சமீபத்திய பதிவுகள்

முல்லைத்தீவு முற்றுகைச் சமரில் முக்கிய களமாக மாறியுள்ள கடல் - சுபத்திரா

>> Wednesday, February 4, 2009

  

முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

 

உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும் புலித் தாக்குதல் படகு வெடி த்துச் சிதறியது. அதிலிருந்த இரண்டு கடற்கரும்புலிகள் உயிரிழந்திருப்பதைப் புலிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

இதன்பின்னர் முல்லைத்தீவுக் கடலில் அன்று காலை 10 மணியளவில் மற்றொரு கடற்சண்டை நடந்திருக்கிறது. இந்தச் சண்டை கடற்படையின் முதலாவது தடுப்பு வலயத்துக் குள் இடம்பெற்றிருக்கிறது. முல்லைத்தீவில் வட்டுவாகலுக்கும் சுண்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட சுமார் 20 கி.மீ வரையான கடற்பகுதி மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து கடற்புலிகள் விநியோகங்களைச் செய்ய முடியாத வகையிலும் தப்பிச் செல்ல முடியாதவாறும் கடற்படையினர் நான்கு கட்டப் பாதுகாப்பு வியூகத்தை அமைத்திருக்கின்றனர். முதலாவது கட்டத்தில் கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட விசேட படகுப் படையணி (Special Boat Squadron -SBS) மற்றும் துரித நடவடிக்கை படகுப் படையணி (Rapid Action Boat Squadron -RABS) என்பன பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது கட்டத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Crafts - FACs) நிறுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கட்டத்தில் அதிவேகப் பீரங்கிப் படகுகள் (Fast Gun Boats- FGBs) காவலில் ஈடுபட்டிருக்கின்றன. இதையும் கடந்து சென்றால் அடுத்த கட்டமாக தடுத்து நிறுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகள் (Offshore Patrol Vessels - OPVs) நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

50 இற்கும் குறையாத கடற்படைப் படகு களைக் கொண்டு இந்த கடற்தடுப்பு வல யத்தை கடற்படை அமைத்திருக்கிறது. இதை உடைத்துக் கொண்டு கடற்புலிகள் அவ்வப்போது ஆழ்கடல் நோக்கிய பயணங்களைச் செய்வதாகவும் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த வெள்ளியன்று காலை 10 மணியளவில் கடற்படையின் 15 வரையான கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட அணி மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தச் சண்டையில் கடற்படையின் சிறப்புத் தாக்குதல் படையணியின் கொமாண்டோக்கள் பயன்படுத்தும் "அரோ' வகைப் படகுகள் இரண்டை தாம் தாக்கி மூழ்கடித்ததாகவும் புலிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் கடற்படையினர் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து இப்பத்தி எழுதப்படும் வரையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கடற்புலிகள் குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதும் கடற்படையினர் மீதான தாக்குதல்களை அவர்கள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 19ஆம் திகதி இரவு முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுண்டிக்குளம் கடற்பகுதியில் P 434 இலக்கத்தைக் கொண்ட கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகான "சுப்பர் டோறா' ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்திருந்தனர்.

இரவு 11.28 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் கடற்புலிகளால் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களைக் கொண்ட கரும்புலிப் படகை மோத வைத்தே நிகழ்த்தப்பட்டிருந்தது. லெப்.கேணல் நிதி உள்ளிட்ட இரண்டு கடற் கரும்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் அறிவித்திருந்தனர். தாக்குதல் நடந்த மறுநிமிடமே கடற்படைப் படகு முற்றாக நீரில் மூழ்கி விட்டது. இந்தத் தாக்குதல் நடந்தது கடற்படையின் இரண்டாவது கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே கரையில் இருந்து 9 கடல் மைல் தொலைவிலாகும்.

இதேவேளை புலிகளுடனான கடற்சண்டையின் போது கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்திருப்பதாக கடற்படையினர் கூறியி ருந்தனர். அத்துடன் கடற்படைப் படகு சிறியளவில் சேதமுற்றதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால் கடற்படைப் படகு முற்றாக ÷சதமாகிவிட்டது. இந்தப் படகில் இருந்த முக்கிய அதிகாரிகள் சிலரும் காணாமற் போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமான "டொக்யார்ட்'டின் கீழ் அதிவேகத் தாக்குதல் படகுகளின் அணியொன்று இயங்கி வருகிறது. இதற்கு 4ஆவது அதிவேகத் தாக்குதல் படகு அணிக்கு (4th Fast Attack Flotilla (aka Dvora Squadron) என்று பெயர். இந்த அணி யைச் சேர்ந்த அதிவேகத் தாக்குதல் படகு தான் சுண்டிக்குளம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தப் படகு அணியின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்.கொமாண்டர் என்.எல். அபேசிங்க. இவரது உதவியாளர் லெப்டினன்ட் பெரேரா. இவர்கள் இருவரும் P 434 இலக்க டோறாப் படகில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது தான் கடற்புலிகளின் தாக்குதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் P 434 இன் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் சம்பத் உள்ளிட்ட 19கடற்படையினரும் காணாமற் போய்விட்டனர்.

இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரேயொரு கடற்படைச் சிப்பாய் மட்டும் இந்தத் தாக்குதலின் பின்னர் உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலுக்குக் கடற்புலிகள் நீருக்கடியில் பயணிக்கக் கூடிய தாக்குதல் படகைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகிக்கிறது, கடற்புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் படகுகளை வைத்திருப்பதை கடந்த வாரம் படையினர் உறுதிசெய்திருக்கின்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் "கோகுலன் 2008′ எனப் பெயரிடப்பட்ட 35 அடி நீளமான நீர்மூழ்கிப் படகு ஒன்றை படையினர் கைப்பற்றினர். இது நீருக்கடியில் பயணிக்கும் திறனுடன் இருக்கிறதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும் கடற்புலிகள் நீர்மூழ்கிகள் குறித்து அதிக கவனம் செலுத்துவது உறுதியõகியிருக்கிறது.

அத்துடன் இப்போது அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கின்ற விநியோகப் படகுகளை வடிவமைத்தே ஆழ்கடல் விநியோகங்களை மேற்கொள்வதாகவும் கடற்படை கூறுகின்றது. நீர்மூழ்கிகளை சொந்தமாக வடிவமைத்துக் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பட்டியல் மிகவும் சிறியது. இலங்கை வடிவமைப்பில் மட்டுமல்ல பயன்பாட்டைக்கூட கொண்டிராத ஒரு நாடு.

ஆனால் புலிகள் இயக்கம் தனிப்பட்ட ரீதியில் நீர்மூழ்கிகளை வடிவமைத்து இயக்குகின்ற ஒரு அமைப்பாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்புலிகளிடம் இன்னும் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கின்றனவோ தெரியாது. அவர்களின் பலத்தை பெருமளவில் அழித்து விட்டதாக அரசாங்கத்தால் கூறமுடியாதுள்ளது.

கைவிடப்பட்ட பட குகள் சிலவற்றையும் நீர்மூழ்கியையும் கைப்பற் றியிருப்பதன் மூலம் கடற்புலிகளை முடக்கி விட்டதாக கூறிவிட முடியாது. இந்தநிலையில் கடற் புலிகளின் தாக்குதல்கள் அண்மையில் அதிக ரிக்க ஆரம்பித்திருப்பது அவர் கள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்படுவ தையே காட்டுகிறது.

குறுகலான கடற்பிரதேசத்துக்குள் கடற்புலிகள் மீது கடற்படை தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருக்கின்ற நிலையில் அடுத்து வரும் காலத்தில் கடற்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதல்களில் இறங்கலாம் என்று எதிர்பார்க் கிறது கடற்படை. முல்லைத் தீவு முற்றுகைக் சமரின் முக்கிய களமாக இந்தக் கடற்பகுதி மாறியிருக்கிறது.

 

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

 

http://www.tamilmann.com/2009/02/02/831

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP