சமீபத்திய பதிவுகள்

வலது கண் வழியே வெளியேறிய புல்லட்!

>> Saturday, January 30, 2010

 
 

ருத்துவத் துறையில் சென்னை எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி... இராக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இப்ராஹிம் நூரி. அவருக்கு ஐந்து சகோ தரிகள். குடும்பத்தைக் காப்பாற்ற இராக் ராணுவத் தில் சேர்ந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன் இரு குழுக்களுக்கு இடையே கலவரம் வெடித்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த நூரியின்மீது எங்கி ருந்தோ பறந்து வந்த துப்பாக்கிக் குண்டு அவருடைய பின் மண்டையில் துளைத்து, வலது கண் வழியாக வெளியேறியது. குண்டு துளைத்ததில் வலது கண் ணுக்குக் கீழே ரத்தக் குழாய்கள், கண் நரம்புகள், எலும்புகள் சிதைந்துவிட்டன. வலது கண் இறங்கி விட்டது. இராக்கில் அவருக்குமுதலு தவி மட்டும் செய்து அனுப்பி விட்டார்கள். பல இடங்களில் விசாரித்து, கடைசியாக சிகிச் சைக்கு நூரி வந்து இறங்கிய இடம்... பாலாஜி பல் மற்றும்முகச் சீரமைப்பு மருத்துவமனை.

அங்கே நூரியின் முகத்தை ஆராய்ந்த டாக்டர் பாலாஜி, உடைந்த எலும்புகளுக்குப் பதில் டைட்டானியம் தகடுகள் பொருத்த முடிவு செய்தார். ஆபரேஷனில் வலது கண்ணை மேலே தூக்கி, அதற்குக் கீழே டைட்டானியம் தகடுகள் பொருத்தி, நூரியின் முகத்தை இயல்பான தோற்றத்துடன் சீரமைத்து விட்டார் பாலாஜி.

இந்த அபூர்வமான ஆபரேஷன்பற்றி டாக்டர் பாலாஜியிடம் பேசினேன். ''நூரி வரும்போது அவர் மனசில் நம்பிக்கையே இல்லை. நாலு மணி நேரம் ஆபரேஷன் பண்ணி, நூரியோட முகத்தைச் சீரமைச்சோம். இந்த ஆபரேஷனை அமெரிக்காவில் பண்ணியிருந்தால் 25 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகி இருக்கும். இங்கே வெறும் 65 ஆயிரம் ரூபாய்தான் சார்ஜ் பண்ணினோம். குறைந்த கட்டணத்தில், சர்வதேசத் தரத்தில் ஆபரேஷன்கள் செய்வதால், வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் இருந்து நிறைய பேர் சென்னைக்கு வருகிறார்கள்.

நம்மை நம்பி வருகிறவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கட்டணத்தைக் குறைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். ஆபரேஷன் முடிந்துநூரி கிளம்பும்போது, அவரால் பேசவே முடியலை. ''என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். நான் நல்லா இருந்தாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை''ன்னு அழுதார். நூரியோட அம்மா ''நீங்க இராக் வாங்க. நாங்க உங்களைப் பத்திரமா பார்த்துக்கிறோம்''னு கையைப் பிடிச்சுக் கேட்டாங்க. இந்த அன்புக்கு முன்னாடி பணமெல்லாம் ஒரு விஷயமா சார்?''- குரல் நெகிழ்ந்து கேட்கிறார் டாக்டர் பாலாஜி!

 


source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த தேர்தல்

 

மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல உண்மைகள் வெளிவரத்தொடங்கின. இன்னும் பெருமளவில் வெளிவரும் என்பதனை யாரும் மறைக்க முடியாது.

அரசதலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழர் தரப்பு வாக்குகளைப் பெறுவது தொடர்பில் இரண்டுபிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டே வந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை மௌனம் சாதித்து இறுதியில் தமது நிலைப்பாட்டினை எடுத்தது. நிலைப்பாடு வெளியாகியதும் மகிந்த தனது வழமையான ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்டார். இனவாதம் என்கின்ற அந்த ஆயுதத்தை ஊடகங்கள் அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் இருந்தமையால் அதனைச் சிறப்பாக கையாண்டார். பொன்சேகாவிற்கும் சம்பந்தருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அதன் மூலம் நாடு பிளவுபடப் போகின்றது. எனவே தமக்கு வாக்களிக்குமாறு சிங்கள மக்களிடம் மகிந்த மன்றாடினார். தென்னிலங்கை ஊடகங்கள் இனவாதத்தை மிக மோசமாகக் கக்கின.

இதனைவிடவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் அல்லது உடைக்கும் நடவடிக்கையினையும் சிறப்பாக மகிந்த மேற்கொண்டார். அதற்காக பணத்தினையும், ஆயுதத்தினையும் கையிலெடுத்துச் செயற்பட்டார். பணம் பெற்றவர்கள் மகிந்தவிற்கு விசுவாசிகளாகச் செயற்பட்டனர். அதன் பலனாக ஒருவர் சுயேட்சையாக தேர்தலில் குதித்தார். அவரை தேர்தலில் இறக்கியதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம். மற்றொரு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான கொழும்பு – 7 இல் அமைந்துள்ள காணி ஒன்றினை மகிந்த குடும்பம் விலைக்கு வாங்கியது. (அது முன்னர் வெளிநாட்டு தூதரகம் அமைந்திருந்த காணி, அதனை இடித்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவினால் புதிதாக பாரிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது) அந்தக் கொடுக்கல் வாங்கலின் விசுவாசமாக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரை கடத்திய மகிந்த தரப்பு அவருடனான பேரம் பேசலினை (காட்டிக்கொடுப்பு அமைச்சர் ஒருவரின் ஊடான) அடுத்து கடத்தியவரையும் விடுவித்தது. இதற்கு நன்றிக்கடனாக அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் போர்க்காலத்திற்கு முன்பாகவே மகிந்ததரப்புடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் சாரம் என்னவென்றால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றுவது உட்பட எந்த ஒரு தமிழ்த்தேசிய சார்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்பது. மற்றுமொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச விடுத்த அன்புக் கட்டளையை சிரமேற்கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிற்கு வரமுடியாமலேயே வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தவினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளின் பின்னர் மகிந்தவிற்கு சார்பான கூட்டங்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டார். வழமையாக மகிந்தவிற்கு வக்காளத்து வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். இன்னொருவர் மகிந்த கேட்டுக்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதைத் தவிர்ப்பதற்காக தன்னைத்தானே (தவறுதலாக) சுட்டுக்கொண்டு ஒதுங்கிக் கொண்டார். இவ்வாறான அனைவரையும் தன்னகத்தே கொண்டுள்ள கூட்டமைப்பு ஒரு முடிவினை எடுப்பதற்கு ஏன் காலதமாதம் ஆனது என்பதை இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகின்றோம்.

இவ்வளவு விடயங்களையும் அறிந்திருந்தும் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதென்ற முடிவிற்கு வந்துள்ளனர். இந்த இறுதி முடிவு எடுக்கப்படும் போது மேற்குறிப்பிட்ட அனைவரும் எதிரான நிலைப்பாட்டினையே வெளியிட்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு அம்மணி அழுது கூட பொன்சேகாவை ஆதரிக்கவேண்டாம் என்று மன்றாடியிருக்கின்றார். அந்தவேளை கூட்டமைப்பின் தலைவர் மிகக் கடும் சொற்பிரயோகங்களை மேற்கொண்டே இந்த இறுதி முடிவிற்கு வந்ததாக தெரியவருகின்றது.

உண்மையில் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் பரவலாக வெளிவந்தது. குறிப்பாக கடும் தமிழ்த்தேசிய விசுவாசிகளிடம் இருந்தே இது வெளிவந்தது. அவர்களது மண் பற்றினையும், விடுதலைப் போரின் விசுவாசத்தையும் யாராலும் உதறிவிட முடியாது.

ஆனாலும் கூட்டமைப்பு முடிவிற்கு வருவதற்கான காரணங்களை தற்போது தருகின்றோம்.

வடக்கு கிழக்கினை இணைத்து காணி, மற்றும் பொலிஸ் நிர்வாகத்துடன் கூடிய அதிகார பரவலாக்கத்தை தமிழ் மக்களிடம் வழங்குவது. கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் மற்றும் மக்கள்அனைவரையும் விடுவித்தல்.

தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களில் இருந்து இராணுவ நிலைகளை அகற்றுதல்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி அப்பகுதிகளில் மக்களை குடியமர அனுமதித்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதான கோரிக்கைகளை தமிழத்தேசியக் கூட்டமைப்பு இரண்டு பிரதான தரப்புக்களிடமும் முன்வைத்தது.

மகிந்தவால் இவை நிராகரிக்கப்பட பொன்சேகா தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றை ஏற்றுக் கொள்வதுடன் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தம்மால் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கி ஒப்பமிட்ட பத்திரத்தினை கூட்டமைப்பிடம் பொன்சேகா தரப்பு கையளித்துள்ளது.

இதனை அடுத்தே ஆதரவு நிலையினை கூட்டமைப்பு எடுத்தது மட்டுமல்லாமல் வாக்குறுதிப் பத்திரத்தினை இலங்கையில் உள்ள சர்வதேச தூதரங்கள் அனைத்திற்கும் கையளித்ததுடன் இந்தியாவிற்கும் நேரடியாகச் சென்று பத்திரத்தினைக் கையளித்து பொன்சேகா தரப்பு வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் தம்மால் எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இதனை இந்தியா உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

உண்மையில் தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து மக்களுக்கான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் மக்களை ஏதோ ஒரு ஒருமைப்பாட்டிற்குள் அல்லது செயற்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு என்ன வழி இருக்கின்றது? தற்போதைய சூழலில் ஒரே வழி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற நகர்வுகள்.

சர்வதேச ரீதியாக நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புக்கள், போராட்டங்கள், உயிர்க்கொடைகள் என பிரமாண்டமான ஒப்பிடமுடியாத நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனாலும் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் தொடர்ந்தும் மேம்பாடான செயற்பாடுகளை அல்லது அவர்களது கொள்கைகள் சிதைந்து போகாமல் இருப்பதற்கான வழிவகைகளை தக்கவைக்கவேண்டிய தேவை என்பது மிக முக்கியமாக உள்ளது. இம் மக்களை ஆற்றுப்படுத்த அல்லது வழிப்படுத்த ஒரு ஊடகம் கூட இல்லை என்பது ஒரு சிறிய உதாரணமாகும்.

இந்த நிலையில் தான் கூட்டமைப்பு எடுத்த இந்த நடவடிக்கையினை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது நிலையில் தமிழர் தாயக மக்கள் தமது வாக்குப் பலத்தினை நிறைவேற்றினார்கள். கூட்டமைப்பு ஏற்கனவே நடைபெற்ற அரசதலைவர் தேர்தலைப் புறக்கணித்தமை தவறு என்று வெளியிட்ட கருத்துக்கள் வேதனை அளிப்பது இயல்பானது தான். ஆனாலும் ஏற்கனவே யாழ்.குடாநாட்டில் இருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பல இடங்களில் தேசத்தின் குரல் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தமையை நாங்கள் நிராகரிக்க முடியுமா? அவர் அவ்வாறு கூறியிருந்தமையால் அவரை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து அகற்றிவிட முடியுமா? சில விதண்டாவாதக் கொள்கைகளை நாங்கள் வரித்துக் கொள்வதன் மூலம் எதனையும் சாதித்துவிடமுடியாது. அன்றைய ஜனாதிபதித் தேர்தல்ச் சூழலில் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டியிருந்தது என்பது ஒரு கள யதார்த்தம். ஆனாலும் அரசியல் நிலைபாடு என்பதனை முன்னெடுக்கின்ற போது சில மாறுபட்ட நிலைபாடுகளையும் கருத்துவெளிப்பாடுகளையும் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்பது தவிர்;க்கப்பட இயலாதது.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தற்போதைய கையறு நிலையிலும் ஆளுக்காள் விமர்சனங்களையும் விதண்டாவாதங்களையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. ஓரளவு கள யதார்த்தத்தினையும் புரிந்து கொள்வேண்டும். எங்காவது ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு தளத்திற்கோ அல்லது பத்திரிகைக்கோ பட்டதை எழுதிவிட்டுப் போவது போன்ற தான நிலைபாட்டினை சில படைப்பாளர்கள் கொண்டிருப்பதுதான் கவலைக்குரியது. நாங்கள் அனாதைகள் எங்களுக்கான ஒருமைப்பாடு என்பது இனித்தான் மிக முக்கியமாக தேவை. சர்வதேச ரீதியிலான ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாங்கள் ஏன் தாயகத்தில் சிதைய வேண்டும் அல்லது விலை போகவேண்டும்.

நிற்க

இந்த அனைத்து விடயங்களையும் தாண்டி கூட்டமைப்பின் நிலைபாட்டினை ஏற்று தமிழர் தாயகத்தில் அனைத்து மக்களும் ஒருமித்த கொள்கை நிலைபாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களை விடவும் மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் கொழும்பு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைபாட்டினை ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். என்பதனை ஏற்றுக் கொள்வேண்டும்.

வடக்கில் ஈபிடிபியினரும், கிழக்கில் கருணா, மற்றும் பிள்ளையான் குழுவினரும் முடிந்தவரையில் தேர்தல் நடவடிக்கைகளை மகிந்தவிற்கு சார்பாக மேற்கொண்டார்கள் வன்முறைகள் உட்பட. ஒப்பீட்டளவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாரிய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆனாலும் பணம் கொடுத்தல், அச்சுறுத்தல் போன்ற வழமையான மகிந்தவின் அடியாட்களின் தில்லுமுல்லுகளுக்கு மத்தியில், எதற்கும் விலை போகாத தமிழ் பேசும் மக்கள் சர்வதேசத்திற்கும் இனவாதி மகிந்தவிற்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.

தமிழ்மக்களுக்கு ஏதாவது கிடைத்துவிடுமோ என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே சிங்கள மக்கள் பொன்சேகாவை நிராகரித்திருக்கின்றார்கள். இதன் பின்னரும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து வாழக்கூடிய சூழல் இலங்கையில் நிலவுகின்றதா? என்பதை மட்டுமல்ல சர்வதேசம் புரிந்து கொள்ள ஒரு செய்தியை இந்தத் தேர்தல் ஊடாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

நாங்கள் தனித்துவமானவர்கள் நாங்கள் ஒற்றுமையானவர்கள் எங்களுக்கான ஒருமைப்பாடு இருக்கின்றது. நாங்கள் சிந்திய குருதி வெள்ளத்திற்கும், உயிர்க்கொடைகளுக்கும் மத்தியில் துரோகங்களும், அச்சுறுத்தல்களும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதே… அது.

இராவணேசன்


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP