ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
>> Thursday, August 28, 2008
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து
கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
பெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி
பெங்களூர், ஆக.29-
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
பெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
இன்று மூடப்படுகிறது
ஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.
மக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.
உண்ணாவிரதம்
மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.
கண்டிக்கத்தக்கது
பேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.
பேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆதரவு