இலங்கை இந்தியாவின் ஒரு மானிலமா? அல்லது மகிந்தா இந்திய சிற்றரசின் குறுநில மன்னரா? எது உண்மை எது பொய்?
ஈழத்தமிழினம் இன்று வரலாறு கண்டிராத மனிதப் பேரவலத்தைச் சந்தித்து விரக்த்தியோடு ஒரு இனவாத அரசின் கொடும் பிடிக்குள் சிக்கித்தவிக்கின்றனர்.
தமிழ் மக்களின் அவல வாழ்வு சார்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நலன்சார்ந்தே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மனிதப் பேரவலம் நிகழ்ந்த காலகட்டத்தில் மக்களேடு மக்களாக நின்றவர்கள், மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சர்வதேச நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் ஜநா, ஜரோப்பிய ஒன்றியம் ,அமெரிக்கா,பிரித்தானியா பிரான்ஸ் கனடா என்று இந்தப் பட்டியல் நீண்டு செல்லும். ஆனால் இவர்கள் எல்லோரினது கருத்துக்களோ கோரிக்கைகளோ தமிழ் மக்கள் சார்ந்துஉண்மையாகவேதான் சொல்லப்படுகின்றனவா? கோரிக்கைகள் நியாயமானது தானா? என்கின்ற கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் கேட்கவைத்துள்ளது. காரணம் இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் பிரதிநிதி தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், வெளியிட்ட கருத்தானது, இலங்கை இந்தியாவின் ஒரு மானிலமா? அல்லது மகிந்தா இந்திய சிற்றரசின் குறுநில மன்னரா? எது உண்மை எது பொய்? என்ற கேள்வி மூலம் ஓர் அச்ச உணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றிவித்துள்ளது.
சர்வதேச சமூகம், ஜநா செயலர் உட்பட ஜநாவும் அதன் இணை அமைப்புக்களும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளும், ஜரோப்பிய ஒன்றியம் உட்பட இந்த மேற்குலகமும் சர்வதேச மனிதாபிமான மனித நேய நிறுவனங்களும் வன்னி வதை முகாங்களின் அவலங்களையும், மழைகாலம் வந்தால் அவர்கள் எதிர் நோக்கப்போகும் பிரச்சனைகள் சார்ந்தும் அபாய அறிவிப்புக்களை விடுத்து வரும் நிலையில்;
சர்வதேசத்தின் அங்கீகரத்துக்குரிய உலக்கின் முன்னணி ஊடகங்களும் அந்த மக்களின் அவலங்களை நேரடியாக சென்று கண்டும் கேட்டும் அவலக்குரல்களாக உகக மானிடத்திம் முன்னால் சமர்ப்பித்த பின்பும்;
தாம் வாக்களித்து தமது பிரதிநிதிகளாக தெரிவாகிய தமது நாடாளுமன்ற பிரதிநிதிகளை சந்திக்கவிடாது தடுத்துவைத்திருக்கும் சூழலில்.;
சரியோ பிழையோ காலம் கடந்தாயினும் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணரும் இலங்கை ஊடகங்களினது கருத்துக்களும் நிராகரிக்கப்பட்டும்;
அரசியலுக்கான உள்நோக்கமிருப்பினும் தமிழ் மக்களின் அவலங்களுக்கு மகிந்த அரசு மதிப்பளிக்க வேண்டுமென்று இலங்கையின் சகல கட்சிகளும் அதன் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களை நிராகரித்தும் வரும் நிலையில்.;
இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் நோக்கம் என்ன,அவர்களின் வருகையினூடாக இலங்கை இந்திய அரசுகள் எதை சொல்ல முற்படுகின்றன,துதுக்குழுவிலிருக்கும் பிரதிநிதிகள் சொல்லும் கருத்துக்களின் உண்மைத்தன்மை என்ன என்கின்ற கேள்விகள் ஒருபுறமிருக்க;
இலங்கை அரசின் போக்கு என்ன? என்பது தான் இன்று எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கும் கேள்வியாகவே உள்ளது.
இந்தியாவின் ஒரு மானிலம் இலங்கையா? அல்லது இந்திய சிற்றரசின் குறுநில மன்னராக மகிந்தா இருக்கின்றாரா? என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ள சூழலில் ஈழத்தமிழினதின் எதிர்காலம் என்ன அது யார் கையில் விடை தேடுவோமா? இல்லை விடை கிடைக்குமா?
இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் பிரதிநிதி தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், வெளியிட்ட கருத்தானது பலருக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஐ.தே.கட்சியின் முன்னணி அரசியல்வாதியான எஸ்.பி.திஸநாயக்கா கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதிய வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தும் கூட, அரசினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளமை, யுத்தம் காரணமாகப் பலர்காணாமல் போயிருக்கின்றமை, அகதி முகாம்களில் வாழ நேர்ந்துள்ள தமிழ் மக்களின் நிலை போன்றவற்றால் ஏற்படும் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. என குறிப்பிடும் ஐ.தே.கட்சியின் முன்னணி அரசியல்வாதியான எஸ்.பி.திஸநாயக்கா வின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
எஸ்.பி.திஸநாயக்காவின் உரையின் தமிழ் வடிவத்தினை எமது கொழும்பு செய்தியாளரான தவிரதன் தொகுத்து தருகின்றார்
கடந்த 34 ஆண்டுகளாக இந்நாட்டில் இடம் பெற்று வந்த கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. விடுதலைப் புலிகளது செயற்பாடுகள் முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாட்டின் தென்பகுதிப் பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவிவந்த மரணபயம் பெருமளவில் குறைந்துள்ளது. தென் பகுதிப் பொதுமக்களைப் போன்றே, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் இந்த மரண பயத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டும். அவர்கள் மத்தியிலிருந்தும் இந்த மரணபயம் குறைவடைய வேண்டும். ஆனால், நிலைமை அவ்விதம் அமையவில்லை. தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் பத்தாயிரம் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். அவ்விதம் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்டோர் காணாமல் போனோர் தொடர்பாக ஏதாவது தகவல் கிட்டுமா என்ற ஆதங்கத்தில் அவர்களைத் தேடும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றின் மத்தியில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்வோர், நிவாரணக் கிராமங்களில் வாழ்வோர் மற்றும் தமது சொந்த வாழ்விடங்களை இழந்தோர் என்ற வகைகளில் அடையாளப்படுத்தப்படும் 3 இலட்சம் வரையான பொதுமக்கள் தற்போதும் சிறைக்கைதிகள் போன்று வலோற்காரமாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் சிலர் இரகசியமான விதத்தில் எவரும் அறிய இயலாத விதத்தில் சில இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக காணாமல் போனவர்களாகக் கருதப்படும் இதுவரை உயிருடன் இருக்கின்றனர் என நம்ப முடியாது இருப்போரின் உறவினர்கள், காணாமல் போன தமது உறவினர்கள் எங்காவது இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடுமோ என்ற நம்பிக்கையில் அவர்கள் குறித்து ஏதாவது தகவல் கிட்டுமா ? என்ற எதிர்பார்ப்பில் காணாமல் போய்விட்ட தமது உறவினர்களைத் தேடி வருகின்றனர்.
இவ்விதம் காணாமல் போனவர்களைத் தேடி அலையும் அவர்களது உறவினர்களை அணுகி அருள்வாக்குக் கூறும் ஆசாமிகள், சோதிடம் கூறுவோர் காணாமல் போன உறவினர்களைத் தேடி அலைபவர்களிடம், அவர்களால் தேடப்படும் உறவினர்கள் ஒழித்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி அவர்களை நம்பவைத்து வருகின்றனர்.எவ்வித ஆதாரமுமில்லாமல் எழுந்தமானமாக எதிர்வுகூறி அந்த உறவினர்களது மனதில் நம்பிக்கையூட்டும் இத்தரப்பினர் அவர்களிடமிருந்து பணம் கறந்து கொள்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர். இதன் காரணமாக உறவுகளைத் தேடுவோர் தமது அத்தகைய தேடுதல்களை நிறுத்தப் போவதில்லை. அவர்களது முயற்சிகளை வேறெவராலும் தடுத்து நிறுத்து முடியாது. இதன் காரணமாக இத்தகைய குடும்பங்கள் பொருளாதார ரீதியிலும் உள ரீதியிலும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
அரசும், படைகளும் தற்போதும் விடுதலைப் புலிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. பாதுகாப்புப் படையினரின் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகளின்போது, விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இவ்விதம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவார்களானால் கைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பாக அரசு திறந்த மனதுடனும் புதிய சிந்தனையுடனும் விடயத்தை அணுகிச் செயற்பட வேண்டியுள்ளது.
கடந்த 34 வருட யுத்த வரலாற்றை நோக்கும்போது, அதில் பெரும்பாலான காலகட்டம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் வெவ்வேறு பிரதேசங்கள் வெவ்வேறு ஆயுதக் குழுக்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், கடந்த 34 வருட கால இடைவெளியில் 13 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை விடுதலைப் புலிகள் அமைப்பே நிர்வகித்து வந்தது என்பது தெளிவானதொரு உண்மையாகும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஆங்காங்கே இலங்கை அரசின் இராணுவ முகாம்கள் அமைந்திருந்த போதிலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளின் முக்கிய நரகங்களில் கூட நிர்வாக நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசனைகளுக்கமையவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழ் வர்த்தகர்கள் பல தரப்பட்ட அழுத்தங்களுக்கு அனுசரணை வழங்கியே தமது வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலி உறுப்பினர்கள் மலையகப் பகுதிகளிலும் ஊடுருவிச் செயற்பட்டு வந்தனர்.இவற்றுக்கெல்லாம் மேலாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் கூட விடுதலைப் புலிகள் தமது பலத்தையும் ஆதரவையும் திரட்டிக்கொண்டனர். குறிப்பாக வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம்கோரி வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பு நெருங்கிய தொடர்புகளைப் பேணிச் செயற்பட்டு வந்தது.இத்தகைய பின்னணியில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்த சகல தமிழ் மக்களும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒருவித புரிந்துணர்வுடன் தொடர்புபட்டே செயற்பட வேண்டி நேர்ந்தது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வகையில், அவர்களுக்கு ஆதரவான விதத்திலேயே செயற்படவேண்டி நேர்ந்திருந்தது.
அப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த தமிழர்கள் அந்தந்த வேளைகளில் விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கமைய, அவர்களது அறிவுறுத்தல்களுக்கமைய அவர்கள் கோரிய உதவிகளை வழங்க வேண்டியவர்களாகியிருந்தனர்.தமிழ் வர்த்தகப் பிரமுகர்கள் சகலரும் விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி மற்றும் வேறு விதத்திலான உதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டி நேர்ந்தது.
அதே விதத்தில் தமது வயதான பெற்றோரின் பொருளாதாரச் சிரமங்களை நீக்கி உதவும் நோக்கிலும் அவர்களது பிள்ளைகளில் பலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். அதேபோன்று வேறுசில இளைஞர்கள் நோயாளிகளான தமது பெற்றோருக்கு அவர்களது சுகவீனத்துக்கான அவசிய மருந்து வகைகளை வாங்கிக்கொடுத்து உதவுவதற்காகக்கூட விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்கொண்டு வந்த நிர்வாகக் கட்டமைப்புகளில் பல தரப்பட்ட பதவிகளில் இணைந்து செயற்பட்டனர். இன்று சட்டத்தின்படி இத்தகைய தரப்பினர் அனைவருமே விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுக் கணிக்கப்படுகின்றனர். இவர்களில் சகலருமே விடுதலைப் புலிகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர்களாகவே அரசினால் கணிப்பிடப்படுகின்றனர்.
இத்தகைய பின்னணியை அடிப்படையாகக் கொண்டு நிலைமையை நோக்குவோமானால், இன்று அகதி முகாம்களில் வாழும் சகலரையும் ஏதோ, வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களாக அடையாளப்படுத்தி விட இயலும். இதன் அடிப்படையில் அகதி முகாம்களில் தற்போது வாழநேர்ந்திருப்போர் எவரும் முகாம்களை விட்டுத் தப்பிச் சென்றுவிட இயலாதவாறு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த அகதிமுகாம்களில் வாழும் அனைத்துப் பொது மக்களுமே மரணபயத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த அகதிமுகாம்களில் கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இத் தமிழ்ப் பொதுமக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது மரணபயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் எவரும் தமது விருப்பின் பேரில் சுய விருப்பத்துடன் இன்று இந்த அகதிமுகாம்களில் தங்கி வாழவில்லை. இவர்கள் அனுமதி அளிக்கப்படுவார்களானால் தத்தமது கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று வாழ பின் நிற்கப்போவதில்லை.நிலக்கண்ணிவெடிகள் குறித்து இவர்கள் பெரிய அளவுக்கு அலட்டிக்கொள்ளப்போவதில்லை. அவை குறித்து இவர்கள் அச்சம் அடையப்போவதில்லை. கண்ணிவெடிகள் மத்தியில் வாழ்ந்த அனுபவத்தை இவர்கள் ஏற்கனவே பெற்றுள்ளனர். எங்கு கண்ணி வெடி அபாயம் உள்ளது? எங்கு கண்ணிவெடி அபாயம் கிடையாது என்பது குறித்த விவரங்களெல்லாம் இவர்களுக்குத் தெரியும். அத்தகைய அனுபவங்கள் இவர்களுக்கு ஏற்கனவே வாய்த்திருந்தது.
எனவே, அரசு முடிந்த வரையில் விரைவாக இத்தகைய பொதுமக்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவித்து அவர்களைத் தத்தமது முன்னையவாழ்விடங்களுக்குச் சென்று குடியேற்ற வேண்டும்.அவர்கள் தமது முன்னைய பாரம்பரிய வாழ்விடங்களில் மீண்டும் குடியேறித் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவசியமான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்க வேண்டும். பாடசாலைகள் மட்டத்தில் இதனை அரசு முன்னெடுக்க இயலும். அரச அலுவலகங்கள்மட்டத்தினூடாகவும் இத்தகைய புனர்வாழ்வுத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இயலும். தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பாகவும் அரசு இத்தகைய புனர்வாழ்வுத் திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த உற்சாகம் காட்டிச் செயற்பட வேண்டும்.மொத்தத்தில் இவ்விதம் அகதி முகாம்களில் வாழும் பொதுமக்கள் தாம் சுதந்திர நாடொன்றில் ஜனநாயக சுதந்திரத் தன்மை கொண்ட பிரஜைகளாக வாழ்கிறோம் என்றதொரு மன உணர்வுடன் வாழத்தக்கதொரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்கு அவசியப்படும் சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
அவர்களது மனங்களில் தற்போது நிலவிவரும் மரண பயம் அவர்கள் மனங்களிலிருந்து அற்றுப் போகத்தக்க நிலையை அரசு உருவாக்கவேண்டும். அவர்களது மனங்களில் நிலவும் சந்தேக உணர்வு அகலும் வகையிலான நிலையொன்றை ஏற்படுத்த அரசு செயற்பட வேண்டும்.
விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், டக்ளஸ் தேவானந்தா போன்றேரும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட மீளவும் வட புலத்தில் ஆயுதப் போராட்டமொன்று உருவாவதை எவ்விதத்திலும் விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்வதில் அரசுக்கு எந்தவொரு சிக்கலும் இருக்கமுடியாது.
இந்நாட்டில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்குரிய உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்படுகின்றன என வடக்கு, கிழக்குப் பகுதிவாழ் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் மனப்போக்கை அகற்றிவிடும் விதத்தில் செயற்பட வேண்டியது அரசின் கடமையாகும்.
ஏனைய பகுதிகளைப் போன்று வேறுபாடு எதுவுமின்றி நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அவசியமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நாட்டின் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்பதனை செயல்வடிவில் காட்டவேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசு நடத்தும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் அரசின் அதிகாரத் தலையீடு இருக்க மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய விதத்தில் அரசு செயற்பட வேண்டும்.
அந்த வகையில் நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தாம் விரும்பும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்டென்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் தத்தமது பூர்வீக வாழ்விடங்களைக் கட்டுப்பாடு எதுவுமின்றி மீளப் பெற்றுக் குடியேறி வாழ்வதற்கான உதவி ஒத்தாசைகளை அரசு வழங்கவேண்டும்.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள பெறுமதிமிக்க நிலப்பகுதிகள், காணிகள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு தரப்பும் அவற்றை அபகரிக்கப்பட அரசு இடமளிக்கக் கூடாது.
வட பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பைச் சந்தித்த வர்த்தகர்கள், தமது வர்த்தக நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அரசு அவசியமான உதவிகளை வழங்கி உதவவேண்டும்.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடங்களில் தற்போது இயங்கிவரும் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். அரசுக்குச் சொந்தமான பொது இடங்களுக்கு அவற்றை இடம்மாற்றி, தனியாருக்குச் சொந்தமான அவர்களது காணி மற்றும் கட்டடங்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் கூறுவதானால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தினரான சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் விதத்தில், அரச பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ எம்மால் முடிந்துள்ளது என்ற உணர்வை அவர்களது மனங்களில் ஏற்படுத்தத்தக்க விதத்தில் அரசு பக்கச்சார்பற்று செயற்பட வேண்டியுள்ளதென்பதை வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது.