சமீபத்திய பதிவுகள்

இலங்கையில் தமிழினமே அழிகிறது- இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

>> Friday, January 23, 2009

இலங்கையில் தமிழினமே அழிகிறது- இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
 
இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காப்பாற்ற இந்திய அரசாங்கத்துக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில்  இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  தீர்மானம் கொண்டு வந்தது.
தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உரையாற்றினர். இறுதியாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் நடைபெறுகின்ற இனவெறிப் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த சபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே.மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க.சார்பில் செங்கோட்டையன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கின்றனர்.
இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்று இந்த மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்கு காரணமே - கடந்த காலத்தில் பலமுறை சட்டப்பேரவையிலும், அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சியின் பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழினத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒருமுறை இன்று மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்.
இதை ஏன் கடைசியாக ஒருமுறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பலமுறை இந்த சபையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இதுதான் நேரம் என்று ஒருவரையொருவர் மறைமுகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நமது கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கின்றோம்.
இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையின் முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டும் என்று நான் காலையில் நமது நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக்கொண்டேன். சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவில் பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர்பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நமது கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939 ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். "இந்தியன் இன் சௌத் ஏசியா" என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி.
"இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்று இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்" என்று நேரு அவர்கள் 1939 ஆம் ஆண்டு சொன்னதைத்தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன். நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு எந்த இந்தியாவில் முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் எனது தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.
"இலங்கையில் தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.
குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.
ஐயோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே -பூண்டோடு அழிகின்றனரே
மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகின்றோம்?
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயற்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்கள் ஆட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.
கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!
இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.
எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படாவிட்டால் ஆளும் கட்சியான தி.மு.க. பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்தில் விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால்தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழீழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - "ஜயகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்" என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

 

http://www.puthinam.com/full.php?2aYQrNe0d1i4L0ecLC4Y3b4H8GK4d2e0j2cc2ImY3d435UO2b02YNm3e

StumbleUpon.com Read more...

வன்னி மனித பேரவலத்தை இருட்டடிப்புச் செய்யும் கொழும்பு ஊடகங்கள்

வன்னி மனித பேரவலத்தை இருட்டடிப்புச் செய்யும் கொழும்பு ஊடகங்கள்
 
வன்னியில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திவரும் உக்கிரமான தமிழின அழிப்புப் படையெடுப்பில் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள-ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன.
சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கின்ற செய்திகளுக்கு மாத்திரமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
குறிப்பாக ஆங்கில ஊடகங்களில் விடுதலை புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நாட்டை விட்டு வெளியேறுவார் என்பது தொடர்பாகவும் அவரது உடல் நிலை குறித்தும் கற்பனை கலந்த விமர்சனங்களுடன் செய்திகள் வெளியிடுகின்றன.
அத்துடன், ஊடக பண்புகளுக்கு மாறான செய்திகளும் வரையறை இன்றி விடுதலைப் புலிகளை மட்டும் விமர்சிக்கும் கேலிச்சித்திரங்களும் வெளியிடப்படுகின்றன.
நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்பட்ட "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடும் அவ்வாறான செய்திகளையே பிரசுரித்து வருகின்றது.
மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் என்பதற்கு அப்பால் சிறிலங்காவின் சிங்கள தேசியம் என்ற உணர்வுகளின் அடிப்படையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
அதேவேளை, சில ஆங்கில-சிங்கள ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமவை ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் அதற்கு ஏற்ப போரில் படைகளுக்கு ஏற்படுகின்ற இழப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன.
இதன் காரணமாகவே சில சிங்கள-ஆங்கில ஊடகவியலாளர்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுகின்றனர்.
இதேபோன்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒருசில தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளும் வன்னியில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்ற செய்திகள் தொடர்பாக இருட்டடிப்புச் செய்வதுடன் சிறிலங்கா அரசாங்கம் வெளியிடும் செய்திளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinam.com/full.php?2bWOqJe0d1c1K0ecRD413b4BcIg4d2l4l3cc2HsV4d438WS2b026St3e

StumbleUpon.com Read more...

ஜெர்மன் விடுத்த போர்நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

ஜெர்மன் விடுத்த போர்நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது
இலங்கையில் தமிழ் பொதுமக்கள் தொடர்பான மனிதாபிமான காரணிகளைக் கருத்திற் கொண்டு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜெர்மன் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களினால் ஜெர்மனிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எந்தக் காரணத்திற்காகவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படமாட்டாதென அரசாங்கம் திட்டவடட்மாக அறிவித்துள்ளது.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

தமிழீழத்தை அங்கீகரியுங்கள்; நாமே இந்தியாவின் நண்பர்கள்: இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் பேரணி

தமிழீழத்தை அங்கீகரியுங்கள்; நாமே இந்தியாவின் நண்பர்கள்: இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் பேரணி
 
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தியுள்ளனர். இதில் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில் அமெரிக்க இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராகுல் ராஸ்கோத்ரா வெளியில் வந்து அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாற்றினார். தனது கருத்தாக எதனையும் அவர் தெரிவிக்காத போதிலும், சொல்லப்பட்ட கருத்துக்களை அவர் பொறுமையாக செவிமடுத்தார்.
 
"சிறிலங்கா எப்போதும் இந்தியாவின் நண்பனாக இருந்ததில்லை. அது ஒரு சந்தர்ப்பவாத நாடு. இந்தியா - பாகிஸ்தான் போர்க் காலத்தில், பாகிஸ்தான் வான்படைக்கு எண்ணெய் நிரப்பும் தளமாக சிறிலங்கா அன்று செயற்பட்டது. இப்போதும் அது பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் இராணுவ உறவுகளைப் பேணுகின்றது. அதே நேரம், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியையும் பெறுகின்றது. இந்தியாவா அல்லது பாகிஸ்தானா தேவை என்ற நிலை வரும் போது அது பாகிஸ்தான் மற்றும் சீனா பக்கமே போகும். ஆனால், தமிழர்கள் அப்படியானவர்கள் இல்லை" என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர்.
"தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நண்பர்கள். தமிழர்களே இந்தியாவின் இயற்கையான உறவுகள். ஏனெனில், ஒரே வேரிலிருந்து வந்த ஒரே தமிழினம் தான் தமிழ் நாட்டிலும், தமிழீழத்திலும் வாழ்கின்றது. இந்திரா காந்தி இறந்த போது சேர்ந்து அழுதவர்கள் நாங்கள் தான். எம்.ஜி.ஆர் இறந்த போது சேர்ந்த அழுதவர்களும் நாங்கள் தான். ஆனால், அப்போதெல்லாம் சிரித்து மகிழ்ந்தவர்கள் சிறிலங்கா தரப்பினர்." என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.
"தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் நல்லது. தமிழர்கள் எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இந்தியாவின் தெற்கில் ஒரு பெரும் காப்பு அரணாக தமிழீழம் எப்போதுமே இருக்கும். அதனால் தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்." என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரி ராஸ்கோத்ராவிடம் வலியுறுத்தினர்.
 




பின்னர் - இதே கருத்துக்களை உள்ளடக்கிய மனு ஒன்று, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவருக்காகவும், இந்திய பிரதமருக்காகவும் அந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
அக்கடிதத்தில் - "அமெரிக்க உலகத் தமிழர் அமைப்பு", "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்", "இலங்கையில் அமைதிக்கான அமெரிக்கர்கள்" ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
சிறிலங்கா படையினருடன் - போர்முனையில் - இந்தியப் படை அதிகாரிகளும் சேர்ந்து செயற்படும் படங்களைத் தாங்கியிருந்த, பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், சிறிலங்காவின் தமிழினப் படுகொலை போருக்கு இந்தியா புரிந்து வரும் உதவியைக் கண்டித்தனர்.
மகாத்மா காந்தி போல வெள்ளை உடையணிந்து, "ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற பாடலைப் பாடிய படி, "அமைதியைப் போதித்த அந்த மகான் பிறந்த நாடு, போரை நடத்துவதற்கு அல்லாமல், போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே பாடுபட வேண்டும்" என பேரணியில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.
 





இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராகுல் ராஸ்கோத்ரா, அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாடுகின்றார்

 

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d4cYK0ecKA4S3b4C6DV4d2f1e3cc2AmS3d434OO2a030Mt3e

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது.

 
 
நாளுக்கு நாள் மோசமாகிக்  கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி...

பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில். இந்தக் காலப்பகுதி மிகவும் முக்கியமான காலகட்டமாக கருதப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பது மெல்ல மெல்ல இராணுவ மயமாக்கப்படுகிறது, விடுதலைப் புலிகளின் விமானத்தளம், கடற்புலிகளின் படகுகளைக் கைப்பற்றி விட்டோம் என்றும், சில நம்பமுடியாத புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்காப் படைகள் கூறும் தகவல்கள்உண்மையானது தானா?

பாதுபாப்பு அமைச்சின் செயலர்  கோத்தபாயவின் தகவல்களுக்கும் ஹெகலிய ரம்புக்வெலவின் கருத்துக்களுக்கும்  சரத் பொன்சேகாவின் தகவல்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாது இருப்பதன் பின்னணியில் இருக்கும் உண்மைதான் என்ன? யாரை ஏமாற்றுவதற்கான முயற்சி? அரசு கூறும் தகவல்கள் உண்மையில்லை என்றால்! இந்தச் செய்திகளை அழகாகவும் மிகுந்த மதிநுட்பமாகவும் வெளியிடுவதில் அரசாங்கத்துக்கு என்ன இலாபம். அரசாங்கத்தின் கூற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பது எமது கேள்வியாக விரிகிறது!

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அரசு தொடங்கிய வடபோர்முனைப் போரானது முயல் வேகத்தில் தொடங்கி ஆமையின் வேகத்தையும் விட மிகவும் கேவலமான வேகத்தில் முடிந்தது! குறித்த திகதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என சூளுரைத்த பொன்சேகாவுக்கு போதுமடா சாமி போதும் என்றாகி விட்டது புலிகளின் பதில் தாக்குதல்கள்.

அஞ்சுங்கெட்டு அறிவும்கெட்ட மகிந்தருக்கு மயக்கம் வராத குறை! ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னணிப் படைகளுடன், வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களையும், விமானப் படைகளையும் இணைத்துக் கொண்டு தொடரப்பட்ட போரானது எவ்வளவு தூரம் வெற்றியை பெற்றுத் தந்தது? ஆளில்லாத கிளிநொச்சி நகரைப் பிடிப்பதும் அங்கு சிங்களத்து தேசியக் கொடியை ஏற்றுவதும்தான் அவர்களின் வெற்றியா? சரி  கிளிநொச்சி நகரைப் பிடிப்பதற்கான உண்மைக்காரணம் என்ன?

கிளிநொச்சி என்பது சர்வதேசங்களுக்கு மிகவும் பழகிப்போன பூமி. பல நாட்டு  இராஜதந்திரிகள் வந்து போன மண், அந்த மண்ணை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பை துண்டித்து விடலாம் என்பதுதான் அவர்களின் திட்டம்.

கிளிநொச்சிப் போரைத் தொடங்கியபோது அரசும், மகிந்தரும் கூறிய விடயத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பது சிறந்தது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பேன் எனக் கூறிய அரசானது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரும் கூட, அதுபற்றி எவ்விதமான பேச்சோ,தீர்வோ எதுவுமேயின்றி முல்லைத்தீவுக்கான போரில் முனைப்புக் காட்டுவதன் நோக்கம் என்ன? அவ்வாறு ஒரு தீர்வை வைத்திருக்கும் அரசு ஏன் விடுதலைப் புலிகளை ஓரங்கட்டிவிட்டு தீர்வைத் திணிக்க நினைக்கிறது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என தமிழ் மக்கள் எப்பொழுதே ஆணி அடித்தாற்போல் கூறி விட்டார்களே. அப்படியானால் தமிழர்களுக்கான அரசின் தீர்வு எவ்வாறானதாக இருக்குமென சாதாரண சாமனியனுக்குக் கூட அது புரியும்! ஞாபகமறதி வாறது வழக்கம்தான.; அதற்கு மருத்துவரைத்தான் நாடவேண்டுமே தவிர கிளிநொச்சியை அல்ல!

குரைக்கின்ற நாய் கடிக்காது என்பார்கள். இங்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் குரைப்பது எதைக் காட்டுகிறது? உண்மையில் இந்தப் போரை வெறும் ஆயுதப் போராக அரசு கருதவில்லை. பதிலாக இதையொரு பிரச்சாரப் போராகவே அரசு கருதுகிறது! உண்மையில் ஆயுதப் போரின் மூலம் கிடைக்கக் கூடிய வெற்றியானது 50%மாக இருக்குமானால், மிகுதி 50% உளவியல் போர் மூலமாக கிடைக்கப் பெறுவதேயாகும்.

வன்னிப் போர்முனையில் அரச படைகள் ஈட்டும் வெற்றியென்பதும் இவ்வாறானதே! மக்களைத் திசைதிருப்பும் இந்த முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு அதிகமான வெற்றிகளைப் பெறமுடியாது போனாலும், இந்தியா போன்ற நாடுகளில் இந்த யுக்தியானது பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டி இருக்கிறது என்பது மெய்யானதே!

உதாரணமாக சென்ற வாரம் ஸ்ரீலங்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சிங்சங்கர் மேனன் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோருவாரென தமிழகத் தலைவர்களால் அதிகமாக எண்ணப்பட்ட போதும், அங்கு அவர் அந்த விடயம் பற்றி எதுவும் பேசாது, பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது பற்றிப் பேசிவிட்டுப் போயிருந்தார் இதன் மூலம் தமிழகத்தின் தணலை அணைக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த உளவியல் போரானதுபுலம்பெயர் தமிழர்களிடையே ஒருவித சந்தேகத்தை அல்லது விடுதலைப் புலிகள் பற்றிய தப்பான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கே! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பானது மிகப்பெரிய பங்களிப்பு என தேசியத் தலைவர் அவர்களாலேயே பலமுறை சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான பிராச்சாரப் போரையும் இந்த மக்களே முன்னின்று நடத்துகிறார்கள். இதனால் சர்வதேச மட்டத்தில் ஏற்படக் கூடிய நெருக்குவாரங்களை தணிப்பதற்கான முயற்சியாக இந்த உளவியல் போர் கருதப்படுகிறது.

அதே வேளையில் இந்த பின்னணியில் பார்க்கும்போது இந்தப் போரானது வெறுமனே தமிழ் மக்களை நோக்கிய போராகக் கருதமுடியாத சூழலுமுண்டு. காரணம் போரிடும் வலுமிகுந்த இராணுவப் படையணிகள் கிளிநொச்சி முல்லைத்தீவுக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலினால் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள், தப்பியோடியவர்களென ஏராளமானோர் அடங்குவர். சிதைந்து போகும் இராணுவ கட்டமைப்பை மேலோங்கச் செய்வதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடமும் இருந்து எழக்கூடிய விமர்சனங்களையும் கேள்விகளையும் தணிப்பதற்காகவும், உளவியல் ரீதியாக தமக்குச் சாதகமான முறையில் ஆட்சியை நடத்த இந்தப் போர் உதவலாம்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் பதுங்கல் என்பது "சாக்ரடீஸ்"சொன்னதைப் போன்று ஒரு சாதனை படைப்பதற்கான பதுங்கலாகவே கருதலாம். இருந்த போதும் நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நிறையவே உண்டு. அரசின் கண்மூடித்தனமான குண்டு வீச்சு, பொருளாதாரத் தடை,மருத்துவ வசதியின்மை இவை அனைத்தையும் நடத்தும் இந்த அரசின் அடக்குமுறையை மீட்டு வெளியே வர விடுதலைப் புலிகள் நன்கு திட்டமிட்டு சில பின்னகர்வுகளையும், தேவைப்படும் போது  பாய்ச்சலையும் நடத்தலாம்.

ஏனென்றால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுடன் தொடர்ந்தும்  இருக்கிறார்கள் என்றால் அங்கு ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.

முல்லைத்தீவை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைப்பற்றி விடுவதற்கான எந்தச் சூழலும் இல்லை. முல்லைத்தீவை இந்திய இராணுவமும் முற்றுகையிட்டிருந்த போதும் அவர்களால் கூட அங்கு செல்ல முடியாது போனதுதான் வரலாறு.

இது ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் நன்கு தெரியும். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடைபெற்ற டோரா அதிவேகப் படகு மூழ்கடிப்பாகும். விடுதலைப் புலிகள் இன்னும் பலமுடன்தான் இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களிடன் புதிய பதிய படையணிகள் இருக்கிறது! புதியரக ஆயுதங்கள் இருக்கிறது! புதிய புதிய வியூகங்கள் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட நம்பிக்கைக்குரிய எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் இருக்கிறார்.

எனவேதான் இந்த முல்லைத்தீவுப் போரை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெறும் ஆயுதப் போராக கருதாமல் உளவியல் போராகவும் கையிலெடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை!


 
 அல்லையூர் சி.விஜயன்  (இத்தாலி)

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d1j0A0ecQG7D3b4F9E84d2g2h3cc2DpY2d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

புலம்பேர் தமிழ்மக்களுக்கோர் செய்தி வன்னியிலிருந்து, இந்த வீடியோவை பார்க்கவும்.. நன்றி ப்ரியன்.



http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

தாயக மக்களுக்களுக்காக நாம் செய்யவேண்டிய உடனடிச் செயற்பாடு - ஒலிப்பகிர்வு

தற்போது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச்சமூகம் அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் வழி நடத்தலோடு எம் தாயக உறவுகளின் அல்லல்களை கவன ஈர்ப்பு நிகழ்வுகளாக நடத்தி வருகின்றன. இவற்றோடு நாம் ஓவ்வொருவரும் தனி நபர்களாகச் செய்ய வேண்டிய இந்த அவசரப் பணியில் எம்மை ஈடுபடுத்தி நம் எம் உறவுகளின் அல்லல் தீர எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்ப்போமே.

அந்த வகையில் கனடாவில் வாழும் நம்மவர், அரசியல் விஞ்ஞானத்துறையில் முதுமாமணிப் பட்டம் பெற்ற திருமதி வேணில் இம்மானுவேல் அவர்களை சற்று முன்னர் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேயர் நிகழ்ச்சிக்காக வானலை வழி சந்தித்தபோது எம் தாயக உறவுகளின் சொல்லெணாத்துன்பியல் வாழ்வும், அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய உடனடிப் பணி குறித்தும் தன் எண்ணக் கருத்துக்களை வழங்கியிருந்தார். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.




source

StumbleUpon.com Read more...

தமிழீழ மக்களுக்கு வன்னியிலிருந்து முக்கிய செய்தி

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 106 பேர் படுகாயம்

 
 
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 88 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 329 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லம், சைவச்சிறார் இல்லம் மற்றும் மகாதேவ ஆச்சிரமம் ஆகியன மீது இன்று வியாழக்கிழமை காலை வேளை சிறிலங்கா படையினர் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
 
இவற்றுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இனிய வாழ்வு இல்லம் மாற்று வலுக்கொண்டவர்களுக்கான இல்லமாக அனைத்துலக அமைப்புக்களின்  தொடர்புகளுடன் இயங்கி வருகின்றது.
 
மகாதேவா ஆச்சிரமம் ஆதரவற்ற சிறார்களை பராமரிக்கின்ற சிறுவர் இல்லம் ஆகும்.
 
சைவச்சிறார் இல்லமும் சிறார்களை பராமரிக்கின்ற இல்லம் ஆகும். இவற்றினை இலக்கு வைத்து இன்று காலை 7:55 நிமிடம் தொடக்கம் 8:10 நிமிடம் வரை இப்பகுதி மீது சிறிலங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலையும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
 
இதில் இனிய வாழ்வு இல்லம் சைவச்சிறார் இல்லம், மகாதேவா ஆச்சிரமம் ஆகியன மீதும் வீதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்கள் ஆகியனவற்றின் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
 
காலை வேளையில் பேரவலத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டது.
 
இதில் இல்லங்களில் இருந்தவர்கள் வீதிகளில் பயணித்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள் உள்ளிட்ட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்தனர்.
வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்தின் மீதான சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன் காயமடைந்துள்ளார்.
 
இதேவேளையில், இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பொதுமக்கள் வீட்டின் மீது நேற்று இரவு எறிகணை வீழ்ந்து வெடித்ததில் குமரசாமி தவமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இதன் பின்னர் இன்று காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
 
வள்ளிபுனம் பாடசாலையில் இயங்கும் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையை இலக்கு வைத்து இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
 
இதன்போது மருத்துவமனை ஆண்கள் விடுதி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
 
இத்தாக்குதல் நடைபெற்ற போது மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையில் நோயாளர்கள் இருந்தனர்.
 
இதில் மருத்துவமனைக்குள் இருந்த 5 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
மருத்துவமனைக்குள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் நேயாளர்கள் பேரவலப்பட்டனர்.
 
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் மீது நேற்று இரவும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
மருத்துவமனை மீதான எறிகணைத்தாக்குதலில் நோயாளர் காவு வாகனம், உழுவூர்தி, நீர்த்தாங்கி ஊர்தி என்பனவும் சேதமாகியுள்ளன.
 
இத்தாக்குதல்களில் 48 பேர் படுகாயமடைந்தனர்.
ர.சீரணி (வயது 04)
ர.சாரங்கன் (வயது 06)
க.கோசிகன் (வயது 02)
ந.மகேந்திரராசா (வயது 42)
வே.பாலசுந்தரம்
பா.புனிதவதி
ஆனந்தம்
ஜெயகாந்தன் ஜெயரூபி
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில்
ச.முருகையா (வயது 66)
செ.பிரபாகரன் (வயது 40)
ஜே.ஜெனிற்றா (வயது 14)
ச.பரிதினி (வயது இரண்டரை)
ஜே.விக்கினேஸ்வரி (வயது 32)
அ.றகுவர்னன் (வயது 29)
தெ.தர்சன் (வயது 14)
ப.குமார் (வயது 38)
த.தருமலிங்கம் (வயது 30)
க.இராசதுரை (வயது 57)
பு.மகிழினி (வயது 13)
நா.மலர்க்காந்தபூபதி (வயது 75)
கிருஸ்ணகுமார் (வயது 36)
க.தர்மலிங்கம் (வயது 34)
மலர் சாந்தபூபதி (வயது 73)
கனகலிங்கம் சஜிதா (வயது 12)
அ.சரண்யா (வயது 13)
செ.நந்தகுமார் (வயது 15)
ஜெ.ஜனனி (வயது 17)
அ.அனுரா (வயது 29)
ந.ஜோதிலக்ஸ்மி (வயது 68)
சிதம்பரப்பிள்ளை தீபன் (வயது 22)
இ.சத்தியதாஸ் (வயது 21)
சு.சந்திரலீலா (வயது 48)
அ.குமார் (வயது 23)
தி.சுபாகரன் (வயது 28)
க.தவமலர் (வயது 43)
க.சசிகரன் (வயது 19)
சூ.கென்கசன் யூட் (வயது 32)
விஜயபாலன் (வயது 41)
ச.செல்லத்துரை (வயது 67)
கே.அபியுகா (வயது 06)
சி.விமலாதேவி (வயது 46)
சி.கணேசமூர்த்தி (வயது 49)
சி.சிவசிதம்பரம் (வயது 74)
ப.பிரசாத் (வயது 18)
அ.ரவி (வயது 42)
வ.லிங்கநாதன் (வயது 37)
ச.ரம்சோன் (வயது 42)
சி.அபிநயா (வயது 02)
க.ரேவதி (வயது 15)
பி.மல்லிகாதேவி (வயது 48)
வ.பூங்கோதை (வயது 40)
வை.சின்னத்தீபனா (வயது 60)
பா.கவிதா (வயது 28)
வானதி (வயது 13)
அ.ரவிகரன் (வயது 29)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
தேவிபுரம் பெரியகுளம் பகுதியில் இரவு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர், சிவசாமி சகுந்தலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசுவமடு மயில்வாகனபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் தா.டேவிட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செ.டயஸ்குமார் (வயது 19)
செ.காந்தகுமார் (வயது 12)
ஊ.ஜரோஸ் (வயது 13)
எ.விக்டோரியா (வயது 33)
ஜெனிற்றா (வயது 18)
விஜயநிர்மலா (வயது 40)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
உடையார்கட்டு தெற்குப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பொதுமக்கள் வாழ்விடம் மீது இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமதி (வயது 33)
நா.வேந்தன் (வயது 15)
தவராசா (வயது 47)
மற்றும் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நிரோஜினி (வயது 09)
நிருசா (வயது 08)
29 அகவை சீரா (வயது 29)
பார்த்தீபன் (வயது 14)
ஜெ.ஜெயரூபி (வயது 28)
ஞானசேகரம் (வயது 46)
கோகிலராணி (வயது 49)
பாஸ்கரன் (வயது 34)
கவிராஜ் (வயது 30)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை முதல் இடைவிடாது எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆட்டிலெறித் தாக்குதல்கள் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் படையினரால் செறிவாக நடத்தப்படுவதால் மக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
வீதியோரங்களில் அதிகளவில் மக்கள் தங்கியிருக்கின்றனர். இருப்பிடம் இல்லாது மக்கள் அவலப்படுகின்றனர்.

 

http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR24d31VoK2a03I4AKe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0KcYK3e

StumbleUpon.com Read more...

வன்னியில் இரு முனை மோதல்களில் சிறிலங்கா படையினர் 51 பேர் பலி

வன்னியில் இரு முனை மோதல்களில் சிறிலங்கா படையினர் 51 பேர் பலி
இத்தாக்குதல் குறித்து தெரியவருவதாவது:-

புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர்.

இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.

இதில் ஆர்பிஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் பற்றி தெரியவருவதாவது:-

விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினருக்கு உதவியாக எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அத்துடன், படையினருக்கு ஆதரவாக வான்தாக்குதலும் செறிவான எறிகணைத் தாக்குதலும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இதில் படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவிலானோர் காயமடைந்தனர்.

இதில் பிகே எல்எம்ஜி, ஏகே எல்எம்ஜி, பிகே எல்எம்ஜி, ஆர்பிஜி உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காயமடைந்த படையினரை பின்தளத்தில் உலங்குவானூர்திகள் ஏற்றிச் சென்றுள்ளன.
 

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232644294&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP