சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்; சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.
இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, இலங்கை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "பிரபாகரனும், பொட்டுஅம்மானும் இறந்துவிட்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், "ராஜிவ் கொலை தொடர்பான வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, கைவிட வேண்டும்' என, "தடா' கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி கூறிய கோர்ட், சி.பி.ஐ.,யின் அறிக்கையை ஏற்க மறுத்தது.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, தலைமைப் புலனாய்வு அதிகாரி, ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், "கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலும், இலங்கை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர் என திருப்தியடைகிறோம். அதனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த, "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
source:dinamalar
--
http://thamilislam.tk
Read more...