சமீபத்திய பதிவுகள்

வழிப்பறியில் இறங்கிய டுபாக்கூர் போலீஸ்! கூடு சேர்ந்த சில நிஜ போலீஸ்

>> Tuesday, May 27, 2008

ன்கவுன்ட்டரில் ரவுடிகளைப் போட்டுத்தள்ளுவது, தீவிரவாதிகளைப் பொறி வைத்துப் பிடிப்பது போன்ற அதிவீர சாகசங்களைச் செய்வதில் நம் போலீஸார் கில்லாடிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் டுபாக்கூர் ஆசாமிகளோடு கூட்டுச் சேர்ந்து பக்காவாக நாடகம் போட்டு, பணக்காரர்களிடம் வழிப்பறி செய்வதிலும் காக்கிகள் கைதேர்ந்தவர்கள் என்று எண்ணும் விதமாக திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.


கடந்த பிப்ரவரி மாதம் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில், புதுப்பேட்டையைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பஷீர் அகமது என்பவர் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கொடுத்தார். அதை விசாரிக்க மேலிடம் உத்தரவிட `கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக' ஏகப்பட்ட சமாசாரங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன.


பெரியகுளத்தைச் சேர்ந்த `ரொக்கப்புள்ளி' என்று செல்லமாக அழைக்கப்படும் நபர், போலீஸ் வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். இவர் பல உயரதிகாரிகளுக்கு விருந்து நடத்தி அவர்களிடம் ஐக்கியமானவர். இவரது தென்னந் தோப்பில் அடிக்கடி நடக்கும் `கெட் டுகெதர்' பார்ட்டிகளில் காக்கிகளும் அவர்களைக் கவனிக்க கன்னிகளும் கலந்து கொள்வதுண்டாம்.


இதையெல்லாம் விட, ரொக்கப்புள்ளி செய்யும் இன்னொரு காரியம்தான் அதிர்ச்சிகரமானது. அதாவது, இவரே போலீஸ் மாதிரி வாட்டசாட்டமான ஆட்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டு, நல்ல வருமானமுள்ள ஸ்டேஷன்களுக்கு போலீஸுக்கு சப்போர்ட் பண்ண அனுப்பி வைப்பாராம்.


டுபாக்கூர் போலீஸ்களுடன், ஒரிஜினல் போலீஸ் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இரவு வாகனச் சோதனை, வழக்கு விசாரணை என்று வசூலுக்குக் கிளம்பி விடுவார்களாம். வருகின்ற வருமானத்தை ரொக்கப்புள்ளி நேர்மை தவறாமல் பங்கு பிரித்துக் கொடுத்துவிடுவாராம். இப்படியாக, ரொக்கப்புள்ளியின் டுபாக்கூர் போலீஸார் பல இடங்களில் கடமை(?)யாற்றி வருகிறார்களாம். கிட்டத்தட்ட பிரைவேட் டி.ஜி.பி.யாக செயல்படும் அந்த ஆசாமி சென்னையிலும் விருந்து நடத்தியதால் போலீஸின் பல மட்டத்திலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறதாம்.


இந்நிலையில், புதுப்பேட்டை பஷீர் அகமது என்ற நபருக்கு டி.வி. நடிகை பிந்துவோடு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தான் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் போவதையும் அதில் வரும் வருமானத்தைப் பற்றியும் பிந்துவிடம் பந்தாவாக எடுத்து விட்டிருக்கிறார் பஷீர். பிந்துவோ ரொக்கப்புள்ளிக்கு வேண்டப்பட்டவர். கேட்கவா வேண்டும்? பஷீரின் வருமானத்தைப் பற்றிய விவரம் ரொக்கப் புள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. உடனே பிரமாதமான திட்டம் தயாரானது. இதையடுத்து எதையோ சொல்லி பிந்துவின் மூலம் பஷீரை திண்டுக்கலுக்கு வரவழைத்திருக்கிறார்கள். வடமதுரை பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ஐனார்த்தனன் தலைமையிலான டுபாக்கூர் போலீஸ் படை தாயாராகக் காத்திருந்திருக்கிறது. சரியான நேரத்திற்கு பஷீரின் கார் அந்த இடத்திற்கு வர, போலீஸ் அதை மறித்து சோதனை போட, பிந்துவின் ஹேன்ட்பேக்கில் வெள்ளை பவுடர் பாக்கெட்டுகள் இருந்திருக்கின்றன. "என்ன டி.வி. நடிகையோட விபசாரம் பண்றியா? போதைப் பொருள் கடத்துறியா?'' என்று போலீஸ் மிரட்டலாகக் கேள்விகளைக் கேட்க, ஆடிப் போயிருக்கிறார் பஷீர். உடனே காரில் பிடிபட்டவர்களை திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜிற்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.


பிந்து ஓர் அறையிலும் பஷீர் மற்றொரு அறையிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். "எஸ்.பி. வரையிலும் விஷயம் தெரிஞ்சு போச்சு. கேஸை மாத்திப் போடணும்னா நிறையச் செலவாகும். பணம் கொடுத்தா நீ தப்பிக்கலாம். இல்ல, ஆயுசுக்கும் ஜெயிலிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்'' என்று பஷீரைப் பயமுறுத்தியிருக்கிறார்கள்.


இதற்கிடையில், "ராத்திரியே பிந்து தப்பிச்சுப் போயிட்டா... நீதான் மாட்டிக்கிட்டே'' என்று பிட்டைப் போட்டிருக்கிறார்கள். பஷீரிடமிருந்து பதினேழாயிரம் ரூபாய் ரொக்கம், செயின், வாட்ச், செல்போன் என எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு சென்னையில் மிச்சப் பணத்தைக் கறக்க பஷீருடன் ஒரு டூப் போலீஸையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். சென்னையில் பணம் திரட்ட பஷீருக்குத் தாமதமானதால், `நான் டூட்டிக்கு(?) போகணும், பணத்தை இங்கே இருக்கும் போலீஸ் கிட்டே கொடுத்திடு' என்று வடமதுரைக்குக் கிளம்பிவிட்டாராம் அந்த டுபாக்கூர் போலீஸ் ஆசாமி.


சென்னையில் தன்னிடம் பணம் வசூலிக்க வந்த மற்றொரு ஆசாமியைப் பார்த்ததும் பஷீருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தீர விசாரித்தபோதுதான் திட்டம்போட்டு ஏமாற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. உஷாரான பஷீர், உடனே டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார். உடனே `திண்டுக்கல் எஸ்.பி. விசாரிக்கவும்' என்று பரிந்துரைக்கப்பட, பஷீரை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்திருக்கின்றன. அதற்கு அவர் மசியவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், டி.வி. நடிகை பிந்து, ரொக்கப்புள்ளி முத்தையா உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இன்ஸ்பெக்டரைக் கைது செய்து அவருக்கு நெஞ்சுவலி என்று உடனே ஜாமீனில் விட்டுவிட்டனர். பிந்துவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல்டியடித்தனர். டூப் போலீஸார் இருவர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் தப்பிவிட்டனர்.


இந்நிலையில், தலைமறைவாகவே இருந்த டி.வி. நடிகையும் முன் ஜாமீன் வாங்கி திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்து வெளியில் வந்துவிட்டார். இது போலீஸ் விவகாரம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்குக் கொண்டுவரும் போது மீடியாக்கள் கண்ணில் காட்டாமல் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள் அதிகாரிகள்.


இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "இன்ஸ்பெக்டர் மிரட்டிப் பணம் கேட்டார் என்றுதான் புகார் வந்துள்ளது. பணம் வாங்கியிருந்தால்தான் குற்றம். மற்றபடி வெளியாட்களை போலீஸாக நடிக்க வைத்து பிந்துவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.



நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP