் படையினரின் கண்ணியத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

லலித் வீரதுங்க: உதாரணமாக, ராணுவத்தினர் பெண்களை பலாத்காரப்படுத்தியதாக அவர்கள் நடத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இல்லை.

மஹிந்த: அந்த பெண் சரணடைந்தபோது - அவர்களில் ஆறு அல்லது ஏழு பேர் - கூறிய வாக்குமூலத்தில்: "இறுதியில் இரண்டோ மூன்று பேர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்; பின்னர் இரண்டோ மூன்று பெண்கள் "எல்லாம் சரி, நாங்கள் பார்க்கலாம், நாங்கள் கற்பழிக்கப்படுகிறோமா அல்லது நாங்கள் தற்கொலை செய்ய வேண்டுமா அல்லது கற்பழிப்பதன் மூலம் நாங்கள் கொல்லப்படுகிறோமா என்று இந்த ஆபத்தான முடிவை எடுப்போம்" என்று கூறினார்கள்" என்று குறிப்பிட்டுள்ர். படித்த பாடசாலை ஆசிரியையான இந்த பெண் சரணடைந்தார். ஒன்றுமே நடக்கவில்லை. அவளால் இதை நம்பவே முடியவில்லை. எங்களுடன் சண்டை பிடித்ததற்காக அவளுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது! இதற்கிடையில், இப்போது நாங்கள் அனைத்து அரச ஊழியர்களையும் எடுக்க இருக்கிறோம். எடுத்து "உங்களுடைய கடந்த காலத்தை மறவுங்கள். இந்த அமைப்புகளுக்காக நீங்கள் வேலை செய்யுங்கள், நீங்கள் சும்மா அங்கு காத்திருக்க முடியாது. நாங்கள் உங்களுக்கு சம்பளம் தருகிறோம்" என்று அவர்களுக்குக் கூறப்போகிறேன். இப்போது ஆசிரியர்கள் கட்டாயம் படிப்பிக்க வேண்டும், மற்றவர்கள் தங்கள் பதவிக்கு சென்று வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு தனது பாலிய நண்பர் ராமுக்கு சனாதிபதி செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP