சமீபத்திய பதிவுகள்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டம்

>> Sunday, May 29, 2011


  • சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள  திரு. செல்வராசா பத்மநாதன்  விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார், என விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
    எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில்  அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
    கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
    எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
    ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
    இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
    ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
    சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
    இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
    திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
    அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
    சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி.
    "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
    ஆ.அன்பரசன்,
    ஊடகப்பிரிவு,
    தலைமைச் செயலகம்,
    தமிழீழ விடுதலைப் புலிகள்,
    தமிழீழம்.


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP