சமீபத்திய பதிவுகள்

மாட்டிக்கிட்ட ஃபொன்சேகா மருமகன்! நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி பகீர் ராணுவ பேர ஊழல்..

>> Saturday, December 5, 2009

 

''சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது!

அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!

தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தளபதி. மருமகன் ஆயுத சப்ளையர். இலங்கை ராணுவத் தரப்பிலிருந்து பறக்கிற ஒவ்வொரு தோட்டா விலிருந்தும், ஷெல்லில் இருந்தும் தளபதியின் மருமகன் லாபமாக அள்ளிக் குவிக்கிறார். தனுனா திலகரத்னே வாட கைக்குஎடுத்திருந்த கொழும்பு ஃபிளாட்டில் தற்போது தங்கி யிருப்பது அவருடைய ஆயுத ஏஜென்ட்டான அகமது நிசார்!'' என்று கூறி வந்தனர் சில பத்திரிகையாளர்கள். ''உயிரை அர்ப்பணித்து நாட்டுக்காக நாம் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்க, தளபதியின் மருமகன் நோகாமல் அதைக் காசாக்குகிறாரா?'' என்ற குமுறல் சிங்கள ராணுவத்தினர் மத்தியில் பரவலாக இருந்து வந்ததாம்.

''அகமது நிசார் போல ராணுவ பேரத்துக்கான ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்களை தனுனா திலகரத்னே வைத்திருக்கிறார்.. சிங்கள ராணுவததின் விங் கமாண்டர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து உக்ரைனிலிருந்து விமானம் வாங்கியது, ராணுவ உடுப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சீனாவிலிருந்து வாங்கியது என்று கமிஷன் பேரம் விளையாடியிருக்கிறது!'' என்றும் ராணுவத்தின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததாம். அதெல்லாம், தனுனா கைதான நிலையில் இப்போது வெளிப்படையான விவாதமாக அங்கே அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் புள்ளியின் தொடர்புகளும் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.

''சிங்கள ராணுவ வீரர்களுக்கான உணவு சப்ளை கான்ட்ராக்டிலும் பலே ஊழல்கள் நடந்திருக்கின்றன. மோசமான பாக்கெட் உணவை மலேஷியத் தமிழர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய் ததில் பல கோடிகள் விளையாடியிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்டு செரிமானம் இல்லாமல் நம் வீரர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதை சப்ளை செய்த ஏஜென்ட்கள் ஐரோப்பிய உயர்தட்டு ஹோட்டல்களில் ஷாம்பெயின் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்!'' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் கொதிப்பான ஒரு கடிதமும் சில காலத்துக்கு முன் சுற்றில் விடப்பட்டிருந்ததாம்.

''வாங்கிய ஷெல்களில் கால்வாசி வெடிக்காமலே போனது. இதனால், விடுதலைப் புலிகள் தாக்கியபோது பதிலடி கொடுக்கத் தவறி அநியாயமாக நமது வீரர்கள் பலர் உயிரைவிட்டிருக்கிறார்கள்!'' என்று இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் ராணுவத்துக்குள்.

சரத் ஃபொன்சேகாவின் மகள் அப்ஸராவின் கணவர்தான் இந்த தனுனா திலகரத்னே. ஒக்லஹாமா மாநிலத்தில் எட்மன்டு என்ற நகரில் 'ஐ-கார்ப் இன்டர் நேஷனல்' என்ற கம்பெனி நடத்தும் இவர், 'கம்ப்யூட்டர் தொடர்பான பாகங்களை விற்கும் கம்பெனி' என்று போலியாக அரசு அனுமதி பெற்று, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு!

இதுபற்றி விஷயம் அறிந்தவர்கள், விளக்கமாக சில தகவல்களைக் கூறினர் -

''அமெரிக்காவில் 'ஹெச்-1 பி' எனும் வேலை விசாவில்தான் இருக்கிறார் தனுனா திலகரத்னே. தன் பார்ட்னர் குவிண்டா குணரத்னேவின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, அவரையே தன் புது கம்பெனியின் தலைவராக 'நியமித்து' மோசடி செய்துள்ளார். மேலும், தனுனா வேலை விசாவைப் பெறுவதற்காக, போலியாக ஒரு கம்பெனியை உருவாக்கி அதைக் காட்டியே விசா பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃபிளவர் மவுன்ட் நகரில் 'பிரிட்டிஷ் போர்னியோ டிஃபன்ஸ்' என்ற நிறுவனத்தையும் துவக்கி, மெக்ஸிகோ வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஆயுத சப்ளை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை முழுக் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்கள்தான் செய்ய முடியும். இவரோ வேலைக்கான விசாவில் வந்துவிட்டு, ஆயுத விற்பனை நடத்தியிருக்கிறார்!'' என்கிறார்கள். ''தனுனா திலகரத்னேவின் ஏஜென்ட்டான அகமத் நிசார் மூலம் பெற்ற வெடிகுண்டுகளில் 40 சதவிகிதம் வெத்துவேட்டு!'' என்று இலங்கையின் 58-வது பிரிவு பிரிகேடியர் சூரஜ் பன்சாஜியா மற்றும் பிரிகேடியர் சிவேந்திரா சில்லா ஆகியோர் அதிபர் ராஜபக்ஷேயிடம் புகார் கூறியுள்ளதும் இப்போது கவனிக்கத் தக்கது!

தனுனாவின் பாகிஸ்தான் தொடர்புகளைத் துருவும் அமெரிக்க அரசு, இவருக்கு அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தொடர்புண்டா என்றும் ஆராய்வதாக ஒரு தகவல் கிளம்பி ஃபொன்சேகா வட்டாரத்துக்குப் புளியைக் கரைத்திருக்கிறது.

மருமகன் கதை இப்படி டாப் கியரில் போகிறது... மாமனார் ஃபொன்சேகாவோ அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' உள்ள, நிரந்தர தங்கும் உரிமை பெற்றவர்!

''ஃபொன்சேகாவின் மருமகன் என்ன செய்து வந்தார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இப்போதுதான் தெரிய வந்ததா என்ன? ராஜபக்ஷேவுக்கு எதிரான போர்க் குற்ற வாக்குமூலத்தை ஃபொன்சேகாவிடமிருந்து அழுத்தம் திருத்தமாகப் பெறுவதற்கும், இலங்கை தேர்தல் களத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக அவரை வெறியோடு சுழல வைப்பதற்காகவும்தான் மருமகன் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா! மருமகன் சேர்த்த பணத்தை ஃபொன்சேகா உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றினார்களா என்ற கோணத்திலும் அடுத்த கட்ட விசாரணையைக் கொண்டு போகக்கூடும். அப்புறமென்ன... ஃபொன்சேகா முழுக்க முழுக்க அமெரிக்கா கீ கொடுக்கும் பொம்மையாக மாற வேண்டியதுதான்!'' என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள விவரமான இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள்.


source:vikatan

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP