சமீபத்திய பதிவுகள்

கன்னித்தன்மை பரிசோதனை:14 பெண்கள் கற்பிழந்துள்ளது கண்டுபிடிப்பு?

>> Monday, August 24, 2009

 

கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

 

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.

'முக்கிய மந்திரி கன்யாதான் யோஜனா' (முதலமைச்சர் திருமண உதவித் திட்டம்) என்ற திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் இலவசத் திருமணங்கள் மாதந்தோறும் நடத்தி வைக்கப்படுகின்றன. இதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சீதனமாக, ஒரு  பெட்டியில் சமையல் பாத்திரங்களும், ஒரு கைபேசியும், 6500 ருபா ரொக்கமாகப் பணமும் வழங்கப்படும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட தொன்னூறாயிரம் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

 
 
கடந்த ஜூன் மாதம் 30-ஆம்தேதி இத்திட்டத்தின் கீழ் 152 தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மணப்பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால்தான், அவர்களுக்குத் திருமணம் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி, திருமணத்திற்காக வந்திருந்த மணப்பெண்கள் 152 பேருக்கும் உடனடியாக கன்னித்தன்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 14 பேர் தவிர்த்து மீதமுள்ள 138 பேருக்கு திருமணம் நடத்தப்பட்டது.
தங்களது திருமணத்திற்குக் கூட அரசிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணமேடைக்கு வந்த பெண்களை இத்தகைய சோதனை மூலம் உளவியல் ரீதியாக வதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் போலீசில் புகார் செய்ததையடுத்து, இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள்  நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பதாகக் கூறி, அந்த ஏழைப் பெண்களை மீண்டும் அவமானப்படுத்தின.

முதலில் அவ்வாறு பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை என்று மறுத்த பா.ஜ.க.வினர், பின்னர் பொதுவான உடல்நலப் பரிசோதனை மட்டும் நடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இறுதியாகக் குட்டு வெளிப்பட்டவுடன், தங்களது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக "மணப்பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனப் பரிசோதித்தோம்; ஆனால் கன்னித்தன்மைப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை" என்று கூறினார்கள்.  இதன்  மூலம் திருமணம் செய்ய வந்திருந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரித்ததுடன், அரசுக்கு எதிராகப் புகார் கொடுத்த அந்த இரு பெண்களையும் மிரட்டி தங்களது புகாரைத் திரும்பப்பெற வைத்து, ஒரு வழியாகப் பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளனர்.

கற்பு நெறியைக் காப்பாற்றுவது எனும் பெயரில், பருவமடைந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அடுக்களையில் பூட்டிவைக்கும் சனாதானிகள், பெண்ணின் உடலில் உள்ள கன்னித்திரைதான் அவர்களது கன்னித்தன்மையைப் உறுதி செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால், காட்டுமிராண்டித்தனமான இவ்வரையறை  பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு அறிவியல்ரீதியாகப் பொருந்தாது. ஆண்களுக்கு நிகராக விவசாய வேலைகள், விறகு வெட்டுதல், தையல்வேலை உள்ளிட்ட கடினமான வேலைகளைச் செய்வதாலும் சைக்கிள் ஓட்டுவதாலும்  இயல்பாகவே உழைக்கும் பெண்களில் பெரும்பாலானோர், கன்னிப்பரிசோதனை எனும் இந்த வக்கிரமான சோதனையில் தோல்வியடையவே செய்வர். விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட இது பொருந்தும். ஏழைப் பெண்களை இச்சோதனைக்கு உட்படுத்துவது என்பது ஆணாதிக்க வக்கிரம் மட்டுமல்ல; அடுப்பூதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது எனும் பார்ப்பனியத் திமிரும் கூட.

திருமண உதவித் திட்டத்திற்கு கன்னிப்பரிசோதனையை முன்நிபந்தனையாக்குவதன் மூலம், விதவைப்பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்வதை நேரடியாகத் தடுத்து, பெண்களுக்கெதிராகக் காலந்தோறும் கொடுமை இழைத்துவரும் இந்துப் பார்ப்பனியத்தை பா.ஜ.க. அரசு நிலைநிறுத்த நினைக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் இந்தப் பரிசோதனைக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. அரசு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழைகளாக இருப்பதாலேயே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஆளும் வர்க்கத் திமிரில் இது நடந்து கொண்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வடமாநிலங்களில் மோசமாகத் தோற்றிருப்பினும், அதன் மக்கள் விரோதத் தன்மை கொஞ்சம்கூட மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் சதியைக் கூச்சமின்றிப் போற்றும் அதன் சனாதனப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பா.ஜ.க. கும்பலின் ஆணாதிக்க பார்ப்பனீயக் கொடுமைதான் மத்தியப் பிரதேசத்தில் 'கன்னிப் பரிசோதனை' என்ற பெயரில் வக்கிரமாக அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் கற்பையே சந்தேகித்து அவளைத் தீக்குளிக்க வைத்த ஸ்ரீராமனைத் தேசிய நாயகனாகப் போற்றுபவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

-புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

StumbleUpon.com Read more...

பணத்துக்காக சாகலை... இனத்துக்காக செத்தான்!

 
முத்துக்குமார்... மறக்கக்கூடிய பெயரா!

உள்ளங்கையில் சாவை ஏந்திக்கொண்டு உலகத்துக்குக் கடிதம் எழுதிய கலகக்காரன். மூலக்கொத்தலம் சுடுகாட்டில் நள்ளிரவு 2 மணிக்கு பெருஞ்சோதியாக அவன் எரிந்துகொண்டு இருந்த காட்சி இப்போதும் என் விழி நனைக்கிறது. இந்தத் தலைமுறையில்தமிழ் நாடு கண்ட முதல் மக்கள் தன்னெழுச்சி, முத்துக்குமாரின்மரணம் தான். ஈழத் தமிழர்களுக்காகத் தன்னையே எரித்துக் கொடுத்த அந்த எழுச்சி இளைஞனின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?

 

முத்துக்குமாரின் அப்பா குமரேசன், தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் தள்ளுவண்டியில் ஐஸ் க்ரீம் விற்கிறார். இனத்துக்காக இன்னுயிர் தந்தவனின் தந்தைக்கு வறுமையும் எளிமையுமே அடையாளம். ஆனால், ஓர் உண்மைப் போராளியின் தந்தையாக கம்பீரம் சுமக்கிறார் பேச்சில்...

''ஜனவரி 29-ம் தேதி வரைக்கும் குமரேசனோட மகனா இருந்தான் முத்து. இப்போ நானே என்னை 'முத்துக்குமாரோட அப்பா'ன்னுதான் வெளியேசொல்லிக்கிறேன். எவ்வளவு கூட்டம்... அவன் செத்துப் பொணமா கெடக்கான். சுத்தி தமிழ்நாட்டு சனமே திரண்டு நிக்குது. யாருன்னே தெரியாத புள்ளைகள்லாம், 'அப்பா, அப்பா'ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுவுதுக, ஆறுதல் சொல்லுதுக. கொளத்தூர்லேர்ந்து மூலக்கொத்தலம் சுடுகாடு வரைக்கும் எங்க பார்த்தாலும் அவ்வளவு சனம். இந்த சனத்தை நம்பித்தானய்யா எம் புள்ள செத்துச்சு... 'நம்ம செத்தாலும் இவங்கள்லாம் இருந்து போராடி அங்கே சாவுற நம்ம சனங்களை எப்படியும் காப்பாத்திடுவாங்க'ன்னு நினைச்சுத்தானே அவன் கரிக்கட்டையாக் கருகிக்கெடந்தான். திரண்டு வந்த புள்ளைங்கள்லாம் எவ்வளவு வேகத்தோடு இருந்துச்சுக... கோபத்தோட துடிச்சுதுக... கடைசியில எல்லாத்தையும் ஒண்ணும் இல்லாமப் பண்ணிட்டாங்களே..." - அடிமனதின் ஆதங்கம் வெடிக்கப் பேசுகிறார் குமரேசன். அருகில் முத்துக் குமாரின் தங்கை தமிழரசி தனது இரண்டு பிள்ளை களுடன் அமர்ந்து இருக்கிறார். கொளத்தூர்வீட்டுச் சுவரின் புகைப்படத்தில் இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் முத்துக்குமார்.

''அவனோட டைரியில, 'என் மீது அக்கறைகொண்ட அனைவரும் பொறுத்தருள்க... இன்று என் வாழ்நாளில் பொன்னானதொரு நாள்'னு செத்துப்போன அன்னிக்கு எழுதிட்டுப் போயிருக்கான். இந்த மக்களுக்காக உசுரைத் தூக்கிக் குடுத்துட்டுப் போனானே... அப்பதான் நெனைச்சேன். 'ஐயோ முத்து... நீ மகன் இல்லடா. என் அப்பன்'னு.

