ஒரிசாவில் இந்து மத தலைவரை கொன்றது நாங்கள்தான் மாவோ தீவிரவாத தலைவர் பேட்டி
>> Sunday, October 5, 2008
புவனேசுவரம், அக்.6-
ஒரிசாவில், இந்து மத தலைவரை கொன்றது நாங்கள்தான் என்று, மாவோ தீவிரவாத தலைவர் கூறினார்.
இந்து மத தலைவர் கொலை
ஒரிசா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ள ஜலபீட ஆசிரமத்தில், கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி, விசுவ இந்து பரிஷத் ததலைவர் சுவாமி லட்சுமானந்த சரசுவதியும் மற்றும் 4 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கந்த்மால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 35 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.
மாவோ தீவிரவாதிகள்
சுவாமி லட்சுமானந்த சரசுவதியின் படுகொலைக்கு, மாவோ தீவிரவாதிகள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். இந்த தகவலை மாவோ தீவிரவாதிகளின் தலைவர் சப்யா சாசி பந்தா என்ற சுனில், காட்டு பகுதியில் துணிவுடன் சென்று அவரை சந்தித்த 2 டெலிவிஷன் சேனல்களின் நிருபர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சந்திப்பை அந்த ஒரியா மொழி சேனல்கள் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பின. அப்போது தீவிரவாதிகளின் தலைவனும் மற்றும் அவனுடன் இருந்த தீவிரவாதிகளும் முகத்தை துணியால் மறைத்து இருந்தனர்.
டி.வி. சேனல் நிருபர்களிடம் மாவோ தீவிரவாத தலைவன் பந்தா கூறியதாவது:-
நாங்கள்தான் கொன்றோம்
லட்சுமானந்த சரசுவதி சுவாமி, பொது மக்களிடம் அமைதி சீர்குலைவை ஏற்படுத்தி வந்தார். இதனால் அவருக்கு, 2007-ம் ஆண்டு எச்சரிக்கை அனுப்பினோம். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.
எனவே நாங்கள் அவரது ஆசிரமத்துக்குள் சென்று அவரையும், தடுத்த 4 பேரையும் சுட்டுக்கொன்றோம். இந்த கொலைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.
ஏற்கனவே கடிதம்
கொலை நடந்த இடத்தில் இருந்து நாங்கள் புறப்படும் முன், இந்த கொலைக்கு பொறுப்பு ஏற்று 2 கடிதங்களை போட்டு சென்றோம். ஆனால் அதை போலீசார் கைப்பற்றி மறைத்து விட்டார்கள். அந்த தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
அதன்பின் சில டெவிவிஷன் சேனல்களுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் இதை பொருட்படுத்தவில்லை. இதற்கிடையில் கிறிஸ்தவர்கள்தான், சுவாமியின் கொலைக்கு காரணம் என்று கூறி, அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து விட்டனர்.
இவ்வாறு மாவோ தவைவர் கூறினார்.
பல மைல் நடந்து சென்றோம்
இந்த பேட்டிக்கு சென்ற டி.வி. செய்தி சேகரிப்பு குழுவினர் கூறுகையில், "போலீசுக்கு தெரியாமல் வரும் படி தீவிரவாதிகள் கூறி இருந்தனர். எனவே நாங்கள், காட்டுக்குள் கஷ்டப்பட்டு பல மைல் தூரம் நடந்து சென்று, தீவிரவாதிகளை சந்தித்தோம். இந்த அனுபவம் மிகவும் கடினமானது'' என்று குறிப்பிட்டனர்.
தீவிரவாதிகளின் தலைவன் பந்தா மீது பல வழக்குகள் உள்ளன. அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442969&disdate=10/6/2008