சமீபத்திய பதிவுகள்

ஈழத்தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: சொலவது காங்கிரஸ்

>> Wednesday, July 1, 2009

ஈழத்தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: பீட்டர் அல்போன்ஸ்

இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று, இலங்கையில் போர் முடிவுக்குப் பின்பு தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது என்பதோடு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை ஏற்படுத்தித் தருவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்,

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் 3 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்கிற போது துடித்துப்போகிறோம். பிரதமர் ரூ.500 கோடி நிதியுதவி அளித்தார். ஆனாலும் இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் மனநிறைவை தரவில்லை. தமிழர்களை இலங்கை அரசு திருப்தியாக நடத்தவில்லை என்று நமது உள்துறை மந்திரியே கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இலங்கையில் நடந்திருப்பது மிகப்பெரிய வரலாற்று பிழை. இலங்கை தமிழர்கள் மீண்டும் வாழ்வுரிமை பெற வேண்டும். அதைப் பெறுகிற முயற்சியை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார்.

StumbleUpon.com Read more...

இலங்கை: முள்வேலி முகாம்களில் இருந்து முதியவர்கள் மட்டும் வெளியேற அனுமதி

* *

இலங்கையில் போர் நடந்த போது அங்கிருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள்
ஆங்காங்கே அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்று விடக் கூடாது என்பதற்காக முகாமை சுற்றி
முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ராணுவத்தினர் கண்காணித்து
வருகின்றனர்.

முகாம்களில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிப்பது இல்லை. வெளியில்
இருப்பவர்கள் உள்ளே சென்று யாரையும்
பார்க்கவும் அனுமதிப்பது
இல்லை.

இந்த நிலையில் முகாமில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வெளியேற
அனுமதிக்கவிருக்கிறார்கள்
இலங்கை ராணுவத்தினர். இதற்காக 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்
முகாமில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கலாம் என்று
கூறியுள்ளனர்

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த ஏவுகணை -பீரங்கிகள் மீட்பு !!

 

 
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறிய பிறகு அந்த பகுதிகளில் ஆயுதங்கள் ஏதும் இருக்கின்றதா என்று இலங்கை ராணுவம் தேடி வருகிறது.


இந்நிலையில்,   தேடலின் போது விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

புதுக்குடிபாறை அருகே ஒரு இடத்தில் பெரிய கப்பல்களை தகர்க்கும் சக்தியுள்ள 2 ஏவுகணைகள் மற்றும் அதை ஏவும் லாஞ்சர்களை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்ததுகண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அவை 12 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. பாலிதீன் கவர்களில் சுற்றி வைத்துள்ளனர்.
 
அதில் ஏவுகணை 26 அடி நீளமும், 5 அடி 7 அங்குலம் சுற்றளவும் இருந்தது. ஏவுகணை லாஞ்சர் 28 அடி நீளமும் 5 அடி 10 அங்குலம் சுற்றளவும் இருந்தன. இவற்றுடன் தண்ணீருக்குள் கப்பலை தகர்க்கக்கூடிய 3 ராட்சத குண்டுகளும் புதைத்து வைக்கப்பட்டு இருந்தன.
 
இன்னொரு இடத்தில் சக்கரங்கள் அகற்றப்பட்ட பீரங்கி வண்டி ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் மண்ணில் புதைத்து வைத்து இருந்த 9 பீரங்கிகள் மற்றும் ஏராளமான குண்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு, விசுவமடு, அனந்தபுரம், வெள்ளமுல்லி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஆயுதங்கள் சிக்கியதாகவும் ராணுவத்தினர் கூறியுள்ளார்கள்.

StumbleUpon.com Read more...

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-3

எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.

சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''

சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி

 

 

இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய "பரிசு''

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்

 

 
பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன்,

 

மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP