மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிப்பட்ட கசாப்புக்கு மரணத்தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து இந்த போர்க்குற்றவாளியான இவர் தூக்கில் போடும் நாள் எந்நாள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவருக்கு கிடைத்த தூக்கு தண்டனை நாட்டுக்கு கிடைத்த வெற்றி என அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறியுள்ளார். காங்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சயினர் இந்த தீர்ப்புக்கு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தீர்ப்பு வெளியானதும் மும்பையில் முக்கிய வீதிகளில் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கடந்த 2008 ம் ஆண்டில் நவம்பர் 26 ம்தேதி முக்கிய ஓட்டல்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் உயர் அதிகாரி உள்பட பொதுமக்கள் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மும்பை சிறப்பு கோர்ட் தீர்ப்பை அறிவித்தது. கசாப் குற்றவாளி என்றும், தாக்குதல் நடத்த வரைபடத்தை தயாரித்து கொடுத்த இந்தியாவை சேர்ந்த பாஹீம் அன்சாரி, சபாபுதீன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கசாப்புக்கு தூக்கு தண்டனை வழங்கவும், உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு மும்பை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கசாப் மீது சுமத்தப்பட்ட 86 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன. கசாப் நாட்டுக்கு எதிரான போர்க்குற்றம் புரிந்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது . கசாப் மட்டும் நேரடியாக 7 பேரை கொன்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.இன்று அறிவிக்கப்பட்ட வழக்கில் கசாப்புக்கு மரணத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
72 பேரை கொன்ற குற்றத்திற்காகவும், சூழ்ச்சியில் ஈடுபட்டதாகவும், நாட்டுக்கு எதிரான போர்க்குற்றம் புரிந்துள்ளான் , சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்ற நிரூபணம் தொடர்பாக இவனுக்கு மரணத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். மரணத்தண்டனை வழங்குவதை தவிர வேறு வாய்ப்பே இல்லை என்றும் நீதிபதி தகிலியானி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தீர்ப்பை கேட்டதும் கண்கலங்கினான் கசாப் : நீதிபதி தகிலியானி தனது தீர்ப்பை கூறியதும், கசாப் அதிர்ச்சியில் உறைந்து இருந்தது போல காட்சியளித்தான். வலது கையில் இருந்த கர்ச்சீப் மூலம் வாயை பொத்திக்கொண்டபடி விம்மி அழுதான். தலையை தொங்க விட்டபடி பெரும் கவலையுடன் இருந்தான். ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என நீதிபதி இந்தியில் கேட்டதற்கு ஏதுவும் சொல்லாமல் நீதிபதியை மவுனமாக பார்த்தப்படியே கசாப் இருந்தான். கசாப் முதலை கண்ணீர் வடிக்கிறான் என அரசு வக்கீல் கூறினார்.
சட்ட அமைச்சர் - பா. ஜ., வரவேற்பு : இந்த தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில் ; இந்த தீர்ப்பு சரியானது. விரைவில் தூக்கிலிட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் இதுபோல் தண்டிக்கப்படுவர். இனியாவது பாகிஸ்தான் பயங்கவரவாத ஆதரவை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்றார். இந்த தீர்ப்பு குறித்து பா.ஜ., கட்சி மகிழ்ச்சக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை தான் நாட்டிலேயே விரைவாக நடந்து முடிந்துள்ளது.
2008, நவ., 26: பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அஜ்மல் கசாப், மும்பை கிர்கானில் கைது.
2009, ஜன., 13: வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக தகிலியானி நியமனம்.
2009, பிப்., 26: கசாப் மீது 11 ஆயிரம் பக்கம் உடைய குற்றப்பத்திரிகை தாக்கல்.
கசாப் மீது 312 குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதுவே, இந்தியாவில் ஒரு குற்றவாளி மீது சுமத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை.
2009, பிப்., 27: உஜ்வால் நிகாம் அரசு வக்கீலாக நியமனம்.
2009, மார்ச் 2: மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து செஷன்ஸ் கோர்ட்டிற்கு வழக்கு மாற்றம்.
2009, மார்ச் 31: கசாப் வக்கீலாக அஞ்சலி வாக்மர் நியமிக்கப் பட்டார். கசாப் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் வாக்குமூலம்.
2009, ஏப்., 15: கசாப் சார்பில் வாதாடுவதிலிருந்து அஞ்சலி வாக்மர் நீக்கப்பட்டார். விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.
2009, ஏப்., 16: கசாப்பின் புதிய வக்கீலாக அப்பாஸ் காஸ்மி நியமனம்.
2009, ஏப்., 17: ஆர்தர் ரோடு சிறையில் விசாரணை துவங்கியது.
2009, ஏப்., 20: கசாப் மீது 166 பேரை கொலை செய்ததாக, குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
2009, ஏப்., 28: உருது டைம்ஸ் நாளிதழ் உள்ளிட்ட வசதிகள் வேண்டுமென்று கசாப் தனது வக்கீல் மூலம் மாஜிஸ்திரேட்டிடம் வேண்டுகோள். சிறையில், பக்கத்து வராண்டாவில் நடந்து செல்லவும் அனுமதிக்க கசாப் கோரிக்கை.
2009, மே 6: 86 குற்றங்கள் மீது தனக்கு தொடர்பில்லை என்று கசாப் மறுப்பு.
2009, மே 8: கோர்ட்டில் கசாப் மீது சாட்சியங்கள் அளிக்கப்பட்டன.
2009, மே 15: இரண்டு டாக்டர்கள் கசாப்புக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
2009, மே 19: கசாப் போலி அடையாள அட்டை பயன்படுத்தியதாக, ஐதராபாத் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
2009, மே 21: மும்பைத் தாக்குதல் வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
2009, மே 27: கசாப்புடன் ஒன்பது பேர் படகு மூலம் வந்தனர் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
2009, ஜூன் 2: மராத்தி மொழி தனக்கு தெரியும் என்று நீதிபதியிடம் கசாப் தகவல்.
2009 ஜூன் 10: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கசாப்பை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்.
2009 ஜூன் 23: சிறப்பு கோர்ட்டில் , ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயித் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஷகி-உர்-ரஹ்மான் லக்வி உட்பட 22 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் சுமத்தப்பட்டன.
2009 ஜூன் 25: அல்சரால், வயிற்று வலியால் அவதிப்படுவதாக கசாப் தகவல். கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், அவரை அடித்தனரா என்று சந்தேகம். ஆனால், தான் இந்தியாவுக்கு வரும் முன்னே தனக்கு அல்சர் இருந்தாக கசாப் தகவல்.
2009, ஜூலை 16: சி.எஸ்.டி., ரயில்வே ஸ்டேஷனில் கேமராவில் பதிவான, கசாப்பின் நடவடிக்கைகளை கோர்ட் பார்வையிட்டது.
2009, ஜூலை 20: கசாப் தன் மீதான குற்றச்சாட்டுகள் (மறுத்த குற்றச்சாட்டுகள் உட்பட) அனைத்துக்கும் ஒப்புதல்.
2009, ஆக., 12: இந்திய வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள், தொழில்நுட்பம் தொடர்பாக கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.
2009 டிச., 18: தான் ஒரு அப்பாவி என்றும், இந்திய போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாகவும் கசாப் தகவல். தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன், மும்பை வந்ததாகவும், சாதாரணமாக ஜுகு கடற்கரையில் சுற்றித் திரிந்தபோது போலீசார் தன்னை கைது செய்ததாகவும் கசாப் அந்தர்பல்டி வாக்குமூலம்.
2010 ஜன., 25: சர்வதேச சிறப்பு கோர்ட்டில் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கசாப் வேண்டுகோள். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
2010 மார்ச் 31: மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். கசாப் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதால், மரண தண்டனை வாய்ப்பும் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒரு நாளைக்கு ரூ.8.5 லட்சம் : சிறையில் இருக்கும் பயங்கரவாதி கசாப்பை பராமரிக்க, ஒரு நாளைக்கு ரூ.8.5 லட்சம் செலவழிக்கப்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ள அரசு, கசாப்புக்கு செலவழித்து வருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் போது, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க மும்பை ஜே.ஜே.மருத்துவமனையிலும் தனி செல் அமைக்கப்பட்டது.குண்டு துளைக்காத இந்த செல்லை அமைக்க ஒரு கோடி ரூபாய் ஆனது. கசாப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்தியப் பாதுகாப்பு படைக்கான செலவும் தனி.
source:dinamalar
--
http://thamilislam.tk
Read more...