சமீபத்திய பதிவுகள்

‘முகவரி அல்ல முகம்’ கட்டுரைத் தொடர் – கண்மணி

>> Sunday, July 5, 2009

dinapulariஇக்கட்டுரைத்தொடர் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் தினப்புலரி காலை நாளிதழில் வெளிவந்தது. தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவைப்பெற்ற இக்கட்டுரைத்தொடர் உலகத்தமிழர்களின் மனங்களுக்கு நிச்சயமாய் மருந்தாக இருக்கும். அதோடு தமிழ்தேசியத்தின் தேவையும், தமிழீழத்தை நாம் அடைய வேண்டிய கட்டாயத்தையும் தாய் நிலத்தை மீட்க வேண்டிய களத்தில் நாம் ஆற்ற வேண்டிய பங்கையும் விரிவாக எடுத்துரைக்கிறது.

 
 
¬பேரினவாத முகத்தின் முன்பு இன்று
பிராத்தனைகள் இல்லை
ஆணவம் கிழிபடப் புலியின் அறைகள்…
எவனது முழங்காலுக்குக் கீழும்
தலைசாய்த்துக் கிடக்காது தமிழினம்
இழந்த அடையாளங்கள் மீட்கப்படுகின்றன
தொலைந்த முகவரிகள் தொகுக்கப்படுகின்றன
முடங்கிய கைகள் துப்பாக்கிகளாக
உலகக் கூரையில் தமிழின முழக்கம்
தமிழர்க்கு இந்தத் தகுதி யாரால்?
ஒடுக்கு முறையாளர்கள் உச்சரிக்கத் தயங்கலாம்
அடிவருடிகள் இந்த வரலாற்றை மறுக்கலாம்
விடுதலைக்குப் போராடும் வீரர்கள் எவருக்கும்
உலக மூலையில் எங்கிருந்தாலும்
அடையாளம் தெரியும்….. அவர்கள் புலிகள்!
இளைய தீபங்களின் தியாக ஒளியில்
எழுகின்ற முகங்கள் புலிகளின் முகங்கள்
அர்ப்பணிப்புக்கான மானுட உவமைகள்
பிரபாகரன் என்பதும், தம்பியர் என்பதும்
தனி மனிதர்களின் பெயர்களில்லை
விடுதலை அவாவும் தமிழீழத்துக்கு
இந்தப் பெயர்களே இனிமேல் பொருள் தரும்
இந்த முகங்கள் தனிமுகங்கள் இல்லை
உரிமைக்குப் போரிடும் இனத்தின் முகங்கள்
ஈழத்தின் நெருப்பு விண்ணை எட்டும்
இளைய குருதியால் கடல்கள் சிவக்கும்
நாளைய கதிர்கள் தமிழ் ஈழ மண்ணில்
விடுதலை என்ற விடியலை எழுதும்!

-மக்கள் கவிஞர் இன்குலாப்

எந்த ஒரு போராட்டமும் திடீரென தோன்றுவதில்லை. அதற்கென ஒரு வரலாறு, அதற்குள் புதைந்துள்ள ஏமாற்றம், முறியடிப்பு, சதிவலை, இரத்தச்சிதறல், கோபம், ஓலம் என ஒராயிரம் பண்புகள் கோபுரமாய் புதைந்து கிடக்கும். எந்த ஒரு போராட்டத்தையும் அதன் சமகால வாழ்வை வைத்து சீர்தூக்கக் கூடாது. மாறாக போராட்டத்தில் சிக்கிக் கிடக்கும் உணர்வுகள், பறிக்கப்பட்ட உண்மைகள், சிதறடிக்கப்பட்ட உயிர்கள், பழிவாங்கப்பட்ட தன்மான உணர்வுகள் என அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் பொதிந்ததாக போராட்டத்தன்மை இருக்கும், ஆகவே எந்த ஒரு போராட்டத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியோடு கண்டுணர்ந்து ஆய்வு செய்து சீர்தூக்கி கருத்துச் சொல்வதுதான் சிறப்புடையதாக இருக்கும்.

உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாந்தகுல விடுதலைக்கான போர்களும் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதைப்போன்றே அடிமைதனத்தின் நுகத்தடியை உடைத்தெறிய ஒவ்வொரு காலத்திலும் வரலாறு மக்கள் தலைவர்களை தொடர்ந்து படைத் தளித்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பதை வரலாற்றின் வாயில்களை தொட்டவர்கள் அறிந்திருப்பார்கள் அதைவிட மேலாக விடுதலைக்கான போர் என்பது சிலர் 10 ஆண்டுகளில் சிதிலமடைய கூடியதல்ல. அது ஒவ்வொரு அணுவிலும் உயிர்த்து துளியாய் உலா வருவது. ஒவ்வொரு ரத்தத் துளியிலும் உயிர்த்துடிப்பாய் உறைந்து கிடப்பது. எந்தவொரு ஆளுகையாலும் அடக்க முடியாத எந்த ஒரு ஆற்றலாலும் ஒடுக்கமுடியாத ஒரு மாபெரும் உணர்வு மண்டலம், உரிமைக்கான போராட்டம் என்பதை வரலாறு பல தளங்களில் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

யூதர்கள் எகிப்திலே அடிமையாய் இருந்தபோது மோசே, ஆரோன் என இரண்டு படைத்தளபதிகளை வரலாறு அவர்களுக்கு வழங்கியது. மோசேவும், ஆரோனும் மறைந்த பிறகு யூதர்களின் விடுதலைப்பயணம் அவர்களோடு அடங்கிப் போய்விடவில்லை. அது இன்னும், இன்னும் வீச்சாய் பேரெழுச்சிக் கொண்டு வெற்றிகண்டது இன்று சுற்றிலும் இருக்கும் அரபு நாடுகளுக்கு சிம்ம சொப்பணமாய் திகழும் இஸ்ரேல் தமது மூதாதயர்களின் வரலாறே அவர்களை வலிமை கொண்ட மக்களாய் மாற்றி அமைத்தது.

இந்நிலையில் தான் சமகால வரலாற்றில் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு பெருங்கொடுமை அடுத்தத் தொடருக்கான இடைவெளியை தந்திருக்கிறது. காற்று மண்டலங்களை பிணவாடையால் அடர்த்தியாக்கி அழுகுரல்களை வேட்டுச் சத்தங்களால் ஊமையாக்கிய ஒரு கொடுமை முடிவு பெற்றதாக கொக்கரிக்கிறது. சிலருக்கு வரலாற்று அறிவு இல்லை. பலருக்கு தமிழன் என்ற உணர்வே இல்லை. ஆகையால் சிங்கள மண்ணில் பிழைக்கச் சென்றவர்கள் சொந்த நிலம் கேட்டு போராடுவதில் என்ன நியாயம் என புலம்புகிறார்கள். அவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை கட்டாயமாக கற்றுத் தரவேண்டிய ஒரு அவசியம் இந்நேரத்தில் நமக்கு எழுந்துள்ளது. இந்த வரலாற்றை நாம் பள்ளிக் கல்லூரிகளில் நடக்கும் வெறும் புள்ளி விவரங்களாக இல்லாமல் அழுத்தமான திட்டமிட்டு தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட
சதியை அவர்கள் எதிர்கொண்ட விதத்தை இயக்கத்தில் தொய்வடையாத மாந்தகுல நகர்வு மாறிவந்த விதத்தை நாம் ஒரளவாவது தெரிந்து கொள்ளாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நம்மால் ஆதரிக்க முடியாது. ஒன்று உணர்வாளராய் இருக்கவேண்டும். அல்லது அறிவாளராய் இருக்க வேண்டும். இல்லையெனில் குறைந்த பட்சம் மனிதராகவாவது சிந்திக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களே தமிழீழ விடுதலையை கொச்சைப்படுத்துகிறார்கள். விடுதலை போராளிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். இந்திய விடுதலை போர்களத்திலே தன்னிகரற்ற மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆகியோரை விடுதலை போராளிகளாய் அங்கீகரிக்கிறார்கள்.
தென்னமரிக்கநாடுகளில் வீரச் சமர்புரிந்த சேக்குராவை, ஃபெடல்காஸ்ட்ரோவை, நெஞ்சினில் வைத்து போற்றுகிறார்கள். வியட்நாமிய விடுதலை போராளி ஹோசிமினை மாவீரன் என வாழ்த்துகிறார்கள். ஆனால் பிரபாகரனை, மட்டும் மறுக்கிறார்களே இதற்கு காரணம் என்ன, என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இப்போது தமிழீழ வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
இலங்கை ராமாயணத்தில் நமக்கு சொல்லித்தரப்பட்ட ஒரு தீவு. ராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டதை ராமாயணம் ஒப்புக்கொள்கிறது. முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரகாந்திக்கு எழுதிய கடிதத்தில் ராமாயணம் என்பது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே நடந்த போர் என்று கூறுகிறார். அந்த போர் இன்னமும் ஓயவில்லை. அயோத்திராமன் ராவணனைக் கொன்றதை ராமாயணம் சொல்கிறது. நல்லவேளை இன்றுபோல் அன்று செயற்கை கோள் அலைவரிசை தொலைகாட்சிகள் இல்லை. ஒரு வேளை இருந்திருக்குமேயானால் இன்று பிரபாகரனை கொன்றதை போட்டி போட்டு ஒளிபரப்பிய வட இந்திய தொலைகாட்சிகள் அன்றே அதை செம்மையாக நிகழ்த்தியிருக்கும். அப்படி ராமாயணத்தில் சொல்லப்பட்ட இலங்கைத் தீவுன் இந்திய துணைக் கண்டத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளது.

இந்தியாவையும் இலங்கைத்தீவையும் வடக்கே வடகடல் என்ற அமைப்பும், தெற்கே தென்கடல் என்ற மன்னார் வளைகுடாவும் பிரித்து வைத்திருக்கிறது. இந்த இலங்கைத் தீவிற்கு தெற்கே இந்திய பெருங்கடல் தென்துருவ நிலப்பகுதி வரை கடல் தவிர வேறு நிலங்கள் கிடையாது. கிழக்கே வங்காள விரிகுடா இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு வரை பரந்து விரிந்துள்ளது. இந்த அழகிய தீவின் மிக அருகே வெறும் 40 கீ.மீட்டர் தொலைவில் தமிழ்நாடு அமைந்திருக்கிறது.

தொடரும்…

 

வாழ்க்கையை
விடுதலைப்போரினாலும்
மரணத்தை
அஞ்சாத தியாகத்தாலும்
கடைசி வரைக்கும்
கனப்படுத்தி
பூமி கனக்கப்
புதைந்த புலிகளே!
காலத்தின் செவிகளில்
உமது கர்ச்சனை…
யுகங்களின் நெற்றியில்
உமது திருப் பெயர்…
நாளைய மானுடப்
பிஞ்சு முகங்கள்
முகர்ந்து பார்க்கும்
ஒவ்வொரு பூவிலும்
உங்கள் உயிரின்
வாசம் கமழும்…

நாளைய விடியலை
ஈழத்தில் எழுத
நீளும் கதிர்களில்
நிச்சயம் உமது
உயிரின் சூடும்
ஒன்றித்திருக்கும்.

துரோகத் தூசுப் படலத்தை
உயிரின் சுவாலையால்
பொசுக்கிய புலிகளே!

காலியான சயனைட் குப்பிகளும்
கழன்று கிடக்கும் தோள் துப்பாக்கிகளும்
இன்னும் உலராத இளைய ரத்தமும்
அனைத்திலும் மேலாய்
உம் வாழ்வும் மரணமும்
விடுதலை வரித்த
அடையாளங்களாய்
வரலாற்று வரிகளில்
கனத்துக் கிடக்கும்
ரத்த சாட்சிகளே.
—மக்கள் கவிஞர் இன்குலாப்

வீரவணக்கம்!
இந்த 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் இருந்து தமது சொந்த இனம் கொத்துக் கொத்தாய் அழிக்கப்பட்டும் கூட கொஞ்சமும் கவலையின்றி நாம் நமது பணிகளில் மூழ்கிக் கிடக்கிறோம். ரத்த உறவு என்பதற்காக அல்ல, சொந்த இனம் என்பதற்காக அல்ல, மனித உயிர்கள் என்ற அடிப்படையிலாவது நாம் சிலிர்த் தெழுந்தோம் என்றால் இந்திய அரசும், சிங்கள இனவெறி
அரசும் சிறுமைப்பட்டு போயிருக்கும். ஆனால் தமிழன் மொழியால் ஒன்றுபட்டு இருந்தாலும் தமது இனத்திற்கான அடையாளத்தை தொலைத்து வெகுநாட்களாகி விட்டதை, இப்போது நடந்த இனப்படுகொலையின் போது நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நமக்கென நாம் சாதி, மதம், கட்சி, அடையாளங்களால் நம்மையே நாம் அழித்துக் கொண்டோம்.
நாம் தமிழனாக இருந்தாலும் நமக்கான சிந்தனையை கட்சி தலைமைதான் தீர்மானிக்கிறது, தமிழ்நாட்டிற்குப் பொருந்தாத காங்கிரஸ் கட்சி இன அழிப்பை நியாயப்படுத்தி தேசிய அடையாளத்தை நம்மேல் சுமத்தியது. அடிப்படை தன்மையற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இன அழித்தொழிப்பை விட தேசிய அங்கீகாரமே அவசியம் என வாதிட்டது. ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால், வேறு ஒரு அமைப்பு டெல்லிக்கு மனுக்களை சுமந்து சென்றது. இதுவே சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு திமிர் வளர உரமாகிப் போனது.
வரலாற்று பக்கம் திரும்புவோம். வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு மாந்தகுலம் அந்த மண்ணில் வாழ்ந்ததற்கு அடையாளம் ஏராளமாய் இருந்தன. அவர்கள் வேடர்களாய் மந்தை மேய்ப்பவர்களாய் வாழ்ந்ததற்கான சான்றுகள் கற்காலம், உலோக காலம் என எல்லாக் காலங்களிலும் அழுத்தமான பதிவுகளாய், புள்ளியல் தடயங்களாய் அந்த மண்ணெங்கும் ஏராளமாய் இரைந்து கிடக்கின்றன.
இலங்கையிலே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் தடயங்களும், சமகாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்களின் அடிப்படைக் கட்டமைப்புகளும், ஒன்றுபட்டவை என தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள். இலங்கையின் அனுராதாபுர பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு சான்றுகள் குறிப்பாக ஈமத்தாழிகளும், தமிழ் நாட்டின் திருநெல்வேலிக்கருகே ஆதித்த நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளும் மிகமிக பொருந்தி வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் படிப்படியாக வந்த எழுத்து படிமங்களும், கல்வெட்டுச் சான்றுகளும் இலங்கையும் தென்னிந்தியாவின் தமிழ்நாடும் மிக ஒத்தவையாக இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் அழுத்தமாய் பதிவு செய்கிறார்கள்.
ஒரு மொழியின் சான்றாய் எழுத்துக்கள் அமைகின்ற காரணத்தினால் எந்த மொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும், அதன் எழுத்து வடிவங்களை உள்வாங்குவது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்வெட்டில் ஈழத்தமிழ் வணிகர் வணிகம் செய்து தங்கிச் சென்ற நிகழ்வுகள் தகழி எழுத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகழி எழுத்துக்களே இலங்கையின் தொடக்கக்கால கல்வெட்டுகளில் காணப்படுவதை ஆய்வுகளின் மூலம் நாம் அறிகிறோம். தமிழ்நாட்டில் கரூரில் கண்டெடுக்கப்பட்ட சில நாணயங்கள் சங்ககால பெருவழுதியின் நாணயங்களாகக் கருதப்படுகின்றன. இதே நாணயங்கள் இலங்கையில் பல பகுதிகளில் கண்டெடுத்ததாக
சான்றுகள் தெரிவிக்கிறது.
ஆக மொழியால் மட்டுமல்ல நாணய பரிமாற்றத் தாலும் அங்கு வாழ்ந்த தொல்குடியினர் தமிழர்களே என்பதை நம்மால் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். இலங்கைத் தீவின் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொடங்கி தமிழர்கள் மிகச் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய சான்றுகள் பல இன்று வரை நம்மிடையே இருக்கின்றன.
இந்நிலையில் தான் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் புத்தர் வருகிறார். தமது சமய கருத்துக்களை பரப்பிட அவர் தமிழ் மொழியை கற்க தொடங்கினார். பின்னர் தமிழரிடையே தமது சமய கருத்துக்களைப் பரப்பினார்.
ஒரு தைப் பூச நாளில் இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கதிர்காமத்துக்கு அருகே உள்ள தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த நாளில் தான் புத்தர் தம் கருத்துக்களை தமிழ்மக்களிடையே பரப்பினார். தமிழர் சிலர் புத்தத்திற்கு மாறினர்.
இப்படித்தான் தமிழர் வாழ்வு சிதையத் தொடங்கியது.

தொடரும்…

- கண்மணி

 

ஈழத் தமிழர்க்குக்
கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர்
கரங்கள் நீளுக…

ஈழத் தமிழர்க்குத்
தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள்
தளங்கள் ஆகுக…

ஈழத் தமிழர்க்கு
ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ஆயுதம் செய்க…

ஈழத் தமிழர்க்கு
ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ரத்தம் பாய்க!…

ஈழத்திலிருந்து நீளும் கரங்களை
தோழமை கொள்வதெம் பிறப்புரிமை
கோழியின் செட்டைக்குள்
குஞ்சுகள் அடங்கும்.
பாழும் கழுகுக்கு பாசமா புரியும்?

ஈழம் வெல்வது புலிகளின் உரிமை
ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை.
வாலை ஆட்டாதே இந்திய அரசே
வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே!

மக்கள் கவிஞர் இன்குலாப்.

ஒரு இனத்திற்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படக் கூடாது. எத்தனை மறுப்புகள், எத்தனை இழப்புகள். தமிழ் மக்கள் சிந்திய கண்ணீரை எடுத்தால் கரிப்பு மிக்க ஒரு கடலையே உருவாக்கலாம். ஒரு இனத்தின் விடுதலைக்காக அவர்கள் நடத்திய போராட்டம் தான் எத்தனை? தம்முடைய எண்ணங்கள் முழுக்க லட்சியங்களை சுமந்து கொண்டு விடுதலை வேள்வியில் தம் உயிரையே எரித்துக் கொண்ட இளம் கொழுந்துகள் எத்தனை பேர்? விடுதலைக்கான களத்தில் கதற கதற வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வன்னித் தமிழச்சிகள் எத்தனைபேர்? அதனையும் மீறி விடுதலைக்கான நியாயத்தை நெஞ்சினில் சுமந்து. வாழ்க்கையை விடுதலை பயணத்திற்காய் ஒப்புவித்து ஈகையுடன் வாழ்ந்த இளம் வீரர்கள் எத்தனை பேர்? தாம் வார்த்தெடுத்த வரலாற்று ஆவணத்தை சிதைந்து போன தமது பண்பாட்டு அடையாளத்தை மறு உருவாக்கிய ஒரு மாபெரும் இயக்கத்தை, தமிழர்களின் மனசாட்சியை கொன்றொழித்த பெரும் பழியை சிங்கள இன வெறியன்களோடு சேர்ந்து இந்தியாவும் பகிர்ந்து கொண்டது. தமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் ஆவணத்தை பாதுகாக்க முனைந்த ஒரு திறன்மிக்க ஆற்றலை அடக்கிவிட பல நாடுகளின் துணையோடு பாரிய படை நடத்தி நசுக்கிப்போட்டதாய் கர்ச்சனை செய்கிறது சிங்கள இனவெறி அரசு
இன்றைய மக்கள் குடிதண்ணீருக்காய் வரிசையில் நிற்கிறார்கள். கால்வயிறு கஞ்சிக்காய் காத்திருக்கிறார்கள். கதறிஅழும் பச்சிளங்குழுந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் பரிதவிக்கிறார்கள். காற்றின் புழுதி எமது தமிழச்சிகளின் தலையை சீரழிக்கிறது. திறந்த வெளி சிறைச்சாலையாய் பாதுகாப்புவலையம் என்ற பெயரிலே உயிருக்கு பாதுகாப்பற்ற ஒரு முகாம் அங்கே. பசிக்கு ஏங்கும் சிறுவனுக்கு, நமது பாட்டன் காலத்து கதை தெரியுமா? அவன் அந்த மண்ணை கீறி சீர்படுத்தி வயலாய் மாற்ற பட்ட வதை தெரியுமா? காடாய் இருந்தவைகளை கழனியாக்கி, நிலமாக்கி, ஊராக்கி உறவுகளை வளர்த்த நிலை தெரியுமா. இதையெல்லாம் கற்றதினால் தான் புலிகள் கரம் உயர்த்தினார்கள். இன்று தேசியம் பேசும் துரோக முகங்களுக்கு அங்கே தோன்றிய தமிழ்தேசியத்தின் வரலாறு தெரியாதா என்ன ஆனால், எல்லோரும் ஒன்று கூடி தமிழின அடையாளத்தை சிதைக்க முயற்சிப்பதேன்? எமது தமிழ்தாயின் அழுகுரல் ஓசை கடல் தாண்டி வந்து நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள இரவையும், இருளையும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மினப் பெண்கள் உங்களுக்குத் தெரியுமா நம்முடைய வரலாறு.
புத்தரின் போதனை தமிழர்மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயல்பாக பிற உயிர்களை நேசிக்கும் பண்பு தமிழரிடையே உயர்ந்தோங்கி இருந்ததனால் பௌத்த சித்தாந்தங்கள் அவர்களை வெகுவாய் ஈர்த்தது. இதுவே பல தமிழர்கள் பௌத்தத்திற்கு மாறிட காரணமானது. சாத்தனார் எழுதிய மணிமேகலையிலும் மாகராமர் கபாலி மொழியில் எழுதிய மகாவமிசத்திலும், ஒத்த செய்தி ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியான யாழ்நாட்டை அராசாண்ட அரசரின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு அரியணை மோதலுக்காய் புத்தர், மன்னரிடமும், பிணக்கு ஏற்பட்ட மருமகனிடமும் பேசி சிக்கலை தீர்த்து வைத்ததாக அறிகிறோம். இந்த வரலாற்றுச் செய்தியை இங்கே பதிவு செய்ததற்கான காரணம் இலங்கை சென்ற புத்தர் தமிழ் மன்னர்களின் அரவணையிலே தான் தமது பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்காகத்தான். இதைப்போன்றே தென்மேற்கே களனி ஆற்றங்கரையில் அரசாண்ட தமிழ் மன்னன் புத்தரை தமது பகுதிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தான். அங்குவாழ்ந்த தமிழர் பலர் பௌத்தத்திற்கு மாறினர்.
தமிழ் நாட்டிலும், இலங்கைத்தீவிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நாகர்கள் என்று அழைத்துக் கொண்டனர். "மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு என்கிற நூலில் அண்ணல் அம்பேத்கர் இந்த வரலாற்றுச் சான்றை உறுதிபடுத்துகின்றார். கி.மு.550 களில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனை அமைந்தது. இக்காலத்தில்தான் இலங்கைத்தீவிற்கு விசயன் என்னும் இளவரசன் இந்தியாவில் இருந்து வருகை புரிந்தான். அதுவரை ஒரே மொழியை கொண்டிருந்த தமிழர்கள் முதல் முறையாக ஒரு புதிய மொழியை கேட்கத்தொடங்கினர். இது அவர்களுக்கு புதிய அனுபவத்தையும், இனம்புரியா உணர்வுகளையும் தந்திருக்கவேண்டும். கி.மு.269-227 அளவில் தமிழகத்திலும் இலங்கையிலும், பௌத்தத்திற்கு மாறுவதற்கு அரசு துணைபுரிந்ததால் ஏராளமான மக்கள் சமயம் மாறத் தொடங்கினார்கள். இக்காலகட்டத்தில் கலிங்கத்து அசோக பேரரசரின் சார்பாக புத்தபிக்குவான மகேந்தர் இலங்கைக்கு வருகிறார். அவர் இலங்கை அரசரின் மனம்மாற்றி அரசரோடு சேர்த்து மக்களையும் பௌத்தத்தில் இணைத்தார். ஆக புத்த சமயம் படர்ந்து விரியத் தொடங்கியது. இந்நேரத்தில் சங்கமித்திரை என்னும் பௌத்த மத பிக்குனி கயாவில் இருந்து அரசமரக்கிளை ஒன்றை இலங்கைக்கு கொண்டு வந்து அரசரின் ஆதரவுடன் அனுராதாபுரத்தில் அதை நட்டு வைக்கிறார். அவர் நட்டு வைத்த அரசமரம் இன்றுவரை அனு ராதாபுரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பௌத்தம் பரவிய போது பௌத்த பீடத்தின் மொழியாக பாலி மொழி இருந்தது சிறிதுநாளில் பிராகிருதமும் பாலிமொழியோடு இணைக்கப்பட்டது. இவை இலங்கைத் தீவின் பயன்பாட்டிற்கும் வந்தன. மண்ணின் மொழியான தமிழ் பிற்காலத்தில் இத்தனை இன்னல்களை அனுபவிப்பதற்கு இந்நிகழ்வே காரணமாக இருந்தன. கலிங்கச் சொற்களுடன் விசயன் வந்தான். பாலி மொழியைக் கொண்டு மகேந்தர் வந்தார். இவை இரண்டும் இணைந்து வட்டார வழக்குகளாக உருமாறத் தொடங்கின. இப்படி வளரத் தொடங்கிய இம்மொழிச்சொற்களையே பிற்காலத்தில் சிங்கள மொழியென அழைக்கத்தொடங்கினர்.
வரலாற்றில் தமிழன் இலங்கையின் தொல்குடி என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. கரிகால் சோழன் காலத்தில் சோழப் பேரரசு இலங்கையின் மீது படையெடுப்பு நிகழ்த்தி அங்கிருந்தே ஆற்றை மறைத்து அணை கட்டும் தொழில் நுட்பத்தை கற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கரிகாலன் கல்லணையைக் கட்ட இலங்கையில் இருந்தே 12 ஆயிரம் பேரை அழைத்து வந்ததாக வரலாற்று நிகழ்வுகள் அழுத்தமாய் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரிகாலனின் படையெடுப்பிற்கு பின்னர். சோழ சிற்றரசுகளின் தன்னிகரற்ற அரசனாக தலைநிமிர்ந்து நின்றான் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அவன் இலங்கைத்தீவு முழுவதையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி மிகச்சிறப்புற வழிநடத்திக் கொண்டிருந்தான்.
எல்லாளன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலம் கி.மு. 161-117 இந்த சிறப்புமிக்க ஆட்சியை பொறுக்க முடியாத துட்டகாமனி என்ற விசயன் வழி வந்த அரசன் தெற்கே கடல், வடக்கே தமிழர் நான் எப்படி கால் நீட்டிப் படுக்கமுடியும்! என்று கேட்டான்.

தொடரும்…

- கண்மணி

 

முடக்கப்பட்ட
உன் முகாம்களில் கேட்டேன்….
துரத்தப்பட்ட
உன் சுவடுகளில் உணர்ந்தேன்…
எனக்கும் வேர்விட இடமில்லை என்பதை

என்சொல் பழகிய
செவிகள் கேட்கட்டும்
உன்னை மறுப்பது
என்னை மறுப்பது.

சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒருபிடி
மண்தேடி.
தமிழ் கவிஞர் இன்குலாப்

தமக்கு எழுந்த விடுதலை வேட்கையால் தமிழனுக் கென்று ஒரு நாடு அமைக்க இழப்புகளையும், துன்பத்தையும், இன்முகத்தோடு தாங்கி தமது இலட்சியத்தை வென்றெடுக்கும் பணியை இடையராது செய்து கொண்டிருக்கும் தமிழ் போராளிகள் முறியடிக்கப் பட்டதாக வடநாட்டு ஊடகங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி தீர்த்தது. தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பது வட இந்தியர்களுக்கு ஒர் இனிய செய்தி. சிங்களவன் அதை உணர்ந்ததால் தமது பரப்புரை தளமாக வடநாட்டு ஊடகங்களையேத் தேர்வு செய்தான்.
இத்தனை கேடுகளையும் செய்துவிட்டு சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்த போர் இந்தியாவிற்காக நடத்தப்பட்டது என்று பகீரங்கமாக அறிவிக்கிறான். ராஜபக்சே இவ்வாறு கூறியதற்கு இதுவரை இந்திய அரசிடமிருந்து எவ்வித மறுப்போ, கருத்தோ வெளிபடவில்லை. சோனியா ஆட்சியை அமைத்ததும் தாம் தமிழரை வென்றதும் சமமான வெற்றியாகக் கருதும் ராஜபக்சே ஒரு சிறு போராளி குழுவை எதிர்கொள்ள சீனா, பாகிஸ்தான், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆற்றலை ஒட்டுமொத்தமாய் பயன்படுத்தியிருக்கிறான். இது ஒன்றே போதும் புலிகளின் வீரத்தை அடையாளப்படுத்த. நமது ஊர்களில் எணூணிதணீ கீணிதீஞீடிண்ட் என்று சொல்லக் கூடிய குழு போக்கிரிகள் கருவித்தரிக்காத ஒருவரை கூடி நின்று வெட்டி வீழ்த்துவார்களே அப்படி கையில் ஆயுதமில்லா அப்பாவி தமிழர்களை சிங்கள வெறியர்களின் கூலிப்படையாய் மாறி குதறித்தள்ளியது அந்த பன்னாட்டுப் படை. ஆனாலும், கூட அவர்களால் வெற்றியை எட்டமுடியவில்லை என்பது சிங்கள அரசின் செய்தியாளர்கள் தரும் கூற்றுகளில் இருந்து வெளிப்படுகிறது. இவர்கள் தமிழப் போராளிகளை முறியடிக்கப்போவதாக கூறிவிட்டு அப்பாவித் தமிழர்களை அநியாயமாய் பழி தீர்த்து தமது முகங்களிலே குருதியால் கோலம் வரைந்துள்ளார்கள். ஆனாலுங்கூட ஆட்டைக் கொன்ற ஒநாய் ரத்தக்கறையை மறைக்க அப்பாவியாய் நடிப்பது போல இவர்கள் செய்த அத்தனை அநியாயங்களையும் மறைக்க பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்று வசனம் பேசுகிறார்கள்.
அப்பாவி தமிழ்மக்கள் 50.000 பேரை ஒரே நாளில் கொன்றொழித்ததற்குப் பெயர் எவ்வளவு பெரிய பயங்கரவாதம். ஆனால் 'புத்தநாடு செய்த பெருங்கொடுமையை ஆதரித்து காந்தி நாடு கையெழுத்து போடுகிறது'. இவர்களுக்கு ஆதரவாய் நின்ற நாடுகள் சீனா, திபெத் மக்களின் ஜனநாயக உரிமையை அவர்களின் தேசிய அடையாளத்தை தோட்டாக்களின் முனையில் துடைத்தெறிய துடிக்கும் நாடு. அதனால்தான் வேறெந்த தேசிய அரசும் தமது அடையாளத்தை வெளிக்கொணரகூடாது என்ற கயமையோடு செயல்படுகிறது.
அதோடில்லாமல் மேற்காசிய நாடுகளில் தமது பேரரசை நிலவ பல புதிய வழிகளை தேடி வருவதால் இலங்கையின் கடல்வழிகள் அந்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எத்துனை பெரிய அச்சுறுத்தல் என்பது இந்தியா ஏன் உணரமறுக்கிறது என்பது புரியவில்லை.
ரஷ்யாவை பொறுத்தமட்டில் கட்டிக்காக்கப்பட்ட மாந்தகுல மேன்மைகள் முதலாளித்துவ வெறியால் முறியடிக்கப்பட்டதன் விளைவாக சுகபோக வாழ்வுக்கு ஆசைப்பட்ட சில பூஷ்வா சிந்தனையாளர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள, ஒப்பற்ற மாமனிதன் லெனின் கட்டியமைத்த சோவியத் ஒன்றியத்தை சிதறடித்தார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுக்குள் கொண்டுவர அளவிட முடியாத போர்கருவிகளால் ஆப்கானிஸ்தானை நிரப்பினார்கள். ஆப்கானிய மக்களின் தேசிய அடையாளத்தையும் லெனின் கூறியதைப்போல அவர்கள் பிரிந்து போகும் உரிமையையும் மறுத்தவர்கள் தான் இந்த ரஷ்யர்கள். இப்படி இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் ஒவ்வொன்றும் தனிமனித உரிமைகளை மட்டுமல்ல தேசிய மொழி, சிந்தாந்தம், கலாச்சாரங்களை, கல்லறைக்கட்ட துடிக்கும் நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்ததுதான் இலங்கையை இந்த ஒநாய் ஆடுகளைக் கொல்லாது என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.
