சமீபத்திய பதிவுகள்

இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி

>> Thursday, April 30, 2009

 

இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது.

இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது வீழ்ந்து வெடிக்கின்றன எனறும், முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதுள்ளதாகத் தெரிய வருகிறது.

StumbleUpon.com Read more...

இலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உலக வங்கி

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு
 
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்கியுள்ளதாகவும், மோதல் பிரதேசங்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

எனினும் அரசாங்கம் இதனை நிராகரித்தது.

இது தொடர்பில், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய கருத்து தெரிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் கட்டுமானத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை கருதியே யுத்த நிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்குவதாக தெரிவித்தார்.

அத்துடன் பொது மக்களை காப்பாற்றி வெளியேற்றும் பொருட்டு, கனரக ஆயுதங்களை பாவிக்காது, மிதமான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பயங்கர வாத்திற்கு எதிராக போராடுகிறோம், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தால் அவருக்கு அமெரிக்கா யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க வேண்டி அவசியம் இல்லை.

அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் இருக்கும் போது, அவருக்கு யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க எந்த தரப்பும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ' தமது சிந்தனை கோணத்தில், சிறிலங்கா அரசாங்கம், பொது மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்க மறுத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்களை காலம் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் அது நிற்க வேண்டிய சரியான இடத்துக்கு அழைத்து வர முடியும் என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடனை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், அரசாங்கம் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்கும் போது அது வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இந்த தீர்மானம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தினை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் யுத்த வெற்றிகளை இலக்கு வைத்து, அரசியல் தீர்வு முன்வைப்பை மறந்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கடன் தொகையினை பெறுவது தொடர்பாக, இலங்கையின் விசேட குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களையடுத்து, இந்த கடன் பெறல் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடும் பொருட்டு, நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் இலங்கை வரவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவுத்துறை தகவல்

  

கொழும்பு, ஏப்.29-

பிரபாகரன் தென் ஆப்பிரிக்கா தப்பி சென்று விட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைபுலிகள் கட்டுப்பாட்டில் தற்போது 6 கிலோ மீட்டர் நீள பகுதி மட்டுமே உள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இதற்குள்தான் தங்கி இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புகிறது. எனவே அவரை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால் பிரபாகரன் அங்கு இல்லை. அவர் தப்பி சென்று விட்டார் என்று தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் நீர்மூழ்கி படகு மூலம் தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சிங்கள ராணுவ தளபதி கூறினார். அவர் ஏற்கனவே தப்பி சென்று விட்டார் என்றே இந்திய மற்றும் இலங்கை உளவு அமைப்புகளும் கூறுகின்றன.
 
விடுதலைப்புலிகளின் வலுவான கோட்டையாக இருந்த புதுக்குடியிருப்பு வீழ்ந்ததுமே அவர் தப்பி சென்று விட்டதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. அவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் அல்லது லாவோஸ் நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
 
மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசுகளும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் இருப்பதால் தனக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்று கருதி அங்கும் சென்றிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
 
பிரபாகரன் தனக்கு ஆபத்து நெருங்கும்போது தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் உளவு அமைப்புகள் சொல்கின்றன.

பிரபாகரனின் மெய்காப்பாளராகவும், தளபதியாகவும் இருந்து பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா பிரபாகரன் பற்றி கூறும் போது பிரபாகரன் எப்போதுமே உயிருக்கு ஆபத்தான இடத்தில் இருக்க மாட்டார். சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பல மைல் தூரத்துக்கு அப்பால்தான் இருப்பார். இப்போது ஆபத்து நெருங்கி இருப்பதால் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

 

நன்றி:மாலைமலர்

StumbleUpon.com Read more...

சென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

  
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான்.
 
இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
 
பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது.
 
4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


இந்த மர்ம ஆசாமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக ரெயிலை கடத்தி நாசவேலை செய்தார்? என்பது போன்ற கேள்விகள் எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.
 
நேற்றைய நாசவேலையில் 2 ரெயில் என்ஜின்களும் முழுமையாக நாசமாகி விட்டன. 4 ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தது. விபத்து நடந்த வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது போல உருக்குலைந்து போனது. இந்த சேதங்களின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
பெரம்பூர் ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
அவர்களது முதல் கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
 
கடத்தப்பட்ட ரெயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமான காரியமல்ல. நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரெயிலை லாவகமாக ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரெயில் சீராக செல்லும். இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.
 
நேற்று அதிகாலை 4.45 மணிக்கு ரெயில் டிரைவர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது ரெயிலின் மற்றொரு வாசல் வழியாக ஏறிய மர்ம மனிதன் திடீரென ரெயிலை இயக்கி உள்ளான். எடுத்த எடுப்பிலேயே ரெயில் வேகம் பிடித்தவுடன் இது சதி வேலை என்பது உறுதியாகிவிட்டது.
 
ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அனல் பறக்க கடந்து சென்றுள்ளது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் திகைத்து போயிருந்தனர். அதிகபட்ச வேகத்தில் ரெயில் சென்றது தெரிய வந்துள்ளது.


பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் பெரிய வளைவு ஒன்று வரும் அதில், வேகமாக சென்றால் ரெயில் கவிழ்ந்து விடும் என்பதால் அங்கு மட்டும் ரெயில் சற்று வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த சில நொடிகளில் ராட்சத வேகம் பிடித்து ஓட தொடங்கி உள்ளது. ரயிலை ஓட்டி சென்ற மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதிக்க வாய்ப்பில்லை. அப்படியே குதித்தாலும் உடல் சிதறி பலியாகி இருப்பான். எனவே, மர்ம மனிதனும் ரெயில் விபத்து தாக்குதலில் உயிரை விட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் பிணத்தின் படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில், ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த வாலிபரை பார்த்ததாக கூறினார்.
 
மேலும் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஒரு மாதமாக ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததாகவும் தினந்தோறும் தனது கடைக்கு வந்து அதிகாலை வேளையில் சிலருடன் போனில் பேசுவார் என்று கூறினார். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு வந்து போனில் பேசினார். என்ன பேசினார்? யாருடன் பேசினார்? என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டார் என போலீசாரிடம் அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
 
கடைக்காரரின் தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை ஓட்டிச் சென்ற மர்ம மனிதன் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் யார் யாருடன் போனில் பேசினார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


மர்ம மனிதன் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
சாதாரண நபர்கள் யாரும் இந்த அளவுக்கு ரெயிலை கடத்தி சாதுர்யமான தாக்குதலை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தில் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களே அதேபோல் ரெயிலை கடத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி அதிகாலை வேளையில் பெரும் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம்.


 அது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
 
ஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்குள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP