புதுடில்லி:எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெரும்பாலான வீரர்கள், தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகள், அவர்களை கடுமையாக திட்டுவதாகவும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லையைப் பாதுகாக்கும் பணியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகி, கடும் பாதிப்பிற்கு ஆளாவதாக அடிக்கடி தகவல் வெளியானது. இதையடுத்து, இவர்களின் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த, மத்திய அரசு முடிவு
செய்தது.உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், மத்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள், சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டன. உள்துறை செயலர் ஆர்.கே.சிங், இந்த ஆய்வு முடிவை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லைப் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள் போன்ற கடைமட்டத்தில் பணிபுரியும் வீரர்களில், 70 சதவீதத்தினர், தங்களுக்கு போதிய அளவில் ஓய்வு வழங்கப்படுவது இல்லை என, குறை கூறியுள்ளனர். ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் மட்டுமே
தூங்குவதற்கு, உயரதிகாரிகள் தங்களை அனுமதிப்பதாகவும் கூறுகின்றனர். தூக்கமின்மை காரணமாக, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சிறிய அளவில் தவறு செய்தால் கூட, உயரதிகாரிகள், தங்களை கடுமையாகவும்,தரக் குறைவான வார்த்தைகளாலும் திட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, உடனடியாக போதிய அளவில் மனநல ஆலோசகர்களை கொண்ட கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். மேலும், வீரர்களிடம், உயரதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர்க்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
source:dinamalar
Read more...