மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.
சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.
சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.
தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.
நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது. இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான 'லு மோந்' பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 'காந்தி தேசம்' என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது. இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.
வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. புலம் பெயர் தமிழ் மக்களால் மட்டுமே இந்த உலக நாடுகளின் மாற்றங்களுக்கூடாகப் பயணித்து வெற்றியை அடையலாம். அந்தக் கடமை புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
வன்னி அவலங்களுடன் திரண்டு எழுந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தம்மை மீண்டும் ஒரு போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் உள்ளது. காலத்தைத் தவற விடாமல் உறவுகளை இணைத்து போர்க்களத்தைத் திறக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
சிங்கள தேசத்திற்கு கைகளுக்கு எட்டாத, நெருங்க முடியாத தேசங்களில் வாழும் எமது பேரெழுச்சி மட்டுமே தமிழீழ மண்ணையும், மக்களையும் சிங்கள இனவாத கோரப் பிடியிலிருந்து காப்பாற்றும். வன்னி அவலங்களில் உலிமையோடும் உணர்வோடும் பங்கு கொண்டு, முன் நின்ற இளையோருக்கு இது சவாலான காலம். இந்தப் போர்க் களத்தின் வெற்றியும் இளையோர் கைகளில்தான் உள்ளது. தமிழீழ மக்களை மீட்க மீண்டும் போர்க்களம் நோக்கி வாருங்கள்! எங்கள் அணிதிரளல்கள் மூலம் நாங்கள் மீண்டும் பலம் பெறுவோம்!
எமது தலைவரின் கட்டளையும் இதுவே!
source:nerudal
--
www.thamilislam.co.cc
Read more...