|
சமீபத்திய பதிவுகள்
தினமலர் செய்தி -மத மாறப் போவதாக வதந்தி மறுக்கிறார் நடிகை நக்மா???????
தினமலர் செய்தியில் நக்மா கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டது வதந்தி என்று செய்தி வெளியாகி இருந்தது.
தியாகராஜ பாகவதர் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய்
தியாகராஜ பாகவதர் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி
கருணாநிதி உத்தரவு
சென்னை, மே.24-
தியாகராஜ பாகவதர் மனைவிக்கு மருத்துவ செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
தினத்தந்தியில் செய்தி
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்படுவதாக தினத்தந்தியில் இந்த மாதம் 10-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் "தனது பாட்டி ராஜம்மாளின் சிகிச்சைக்கு கலை உலகத்தினர் மற்றும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். எனக்கும் எனது தம்பிக்கும் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும்'' என்ற அவரது பேரன் சாய்ராமின் வேண்டுகோளும் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சிலர் அவருக்கு உதவ முன்வந்தனர். இப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்ச ரூபாய் வழங்க ஆணையிட்டு அந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு லட்சம் உதவி
தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ள ராஜாம்பாள் அம்மையார் தற்போது மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ஒரு லட்ச ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டார்.
முதல்-அமைச்சரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சென்னை சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை நேற்றே வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
http://www.dailythanthi.com/article.asp?NewsID=414620&disdate=5/24/2008
சாதனைகள் உயர, உயர எதிரிகள் வில்லம்பு தேடுகின்றார் எமை வீழ்த்திவிட வேண்டுமென்று
சாதனைகள் உயர, உயர
எதிரிகள் வில்லம்பு தேடுகின்றார் எமை வீழ்த்திவிட வேண்டுமென்று
சென்னை, மே.24-
முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை வருமாறு:-
எழுத்துக்களை ஏட்டிலே பதிப்பதற்கும்
கருத்துக்களை மேடையில் ஏற்றுதற்கும்
எழுபது ஆண்டுக்கு மேலாக உழைத்துழைத்து
என் தமிழர் தலை நிமிர வேண்டுமே யென்று
எழுதினேன், பேசினேன்; என்ன பயன்?
இந்தக் கேள்விக்கு விடையாகத் தான்
என்னால் ஒரு தமிழன் தன்மானம் பெற்று
இருக்கின்றான் என்றால்; அதுவே எனக்கு மன நிறைவு.
பின் தங்கிய சமுதாயம் மட்டுமல்ல; மிக மிகப்
பின் தங்கிய சமுதாயமும் விழிப்பு கொள்ள - அந்த
இருபது விழுக்காடு ஒதுக்கீடன்றோ ஏணி ஆயிற்று!
இங்கு மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானத் தூண்டுகோலே;
மண்டல் கமிஷன் ஒளி விடவும் மணிவிளக்கு ஏற்றியது!
வித்தகராம் வி.பி. சிங் வித்திட்டு வளர்த்த தருவன்றோ;
எத்தர்கள் வெட்டிய குழி விட்டு இட ஒதுக்கீடு சமூக நீதி;
உரியவர்க்கெலாம் கிடைத்திட வகை செய்யும் நிழலாக உதவிற்றாம்!
நெஞ்சில் ஓர் முள்ளை வைத்துக் கல்லறையில் புதைக்கின்றோம் - எதற்கும்
அஞ்சாச் சிங்கம் பெரியாரை; என அழுது புலம்பினோம்.
அனைத்து சமூகத்தாரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமலாக்கி;
அந்த முள்ளையெடுத்து முனை முறித்துப் போட்டு விட்டோம்;
எம்மொழிக்கும் குறைவில்லா தமிழ் மொழிக்கு பரிதிமாற் கலைஞர் கனவாம்
செம்மொழி எனும் தகுதியினை அம்மை சோனியாவின் ஆதரவால்
வென்றெடுத்தோம் -
அண்ணா கண்ட கழகத்தைக் காப்பதுமன்றி -
அவர் கண்ட அரசில் அணுப்பொழுது ஓய்வின்றி;
அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட
அட்டியின்றி உழைக்கின்ற செய்தி
அன்றாடம் மக்களுக்குச் சாதனையாய்க் கிட்டுதன்றோ!
அரிசி கிலோ இரண்டு ரூபாய்
அதை விளைவிக்கும் உழவர் கடன்;
ஒரு சேர ஏழாயிரம் கோடி ரூபாய் ரத்து -
வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள் - மகளிர்
வாழ்வின் களைப்பு போக்கி உலகச் செய்திகளை தெரிந்திடவே -
தாய்க்குலத்தோர்; மல்லுக்கு விறகுடனும்
வாயுடனும் மோதிக் கொண்டதைப் போக்கிடத்தான்
இலட்சக் கணக்கில் எரிவாயு அடுப்புகள்
இலவசமாய் வழங்கப்படுவதும் உண்மை நிகழ்ச்சிகளன்றோ?
திருமண நிதி உதவித் திட்டம் என்ற பெயரால் இருபதாயிரமும்
கருவுற்ற மகளிர்க்கு தலா ஆறாயிரமும் எந்த ஆட்சியிலே தரப்பட்டது?
இந்த ஆட்சியிலே தான் அந்தச் சாதனைகளும்!
அமைப்புச் சாரா தொழிலாளர்கள்
அத்தனை பேருக்கும் அரவாணி, நரிக் குறவர் உட்பட; வாரியம்!
அவற்றின் சார்பில் அடுக்கடுக்கான காரியம்!
விவசாயத் தொழிலாளர் - விவசாயிகள் நலம் பெறவே
சமூகப் பாதுகாப்புத் திட்டம்; அதற்காகவே தனியாக ஒரு சட்டம்!
வீட்டுமனைப் பட்டா கிடைக்காது
பூட்டில்லாத வீடுகளாம் சாலைகளில் படுத்துறங்கியோர்க்கு
இலவசமாக 4 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள்
இரண்டு ஆண்டுகளில் மட்டும் தந்திடவே தனியாக அரசாணை!
சத்துணவு சாப்பிட்ட 71 லட்சம் சிறார்க்கு உண்மை
சத்து கிடைத்திடவே வாரம் மூன்று முறை முட்டை உணவு!
நாட்டுப்புரம், நகரங்களில் புதுப் புது தொழிற்சாலைகள் -
நாளும் நாளும் பெருகுது இளைஞர்க்கு வேலை வாய்ப்பு!
படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த
பல்லாயிரம் பட்டதாரிகளுக்கு புதிய புதிய பணிகள் ஏராளமாம்!
பள்ளிக் கல்வி முதல் பட்டம் பெறும் நிலை வரையில்
படிக்கின்ற மாணவர்க்கு கட்டணம் ரத்து, காசில்லாப் பயணம்!
ஆதரவற்ற முதியோருக்கும் அதிக உதவித் தொகை - இந்த
ஆட்சியிலே வாரி வாரி வழங்கப்படுவது உண்மையன்றோ?
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து
குடிநீர் முறையே கிடைத்திட திட்டங்கள் தான் தேடியே வந்துளவாம்!
மேம்பாலங்கள் என்ன? மேடு பள்ளம் போக்க சாலைகள் தான் என்ன?
தாம்பாளத்தில் வைத்துத் தரப்படும் சலுகைகள் தான் என்ன என்ன?
புதிய புதிய மாவட்டங்கள், மாநகராட்சிகள் தான் என்ன?
விடிய விடிய நிறைவேற்றப்படும் சாதனைகள் தான் என்ன? என்ன? என்ன?
தமிழறிஞர்தமைத் தேடிப் பிடித்து அவர்தம் தகுதிபோற்றி
தந்தபடியிருக்கின்றோம்; தக்கதோர் பொற்கிழி -
சாமான்யன் ஆட்சியிலே சாதனைகள் உயர உயர - இனி
ஏமாந்து விடக் கூடாது என எதிரிகள் விழித்துக் கொண்டே
வில்லம்பு தேடுகின்றார் எமை வீழ்த்தி விட வேண்டுமென்று
முளையிலேயே கிள்ளிட வேண்டிய முள்மரம் நாமென்று
முனைகிறார் நாற்புறம் சூழ்ந்து நின்று!
முத்தமிழுக்கு முடி சூட்டிக் களித்திட
எத்தகைய தியாகத்துக்கும் தோள் தட்டும்
முதிரை மரமாய் நாமிருப்பதாலே
"நான்கு பக்கம் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான் போல''என்றாரே பாவேந்தர்;
அதைப் போல நினைத்துக் கொள்கிறேன் - அந்த
உவமை இன்பத்தில் இதயத்தை நனைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கவிதையில் கூறியுள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=414497&disdate=5/24/2008
மதபோதகர் மீது தாக்குதல்-தென்னை மட்டையால் அடித்து உதைத்தனர்
கிறிஸ்தவ மதபோதகர் மீது தாக்குதல்
தென்னை மட்டையால் அடித்து உதைத்தனர்
மேட்டுப்பாளையம், மே.24-
காரமடை அருகே கிறிஸ்தவ மதபோதகர் தாக்கப்பட்டார். மர்ம ஆசாமிகள் சிலர் தென்னை மட்டையால் மதபோதகரை அடித்து உதைத்து விட்டு தப்பி விட்டனர்.
மதபோதகர்
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோழம்பாளையத்தை அடுத்து மேல்வாவி கிராமம் உள்ளது. இங்கு மலை வாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த பகுதியில் நீதிராஜ் (வயது 52) என்பவர் ஒரு சிறிய ஜெப வீடு அமைத்து ஜெபம் செய்து வருகிறார். நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை தவிர பள்ளிக்கூடம் போகாத சிறுவர்களை அழைத்து அவர்களை பள்ளியில் சேர்ப்பது, முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளையும் கிறிஸ்தவ மத போதகர் நீதிராஜ் செய்து வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு மன எரிச்சலை ஏற்படுத்தியது.
தாக்குதல்
இந்த நிலையில் மதபோதகர் நீதிராஜ் நேற்று மேல்வாவி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று துண்டுபிரசுரம் கொடுத்து போதனை செய்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதபோதனை செய்ய வேண்டாம், உடனே திரும்பிச்சென்று விடுமாறும் கூறினர். ஆனால் நீதிராஜ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து வந்து மதபோதகர் நீதிராஜை அடித்து உதைத்தனர். இதில் நீதிராஜின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கை மற்றும் கால்களில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அதற்குள் அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
மதபோதகரின் அலறலம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காரமடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. ராஜா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மதபோதகரை தாக்கியவர்களை வலை வீசித்தேடி வருகிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=414589&disdate=5/24/2008&advt=2