ஐ.பி.எல். இறுதிப்போட்டி:
கடைசி பந்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் `சாம்பியன்'
பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது
மும்பை, ஜுன்.2-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப்போட்டி
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி மும்பை டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சந்தித்தன. நேற்று முன்தினம் இரவு ஸ்டேடியத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தியேட்டரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இறுதிப்போட்டியின் பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு இருந்தது. 1500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக 45 நிமிடங்கள் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் இந்தி நடிகர், நடிகைகளின் குத்தாட்டம், சாகச நடனங்கள் இடம் பெற்றன.
சென்னை பேட்டிங்
நிறைவு விழா நிகழ்ச்சி முடிவடைந்ததும் போட்டி தொடங்கியது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் சுமித், ராவத் ஆகியோருக்கு பதிலாக கம்ரன் அக்மல், நீரஜ் பட்டேல் சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் வார்னே முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி பார்த்தீவ் பட்டேலும், வித்யுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். முதல் 3 ஓவர்கள் சற்று தடுமாற்ற கண்ட இந்த ஜோடி, அடித்து ஆட ஆரம்பித்த நேரத்தில் பிரிந்தது. ஸ்கோர் 39 ரன்களாக உயர்ந்த போது, வித்யுத் (16 ரன், 14 பந்து, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி) ïசுப் பதான் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.
ரெய்னா 43 ரன்
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, தனக்கே உரித்தான பாணியில் வேகம் காட்டினார். பார்த்தீவ் பட்டேலும் தன்னால் முடிந்தவரை ஆடினார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சும் மற்றும் பீல்டிங்கும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால் சென்னை அணியால் மெகா வேடிக்கை காட்ட முடியவில்லை. ஸ்கோர் 64 ரன்களை எட்டிய போது, பார்த்தீவ் பட்டேல் (38 ரன், 33 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார்.
இதன் பின்னர் வந்த அல்பி மோர்கல் அதிக நேரம் நீடிக்கவில்லை. 16 ரன்களில் (14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி ஆட வந்தார். சென்னை அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தன. சென்னை அணியை பொறுத்தவரை, ஒன்று, இரண்டு ரன்களே அதிகமாக எடுக்கப்பட்டன.
சென்னை அணியின் ரன் உயர்வில் முக்கிய பங்கு வகித்த ரெய்னா 43 ரன்களிலும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்து சொதப்பிய கபுகேதரா 8 ரன்னிலும் (12 பந்து) ஆட்டம் இழந்தனர்.
163 ரன்கள் சேர்ப்பு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 17 பந்துகளில் 29 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), பத்ரிநாத் 6 ரன்களும் (2 பந்து) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் மொத்தம் 9 பவுண்டரிகளும், 7 சிக்சரும் விளாசப்பட்டன.
அடுத்து 164 ரன்கள் எடுத்தால் `சாம்பியன்' கோப்பை என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நீரஜ் பட்டேல் (2), அஸ்னோட்கர் (28 ரன்), அக்மல் (6 ரன்) ஆகியோர் 42 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தனர். இதனால் சரிவை சந்தித்த ராஜஸ்தான் அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. 4-வது விக்கெட்டுக்கு இணைந்த வாட்சனும், யுசுப் பதானும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ïசுப் பதானுக்கு 13 ரன்னில் சுரேஷ் ரெய்னாவும், 33 ரன்களில் கோனியும் விட்ட எளிதான கேட்சுகள் சென்னை அணிக்கு படுபாதகமாக அமைந்தது. இந்த வாய்ப்புகளை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். ஸ்கோர் 107 ரன்களை எட்டிய போது, அச்சுறுத்திக்கொண்டிருந்த வாட்சன் 28 ரன்களில் (19 பந்து) போல்டு ஆனார். இதன் பின்னர் கïப் (12 ரன்), ஜடேஜா (0), ïசுப் பதான் (56 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் சாம்பியன்
கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. இதில் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை பாலாஜி வீசினார். இதில் முதல் பந்தில் தன்விர் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தை தவற விட்ட வார்னே 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் பாலாஜ் வைடு பந்து வீசியதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. தவிர இதில் ஒரு ரன் ஓடியும் எடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் வீசப்பட்ட 4-வது பந்தில் ஒரு ரன்னும், 5-வது பந்தில் தன்விர் 2 ரன்னும் எடுக்க ஆட்டம் `டை' ஆனது.
இதை தொடர்ந்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற உச்சக்கட்ட டென்ஷனுக்கு இடையே பாலாஜி பந்து போட்டார். இதில் தன்விர் எளிதாக ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று `சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.
ரூ.4.8 கோடி பரிசு
ஏற்கனவே லீக்கில் 2 முறை தோற்றிருந்த சென்னை அணி தொடர்ந்து 3-வது முறையாக ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்து கோப்பையையும் பறிகொடுத்து இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு வைரம், பவழம், மாணிக்க கற்கள் பதித்த தங்க கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. அந்த அணிக்கு ரூ.4.8கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.2.4 கோடி வழங்கப்பட்டது.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
பார்த்தீவ் (சி) அக்மல் (பி) ïசுப் பதான் 38
வித்யுத் (சி) ஜடேஜா (பி) ïசுப் பதான் 16
ரெய்னா (சி) ஜடேஜா (பி) வாட்சன் 43
மோர்கல் (சி) அக்மல் (பி) ïசுப் பதான் 16
டோனி (நாட்-அவுட்) 29
கபுகேதரா (சி) அஸ்னோட்கர்(பி) தன்விர் 8
பத்ரிநாத் (நாட்-அவுட்) 6
எக்ஸ்டிரா 7
மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-39, 2-64, 3-95, 4-128, 5-148
பந்து வீச்சு விவரம்
தன்விர் 4-0-40-1
வாட்சன் 4-0-29-1
முனாப் 2-0-14-0
ïசுப் பதான் 4-0-22-3
திரிவேதி 2-0-21-0
வார்னே 4-0-34-0
ராஜஸ்தான் ராயல்ஸ்
நீரஜ் பட்டேல் (பி) கோனி 2
அஸ்னோட்கர் (சி) ரெய்னா (பி) மோர்கல் 28
அக்மல் (ரன்-அவுட்) 6
வாட்சன் (பி) முரளிதரன் 28
ïசுப் பதான்(ரன்-அவுட்) 56
கïப் (சி) டோனி (பி) முரளிதரன் 12
ஜடேஜா (சி) கபுகேதரா (பி) மோர்கல் 0
வார்னே (நாட்-அவுட்) 9
தன்விர் (நாட்-அவுட்) 9
எக்ஸ்டிரா 14
மொத்தம் (20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 164
விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-41, 3-42, 4-107, 5-139, 6-139, 7-143
பந்து வீச்சு விவரம்
நிதினி 4-1-21-0
கோனி 4-0-30-1
மோர்கல் 4-0-25-2
பாலாஜி 4-0-42-0
முரளிதரன் 4-0-39-2
தொடர் நாயகன் வாட்சன்
ராஜஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. அவர் 472 ரன்கள் குவித்து இருப்பதோடு, 17 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.
ஆட்டநாயகன் ïசுப் பதான்
அதிரடியாக அரைசதமும், 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ïசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=416476&disdate=6/2/2008&advt=1
Read more...