சமீபத்திய பதிவுகள்

காக்கிகளைச் சித்தரவதை செய்யும் காக்கிகள்?-கொதித்தெழும் குடும்பங்கள்

>> Tuesday, May 27, 2008

ர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளும் வாக்கி டாக்கியும் களவுபோய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், காவல் நிலையத்தில் கொள்ளையடித்தது யார் என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

குற்றவாளிகள் யார் என்பதை உறுதிபடக் கூற முடியாத போலீஸார் பலரையும் சந்தேகக் கண்கொண்டு விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சம்பவ தினத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், சென்ட்ரி காவலராக இருந்த சுப்பிரமணியம், ஏட்டுக்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜா இவர்களுடன் காவல் நிலையத்தில் தாற்காலிக டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆகியோரிடம் கடுமையான விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களில் ராஜமாணிக்கம், ராஜா என்ற இரண்டு ஏட்டுகளையும் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறார்கள் என்று சம்பந்தப்பட்ட ஏட்டுகளின் குடும்பத்தினர் முதலமைச்சர் வரையில் முறையிட்டிருக்கின்றனர்.

தர்மபுரி ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பில் வைத்து ரகசியமாக விசாரிக்கப்பட்டு வரும் ஏட்டுகளை எப்போதாவது சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி தரப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அப்படி அவர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஏட்டுகளின் குடும்பத்தினர், கொதிப்புடன் வெளிப்படையான போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

தர்மபுரி ஆட்சித் தலைவரின் காரை மறித்து "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று முறையிட்டி ருக்கின்றனர். அவர்களிடம் பேசிய தர்மபுரி ஆட்சியர் அமுதாவும் சட்டத்துக்குட்பட்ட உதவிகளை நிச்சயம் அவர்களுக்குச் செய்வதாகக் கூறி சமாதானம் செய்திருக்கிறார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க நாம் தர்மபுரி சென்றோம். பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் ஏட்டு ராஜமாணிக்கத்தின் மனைவி சிவகாமியை முதலில் சந்தித்தோம். "கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி வேலைக்குப் போனவர் இன்று வரையில் வீடு திரும்பவேயில்லை. இவரையும் இவரோடு வேலை பார்த்த ராஜா என்ற மற்றொரு ஏட்டையும் தவிர, மற்ற அனைவரும் விசாரணை யிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இவர்கள் இருவரும் பிறப்பால் தலித்துக்கள் என்பதால்தான் இந்தக் கொடுமை நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். காவல்துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய என் கணவருக்கு காவல்துறை கொடுத்திருக்கும் கௌரவம் இதுதான். ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிறார். இந்தத் துப்பாக்கிகளை கொள்ைள யடிக்க உதவினால் என்ன துன்பம் நேரிடும் என்பது அனுபவஸ்தரான அவருக்குத் தெரியாதா? என் கணவர் ஏமாளி என்பதாலும் அதிகாரிகளை எதிர்த்துப் பேசாதவர் என்பதாலும் அவரைக் குற்றவாளியாக்கி வழக்கை முடித்துவிடும் முயற்சி நடக்கிறது.

`அப்ரூவர் ஆகி நாங்கள் தரும் வாக்குமூலத்தில் கையெழுத்திடு' என்று அவரை டார்ச்சர் செய்கிறார்கள். கண்களைக் கட்டி எங்கெங்கோ கூட்டிக் கொண்டுபோய் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர் வயதுக்கான மரியாதையைக்கூட தராமல் `வாடா, போடா, நாயே' என்றெல்லாம் கேவலமாகப் பேசியிருக்கின்றனர்'' என்றார் கதறியழுதபடி.

ஏட்டு ராஜமாணிக்கத்தின் மகள் மேகலை நம்மிடம், "என்னுடைய அப்பாவை அடித்து உடலெங்கும் காயப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு நிமிடங்கள்தான் அவரைப் பார்ப்பதற்கான அவகாசமாக எங்களுக்குத் தரப்படும். என் அப்பா தி.மு.க. விசுவாசி. விரைவில் கலைஞரைக் குடும்பத்தோடு சந்தித்து எங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைப் பற்றி முறையிடப் போகிறேன்'' என்றார் கொதிப்போடு.

பாதிக்கப்பட்ட மற்றொரு ஏட்டு ராஜாவின் மனைவி கலையரசியைச் சந்தித்தோம். "அதியமான்கோட்டை காவல்நிலையத் துப்பாக்கி கொள்ளை சம்பவத்துக்கும் என் கணவருக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. இதை நம்பாமல் அவருக்கு என்னென்னவோ சோதனைகளையெல்லாம் செய்தார்கள். ஆனால் எந்தச் சோதனையிலுமே என் கணவரைக் குற்ற வாளியென்று நிரூபிக்க முடியவில்லை. நிரபராதி என்று தெரிந்த போதும் கூட, உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல், இவரையும் இன்னொரு ஏட்டையும் குற்றவாளிகள் ஆக்கி வழக்கை மூடி முடித்துவிட முயற்சிக்கிறார்கள். காலில் அடித்து, நிற்கமுடியாத அளவிற்குக் அவரை காயப்படுத்தியிருக்கிறார்கள்

`ராஜமாணிக்கம் துப்பாக்கியை திருடித் தந்தார். அதற்கு நான் உடந்தையாக இருந்தேன்' என்று தயாரிக்கப்பட்டிருந்த போலி வாக்கு மூலத்தில் கையெழுத்திடச் சொல்லி என் கணவரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். அடி தாங்க முடியாமல் கையெழுத்திட்டாலும் பாலக்கோடு நீதி மன்றத்தில் நீதிபதி முன்பாக `அது போலி வாக்குமூலம்' என்பதை என் கணவர் துணிந்து கூறி விட்டார். இதன் காரணமாக தற்போது மேலும் அவருக்குச் சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்திலாவது அவரை ஒப்படைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை'' என்று அழுகையினூடே சொல்லி முடித்தார் கலையரசி.

ஏட்டுக்கள் ராஜமாணிக்கம், ராஜா ஆகியோரின் வழக்குரைஞரான கமலக் கண்ணனைச் சந்தித்தோம். "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யைப் பொறுத் தவரையில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார். `ஏட்டுக்கள் மீது எஃப்.ஐ.ஆரும் போடப்படவில்லை. அவர்களைக் கைதும் செய்ய வில்லை. அப்படி இருக்கும் போது எங்களிடம் அவர்களைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்குத்தான் நீதிமன்றம் இருக்கிறதே. ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யுங்கள். நான் அதைச் சந்திக்கும் விதத்தில் சந்தித்துக் கொள்கிறேன்' என்று சவால்விடும் வகையில் பேசுகிறார்.

தர்மபுரி ஆட்சியரைச் சந்தித்து இதைப்பற்றி பேச முயன்றோம். ஆனால் அவரைச் சந்தித்துப் பேச எங்களுக்கு இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. `குற்றவாளிகள்' என்று இரண்டு அப்பாவிகளைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிக்கும் அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்ய இருக்கிறோம்'' என்று கூறினார் அவர்.

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலமாக மனித உரிமைகள் கமிஷனில் இது குறித்து ஏட்டுகளின் குடும்பத்தினர் புகார் செய்திருக் கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக சட்டவிரோதமாக மேற்கொள் ளப்பட்டு வரும் விசாரணையிலிருந்து ஏட்டுகள் விடுவிக் கப்படவில்லை என்றால் சாலை மறியல், உண்ணாவிரதம் என சீரியஸான போராட் டங்களில் இறங்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீர்மானித் துள்ளனர்!

ஸீ வை. கதிரவன்

படங்கள் : ஆகாஷ்.



நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...

"பந்த" பத்ரானந்தாவின் துப்பாக்கி ரவுசு!-கேரளாவில் பிடிபட்ட இன்னொரு சாமியார்

கேரளாவில் இது போலிச்சாமியார்களின் சீஸன் போலிருக்கிறது! கஞ்சா, கள்ளக்கடத்தல், கற்பழிப்பு... என சகல `கலை'களிலும் கரைகண்ட சந்தோஷ்மாதவன் என்கிற சாமியாரைத் தூக்கி `உள்ளே' போட்டுவிட்டு போலீஸ் நிமிர்வதற்குள், இதோ அடுத்த சாமியார் என்ட்ரி ஆகி யிருக்கிறார்.

சந்தோஷ்மாதவன் ஆசிரமம் அமைத்து அருள்(!) பாலித்த கொச்சியிலி ருந்து கூப்பிடு தொலைவிலுள்ள ஆலுவா என்ற இடம்தான் நம் புதிய சாமியாரின் ஸ்தலம். இவரது இயற்பெயர் பத்ரன். ஆனால் `பந்தா' பத்ரானந்தா.. என்று சொன்னால்தான் அந்த ஏரியாவாசிகளுக்கே இவரைத் தெரியுமாம். ஆள் காவி உடையில் இருந்தாலும் கையில் விலை உயர்ந்த செல்போனும், இடுப்பில் துப்பாக்கியும் (பிஸ்டல்) வைத்திருப்பார் இவர். தவிர, வீட்டை விட்டு வெளியே போனாலே இவரது காரில் சுழல்விளக்கு சுழன்றுகொண்டேயிருக்கும். ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் சுழல்விளக்கை இவர் பயன்படுத்துவது பற்றி எப்போதாவது போலீஸார் வழிமறித்துக் கேட்டால், `எனக்கு முதல் அமைச்சரைத் தெரியும்: போலீஸ் துறை அமைச்சரே என் ஃப்ரெண்ட்தான். புரமோஷன் வேணுமின்னா வாங்கித் தர்றேன்' என்கிற ரீதியில் கதைவிட்டு எஸ்கேப்பாகிவிடுவாராம் பத்ரானந்தா.

அண்மையில் சந்தோஷ்மாதவன் விவகாரம் கேரளாவில் பரபரப்பானதும், அவரைப் போன்ற போலிச்சாமியார்களின் அட்டகாசம் பற்றி `மங்களம்' என்கிற மலையாள நாளிதழ் குறுந்தொடர் வெளியிட்டது. அதில் பத்ரானந்தாவின் பராக்கிரமங்களையும் அந்த நாளிதழ் பிட்டுப் பிட்டு வைத் தது. இது பத்ரானந்தாவை ஆவேசப்படுத்திவிட்டது. செய்தி வெளியான உடனேயே ஆலுவாவிலுள்ள `மங்களம்' பத்திரிகை அலுவலகத்துக்கு தனி ஆளாகவே படையெடுத்த பத்ரானந்தா, காது கேட்கக் கூசும் வார்த்தைக ளால் அங்கு நின்று பத்திரிகை நிர்வாகிகளைத் திட்டியிருக்கிறார். அவர்கள் விஷயத்தை போலீஸுக்குச் சொல்லவும், `காக்கி'கள் வந்து `காவி'யை வளைத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.

அப்போது சாதாரண இரு செக்ஷன்களில் வழக்குப்பதிவு செய்துவிட்டு, பத்ரானந்தாவை அவரது சொந்த ஜாமீனிலேயே வெளியே விட்டிருக்கிறது போலீஸ். எனினும் மறுநாள் இந்த விவகாரம் எல்லா மலையாளப் பத்திரி கைகளிலும் செய்தியாகிவிட்டது. ஒரு பத்திரிகையில் செய்தி வெளி யானபோதே எகிறிக் குதித்த பத்ரானந்தா... எல்லா பத்திரிகைகளும் அவரைத் தோலுரித்தால் பொறுப்பாரா?!. அதனால் அவர் நடத்திய பரபரப்பான துப்பாக்கி ரவுசுதான் அடுத்த கட்டம்.

இதுபற்றிய விவரங்களை ஆலுவாவிலுள்ள பத்திரிகைத்துறை நண்பர் ஒருவரையே நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கடந்த பதினேழாம் தேதி அதிகாலையில் பத்ரானந்தாவிடம் இருந்து எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன். அப்போது ஏதோ வெறி பிடித்தவர் போல கத்திப் பேசிய பத்ரானந்தா, `என் நற்பெயரை(!)யெல்லாம் நீங்கள் கெடுத் துவிட்டீர்கள். உங்களால் இப்போதே நான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகப்போகிறேன். இங்கு வந்து நீங்கள் என் பிணத்தைத் தின்னுங்கள்' என்றார், படு ஆக்ரோஷமாக.

உடனே இந்தத் தகவலை ஆலுவா போலீஸ் டி.எஸ்.பி. உன்னிராஜுக்குத் தெரிவித்துவிட்டு, நாங்களும் ஸ்பாட்டை நோக்கிப் போனோம். ஆனால் அதற்குள் போலீஸ் படை அவரை ஆலுவா மத்திய போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது. அங்கு நாங்கள் கண்ட காட்சியை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஏதோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் போல கால்மேல் கால் போட்டுக்கொண்டு, தனது துப்பாக்கியைத் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா. அதாவது பத்ரானந்தாவைப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பிறகும்கூட அவர் கையில் இருந்த துப்பாக்கியை போலீஸ் பறிக்கவில்லை. அதோடு போலீஸ்நிலையத் திலேயே தனது செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தார் பத்ரானந்தா.

இந்தக் கட்டத்தில் மொத்தமாக பத்திரிகையாளர்கள் அங்கே போனதும், மறுபடியும் பத்ரானந்தாவுக்குக் கோபம் தலைக்கேறியது. ` என்னைச் சாகவும் விடாமல் சுத்தித் சுத்தி வருகிறீர்களே!' என்றபடி ஆவேசமாக துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு எங்களைச் சுட வந்தார். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்ட ஆலுவா இன்ஸ்பெக்டர் பாபுகுமார் தனது கையில் வைத்திருந்த லத்திக்கம்பால் துப்பாக்கியைத் தட்டிவிட்டார். எனினும் அதற்குள் ஒரு குண்டு துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்து, `மாத்திமம்' பத்திரிகை நிருபரான பேபியின் தலைக்கு வெகு அருகாமையில் பறந்து சென்றது. அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் அந்த நிருபர். அந்த சமயத்தில் பத்ரானந்தாவின் டி65 வகையிலான அந்தத் துப்பாக்கியில் மொத்தம் ஆறு குண்டுகள் இருந்திருக்கின்றன.ஒருவேளை இன்ஸ்பெக்டர் இரு வினாடி தாமதித்திருந்தாலும் நான்கைந்து நிருபர்களைப் போட்டுத் தள்ளியிருப்பார் பத்ரானந்தா'' என பீதி விலகாம லேயே அந்தச் சம்பவத்தை விவரித்தார் அவர்.

முறைகேடாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது, பத்திரிகையாளரைக் கொல்ல முயன்றது... உள்பட பல செக்ஷன்களில் பத்ரானந்தா மீது தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்தடுத்து இரு சாமியார்கள் பிடிபட்டிருப்பதும், இருவருமே போலீஸ்துறையில் செல்வாக்குப் பெற்றுத் திரிந்திருப்பதும் தெரியவந்து மொத்த கேரளாவுமே அதிர்ந்துபோய்க் கிடக்கிறது.

இதுபற்றி, கேரள இடது முன்னணி அரசின் முதல்வர் அச்சுதானந்தனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, `பத்ரானந்தா நடந்துகொண்ட விதம் போலீஸுக்கு விடப்பட்ட சவாலாகத்தான் இருக்கிறது. போலீஸ் துறை மட்டுமல்லாது, அரசும் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது. இந்த சாமியார்களின் பின்னணியை நிச்சயமாக விசாரித்து வெட்ட வெளிச்சமாக்குவோம். போலீஸ் துறையிலுள்ள சிலர் இவர்களுக்குத் துணை போனாலும், அது ஒட்டுமொத்த போலீஸாரின் அந்தஸ்தையுமே பாதிப்பதாகிவிடும்'' என, போலீஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலேயே பேசியிருக்கிறார் அச்சுதானந்தன். நிலைமை மாறுகிறதா? பார்ப்போம்! ஸீ

ஸீ
ச. செல்வராஜ்



நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...

வழிப்பறியில் இறங்கிய டுபாக்கூர் போலீஸ்! கூடு சேர்ந்த சில நிஜ போலீஸ்

ன்கவுன்ட்டரில் ரவுடிகளைப் போட்டுத்தள்ளுவது, தீவிரவாதிகளைப் பொறி வைத்துப் பிடிப்பது போன்ற அதிவீர சாகசங்களைச் செய்வதில் நம் போலீஸார் கில்லாடிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் டுபாக்கூர் ஆசாமிகளோடு கூட்டுச் சேர்ந்து பக்காவாக நாடகம் போட்டு, பணக்காரர்களிடம் வழிப்பறி செய்வதிலும் காக்கிகள் கைதேர்ந்தவர்கள் என்று எண்ணும் விதமாக திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.


கடந்த பிப்ரவரி மாதம் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில், புதுப்பேட்டையைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பஷீர் அகமது என்பவர் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கொடுத்தார். அதை விசாரிக்க மேலிடம் உத்தரவிட `கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக' ஏகப்பட்ட சமாசாரங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன.


பெரியகுளத்தைச் சேர்ந்த `ரொக்கப்புள்ளி' என்று செல்லமாக அழைக்கப்படும் நபர், போலீஸ் வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். இவர் பல உயரதிகாரிகளுக்கு விருந்து நடத்தி அவர்களிடம் ஐக்கியமானவர். இவரது தென்னந் தோப்பில் அடிக்கடி நடக்கும் `கெட் டுகெதர்' பார்ட்டிகளில் காக்கிகளும் அவர்களைக் கவனிக்க கன்னிகளும் கலந்து கொள்வதுண்டாம்.


இதையெல்லாம் விட, ரொக்கப்புள்ளி செய்யும் இன்னொரு காரியம்தான் அதிர்ச்சிகரமானது. அதாவது, இவரே போலீஸ் மாதிரி வாட்டசாட்டமான ஆட்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டு, நல்ல வருமானமுள்ள ஸ்டேஷன்களுக்கு போலீஸுக்கு சப்போர்ட் பண்ண அனுப்பி வைப்பாராம்.


டுபாக்கூர் போலீஸ்களுடன், ஒரிஜினல் போலீஸ் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இரவு வாகனச் சோதனை, வழக்கு விசாரணை என்று வசூலுக்குக் கிளம்பி விடுவார்களாம். வருகின்ற வருமானத்தை ரொக்கப்புள்ளி நேர்மை தவறாமல் பங்கு பிரித்துக் கொடுத்துவிடுவாராம். இப்படியாக, ரொக்கப்புள்ளியின் டுபாக்கூர் போலீஸார் பல இடங்களில் கடமை(?)யாற்றி வருகிறார்களாம். கிட்டத்தட்ட பிரைவேட் டி.ஜி.பி.யாக செயல்படும் அந்த ஆசாமி சென்னையிலும் விருந்து நடத்தியதால் போலீஸின் பல மட்டத்திலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறதாம்.


இந்நிலையில், புதுப்பேட்டை பஷீர் அகமது என்ற நபருக்கு டி.வி. நடிகை பிந்துவோடு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தான் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் போவதையும் அதில் வரும் வருமானத்தைப் பற்றியும் பிந்துவிடம் பந்தாவாக எடுத்து விட்டிருக்கிறார் பஷீர். பிந்துவோ ரொக்கப்புள்ளிக்கு வேண்டப்பட்டவர். கேட்கவா வேண்டும்? பஷீரின் வருமானத்தைப் பற்றிய விவரம் ரொக்கப் புள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. உடனே பிரமாதமான திட்டம் தயாரானது. இதையடுத்து எதையோ சொல்லி பிந்துவின் மூலம் பஷீரை திண்டுக்கலுக்கு வரவழைத்திருக்கிறார்கள். வடமதுரை பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ஐனார்த்தனன் தலைமையிலான டுபாக்கூர் போலீஸ் படை தாயாராகக் காத்திருந்திருக்கிறது. சரியான நேரத்திற்கு பஷீரின் கார் அந்த இடத்திற்கு வர, போலீஸ் அதை மறித்து சோதனை போட, பிந்துவின் ஹேன்ட்பேக்கில் வெள்ளை பவுடர் பாக்கெட்டுகள் இருந்திருக்கின்றன. "என்ன டி.வி. நடிகையோட விபசாரம் பண்றியா? போதைப் பொருள் கடத்துறியா?'' என்று போலீஸ் மிரட்டலாகக் கேள்விகளைக் கேட்க, ஆடிப் போயிருக்கிறார் பஷீர். உடனே காரில் பிடிபட்டவர்களை திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜிற்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.


பிந்து ஓர் அறையிலும் பஷீர் மற்றொரு அறையிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். "எஸ்.பி. வரையிலும் விஷயம் தெரிஞ்சு போச்சு. கேஸை மாத்திப் போடணும்னா நிறையச் செலவாகும். பணம் கொடுத்தா நீ தப்பிக்கலாம். இல்ல, ஆயுசுக்கும் ஜெயிலிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்'' என்று பஷீரைப் பயமுறுத்தியிருக்கிறார்கள்.


இதற்கிடையில், "ராத்திரியே பிந்து தப்பிச்சுப் போயிட்டா... நீதான் மாட்டிக்கிட்டே'' என்று பிட்டைப் போட்டிருக்கிறார்கள். பஷீரிடமிருந்து பதினேழாயிரம் ரூபாய் ரொக்கம், செயின், வாட்ச், செல்போன் என எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு சென்னையில் மிச்சப் பணத்தைக் கறக்க பஷீருடன் ஒரு டூப் போலீஸையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். சென்னையில் பணம் திரட்ட பஷீருக்குத் தாமதமானதால், `நான் டூட்டிக்கு(?) போகணும், பணத்தை இங்கே இருக்கும் போலீஸ் கிட்டே கொடுத்திடு' என்று வடமதுரைக்குக் கிளம்பிவிட்டாராம் அந்த டுபாக்கூர் போலீஸ் ஆசாமி.


சென்னையில் தன்னிடம் பணம் வசூலிக்க வந்த மற்றொரு ஆசாமியைப் பார்த்ததும் பஷீருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தீர விசாரித்தபோதுதான் திட்டம்போட்டு ஏமாற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. உஷாரான பஷீர், உடனே டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார். உடனே `திண்டுக்கல் எஸ்.பி. விசாரிக்கவும்' என்று பரிந்துரைக்கப்பட, பஷீரை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்திருக்கின்றன. அதற்கு அவர் மசியவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், டி.வி. நடிகை பிந்து, ரொக்கப்புள்ளி முத்தையா உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இன்ஸ்பெக்டரைக் கைது செய்து அவருக்கு நெஞ்சுவலி என்று உடனே ஜாமீனில் விட்டுவிட்டனர். பிந்துவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல்டியடித்தனர். டூப் போலீஸார் இருவர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் தப்பிவிட்டனர்.


இந்நிலையில், தலைமறைவாகவே இருந்த டி.வி. நடிகையும் முன் ஜாமீன் வாங்கி திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்து வெளியில் வந்துவிட்டார். இது போலீஸ் விவகாரம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்குக் கொண்டுவரும் போது மீடியாக்கள் கண்ணில் காட்டாமல் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள் அதிகாரிகள்.


இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "இன்ஸ்பெக்டர் மிரட்டிப் பணம் கேட்டார் என்றுதான் புகார் வந்துள்ளது. பணம் வாங்கியிருந்தால்தான் குற்றம். மற்றபடி வெளியாட்களை போலீஸாக நடிக்க வைத்து பிந்துவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.



நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP