பாம்பு... பயமாய், வியப்பாய், அழகாய், மிரட்சியாய் தெரியும் உயிரினம். கண்ணீர் புகை குண்டு போட்டு கலைக்க முடியாத கூட்டத்தில், ஒரு பாம்பை உள்ளே விட்டால் போதும். மொத்த கூட்டத்தையும், ஓட, ஓட விரட்டி விடும். அதனால் தான், "பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என சொல்கின்றனர்.
அந்த அளவுக்கு சமுதாயத்தில் பயத்தை ஏற்படுத்தியுள்ள பாம்பை லாவகமாக பிடித்து தன் மந்திரக்கைகளால் வசமாக்கி விடுகிறார் ஒரு கல்லூரி மாணவி. எத்திராஜ் கல்லூரியில் சுற்றுலா இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா தேவிக்கு (21) பாம்புகள்தான் நெருங்கிய நண்பர்கள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றில் கிடந்த பாம்பை பார்க்க பெரும் கூட்டம். தன் தந்தையுடன் அந்த வழியே வந்த தீபிகா உடனே களமிறங்கினார்.கிணற்றில் இறங்கி, கயிற்றின் உதவியுடன் அந்த பாம்பை பிடித்தார். நான்கடி நீளத்தில் இருந்த அந்த நல்ல பாம்பு அனைவரையும் கண்டு படமெடுத்து சீறியது. அந்த பாம்பை லாவகமாக பிடித்து தான் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.கிணற்றில் அதிக நேரம் இருந்ததால் பாம்பின் உடலில் காயங்கள் இருந்தன. அவற்றிற்கு பச்சிலை சாறு மூலம் மருந்திட்டு குணமாக்கி, பின் மக்கள் நடமாட்டம் இல்லாத கொரட்டூர் ஏரி பகுதியில் பாம்பை விட்டு விட்டு திரும்பியுள்ளார் தீபிகா.
"பாம்பு பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது' எனக் கேட்டபோது, தீபிகா கூறியதாவது: சிறு வயது முதலே எங்கள் வீட்டின் அருகில் வரும் நாய், பூனைக் குட்டிகளையும், அடிபட்டு தாயை பிரிந்த பறவை குஞ்சுகளையும் எடுத்து வந்து அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பேன். பள்ளிக்கு செல்லும் போது, பல நாட்கள் நான் கொண்டு செல்லும் உணவை சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு இட்டுச் செல்வது வழக்கம். நான் செல்லும் வழியில் எந்தப் பிராணி அடிபட்டு கிடந்தாலும், நோய்வாய்ப் பட்டு கிடந்தாலும் அவற்றிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வேன். அப்படித் தான் பாம்புகள் மேலும் எனக்கு பரிவு ஏற்பட்டது.சென்னையில் மிகப்பிரபலமான ஸ்டான்லி பெர்னாண்டசிடம் விஷம், விஷமற்ற பாம்புகளை பிடிப்பது என்பது பற்றி கடந்த ஆறு மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். இதுவரையில் நாகப்பாம்பு, கோதுமைநாகம், சாரைப்பாம்பு ஆகியவற்றை பிடித்துள்ளேன். பிடிப்பவற்றை பாதுகாப்பாக, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிடுவதுதான் எனக்கு முதல் வேலை.பாம்பு பிடித்துவரும் போது, வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த பாம்பை பற்றிய முழுவிவரங்களையும் சொல்லித் தருவதுடன், அவர்களையும் பாம்பை நேசிக்க வைத்து வருகிறேன். தற்போது, கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையின் டாக்டர் கண்ணன் எனக்கு பாம்புகளை பற்றிய புத்தகங்களை கொடுத்து உதவி வருகிறார்.அவர் உதவியுடன், பள்ளிகளில் சென்று பாம்புகள் மற்றும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவி வருகிறேன். கல்லூரி படிப்புடன் ஐ.எப்.எஸ்., தேர்வுக்காகவும் பயிற்சி எடுக்கிறேன். புளூ கிராஸ் போன்று விலங்குகளை பராமரிக்க தனியான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு தீபிகா கூறினார்.
கல்லூரி மாணவியான தீபிகாவிற்கு, பாய் பிரண்ட் இல்லை. ஆனால், தினமும் வந்து ஹாய் சொல்லும் பாம்பு பிரண்ட் இருக்கிறதாம். இது பற்றி தீபிகா கூறுகையில், ""என் வீட்டின் அருகில் தினசரி வந்து போகும் பச்சை பாம்பு, எனக்கு நெடுநாளைய தோழியாக மாறி விட்டது. தாயிடம் இருந்து பிரிந்து வந்த அணில் குஞ்சும் என்னிடம் பல ஆண்டுகள் பாசமாக இருந்தது. நாளடைவில், என்னுடன் கல்லூரி வரைக்கும் அணில் குஞ்சு வந்து சென்றதும் உண்டு,'' என்றார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
Read more...