அதிரவைக்கும் அதிர்வு... புகைப்பட ஆதாரம்!
ஈழ மண்ணில் இனப்படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்
அந்த துயரத்தின் வலியும் ரணமும் இன்னும் நீங்கவில்லை!
போரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் தாங்கமுடியாத துன்பம் ஒருபுறம் என்றால்... சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினரின் மன உளைச்சலோ சொல்லில் அடக்கமுடியாத சோகம்!
இப்படி காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'மனித உரிமை கண்காணிப்பகம்' எனும் அமைப்பு, புதிய ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
ஈழப் போர் முடிந்த காலகட்டமான மே 16 முதல் 18 வரை வட்டுவாகல் எனும் இடத்தில் வைத்துதான், புலிகள் பகுதியில் இருந்து வந்தவர்களை ராணுவம் பிடித்துச் சென்றது. அவர்களின் பெரும்பாலோரின் கதி என்ன என்பதே தெரியவில்லை! காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களை அறிய, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக 'மனித உரிமை கண்காணிப்பகம்' ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது!
அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஃபிரான்சிஸ் ஜோசப் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில், கணிசமான விடுதலைப் புலிகள், வட்டுவாகல் பாலத்தின் தென்புறத்தில் சிங்களப் படையிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிச்சென்றதை போராளி ஒருவரின் மனைவி பார்த்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் கணவர் உள்பட அந்தப் பேருந்தில் சென்ற யாரைப் பற்றியும் இதுவரை ஒரு தகவலும் இல்லை.
இது போன்ற பலரின் தேடல் சோகங்களைத் தெரிவித்துள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம், போராளித் தளபதி கேணல் ரமேஷ் தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தீவிரப் பற்றாளர்கள் அதைப் பார்த்தால், ரொம்பவும் மனம் பதறிப் போவார்கள். பிரபாகரனுடன் முரண்பட்டு கருணா தப்பிச் சென்றபோது கிழக்கு மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், கேணல் ரமேஷ். கருணாவைத் திருத்த முயன்று, முடியாமல் போகவும், பிறகு பாதுகாப்பாக வன்னிக்கு வந்துசேர்ந்தவர். எதிரியையும் துரோகியையும் தொடர்ந்து கவனித்து வந்தவர். அப்படி இருந்தவர், பிரபாகரனின் கட்டளைப்படி காயம்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக சரண் அடைந்தார்.
'மக்களோடு மக்களாகச் சென்றவரை, இவர்தான் கேணல் ரமேஷ் என்பதை முன்னாள் போராளிகள் இருவர் மூலமே கண்டுபிடுத்துள்ளனர்' என்று ஒரு சாட்சி கூறியதாகச் சொல்கிறது, மனித உரிமை கண்காணிப்பகம்.
ரமேஷையும் மேலும் மூவரையும் தனியாகப் பிரித்த சிங்களப் படையினர், அருகில் இருந்த ஒரு குடிசைக்குத் தனியாக அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ரமேஷிடம் கடுமையாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்தக் கண்காணிப்பகத்தின் வீடியோவில் இது தெளிவாக விரிகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தளபதியாக இருந்தவரை, ஓலைக் கொட்டகையின் கீழ் உட்காரவைத்து, விசாரணையைத் தொடங்குகிறார்கள். இயற்பெயர் என்ன, சொந்த ஊர் எது, திருமணம் ஆகிவிட்டதா, மனைவி, குழந்தைகள் பெயர் என்ன, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தது எப்போது, இயக்கப் பெயர் என்ன, இயக்கத்தில் என்ன பொறுப்பு, முதலில் பொறுப்புவகித்த பகுதி எது, கடைசியாகப் பொறுப்பு வகித்த பிரதேசம் எது... இப்படி அடுத்தடுத்து விடாமல் கேட்டுக்கொண்டே போகிறார், எதிர்ப்புறம் உள்ளவர். திடீரென, 'மட்டக்களப்பு பிரதேசத்தின் சிங்களப் படை அதிகாரிகளின் பெயர் தெரியுமா?' என கேள்வியாளர் கேட்க, பதில் அளிக்கத் தடுமாறுகிறார், ரமேஷ். அந்தக் காட்சி முடியும் தறுவாய் அது... எதிர்த் தரப்பில் நின்றவர் என்ன செய்தாரோ... பயந்துபோன கோழிக்குஞ்சு போல, ''ஐ அண்டர்ஸ்டுட் சார்... அண்டர்ஸ்டுட் சார்'' என கேணல் ரமேஷ் சொல்வதுடன் காட்சி முடிவடைகிறது.
இன்னொரு வீடியோவில், சாதாரண உடையுடன் படுக்கையில் கிடத்தப்பட்டு இருக்கிறார், ரமேஷ். சில விநாடிகளில் காட்சி மாறுகிறது.. சுற்றிலும் சிங்களப் படையினர் உட்கார்ந்து இருக்க, அவர்களுக்கு நடுவில் இருக்கிறார், ரமேஷ். பின்னணியில் ஒரு டிராக்டர் ஓடும் சத்தம் கேட்கிறது. அங்கும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ரமேஷிடம் 'இன்று 22-ம் தேதி' எனச் சொல்லும் அவர்கள், 'பிரபாகரனின் மனைவி எங்கே இருக்கிறார்?' என்றும் கேட்கிறார்கள் (மே 17-ம் தேதி சரண் அடைந்ததாக ரமேஷ் சொல்கிறார். 17-ம் தேதிதான் பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றதாக ராணுவம் சொல்கிறது. ஆனால் 22-ம் தேதி பிரபாகரனின் மனைவி எங்கே என்று கேட்கிறார்கள்!). அடுத்து, ரமேஷின் முதுகில் உள்ள குண்டு காயத்தின் வடுவைக் காட்டி, 'எப்போது, எந்த சண்டையில் இந்தக் காயம் பட்டது?' எனக் கேட்க, '1988-ல் இந்திய ராணுவக் காலத்தில் பட்டது' என்கிறார், ரமேஷ்.
இப்படி எல்லாம் ரமேஷ் கடுமையாக விசாரிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், போரில் ரமேஷ் கொல்லப்பட்டார் என்றே சிங்கள ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். முதல் வீடியோ டிசம்பர் மாதமும் அடுத்த வீடியோ கடந்த வாரமும் வெளியே வந்துள்ளன. டிசம்பர் மாதம் வெளியானதை 'போலி வீடியோ' என்று சிங்களப் படை சொன்னது. அதே பதிலைதான் இப்போதும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான், நடேசன், புலித்தேவன் இருவரும் சுட்டுப் பொசுக்கப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவைத் தளமாகக் கொண்ட 'அதிர்வு' இணையதளம், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 'நடேசனுடன் சேர்ந்து சரண் அடைந்த அவரின் மனைவி, முதலில் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறகு, நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு நடேசனும் புலித்தேவனும் கட்டிவைத்துச் சித்ரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்' என்றும் சொல்கிறது 'அதிர்வு' தகவல். அதற்கு ஆதாரமாக, இருவரின் வயிற்றுப் பகுதியிலும் கை மணிக்கட்டிலும் காயங்கள் இருப்பதைக் காட்டுகின்றனர்.
''நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் சரண் அடைவது குறித்து 18 மணி நேரத்துக்கு முன்பே ஐ.நா-வுக்குத் தெரியும்'' என்று ஐ.நா-வில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் சொன்னதாகத் தகவல் இப்போது கசிந்துள்ளது.
''வன்னியில் நடந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணி நேரத்துக்கு முன்பாக ஐ.நா-வுக்குத் தெரியும். ஆனால் சரண் அடைந்தவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்து உள்ளது. சரணடைபவர்களின் விவரங்களும் ஐ.நா-வுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகள் வவுனியாவுக்குச் செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.
அப்போது (2009-மே) கொழும்புவில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகளில் பலரும் தற்போது பணியில் இருந்து விலகி உள்ளனர். அல்லது இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர். சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி, விடுதலைப் புலிகளைக் கொலை செய்யவே கொழும்புவும் கொழும்புவுக்கு ஆதரவான சில அதிகாரிகளும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்...'' என்றும் ஐ.நா. தொடர்பான ஒருவர் கூறியதாக இணையங்களில் தகவல் பரவி உள்ளது.
இதுவரை ''நடேசன், புலித்தேவன் சுட்டுக் கொல்லப்பட்டது கட்டுக்கதை'' என்று சொன்ன சிங்களத் தரப்பும் அவர்களுக்கு ''ஆமாம் சாமி'' போட்டவர்களும், இந்தப் புகைப்படங்களைப் பார்த்தபின் என்ன சொல்வார்களோ, தெரியவில்லை.
அடுத்தடுத்து ஆதாரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், குற்றவாளிகள் மீது விசாரணைகூடத் தொடங்கவில்லை, இன்னும்! என்ன உலகமோ?
- இரா.தமிழ்க்கனல்
source:vikatan
--
http://thamilislam.tk
Read more...