தமது பெயரிலேயே துட்டன் என்ற அடைமொழி கொண்ட இனவெறியன் எல்லாளனோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒடினான். வயது முதிர்த்த எல்லாளனை எப்படி கொல்வது என திட்டமிட்டு குறுக்கு வழியிலே துட்டகாமினி எல்லாளனை வெட்டிக் கொன்று தமிழர¬சைக் கைப்பற்றினான். சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும், தமிழர்களுக்கு ஏனோ வராமலேயேப் போனது. தமிழர்கள், சிங்களர்கள் எதிர்ப்பு என்பது இந்த நிகழ்வின் மூலமே தொடங்கியது. தமிழர்களின் தலைநகராய் இருந்த அனுராதபுரத்தை பௌத்த சமயத்தினர் கைப்பற்றி தமது தலைநகராக மாற்றியமைத்தார்கள்.
கி.பி. 550- 800 களில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும், வைணவ, சைவ சமயங்களில் மறுமலர்ச்சி பெற மாபெரும் தொண்டாற்றினார்கள். வைணவ சமய கருத்துக்கள் வேகமாய் பரவத் தொடங்கியது. இக்காலங்களில் தான் தமிழர்கள் தம்மை தமிழர்களாக மீண்டும் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி தமிழ்நாட்டில் பேரலையாய் புறப்பட்ட வைணவ, சைவ சமயங்களின் ஆற்றல் இலங்கையில் பேரிடியாய் வந்திறங்கியது. தமிழர்கள் பலர் மீண்டும் தமிழர்களாயினர். தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவ சமயத்திற்கு தம்மை மாற்றிக் கொண்டதால் இலங்கையில் உள்ள பௌத்தசமய தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எங்கே தமது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தால் கூடிப்பேசி திட்டமிட்டார்கள் பௌத்தத்தைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யமுடியும் என்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போதுதான் அவர்கள் மூளையில் மகாவமிசம் என்ற கற்பனைக் கதைத் தோன்றியது. இந்த கதையிலே தமிழர்க்கு எதிராகவும், சைவ சமயத்திற்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் புகுத்தப்பட்டன. குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக அரசு அமைய வேண்டும் என்பதே மகாவமிச கருத்தோட்டமாக அமைந்திருந்தது. விசயனின் வழிவந்த அந்த இனத்தினர். தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர், அதோடில்லாமல் பௌத்தத்தைக் கட்டிக் காக்கும் பெரும் பொருப்பு தமக்குண்டு என கூறிக்கொண்டனர். வெறும் வட்டார வழக்காக வரிவடிவமற்ற இந்த சிங்கள மொழி சிங்களர்களின் மகாவமிசத்தின் மூலம் அங்கீகாரம் பெறத் தொடங்கியது. மகாவமிசத்தை படைத்தளித்த சிங்கள அரசன் தாதுசேனன் காலத்தில் இது நிகழ்ந்தேறியது. இக்காலத்தில் தமிழ்நாட்டை நாயன்மார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த காலத்திலே பௌத்தர்களாய் இருந்தவர்கள், இல்லாவிட்டால் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் சிங்கள மொழியை பௌத்த மொழியாக உள்வாங்கிக் கொண்டனர். ஒன்றுபட்டு கிடந்த மக்கள் மொழியால், சமயத்தால் வேறுபட்டு நின்றவர்கள், அது சிறிதுசிறிதாய் வளர்ந்து தமிழர் நிலப்பகுதி, சிங்களர் நிலப்பகுதி என வேற்றுமை வேரூண்றத் தொடங்கியது. இந்த நிலப்பகுதிகள் எப்படி பிரிந்து கிடக்கிறது என்பதை புவியியல் ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தோம் என்றால் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான உறவு எத்தனை நெருக்கமானது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள கரையோரங்களும், சமவெளிகளும், தமிழர்களின் நிலப்பகுதியாக இருக்கின்றன.
மலைப்பாங்கான நடுப்பகுதியும் தமிழ்நாட்டிற்கு எட்டாத தெற்கு நிலப்பகுதியும் சிங்களர் நிலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் மிகச் சாதாரண புவியியல் தளத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். கி.பி. 993-1070 காலங்களில் இராஜராஜ சோழன், மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் இலங்கையின் மீது படையெடுத்து முழுத்தீவையும் தமிழர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலநடுவையில் சோழரின் தலைநகரம் அமைக்கப்பட்டது. சிங்களர்கள் தெற்கு நோக்கி ஒட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள்.

தொடரும்…

- கண்மணி

 

விழியினும் மேலான
தாயகம் மீட்க
விடுதலைப்புலிகளாய் எழுந்தோம்.
மீனுக்கு நீராய்
வேருக்கு மண்ணாய்
இருந்தீர்கள்; நாங்கள் நிமிர்ந்தோம்
இனியும் எமது போராட்டம் தொடரும்
விடுதலை எமது எல்லை!
துணைவந்த நீங்கள்
தோளை உயர்த்தினால்
விடுதலை வெகு தூரமில்லை.

மக்கள் திரள் என்ற
மாபெரும் சக்திதான்
எமது தாயகம் மீட்கும்.
மக்கள் யுத்தம் என்ற
மாபெரும் யுக்திதான்
நமது பணியை எளிதாக்கும்.
தோழமைப் புறாக்கள்
நம் துணையாகும்.
கொடிய வல்லூறை எதிர்க்கின்ற போது
தொடர்கின்ற போரில்
மக்கள் துணை கொண்டால்
விடுதலை இனியும் தப்பாது!

மக்கள் கவிஞர் இன்குலாப்

ஈழப்போர் முடிந்ததாக சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை கொன்றொழிக்க திட்டமிட்டு கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் கொத்து குண்டுகளால் செத்திருக்கலாம் என கதறி கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிஞ்சுகளுக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதன் தடயங்களை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு சிங்கள இனவெறி அரசு துணிந்து இருக்கிறது. துணைபோன இந்திய அரசு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய இளைஞர்கள் இனவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து தாவி குதிக்கிறது. இந்திய பிரதமர் ஆஸ்திரேலியாவிடம் பேச அவகாசத்தை எதிர்பார்க்கிறார்.
தமிழினத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை? ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? மறியல்கள் எத்தனை? அத்தனை இன உணர்வுகளையும் மண்ணுக்கு சமமாய் பாவித்த இந்திய அரசு இப்போது இந்திய இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடிதுடித்துப் போகிறதே எப்படி? இனக்காயத்தின் வலி இப்போது தான் புரிகிறதா? இந்நிலையில் சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் ஈழம் என்ற வார்த்தையே இலங்கை வரலாற்றில் துடைத்தெறியப்பட வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார். நம்மவர் ஆண்ட தமிழ் மண்ணில் நின்று கொண்டு நமக்கான பெயரையே அழித்தொழிக்க முனையும் அக்கிரமத்தை என்னவென்று சொல்வது? இனி ஒரே நாடு, ஒரே இனம் என்பதை அங்கீகரிக்க எத்துனை தவறுகள் செய்ய வேண்டுமோ, அத்துனை தவறுகளையும் அடுக்கடுக்காய் செய்கிறார்கள். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை தம்முடைய ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கும் அதே கொள்கையை சிங்கள இனவெறி கூட்டமும் இலங்கையிலே செய்திட முயல்கிறது. சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலம் தமிழினத்திற்கு நிகழ்ந்துள்ளது. இடையூறுகளும், அடக்குமுறை சட்டங்களும், ஈயத்தோட்டாக்களும் வரலாற்று நாயகர்களை அசைத்து பார்த்ததில்லை என்பதற்கு அடுக்கடுக்காய் சான்றுகளை காலம் நமக்கு விட்டு சென்றுள்ளது. அடக்கமுறையாளர்கள் வெல்வதில்லை என்பது தான் வரலாறு. பிரெஞ்ச் காலனியாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நிகழ்த்திய நாடுகளானாலும் சரி, பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆர்த்தெழுந்த வீரர்களானாலும் சரி அவர்களின் போர் குணங்களையும், அவர்களின் தியாக முகங்களையும் காற்றும், கதிரும் பாதுகாத்து நம்முடைய காலங்களுக்கு அவற்றை காணிக்கையாக்குகிறது. அவர்கள் விட்டு சென்ற காலடி சுவடுகளில் தான் கனத்த இதயமும், கனன்று கொண்டிருக்கும் உணர்வும் அடக்கமுடியாத ஆற்றலும் கொண்டு மீண்டும் மீண்டுமாய் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் மக்களின் விடுதலை போராளி ஹோசிமினை அடக்க முடியாத அமெரிக்கா 'எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கிறது' என்று மிரட்டி பார்த்தது. அந்த மகத்தான போராளி, நீ சில அணுகுண்டுகளை வைத்திருக்கலாம் வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் பெரும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளாக களத்திலே நிற்கிறார்கள் என கடுமையாக எச்சரித்தார். அதோடு இல்லாமல் மாபெரும் ராணுவ பலம் பொருந்தியதாக கருதப்பட்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த வரலாறு இனி ஈழத்தில் தொடரலாம். விழுந்த வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த வீரர்கள் வீரியமிக்க அணுகுண்டுகளை வீழ்த்துவார்கள். சீறிப்பாயும் கொத்து குண்டுகள் அந்த மாவீரனின் மார்பிலே சமாதியாகும். தமிழ் இன உணர்வுக்கு எதிராக நிற்பவர்கள் அந்த போராட்டக்களத்திலே கல்லறையாக அடையாளப்படுத்தப்படுவார்கள். வரலாறு ஒரே திசையில் நகர்ந்ததாக இதுவரை நாம் வாசித்தறியவில்லை. விதைகள் மண்ணில் மடிவது முளைத்தெழத்தான். இப்போது மீண்டும் முளைக்கவே ஒரு விதைத்தல் நடந்திருக்கிறது.
தெற்கு நோக்கி ஓட்டம் பிடித்த சிங்களர்கள் அங்கே இருந்து கொண்டு இத்தனை காலமும் பாலி மொழியிலும், தமிழினம் எழுதி வந்த தமது எழுத்துக்களுக்கு மாற்றாக சிங்கள மொழிக்கு வரிவடிவம் கொடுக்க தொடங்கினார்கள். பௌத்தர்களாக, சிங்களர்கள் இலங்கையில் தென் பகுதியையும், மலைப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டு தமது வலிமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, சைவ சமயத்தை சார்ந்த தமிழர்கள் கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழரின் நிலங்களாக உருவாக்கி தம்மை தக்க வைத்துக்கொண்டார்கள். 'மகா வம்சம்' நூல் தந்த பொய்யுரைகளால் மீண்டும் மீண்டுமாய் சிங்கள அரசுகள் வலிமை பெற்ற போதும் தமிழர் நிலங்களை அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை. கி.பி 1815 -ல் பாண்டிய அரசு இலங்கை தீவு மீது படையெடுத்தது. சிங்களர்கள் பயந்து நடுங்கி மேலும் தெற்கு நோக்கி பின்வாங்கி நகர தொடங்கினார்கள். அவர்கள் கண்டியிலும், கோட்டையிலும் சிங்கள தலைநகரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களின் தலைநகர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புலநறுவையில் இருந்தது. பாண்டிய அரசு படையெடுப்பின் மூலம் இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்திற்கு தமிழர் ஆட்சியின் தலைநகர் மாறியது.
வரலாறு தெரியாத பலர் ஏதோ தமிழர்கள் வந்தேறிகளாக இலங்கைக்கு சென்றது போலவும் அது தவறு எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். வரலாறு அறிந்த இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர் பிரச்சனையை அக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி தமிழர்களை எதிலிகளாய் தாயகத்திற்கு அழைக்கத் துணை போனார்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையாரை தவிர வேறு எவரும் இலங்கை தமிழர் நலன் குறித்து அக்கறை கொள்ளவுமில்லை. அரவணைக்கவுமில்லை. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது. இலங்கை தீவில் அப்போது மூன்று அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தென்மேற்கு கரையோரத்தையும், தெற்கு கரையோரத்தையும் ஆட்சி செய்தவர்களை சிங்கள கோட்டை அரசு என்றும், மத்திய மலைப்பகுதியை ஆட்சி செய்த சிங்கள அரசுக்கு கந்த உடரட்டை சிங்கள அரசு என்றும் பெயர். தமிழர்களோ கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழீழ அரசாய் ஆட்சி புரிந்து வந்தனர். சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் கூறுவதை போல, புலிகள் தான் ஏதோ தமிழீழம் என்ற வார்த்தையை கண்டு பிடித்து பரப்பினார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது.
இப்படி மூன்று அரசுகளாக நடந்து கொண்டிருந்த ஆட்சி முறை மேற்கத்தியர்கள் இலங்கைத் தீவின் மண்ணை மிதிக்கும் வரை மாறாமலிருந்தது. கி.பி 1505 அளவில் அவர்கள் இலங்கை மண்ணை மிதித்தவுடன் சூழ்நிலை மாறியது. முதன் முறையாக விஜயனின் வருகையால் வீழ்ந்த தமிழர்கள் இரண்டாவது முறையாக எல்லாளன் தோல்வியால் துவண்ட தமிழர்கள் மேற்கத்தியரின் வருகையால் முற்றிலுமாய் வீழ்ந்து விடுவார்கள் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் புவியெட்டும் சிறக்க வரலாறு முழுவதும் தமிழ் வாகை சூட இந்த கேடு அப்போது நிகழ்ந்தது.

தொடரும்…

- கண்மணி

StumbleUpon.com Read more...

கரும்புலிகள் நினைவாக... ........
புலிகளின் குரல் வானொலி ஒளிபரப்பு

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP