சாலையில் கிடைத்தது 'பணம்' : சற்றும் மாறவில்லை 'குணம்'
>> Saturday, May 1, 2010
ஊட்டி : ஊட்டி பஸ் ஸ்டாண்டில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை, இளைஞர்கள் இருவர், போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ், சதீஷ்; இவர்களுடைய சகோதரர் சுரேஷ் என்பவரை, கேரள மாநிலத்துக்கு வழியனுப்புவதற்காக, நேற்று காலை ஊட்டி பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். சுரேஷை வழியனுப்பிய பின், இப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து பார்த்த போது, பணம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக, ஜி1 போலீசில், கைப்பையை ஒப்படைத்தனர்; 10 ஆயிரத்து 135 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இளைஞர்களிடம் எழுத்துப் பூர்வமாக கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட போலீசார், அவர் களை பாராட்டினர். ஆனால், பணம் யாருடையது என்பது தெரியவில்லை. பணத்தை ஒப்படைத்த சந்தோஷ் கூறுகையில், ''எங்களிடம் கைப்பை கிடைத்த போது, பணம் இருப்பது தெரியவந்தது. மருத்துவ செலவு அல்லது அவசர தேவைகளுக்காக கூட வைத்திருக்கலாம். இதை நாங்கள் எடுத்துச் சென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். அதனால், பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தோம். பணத்தை தவற விட்டவர்கள் வாங்கிக் கொண்டால், நாங்கள் மகிழ்ச்சியடைவோம்,'' என்றார். இவர், கோவையில் கார் டிரைவராக பணிபுரிகிறார்; சதீஷ், பிளஸ் 1 வகுப்புக்கு செல்ல உள்ளார். சாலையில் 10 ரூபாய் போட்டு விட்டு 10 ஆயிரம் ரூபாய் 'அபேஸ்' செய்யும் இக்கால கட்டத்தில், 10 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தும், நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள், பாராட்டுக்கு உரியவர்கள் தான்.
source:dinamalar
--
http://thamilislam.tk