மனைவியின் பழைய காதல் ................
>> Sunday, July 31, 2011
என் தோழியின் பெயர் காஞ்சனா - பெயர் மாற்றியுள்ளேன்; நன்றாகப் படிப்பாள். இவர்கள் வீட்டில் நான்கு சகோதரிகள்; என் தோழி, இரண்டாவது பெண். தோழிக்கும் வந்தது காதல். இவள், உயர் ஜாதியைச் சேர்ந்த பணக்காரப் பெண். இவளது காதலனும் பணக்காரன்; ஆனால், சமுதாயத்தால் தாழ்ந்த ஜாதி என்று வர்ணிக்கப்படுபவன்.
அப்பாவி பெண்களுக்குக் கூட, காதல் வந்ததும் எப்படித்தான் வீரம் வருமோ... காஞ்சனாவின் அக்கா, ஒருவரை விரும்பினாள். விஷயமறிந்த பெற்றோர், காதலை காலில் போட்டு நசுக்கி, வீட்டில் அடைத்து வைத்திருந்து, வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
அக்காவின் கணவருக்கு, தன் மனைவியின் பழைய காதல் தெரிய வந்ததும், தினமும் அடி, உதை; எதற்கெடுத்தாலும் சந்தேகம் என, கொடுமைகளை அனுபவிக்கிறாள் தோழியின் அக்கா.
இதனால், காஞ்சனா தன் காதலனிடம், "எங்க வீடு, காதலுக்கு பயங்கரமான எதிரி. எனவே, கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போதே, வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்வோம்...' என்று சொல்லி, இருவரும் திருட்டுத்தனமாக, "அலைபாயுதே' ஸ்டைலில் திருமணம் செய்து கொண்டனர்.
படிப்பு முடிந்தது. ஜோடிகள் வீட்டை விட்டு, "எஸ்கேப்' ஆகும் நேரம் வந்தது. விடிகாலை, 5:00 மணிக்கு, பையில் துணியுடன், பஸ் ஸ்டாண்டில் காஞ்சனா வெயிட்டிங்; காதலன் வந்து விடவே, இருவரும் பறக்க இருந்த நேரம் பார்த்து, அந்த ஊர் போலீஸ்காரர் பார்த்து, காதலனைப் பிடித்து, கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
"நீ யாரு... என்னை கேள்வி கேட்பதற்கு? இவள் என் மனைவி...' என்று சொல்ல, கொத்தாக அள்ளிச் சென்று, அவனை காவலில் வைத்து விட்டார்.
காஞ்சனா வீட்டிற்கு நியூஸ் பறந்தது. ஓடி வந்த பெற்றோர், மகளை அடி, அடியென அடித்தனர். பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு, துடிதுடித்துப் போய் விட்டனர். காரணம், எங்கள் ஊர்க்காரர்களால், கேவலமாக எண்ணப்படும் கீழ் ஜாதியை சேர்ந்தவன் மாப்பிள்ளை.
பெண் வீட்டாரின், "பலத்தால்' காதலனை, பின்னி பெடலெடுத்து விட்டனர் போலீசார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, பதிவு திருமணத்தை, "வாபஸ்' வாங்கினர். காஞ்சனாவை வீட்டுக்காவலில் வைத்தனர்.
பின், பெரிய நகர் ஒன்றில், தீராத விளையாட்டுப் பிள்ளையாக, உருப்படாமல் திரிந்த, பணக்கார பையனுக்கு, யாரும் பெண் கொடுக்க வராததால், காஞ்சனாவை அவன் தலையில் கட்டினர்.
தன் மகனுக்கு, பெண் கொடுக்க வந்தனர் என்ற குஷியில், பெண்ணை பற்றி அதிகம் விசாரிக்காமல், சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்தனர்.
கணவர் சரியான பொறுக்கி. மாமியாருக்கு எப்படியோ காஞ்சானாவின் முந்தைய திருமண விஷயம் தெரிந்து, அதிர்ந்தாள். தன் மகன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும், தன் மருமகளின் லீலைகள், அவளை மிகவும் பாதிக்கவே, தினமும், "டார்ச்சர்' தான்.
"ஏண்டி... நானே எத்தனையோ பொண்ணுங்களுக்கு, "அல்வா' கொடுத்தேன்; ஆனால், நீ எனக்கே அல்வா கொடுத்து, என்னை, இரண்டாவது புருஷன் ஆக்கிட்டியே டீ...' என, குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறான் கணவன்.
இப்போது, தினமும் செத்து, செத்து பிழைக்கிறாள் காஞ்சனா.
அங்கே போலீஸ் அடித்த அடியில், மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியமாகவே ஆகி விட்டான் காதலன். இங்கே, காஞ்சனாவின் மற்ற இரு தங்கைகளும், 30 வயதை நெருங்கி கொண்டிருக்கின்றனர். ஒருவரும் பெண் கேட்டு வருவதில்லை.
தாழ்ந்த ஜாதி எனக் கூறப்படுவதால், காதலை பிரித்து, ஏமாற்றி இன்னொருவர் தலையில் கட்டியதால் வந்த வினையை பார்த்தீர்களா? ஏன் இந்த விபரீதம்; இதனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
உங்கள் பிள்ளைகள், வரம்பை மீறி சென்ற பின், அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்யாதீர் பெற்றோர்களே...
— தொடரும்.
- ஜெபராணி ஐசக் Read more...