ஆஹா தினமலருக்கு என்ன ஒரு மத சகிப்புத்தன்மை என்று வியற்கும் அளவுக்கு இன்று மூன்று மதங்களின் செய்தியையும் தினமலர் வெளியிட்டு இருந்தது.அதில் இரண்டு உங்கள் பார்வைக்கு
இன்று புனித வெள்ளி: சிலுவையின் மகிமை
ஏழைக்கோலத்தில் உலகில் பிறந்த இயேசு, கொடூர சிலுவை மரணத்தை சந்தித்தார்.
சிலுவை மரணம் என்பது சமூகத்தில் மிகவும் கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் குற்றமற்ற பரிசுத்தராக விளங்கிய இயேசுவின் மூலம் சிலுவை தற்போது புனித சின்னமாக விளங்கியது. பாவம் போக்க ரத்தப்பலி தேவை என்பது பழங்காலத்திலிருந்து இன்றுவரை மனுக்குலத்தில் தேவையாக இருக்கிறது. எனவே தன்னையே பாவ நிவாரணப்பலியாக கொடுத்து சிலுவை மரணத்தை ஏற்றார் இயேசுபிரான். அவர் உயிர்த்தெழுந்த பிறகும், அவரை நம்பினவர்களை ரோம அரசாங்கமும், யூத மதக்குருக்களும் மிகவும் கொடுமை படுத்தி வந்தனர். இந்நிலையில் கி.பி.306ல் ரோமப்பேரரசராக ஆட்சி செய்த கான்ஸ்டன்டைன், ஸ்பானியா தேசத்துடன் போர் புரியச் சென்றான். அப்போது வானத்தில் சிலுவை காட்சியைக் கண்டான். "நீ வெற்றி பெறுவாய்' என்ற சத்தமும் கேட்டது.
அந்த போரில் எதிர்பாராத விதத்தில் அற்புதமாக வெற்றி பெற்றான். உடனே தன் தேசத்தில் வெற்றி விழா கொண்டாடியதுடன், சிலுவைக்கு சொந்தமான இயேசுவையும், கிறிஸ்தவர்களையும் அறிந்து விசாரித்தான். அன்று முதல் மனம் மாறியவன், கிறிஸ்தவர்களிடத்தில் அன்பாக நடந்து கொண்டதுடன், இயேசுவை தன் சொந்த தெய்வமாக ஏற்று கொண்டான். கி.பி.313ல், ரோம் நகரம் முழுவதும் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளவும், உலக வரலாற்றில் இயேசுவை மையப்படுத்த வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்தான். உடனே இயேசுவை மையமாக வைத்து, ஆதாமிலிருந்து கிறிஸ்து வரை கி.மு.என்றும், இயேசுவுக்கு பின் கி.பி.என்றும் வரலாறு எழுத கட்டளையிட்டான். இயேசுவின் பிறப்பின் ஆண்டை கி.பி.1 ஆக வைத்து, கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வை ஆதாரமாக நம்பி, உலகில் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுள்ளனர்.
இன்று மிலாடி நபி: சரித்திர நாயகர் நபிகள் நாயகம்குமார்
மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த வேளையில், அவர்களை நல்வழிப்படுத் துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துõதுவர்களாக நபிமார்கள் விளங்கினர்.
இவ்வுலகிற்கு இறைவனால் 24 நபிமார்கள் அருளப்பட்டுள்ளனர். இவர்களில் இருபத்தி மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் கி.பி.33ம் ஆண்டு ஏப்ரல் 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன்பிறகு சுமார் 500 ஆண்டுகள் வரை எந்த ஒரு நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக உலகமக்கள், கிட்டத்தட்ட மிருகங்களாகவே மாறிவிட்டனர். அவர்களது வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற முறையில் இன்றுள்ள காஃபாவில் 360 விக்ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான் நபிகள் நாயகம்.
நபிகள் நாயகம் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் ஆமீனா. நாயகத்தின் முழுப்பெயர் "ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதாகும். இவர் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் இறந்துவிட்டார். தாயார் ஆமீனா இவர் பிறந்த 6ம் ஆண்டில் காலமாகிவிட்டார். எனவே ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் என்று அழைக்கப்பட்ட இவரது பாட்டனார் நாயகத்தை வளர்த்துவந்தார். பிறகு அவரும் காலமாகிவிடவே சிறியதந்தை ஹஜ்ரத் அபுதாலிப் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்துவந்தார். நபிகள் நாயகம் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தவர். இதன் காரணமாக மக்கள் அவரை "அல்மீன்' (நம்பிக்கையாளர்), என்றும், "அஸ் ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.
23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். 40ம் வயதில் இவரை தனது தராக அல்லாஹ் அறிவித்தான். நாயகத்திற்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் 7 குழந்தைகள் பிறந்தார்கள். ஆண்மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார் இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத்தந்தார். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையாரை "சுவர்க்கத்து பெண்களின் தலைவி' என இஸ்லாமிய மக்கள் போற்றுகின்றனர். நபிகள் நாயகம் இறைவனால் துõதராக அறிவிக்கப்பட்டதும், ""நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய துõதனாக இருக்கிறேன்,'' என்று சொன்னார். இதைக்கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர் இந்த கொடுமையை கடுமையாக அனு பவித்தார். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. துõரத்திலுள்ள மெதீனாவுக்கு அவர் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில்தான் நாயகத்தை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார் நாயகம். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவருக்கு இணை இவர்தான். அவர் இவ்வுலகில் தனது 63ம் வயதுவரை வாழ்ந்தார். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகை துறந்தார். அவர் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே "மிலாடி நபி' என்னும் பெயரில் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
http://www.dinamalar.com/2008Mar21/general_tn49.asp
Read more...