தொடரை வென்றது இந்தியா!
>> Thursday, August 28, 2008
தொடரை வென்றது இந்தியா! |
தோனி தலைமையிலான இளம் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றி, ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இலங்கையும், அடுத்த இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்திய அணி தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய நான்காவது போட்டி மழையின் காரணமாக ஒரு நாள் தாமதமாக நேற்று கொழும்புவில் நடந்தது. இத்தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சமரசில்வா நீக்கம்: இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, மூன்றாவது போட்டியில் வென்ற அதே 11 வீரர்களுடன் களமிறங்கியது. இலங்கை அணியில் சமரசில்வா நீக்கப்பட்டு, வர்ணபுரா இடம்பிடித்தார். கோஹ்லி அரைசதம்:துவக்க வீரர்களாக காம்பிர், கோஹ்லி களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, இலங்கை பந்துவீச்சை ஓரளவு சமாளித்தது. முதல் விக்கெட்டுக்கு இவர் 44 ரன்கள் எடுத்தநிலையில் காம்பிர் (17), குலசேகரா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த யுவராஜ் இம்முறையும் சொதப்பினார். இவர் வாஸ் பந்தில் ஜெயவர்தனாவிடம் "கேட்ச்' கொடுத்து "டக்' அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோஹ்லி ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். இவர் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்து, வெளியேறினார். ரெய்னா அதிரடி: ஐந்தாவது வீரராக வந்த தோனி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது போட்டியில் கலக்கிய இந்த ஜோடி நேற்றும் அசத்தியது. இலங்கை பந்துவீச்சை ஒரு கைபார்த்த ரெய்னா, முரளிதரன் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் போட்டிகளில் 7வது அரைசதம் பதிவு செய்தார். தோனி அசத்தல்: மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த தோனியும் தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 24வது அரைசதமாக அமைந்தது. அதிரடி காட்டிய ரெய்னா, முரளிதரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, மிரட்டினார். இந்த ஜோடி தொடர்ந்து அசத்த, இந்திய அணி 38வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 143 ரன்கள் எடுத்தநிலையில் ரெய்னா, துஷாரா பந்தில் அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 78 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து தோனியும் பெவிலியன் திரும்பினார். இவர் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 71 ரன்கள் எடுத்தார். பத்ரிநாத் ஏமாற்றம்: அடுத்து வந்த பத்ரிநாத், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். கடைசிக்கட்டத்தில் மந்தமாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவின் ரன்வேகத்தை குறைத்தது. பத்ரிநாத் (6), ரோகித் (18) விரைவில் வெளியேறி, ஏமாற்றம் அளித்தனர். டெயிலெண்டர்களும் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா 5 விக்கெட் வீழ்த்தினார். ஜெயசூர்யா அதிரடி: இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தார். ஆனால், மறுமுனையில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வர்ணபுரா (0), சங்ககரா (6) விரைவில் அவுட்டாயினர். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெயசூர்யா, முனாப் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் அரங்கில் 66வது அரைசதம் கடந்தார். வேகப்பந்து வீச்சை இவர் அடித்து நொறுக்க, கேப்டன் தோனி பந்தை ஹர்பஜனிடம் கொடுத்தார். இதற்கு <உடனடி பலன் கிடைத்தது. இவர், ஜெயசூர்யாவை வெளியேற்றி, இந்தியாவுக்கு நம்பிக்கை தந்தார். ஜெயசூர்யா 2 சிக்சர், 8 பவுண்டரியுடன் 52 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சிறப் பாக விளையாடிய கேப்டன் ஜெயவர்தனா இம்முறை 16 ரன்களுக்கு அவுட்டானார். கபுகேதரா 30, தில்ஷன் 12 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியாவின் வெற்றி உறுதியானது. அடுத்து வந்த டெயிலெண்டர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப, இலங்கை 46.3 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய தொடரை 3-1 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி, சமீபத்தில் ஆசிய கோப்பை பைனலில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார். சபாஷ் தோனி: சச்சின், சேவக், டிராவிட், கங்குலி என முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதித்து காட்டியுள்ளது. 10 ஆண்டுக்கு பின்...: நான்காவது போட்டியில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது. கடைசியாக அசார் தலைமையிலான இந்திய அணி கடந்த 1998ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை பைனலில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது. வாஸ் "400": நேற்று யுவராஜின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். |
0 கருத்துரைகள்:
Post a Comment