டைட் ஜீன்ஸ், ஷாட் பனியன் - தொப்புள் தெரியும்படி வெளிக்காட்டும் உடை
>> Friday, July 15, 2011
சகோதரர்களே... பெண்ணே பெண்ணுக்கு எதிரியா இருந்து, தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். நேரம் வரும் போது, உங்களது சோகங்களையும் எழுதுவேன்; சரியா?
இந்த வாரக் கதாநாயகியின் பெயர் ஷாந்தினி.
அழகான, துறு, துறு கண்கள், சிவந்த நிறம், வழ வழ தலைமுடி என, கொள்ளை அழகுடன் காணப்பட்ட தங்கள் பெண்ணை, விதவிதமான ஆடைகளை உடுத்தி வளர்த்தனர் பெற்றோர்.
ஷாந்தினியின் காது படவே, "என்ன அழகு... கொள்ளை அழகு' என, நடுத்தர வர்க்க பெற்றோர், செல்லம் கொடுத்து வளர்த்தனர்.
சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள் ஷாந்தினி. அங்கே, "டிவி' தொகுப்பாளினிகள், விளம்பரங்களில் வரும் பெண்கள், பணக்கார வெள்ளைத்தோல் அழகிகள் அனைவரையும் பார்த்து பிரமித்தாள். தானும், டைட் ஜீன்ஸ், ஷாட் பனியன் - தொப்புள் தெரியும்படி, தன் மார்பின் அளவுகள் வெளிக்காட்டும் உடையணிந்து, நண்பிகளுடன் திரிந்தாள்.
படிப்பிலும் அவள் கில்லாடி.
அவளது உடையலங்காரம் கண்களை கூச வைக்கும். கண்டிக்க வேண்டிய பெற்றோர், "பெண் மாடர்னா இருக்கா... இதில் என்ன தப்பு?' என்று பெருமைப்பட்டனர்.
கேட்க வேண்டுமா?
இளைஞர் பட்டாளம் போட்டி போட்டு, ஷாந்தினியை சுற்ற ஆரம்பித்தது. இதில், பணக்கார ஷிவா - பெயர் மாற்றியுள்ளேன்; அள்ளிக் கொண்டான். "டேய்... நீ முடிச்சிட்டு எங்களுக்கு கொடுடா... இப்படி உடம்பை காட்டி உசுப்பேத்திட்டு திரியிறவ எல்லாம் பத்தினியா என்ன... நில்லுன்னா, படுப்பாளுக!' என்று கும்மாளமிட்டனர்.
அவளை அனுபவிக்கத் தான் ஷிவாவும் துடித்தானே தவிர, திருமணம் செய்துக் கொள்ள விரும்பவில்லை. "பொண்டாட்டி ஆக்கிக் கொள்வதற்கு, பெற்றோர் பார்க்கும் அப்பாவி பெண் தான் வேண்டும்; இவளை மாதிரி உடம்பை காட்டும் ரகம் வேணாம்...' என்பது, ஆண்களின் பொதுவான கருத்து.
செமஸ்டர் முடிந்து, லீவு வந்தது.
ஷாந்தினியின் பணக்கார நண்பிகள் எல்லாம், தங்கள், "பாய் பிரண்ட்ஸ்'சுடன் ஊட்டி, கொடைக்கானல் என, "ஹனி மூன் டிரிப்' போவது தெரிய வந்தது ஷாந்தினிக்கு.
எப்படி இருக்கு பாருங்க...
தற்போது, சென்னையிலுள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் நடக்கும் கூத்து இது.
தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு கிடைத்தாலே, ஆண் நண்பர்களுடன், "ஹனி-மூன்' என்று சொல்லி, ஊட்டி, கொடைக்கானல் செல்கின்றனர். இந்தச் செய்தியை, அந்த கல்லூரி மாணவி வாயிலாகவே கேட்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இது என்ன அக்கிரமம் என்று நினைத்து, என் மனம் ஆறவே இல்லை. அப்படியானால், திருமணம் ஆன பிறகு, ஒரிஜினல் புருஷனுடன் செல்வது என்ன, "மூனாம்?' அவர்களைத் தான் கேட்கணும்... சரி விஷயத்துக்கு வருகிறேன்...
"ஹேய்... ஷாந்த் டார்லிங்... நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கீயே... வீட்ல, "புராஜெக்ட் டூர்'ன்னு சொல்லிவிட்டு வா... ஜாலியா இருப்போம்!' என, மனதை கரைத்தான் ஷிவா. சபலப்பட்ட ஷாந்தினியும், பணக்கார காதலன் கூட்டிச் செல்லும் ஸ்டார் ஓட்டல், ட்ரைவ் - இன், "காபி டே'க்கள் எல்லாம், அவள் இதுவரை அனுபவித்திராத சுகங்கள் என்பதால், மனம் அலை பாய்ந்தது; சபலம் ஜெயித்தது.
"சரி டா... வர்றேன்!' என்றாள். இவளது நடுத்தர வர்க்கத் தோழியோ, "வேண்டாம் டீ... இந்த விபரீதம்!' என்று தடுத்தாள்.
"ஏய்... உனக்கு இப்படி ஒரு லவ்வர் கிடைச்சா நீயும் தான் போவ... நான் போகலைன்னா, ஷிவா என் கூட பேசவே மாட்டான்; வேற எவளையாவது பிடிச்சிக்குவான் டீ!' என்றாள்.
நன்கு படிக்கும் செல்ல மகள், என்ன மாதிரி ஆராய்ச்சி செய்யத் துடிக்கிறாள் என்பதை அறியாத பெற்றோர், உடனே மகளுக்கு அனுமதி கொடுத்தனர்; ஜோடிகள் பறந்தன.
ஊட்டி மலைத் தொடர்களில் பாடித் திரிந்து, நட்சத்திர ஓட்டல்களில் உல்லாசம் அனுபவித்தாள் ஷாந்தினி. "ஆஹா... இதுதாண்டா வாழ்க்கை!' என நினைத்து, மிதந்தாள் ஷாந்தினி.
சென்னை வந்து சேர்ந்தனர்.
அதன் பிறகு தான் விபரீதமே ஆரம்பித்தது.
ஷாந்தினியுடன் இருந்ததை, மொபைல் போனில் சில விபரீத போஸ்களை எடுத்து வந்துவிட்டான் ஷிவா. அதை வைத்து, தன் நண்பர்களுடன் இன்பமாக இருக்கச் சொல்லி, ஷிவா மிரட்டவும், அதிர்ந்தாள் ஷாந்தினி.
"அடப்பாவி... உன்னோட சுயரூபம் இப்பதாண்டா தெரிந்தது. நீ உருப்படுவியா...' எனக் கதறினாள் ஷாந்தினி.
"படிக்கும் போதே இப்படி எல்லாத்துக்கும் சம்மதிக்கிற நீ மட்டும் என்ன பத்தினியா... வாடி... இல்லன்னா, எல்லாருக்கும் இந்த காட்சியை, "பார்வேட்' பண்ணிடுவேன்!' என்று மிரட்டினான் ஷிவா.
ஒரு முறை, இரு முறை, "அட்ஜஸ்ட்' செய்து பார்த்தாள் ஷாந்தினி; முடியவில்லை. இந்த நரகத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல், தற்கொலை செய்து கொண்டாள்.
துடித்துப் போயினர் பெற்றோர். மகளின் திடீர் மரணம், அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாரையோ, "லவ்' பண்ணி தோல்வியுற்றதால், தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னுடைய சகோதரியும், ஷாந்தினியும் ஒரே கல்லூரி மாணவிகள் என்பதால், எனக்கு உண்மை தெரிந்து மிகவும் அதிர்ந்து போனேன்.
பெற்றோரே... "பேஷன்' என்ற பெயரில், உங்கள் பெண்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளை, குழந்தைகள் என்றே எப்போதும் நினைக்காதீர்கள். அவர்கள், டீன்-ஏஜ் பருவம் வந்ததும், அவர்களது மொபைல் போன், ரூம், கைப்பை என, எல்லாவற்றையும் அவர்களுக்குத் தெரியாமல் கவனியுங்கள்.
"நாங்கள் ரொம்ப, "டீசன்ட்' ஆனவர்கள்; இப்படிச் செய்வது, "இன்டீசன்ட்' அல்லவா' என நினைக்காதீர்கள்.
உங்கள் மகள் வீடு தங்காமல், "டூர் போகிறேன்...' என்றால், அது உண்மை தானா, எங்கிருக்கிறாள் என்பவற்றை விசாரித்து அனுப்புங்கள்.
"அது என் பெண்ணோட பிரைவசி... அதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன்!' என, பெருமையாக அலட்டிக் கொள்ளாமல், என்ன, ஏது என, அவளது நண்பர்களை விசாரியுங்கள்.
கடைசியாக, உங்கள், "டீன்-ஏஜ்' மகள்களிடம், மனம் விட்டு இதுபோன்ற விஷயங்களைக் கூறி, ஒரு பாடம் நடத்துங்கள். உங்கள் செல்ல மகள்களின் வாழ்வு, உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்!
— தொடரும்.
- ஜெபராணி ஐசக்