|
சமீபத்திய பதிவுகள்
புலி இயக்கம்... புதுத் தலைவர்!
தமிழ் ஈழத் தேசிய அரசாங்கத்தின் தலைவராக விசுவநாதன் ருத்திர குமாரன் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு இடையே கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா நகரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு நடந்த சர்வதேசப் பிரதிநிதிகளின் முதல் அமர்வுக் கூட்டத்தில்தான் இவர் ஏகமனதாகத் தேர்வானார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக, புலம் பெயர்ந்த ஏழு ஈழத் தமிழர்களான மகிந்தன் சிவசுப்ரமணியம், சாம் சங்கரசிவம், ஜெரார்ட் ஃபிரான்சிஸ், செல்வா செல்வநாதன், வித்தியா ஜெயசங்கர், சசிதர் மகேஸ்வரன், ஜனார்த்தனன் புலேந்திரன் ஆகியோர் தேர்வாகினர்.
ருத்திரகுமாரனுக்கு எதிராக காஸ்ட்ரோ அணியைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஜெயானந்த மூர்த்தி போட்டியிட மனு கொடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா,
இங்கிலாந்து, இன்ன பிற நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ருத்திரகுமாரனையே ஆதரித்ததால், ஜெயானந்த மூர்த்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஈழத் தேசிய அரசின் அவைத் தலைவராக (சபாநாயகர்) கனடாவைச் சேர்ந்த பிரபல தமிழ் ஈழத் தலைவர் பொன்.பாலராஜன் தேர்வானார். இந்தத் தேர்தலில் கனடிய ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புகள் தரப்பட்டன.
இந்தத் தேர்தலின் மூலம், பிரபாகரனுக்கு அடுத்ததாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் ருத்திரகுமாரன், தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். சர்வதேச அரங்கில் தனித் தமிழ் ஈழத் தேசிய அரசு அமையப் பேச்சுவார்த்தைகளை ஜனநாயக முறைப்படி ருத்திரகுமாரன் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. அவர் இந்த அமர்வில் பேச எழுந்தபோது பலத்த கரகோஷம்!
''உலகின் பல திக்குகளிலும் சிதறி வாழும் ஒரு மில்லியன் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு இணைந்துள்ளோம். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும் இந்த ஃபிலடெல் பியாவில்தான் நிகழ்ந்தது. நாம் இங்கு கூடியிருப்பதும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கே!
ஈழத் தமிழரின் வரலாற்றில்இன்றைய தினம், மிக முக்கியமான நாள். கடந்த வருடம் இதே நாளில் எமது தாய கத்தின் முல்லைத் தீவுக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்பினுள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நாகரிக உலகின் பண்பாட்டை, அரசியல் விழுமியங்களை எல்லாம் புறந்தள்ளி, இலங்கையில் சிங்களத் தேசியவாத அரசும் அதன் ராணுவமும் உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்த்திய நாள் அது. 21-ம் நூற்றாண்டில், மனிதகுலத்துக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றம் தன் கண் முன்னே நிகழ்வதைக் கண்டும், தடுப்பதற்கோ, மக்களைக் காப்பாற்றுவதற்கோ, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், சர்வதேசச் சமூகம் செயலற்று மௌனித்து நின்ற நாள் அது. பல்லா யிரம் மக்களைக் குற்றுயிராகக் காயப்படுத்தியும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை எதிரிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப் படுத்திய நாள் அது!'' என்ற ருத்திர குமாரன் தொடர்ந்து,
ஈழத் தமிழ் தேசத்துக்கு எதிராக இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இத்தகைய இன அழிப்பு அபாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத் துக்கொள்ள, ஈழத் தமிழர் தேசம் தனக்கென ஒரு சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்வதற்கான கோரிக்கை எழுப்ப, சர்வதேசச் சட்டங்களில் இடம் உண்டு. இலங்கை ஆட்சியாளர்கள், தமிழ் மக்களின் போராட்டத்தை ராணுவ மேலாதிக்கத்தின் வலுக்கொண்டு சிதைத்து விட்டதாகப் பிரகடனப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் நாடு கடந்த தேசமாக நாம் இங்கு கூடி நிற்பது, தமிழரின் ஒற்றுமையும் இலக்கும் உடைந்துபோகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இனப் படுகொலையையும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய எதிரான குரூரமான குற்றங் களையும் நியாயப்படுத்த சிங்களத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆயினும், தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்கள அரசிடம் கொடுக்காத காரணத்தினால், நம்மால் அந்த அரசை சட்டப்பூர்வமான அரசாகக் கருத முடியாது. சிங்கள அரசு அந்தத் தகுதியை இழந்துவிட்டது.
ஈழத் தமிழர்களைச் சூழ்ந்துள்ள சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பு இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு தென் சூடானில் நடைபெற உள்ளதுபோன்று, சர்வதேசச் சமூகத்தின் ஏற்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும், 'ஈழத் தமிழர் தேசம்' எனத் தனது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமும் இறைமையும்கொண்ட தமிழீழத் தனி அரசு அமைத்து வாழ விரும்புகிறார்களா என்ற ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் உருவாக வேண்டும். ராணுவ ஆக்கிரமிப்பிலும் எதேச்சதிகார ஆட்சியின் கீழும் சிக்குண்ட மக்களின் சுதந்திரத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்புமிக்க எதிர்காலத்தை நாம் கட்டி எழுப்புவோம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!'' என்று அவர் முடித்தபோது, கூட்டத்தினர் கைதட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான ராம்ஸே கிளார்க், சட்ட வல்லுநர்கள் ஃபிரான்சிஸ் பாயில், புரூஸ் ஃபெய்ன், கரன் பார்க்கர், எலின் ஷாண்டர் போன்ற அமெரிக்கர்களும் உறுதுணை காட்டியது குறிப்பிடத்தகுந்தது. அதோடு, இந்த முதல் தமிழ் ஈழ அரசுக்கான அமர்வில், தெற்கு சூடான் எனும் ஆப்பிரிக்க நாட்டின் சுதந்திரப் போராளிகளின் தலைவர்கள், சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். சுமார் 25 ஆண்டுகளாக இனக் கலவரம் நடக்கும் சூடானில் சன்னி இன இஸ்லாமியர்களும் கறுப்பர் இன ஆப்பிரிக்கர்களும் சண்டையிட்டதில், இரண்டு லட்சம் மக்கள் மாண்டனர். தெற்கு சூடான் தனி நாடாக வேண்டி ஜனவரி 2011-ல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 'சூடான் பீப்பிள்ஸ் லிபரேஷன்' அமைப்பின் தலைவரான காம்ரேட் சல்வாகிர், தமிழ் ஈழ அரசு அமைய தன் ஆதரவைத் தந்துள்ளார்.
''ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் சூடானில் அமைதி நிலவப் பாடுபடுகின்றன. அந்த வழியில்தான் ருத்திரகுமாரனும் ஜன நாயக வழியில் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த முனைகிறார்!'' என்கின்றனர், இந்த நிகழ்வுகளை அருகில் இருந்து கவனித்துவரும் சிலர்.
தமிழீழ அரசு பிரகடனம் நடந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரிஸ், அமெரிக்கா ஓடி வந்தார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், துணைச் செயலாளர் விஜய் நம்பியார் ஆகியோரைச் சந்தித்து, தமிழீழ அரசு பற்றிய பிரகடனம் மேலும் வளரவிடாமல் தடுக்கும் வேலை களில் இலங்கை இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.
அடுத்தகட்ட முயற்சியாக, 195 நாடு களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் பார்வை யாளர் என்ற தகுதியை முதலில் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ள னவாம். ஃபிலடெல்பியா நகரில் உள்ள தேசிய அரசியலமைப்பு அரங்கில்தான் சுதந்திர அமெரிக்காவின் முதல் அரசியல் அமைப்பு சட்டம் 1787-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் முன்வைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பிரகடனம், தமிழ் ஈழம் அமைவதற்கான நம்பிக்கையை மீண்டும் விதைத்திருப்பது நிஜம்!
source:vikatan
--
http://thamilislam.tk Read more...