ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள்.
பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள்.
.காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார்.
பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.
வினோபா விருப்பம்
இப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா? யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18_1_1957 அன்று நடைபெற்றது.
பெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி "நேஷனல் காலேஜ்" கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா.
உடனே அந்த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார்.
தன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார்.
மணியம்மையுடன் பெரியார்
உடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார்.
பெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான "சீட்டா" என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது. பூமிதான ஊழியர்கள் `ஜீப்'பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது.
மாடிக்கு
வினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.
அவரைப் பார்த்ததும் "வணக்கம்" என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார்.
"இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை" என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார்.
வயது என்ன?
"உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?" என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார். அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், "எனக்கு 78 வயது" என்று தமிழில் பதில் கூறினார் பெரியார்..
வினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், "அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி" என்று வினோபா சொன்னார்.
ரகசிய பேச்சு
சாப்பாட்டை முடித்துக்கொண்டதும், "இங்கேயே பேசலாமா? அல்லது தனியாக பேசலாமா?" என்று வினோபா கேட்டார். "தனியாக பேசலாம்" என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள்.
அங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10_40 மணிக்கு தொடங்கி பகல் 12_30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். "என்ன பேசினீர்கள்?" என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எல்லாம் அப்புறம்" என்று சொல்லிக்கொண்டே பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.
"ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். "ஒன்றும் இல்லை" என்று வினோபா தலையை ஆட்டினார்.
இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந் தார்கள்.
பெரியார் விளக்கம்
வினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி' நிருபர் பேட்டி கண்டார்.
"நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்" என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.
சிலை உடைப்பு சரியா
வினோபா:_ நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
பெரியார்:_ சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.
வினோபா:_ சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலை களை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
பெரியார்:_ சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.
வினோபா:_ புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.
விஷமும், சர்க்கரையும்
பெரியார்:_ இப்படி எத்தனை பேர்களால் முடியும்? விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்?
புராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.
மணியம்மை
வினோபா:_ (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே?
பெரியார்:_ கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க பத்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.
வினோபா:_ புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.
Read more...