புதிய காலனித்துவ தலைவர்களுக்காக தயாராகும் யாழ் கோட்டை
>> Sunday, October 11, 2009
source:athirvu
தொல்பொருள் சாஸ்திரம் என்ற பெயரில் யாழ் டச்சுக் கோட்டை தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்தினரால் புனரமைக்கப்படவுள்ளது. இது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் சிங்கள பௌத்த யாத்திரிகர்களின் தங்குமிடமாக அமையப்போவதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ் கோட்டையானது உண்மையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டபோதும், பின்னர் டச்சுக் காரர்களால் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது உள்ள கட்டடம் டச்சுக் காரர்களால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடமாகும். யாழ் மக்களை கொடுங்கோலர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளமே அது என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் அக்கோட்டைக்கு செந்தக்காரர்களான தமிழர்களின் நாகரிக சொத்தாக என்றுமே அது ஆகமுடியாது.
சுதந்திரம் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படும் காலத்தின் பின்னர் அக்கட்டடம் மாகாண சிறைச்சாலையாக, சிங்கள பாதுகாப்புப் படைக்கான தங்குமிடமாக இருந்தது. டச்சு கோட்டையின் உள்ளே இருந்த அரச அரண்மனை கொழும்பு அரசியல்வாதிகளின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. 1981 இல் யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசியல்வாதிகள் இந்த அரண்மனைக்குள் இருந்தே அதைச் செய்துமுடித்தனர். மேலும் பார்வையாளர்களைச் சுட்டுக்கொன்ற மற்றும் 1974 இல் நடைபெற்ற 4 ஆவது சர்வதேச தமிழ் மாநாட்டை குழப்பியவர்களும் அந்த கோட்டைக்குள்ளிருந்தே வந்தனர்.
கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நெதர்லாந்து தூதர் கோட்டைக்கும் சென்று வந்தார். யாழ் மக்களின் பரம்பரைச் சொத்து மீண்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளதா எனப் பார்க்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்பதை இந்த கோட்டை அவருக்கு நினைவூட்டுகிறது. அதாவது டச்சுக்காரர் ஆட்சியின்போது யாழ்ப்பாணம் 'சிறிய ஹொலண்ட்' என அழைக்கப்பட்டது என யாழ் கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
நெதர்லாந்தின் பொல்பொருள் சின்னத்தைப் பேணவும், சுற்றுலாத்துறைக்கான உட்கட்டமைப்புகளுக்கும் நெதர்லாந்து அரசு நிதியுதவி தரவேண்டும் எனக் கேட்பதில் கொழும்பு உறுதியாக உள்ளது.
இலங்கையிலுள்ள தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்திலோ அல்லது தேசிய காப்பகத்திலோ ஒரு தமிழ் அதிகாரிகளும் இல்லை. பசில் ராஜபக்ஷ போன்ற பெரிய பதவிகளிலுள்ளவர்களால் தரவிறக்கத்துக்கு ஆளாவதால், வெளி ஆட்கள் அல்லது வெளி இனத்தினருக்கு வரலாறோ அல்லது பாரம்பரியமோ இலங்கையில் இல்லை என்பதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என கொழும்பிலுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இவர்கள் கூட காப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ள பொருட்களை அணுகுவது மிகவும் கடினமாக உள்ளது.
தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்திலிருந்து பல அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் வெளிப்படைத் தோற்றத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தின் 'அபிவிருத்திக்கு' யாழில் உள்ள 'ஞாபகச் சின்னங்களில்' ஆர்வம் காட்டினர், ஆனால் உண்மையில் அவர்கள் ஆர்வம் யாழ் மக்களின் கலாச்சார இன அழிப்புதான் என்கிறார் யாழ்ப்பாணத்தின் கல்வியாளர்.
1960 களில் பென்ஸ்சில்வானியா பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி நடந்தபோது கண்டறியப்பட்டது போல, யாழ்ப்பாணத்தின் ஆகப்பழைய முக்கிய தொல்பொருள் சாஸ்திர தளமான கந்தரோடை சாதாரண சகாப்தத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இது பழங்காலத்தில் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய கற்களால் ஆனது. கந்தரோடை இலங்கையின் அதிபழைய நகரங்களில் அதாவது அனுராதபுரம் நகரமாக இருந்த காலத்தில் ஒன்றாக இருந்துள்ளது, உலகின் பல பகுதிகளுடனும் தொடர்புள்ளதாக இருந்தது. இங்கிருந்த நாகரிகம் இலங்கையின் தீவிலும், தென்னிந்தியாவிலும் இருந்த திராவிட மக்களின் நாகரிகத்தை வெளிக்காட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் பௌத்த காலகட்டம் கருப்பொருளிலும், சிற்ப சாஸ்திரத்திலும் தனிப்பட்ட வெளிப்படுத்தலை உடையது, இலங்கையின் தென்பகுதியில் இருந்து முற்றுமுழுதாக வேறுபடுகின்றது, அதோடு தமிழ் பௌத்தத்தின் பாரம்பரியம் என்றே பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. சாதாரண சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டில் வெளிவந்த தமிழ் பௌத்த காப்பியமான மணிமேகலையில் கூறப்பட்டுள்ள பௌத்த வகையுடன் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம் நெருங்கிய தொடர்புள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
கந்தரோடை (கந்தர் - ஓடை) என்பது எளிதாக கந்தரின் ஓடை அல்லது குளம் எனப் பொருள்படும். இது பெரும்பாலும் பிந்தி வந்த பெயராக இருக்கக்கூடும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய சிங்கள நீதிபதி போல் ஈ. பீரிஸ், இந்த இடத்தில் அடிப்படை அகழ்வாராய்ச்சியைச் செய்தார். இந்த ஆராய்ச்சியானது, அந்த காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை எழுதிய முதலியார் ராசநாயகத்தின் இலக்கியத்தில் ராச்சியத்தின் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கதிரை- மலை என்ற இடம் கந்தரோடையில் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கும் படி செய்கிறது.
கதிரை-மலை சிங்களத்தில் கடுரு-கொட என மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன்னர் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் யாழ் குடாநாட்டில் இப்போதுள்ள தொல்பொருட்களை ஆபத்திலிருந்து காத்தல் என்ற கட்டுரையில் "செய்து வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களிடையே 40 சிறிய மற்றும் நடுத்தர அளவான தூபிகள் இருப்பதால் கந்தரோடை என அழைக்கப்படும் கடுருகொட புத்த கோயில் சமயமுக்கியத்துவம் வாய்ந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போதுள்ள கொழும்பு அரசாங்கமானது,13 ஆம் நூற்றண்டிலிருந்து 1618 இல் போர்த்துக்கேயரால் வெற்றிகொள்ளப்பட்டது வரை யாழ்ப்பாணத்தில் ஈழ தமிழ் ராச்சியமானது இருந்தது என அடையாளம் காட்டவே விரும்பவில்லை. பாடப்புத்தகங்களிலுள்ள வரலாற்றை அகற்றும் ஒரு நடவடிக்கையில் கூட அண்மையில் அரசாங்கம் ஈடுபட்டது.
தமிழர்களுக்கு தமது 'சமநிலையைக்' காண்பிக்கவும், தமிழர்களை ஏமாற்றவும் இப்போது சிங்கள தொல்பொருள் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ள 'மந்திரி வலவுவ' (அமைச்சரின் மாளிகை அல்லது வளாகம்) என்ற அமைப்பை புனரமைக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்த அமைப்பு யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துக்குரியது எனக் கூறப்படுகிறது.
இந்த அமைப்புக்கு 'மந்திரி மனை' என்ற பெயரை தமிழர்களிடையே உள்ள சில போலி சரித்திர ஆசிரியர்கள் கண்டுபிடித்து சூட்டினர். இப்போது இது கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது யாழ் வண்ணார்பண்ணை சமூக கொடையாளியால் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் கட்டப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்துடன் ஒன்றாகச்சேர்த்து 19 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடமாகும்.
இதேவேளை, இந்த காலத்துக்குரிய யாழ்ப்பாண மன்னரினது எனக் கருதப்படும் யமுனா - ஏரி என்ற குளம் யாழ்ப்பாணத்தின் வரலாற்று இலக்கியத்தில் காணப்படுகிறது. இது இப்போது கொழும்பு தொல்பொருள் சீன அதிகாரிகளால் யமுனா - பொக்குனா என அழைக்கப்படுகின்றது.
இவ்வாறே இலங்கை அரசானது தமிழ் மக்களுக்கு அவர்கள் தொல்பொருள் சாஸ்திர பாரம்பரியத்தை 'கற்பித்து' வருகிறது, அதோடு இதை மற்றவர்களுக்கு 'விற்றும்' வருகிறது என்கிறார் யாழ்ப்பாணத்தில் கல்வியாளர் ஒருவர். அவர் தமது பெயரை வெளியில் சொல்லக்கூடியளவேனும் தமது கல்வியியல் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை.
கிளிநொச்சியில் மிகப் பெரிய பௌத்த கோயில் கட்டப்பட்டு வருவதாக கடந்த திங்கட்கிழமை, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இது பழங்கால கோயில் எனவும் கூறியிருந்தார். அதோடு சிங்கள பௌத்தர்களை வடக்கில் குடியேற்றுவதற்கு ஏதுவாக ஏ 9 சாலைமருங்கே பல சிறிய பௌத்த தூபிகள் கட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழர்கள் பாத்யாத்திரை செய்து இலங்கையின் தென்முனையிலுள்ள தேவேந்திர முனையில் ஒரு குடியேற்றம் அமைத்துக்கொள்ள இலங்கையர்கள் அனுமதிப்பார்களா என கொழும்பிலுள்ள மத செயற்பாட்டாளர்களைக் கேளுங்கள். அங்கேயும் தேனாவரை நாயனார் என அழைக்கப்படும் பழங்கால சிவன் கோவிலொன்று உள்ளது. காலியிலுள்ள தமிழ் கல்வெட்டு ஒன்றில் இது குறிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டிலுள்ள இந்துக் கோயிலின் திருவிழா நடந்தால் அது சிங்கள பௌத்தர்களை கிளர்ச்சியடையச் செய்யும் எனக் கூறி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு அந்த இந்துக் கோயில் திருவிழாவைத் தடை செய்தது. ஆனால் லட்சக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு, இந்து மாநாடொன்றை கடந்த மாதம் நடத்தியுள்ளது கொழும்பு. இதற்கு இந்தியாவிலிருந்து வந்தும் சிலர் பங்குபற்றியிருந்தனர்.
www.thamilislam.co.cc