 

அவன் காசுக்காகச் சாகலை. அரசாங்கம் தர்றதாச் சொன்ன 2 லட்ச ரூபாய் காசைக்கூட வேண்டாம்னு சொல்லிட்டோம். அவனே அரசாங்கத்தை விமர்சனம் பண்ணிட்டுத்தான் செத்தான். அந்த அரசாங்கம் குடுக்குற காசை வாங்குறது அசிங்கம் இல்லையா? இந்த இனம் வாழணும்... நம்ம சனம் வாழணும்னு எரிஞ்சு சாம்பலான ஒவ்வொரு உசுருக்கும் நீங்க விலைவைக்க முடியுமாய்யா? அந்த உணர்ச்சிக்கும் உண்மைக் கும் முன்னாடி உங்க காசு தூசுய்யா!

எங்க பொழப்பு, வறுமை எல்லாம் எங்களோட.எல்லாரும் உழைச்சுத்தானே சாப்புடணும். அதை விடுங்க... நான் வருத்தப்படுறது எல்லாம் இந்த தியாகம், அவன் உருவாக்குன எழுச்சி எதாலயும் அந்த மக்களைக்காப்பாத்த முடியலையேன்னுதான். எல்லாம் இந்தவீணாப் போன தமிழ்நாட்டுஅரசியல் வாதிகளாலதான். இவங்க ஒழுங்கா இருந்திருந்தா, அந்த மக்களைக் காப்பாத்தி இருக்கலாம். ஆனாலும், முத்துக்குமாரோட உண்மையான தியாகம் என்னிக்கும் வீண் போகாதுன்னு நம்புறோம். என்ன ஒண்ணு... அவனை மறக்க முடிய மாட்டேங்குது. இன்னிக்கு நினைச்சாலும் கண்ணீர் தான் வருது''விழியோரம் துளிர்த்த நீர்த் துளி உருண்டோடப் பேசுகிறார்.

''இதான் முத்து மாமா ஃப்ரெண்ட்'' என பிரபாகரனின் புகைப்படத்தை ஓடிவந்து என்னிடம் காட்டுகிறான் முத்துக்குமாரின் தங்கை மகன் மோனேஷ். முத்துக்குமார் சாகும்போது அவரது தங்கை தமிழரசி 8 மாதக் கர்ப்பம். பிறகு, பிறந்த அந்தப் பெண் குழந்தைக்குப் பெயர் முத்து எழில்!

''திருச்செந்தூர் பக்கம் கொழுவைநல்லூர்தான் எங்க சொந்த ஊர். 10 வருஷங்களுக்கு முன்னாடி எங்க அம்மா கேன்சர்ல செத்துப்போயிருச்சு. வசந்தகுமார்னு என் இன்னொரு அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்ஸிடென்ட்ல செத்துட்டான். இப்போ முத்துக்குமாரும் செத்துட் டான். எங்க அம்மா பெத்த மூணு பிள்ளைகள்ல நான் மட்டும்தான் மிச்சம் இருக்கேன். எல்லாரும் அந்தப் பழைய வீட்டுல இருக்கும்போதுதான் செத்தாங்க. அதனாலதான் வீட்டை மாத்திக்கிட்டு இங்கே வந்துட்டோம். சொந்தக்காரங்கள்லேர்ந்து எல்லாரும் முத்துக்குமார் செத்ததும் நாங்க ஏதோ லட்சம் லட்சமா சம்பாதிச்சுட்டதா நினைக்குறாங்க. ஆனா, நாங்க இன்னிக்கும் இந்த வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபா வாடகையே ஒழுங்காக் குடுக்க முடியாமத்தான் கஷ்டப்படுறோம். அதுக்காக முத்துக்குமார் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்க விரும்பலை. தயவுசெஞ்சு அந்த மாதிரி எழுதிடா தீங்க. ஏன்னா, எங்க அண்ணன் பணத்துக்காகச் சாகலை. இனத்துக்காகச் செத்தான். அந்த மக்கள் நல்லா இருந்தா, அவங்களுக்கு ஒரு நல்ல வழி பொறந்தா... அதுவே எங்களுக்குப் போதும்'' - அண்ணனின் வார்த்தைகளை அப்படியே பேசுகிறார் தங்கை.

என்னுடன் எழுந்து வழியனுப்ப வாசலுக்கு வருகிற முத்துக்குமாரின் அப்பா குமரேசன் சொல்கிறார், ''அவன் செத்ததுக்கு ஊர், உலகமே வந்து கொள்ளிப் போட்டுச்சு. நான் செத்தா கொள்ளி போட எனக்கு ஒரு ஆம்பளைப் பய இல்லையே!'' என்பவரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்!
 
 
நன்றி:ஆனந்த விகடன்

StumbleUpon.com Read more...

ரோபோவுடன் செக்ஸ்?

 

தானியேல் - 12

4.தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு@ அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

 
 
லகின் உண்மையான வில்லன் இனிமேல்தான் வரப்போகிறான், ரோபோ வடிவத்தில்! இதுவரை வந்ததெல்லாம் சாம்பிள் டிரெயிலர்தான். இனிமேல்தான் மெயின் மிரட்டல் பிக்சர்! இப்படி மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள்தான் அடுத்த விஞ்ஞான இலக்கு! அது மட்டும் சாத்தியமாகி விட்டால்... வகையா மாட்டிக்கிட்டேடா நீ, மனுஷா!

''வில்லன் ரோபோ 'டெர்மினேட்டர்' படத்தில் ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும். அப்படி வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் நிஜத்தில் வந்தேவிட்டது!'' என்று உறையவைக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி. ''ரோபோக்கள் முதலில் சுவிட்ச் போட்டால்தான் இயங்கும். பிறகு கம்ப்யூட்டர் கட்டளை களுக்குக் கட்டுப்பட்டன. இப்போது எஜமானனாக இருக்கும் மனித மனத்தின் சிந்தனை அலைவரிசையே போதும் ரோபோக்களை இயக்க!

டெர்மினேட்டர் போலக் கரடு முரடாக இருக்கும் ரோபோக்கள் அவுட் ஆஃப் ஃபேஷன். அச்சுஅசலாக மனிதர் களைப் போலவே இருக்கும் ரோபோதான் இப்போ டிரெண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழுவித மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. பாடம் சொல்லித்தர டீச்சர் ரோபோ, காதலிக்க கேர்ள் ஃப்ரெண்ட் ரோபோ என பல ஆராய்ச்சிகள் ஆன் தி வே! எதிர்காலத்தில் உலகப் போர்களில் ரோபோக்களின் பங்கு பிரதானமாக இருக்கும். ஆள் இல்லாத ரோபோ விமானங்களை செயற்கைக்கோள் மூலம் இயக்க முடியும். தேவைப்பட்டால் அதுவே இலக்கை நிர்ணயித்து குண்டு போட்டுக் கொல்லும். தேவைப்பட்டால், ரோபோவே ஒரு மனித வெடிகுண்டாக, ஸாரி... 'ரோபோ' குண்டாக மாறி உயிர்ச் சேதம் விளைவிக்கும். சமாதானம் பேச மட்டும் நிஜ மனிதர்கள் வெளியே வந்தால் போதும்!'' என முதுகுத் தண்டு ஜிலீர் ஆக்குகிறார் நோயல்.

சகட்டுமேனிக்குச் சகல துறைகளிலும் ரோபோக்களின் பங்கெடுப் பால் வேலையில்லாத் திண்டாட்டம் வேறு 2030-ல் பிடுங்கியெடுக்குமாம். ரோபோ தயாரிக்கும் வேலை மட்டுமே மனிதனுக்கு. மற்றபடி சர்வம் ரோபோ ராஜ்ஜியம்?!

இயந்திர மனிதர்களைப் பற்றிய அடைமழை வியப்புச் செய்திகளுக்கு சிகரம் வைக்கிறார் ஹாலந்து ஆராய்ச்சியாளர் டாக்டர் லெவி. அவர் சிம்பிளாகச் சொல்வது - ''2050-ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது!''

ஐயாங்... இப்படி அடிமடியில் கைவெச்சா எப்படி..?

 
-ரயன் பியோடர்
நன்றி:ஆனந்த விகடன்
 
 
பிடிச்சிருந்த தமிழிiஷ்ல் ஒரு ஓட்டு போடுங்கோ

StumbleUpon.com Read more...

உங்கள் இ-மெயில் பாஸ்வேர்ட் இவனுக்கும் தெரியும்!

கம்ப்யூட்டர் வைரஸ் மிரட்டல்கள் எல்லாம் ஜுஜுபி. ஹேக்கர்ஸ் எனப்படும் கில்லாடி கிரிமினல்கள்தான் இன்டர்நெட்டின் நிஜ வில்லன்கள். இணைய பாதுகாப்பு விதிகளில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, ரகசியங்களைத் திருடி காசாக்குபவர்கள்தான் ஹேக்கர்கள்.

அவர்கள் உங்கள் ஆன்லைன் பேங்க்கிங் பாஸ்வேர்ட் கண்டுபிடித்து அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை ஸ்வாகா செய்வார்கள். இருந்த இடத்தில் சூடாகக் காபி குடித்தபடியே ராணுவ கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடுவார்கள். நெட் சாட்டில் புகுந்து உங்கள் காதலியிடம் உங்களைப் பற்றி தப்புத்தப்பாக வத்திவைப்பார்கள்.

'உலகப் புகழ்பெற்ற' ஹேக்கர்கள் சிலரைப்பற்றி இங்கே...

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ரேடியோ ஸ்டேஷனின் பரிசுப் போட்டியில் சிம்பிளான கேள்விக்குப் பதில் சொன்னால் பரிசு போர்ஷே கார். ஆனால், நீங்கள் 102-வது நபராக போன் செய்து சரியான பதில் சொன்னால்தான் பரிசு. கெவின் பௌல்சனுக்கு போன் நெட்வொர்க் அத்துப்படி. போட்டி நாளன்று, லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் போன் நெட்வொர்க்கை ஹேக் செய்து 101 நபர்களைப் பேசவிட்டார். 102-வது ஆளாக இவர் ரிங் அடித்து பதில் சொல்லி பரிசு பெற்றார். பிறகு, மோசடியைக் கண்டுபிடித்து கைது செய்து 3 வருடம் உள்ளே தூக்கிப்போட்டது போலீஸ்.

ரஷ்யாவின் விளாடிமிர் லெவின் ஹேக்கிங் வில்லன்களில் டாப். 95-ம் வருடம் எல்லா இரும்புக் கதவுகளும் பூட்டியிருக்க, சிட்டி பேங்குக்குள் இன்டர்நெட் மூலம் புகுந்து 10 மில்லியன் டாலர்களைத் திருடினார். ஆன்லைன் மூலமாகவே அதைப் பங்கு பிரித்துப் பல நாடுகளில் டெபாசிட் செய்தார். கண்ணைக் கட்டி நெட்டில் விட்டது போல அலைந்து திரிந்த போலீஸ், கடைசியில் கைப்பற்றியது ஐந்து சதவிகிதம் மட்டுமே. மீதி 95 சதவிகிதம் எங்கே என்று லெவினுக்கே வெளிச்சம்! பாப் இசைக்கு மைக்கேல் ஜாக்சன் போல ஹேக்கர்களுக்கு கெவின் மிட்னிக். 12 வயதிலேயே போக்குவரத்து நிறுவனத்தின் நெட் வொர்க்கை ஹேக் செய்து, அனைத்து பஸ்ஸிலும் போகிற மாதிரி டூபாக்கூர் ஃப்ரீ பாஸ் செய்தவர் மிட்னிக். பள்ளியில் போன் நெட்வொர்க், கல்லூரியில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் என பரிணாம வளர்ச்சி காட்டிக்கொண்டே வந்தார் மிட்னிக். பலமுறை கைதாகி வெளியே வந்திருக் கும் மிட்னிக், இப்போது பல நிறுவனங்களுக்கு ஹேக் பண்ண முடியாத கம்ப்யூட்டர் செக்யூரிட்டி உருவாக்கிக் கொடுக்கிறார்.

ஹேக் பண்ணத் தெரிந்த தில்லாலங்கடி கில்லாடிகளுக்கு இப்போ உலகம் முழுக்க அத்தனை கிராக்கி. அவர்களை அழைத்து தங்கள் நெட்வொர்க்கில் எங்கெல்லாம் ஓட்டை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்கின்றன பல நாடுகள். ஹேக்கிங்கின் ஆதிஅந்தம் பற்றி சொல்லித் தரும் Cyber security படிப்புக்கு இப்போ பயங்கர டிமாண்ட். இன்னும் சில வருடங்களில் பி.இ., அல்லது பி.டெக் (ஹேக்கிங்) என்கிற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள்!

 
-அண்டன் பிரகாஷ்

 

நன்றி:ஆனந்தவிகடன்
 
பிடிச்சிருந்த தமிழிஷ்ல் ஒரு ஓட்டு போடுங்கோ

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP