சமீபத்திய பதிவுகள்

இலங்கை – மேற்குலக பனிப்போர் தமிழருக்கு விடிவைத் தருமா?

>> Monday, September 14, 2009

 

karutthu-nerudalவிடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை அரசுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மேற்குலக நாடுகள், இப்போது அதற்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்துள்ளன.

புலிகளுக்கு எதிரான போரின்போதும்- போருக்குப் பின்னரும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது பற்றிய ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும்.

அண்மையில் பிரித்தானியாவின் ~சனல் – 4| தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் இலங்கை அரச படைகளின் கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்யும் கொடூரக் காட்சி, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலங்கள் எல்லாமே உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றன.

வவுனியா தடுப்பு முகாம் அவலங்களை மறைப்பதற்கு அரசாங்கம் எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டபோதும்- அவை வெற்றியளிக்கவில்லை.

எங்காவது ஒரு சிறிய படம் அல்லது வீடியோ நாடா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிங்கள அரசைத் திக்குமுக்காடச் செய்து விடுகிறது.

இவையெல்லாம் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்கு நாடுகளை, பொது நிறுவனங்களை, மனித உரிமை அமைப்புகளை அதிச்சியடையச் செய்துள்ளன.

இது இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான- குறிப்பாக மேற்குலகம்- உறவில் பெரும் விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது இலங்கை அரசுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவு கிடையாது.

இலங்கை அரசின் வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னவுக்கு வீசா வழங்க மறுக்கும் அளவுக்கு பிரித்தானியாவுடனான உறவில் விரிசல் விழுந்திருக்கிறது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி மகிந்தவுடன் செல்லவிருந்த கருணா போன்ற அமைச்சர்களுக்கும் படையதிகாரிகளுக்கும் விசா வழங்க மறுக்கும் அளவுக்கு அமெரிக்காவுடனான உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விசா மறுகின்ற அளவுக்கு கனாடாவுடனான இராஜதந்திர உறவு கெட்டுப் போய்க் கிடக்கிறது.

இவை மட்டுமே சிங்கள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சம்பவங்களல்ல.

பிரித்தானியா செல்ல முற்பட்ட முன்னாள் அமைச்சரும் ஆளும் கட்சியின் எம்.பியுமான அர்ஜூன ரணதுங்க, மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் போன்றோருக்கும் விசா வழங்க பிரித்தானியா மறுத்திருக்கிறது.

இவையெல்லாம் தனிப்பட்ட காரணங்களுக்காக விசா மறுக்கப்பட்ட சம்பவங்களல்ல.

இலங்கை அரசின் பிரதிநிதிகளாக கருதப்பட்டவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் இலங்கை அரசுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் செல்வதையே புலப்படுத்துகிறது.

அதேவேளை இலங்கை அரசுக்கு சர்வதேச நிதியுதவிகள் கிடைப்பதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

பெரும் இழுபறிகளுக்கு மத்தியிலேயே- நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில்- சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்குக் கிடைத்தது.

ஆனால் அது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.

அதேவேளை ஜிஎஸ்ரி பிளஸ் எனப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிச் சலுகையை இழக்கின்ற நிலையும் இலங்;கைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலைகளுக்கெல்லாம் காரணம் இலங்கை அரசின் போக்கேயாகும்.

போர்க்காலத்தில் இடமபெற்ற மனித உரிமை மீறல்கள், போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் கையாளப்படும் முறைகள், போருக்குப் பின்னர் அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளமை போன்ற காரணங்கள் இதற்கு அடிப்படையானவை.

எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.

ஆனால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை எப்போதும் ஏமாற்றலாம் என்ற கனவில் இருந்தது. இப்போது அதற்குச் சாவுமணி அடிக்கப்படும் கட்டம் வந்திருக்கிறது.

புலிகள் இயக்கம பலமுடன் இருந்த காலகட்டத்தில் அதற்கு எதிரான சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை உருவாக்கி- அதன்மீது தடைகளை ஏற்படுத்தியது இலங்கை அரசே.

அதுவே பின்னர் பேச்சுக்கள் குழம்பவும் போர் வெடிக்கவும் காரணமாகியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகள் புலிகள் தொடர்பாகக் கையாண்ட இறுக்கமான போக்கே இலங்கை அரசுக்கு இராணுவத் திமிரைக் கொடுததது.

அதற்குப் போர்வெறியை இன்னும் அதிகரிக்கக் காரணமாகியது.

சர்வதேசம் புலிகளை ஒதுங்கி வைத்து ஓரம் கட்டியபோது- இலங்கை அரசு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுக்களில் தடைகளை உருவாக்கி புலிகளைச் சண்டைக்குள் இழுத்து வந்தது.

சண்டையில் இலங்கை அரசு புலிகளைத் தோற்கடித்துள்ள நிலையில்- தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் பலவீனமடைந்திருப்பதாகக் கருதி அவர்களை அடிமை நிலையில் வைத்திருக்கவே இலங்கை அரசு முற்படுகிறது.

வன்னியில் புலிகளோடு வாழ்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் சிறை வைத்திருக்கிறது.

அரசியல் தீர்வா- அது என்ன? அதற்கென்ன அவசியம், என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்களும் கண்டபடி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இவையெலலாம் இலங்கை அரசு இதுவரை போர்த்தியிருந்த போர்வைகளை அகற்றி அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளன.

புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்தபோதும் சரி- நான்காவது கட்ட ஈழப்போர் உருவாவதற்கு முன்னரும் சரி- இலங்கை அரசு கூறியதையே வேத வாக்காக நம்பிய சர்வதேச சமூகம் இப்போது அப்படியான நிலையில் இல்லை.

அப்போது புலிகளும், தமிழ் மக்களின் சார்பில் பேசியவர்களும் சொன்னதைக் கேட்க மறுத்த உலகம், இலங்கை அரசின் கருத்துக்களின் மீதே கவனம் செலுத்தியது.

இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

இலங்கை அரசின் சொற்களைக் கேட்க- நம்ப மறுக்கும் சர்வதேசம், பதில் கேள்வி எழுப்பி அரசைத் தடுமாறச் செய்கிறது.

இந்நிலைக்குக் காரணமே இலங்கை அரசு, இதுவரை கூறியவையெல்லாம் பொய் என்ற உண்மை அதற்குப் புரிந்திருப்பதுதான்.

இலங்கை அரசு தொடர்பாக சர்வதேச சமூகம் இப்போதாவது இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

சர்வதேச சமூகம் இதே கடும்போக்கை முன்னரே இருதரப்பின் மீதும் கடைப்பிடித்திருந்தால்- பேரழிவு மிக்க யுத்தம் ஏற்பட்டிருக்காது.

இருதரப்பும் அரசியல் தீர்வு ஒன்றுக்குள் வந்திருக்க வேண்டியிருக்கலாம்.

காலம் கடந்து சர்வதேச சுமூகம் இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொடுக்கிறது.

ஆனாலும் இது தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு தளமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எந்த வெளிநாட்டு நிரப்பந்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று கூறிக்கொண்டே அரசாங்கம் மேற்குலகுடன் முட்;டி மோத முயற்சிக்கிறது.

தமிழ ;மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு, மனித உரிமைகள் பேணப்படும் அச்சமற்ற வாழ்வுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் தேவைப்படுகின்றன.

சர்வதேச அரங்கில் இருந்து தாம் ஓரங்கட்டப்படுவதாக- ஒதுக்கப்படுவதாக எப்போது இலங்கை அரசு உணர்கிறதோ, அப்போது ஒரு திருப்பம் வரலாம்.

அதற்கான சூழல்கள் இப்போது உருவாகத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் புலம்பெயர் மக்கள் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது முக்கியமான தேவையாக இருக்கிறது.

மேற்குலகுடன் முரண்படும் சிங்கள அரசுக்கு இது நெருக்கடிகளை இன்னும் அதிகரிக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைவதற்கு புவிசார் ஒழுக்கில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோன்று இப்போது ஏற்பட்டுவரும் ஒழுங்குமுறை மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருவியாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

எந்தப் புவிசார் ஒழுங்குமுறை எமக்கு பாதகத்தை ஏற்படுத்தியதோ- அதே வழிமுறையின் ஊடாக புதியதொரு வெற்றியைப் பெற முயற்சிப்பதே சாலச் சிறந்த வழியாக இருக்கும். 
    
நன்றி: நிலவரம்
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மஹிந்த ராஜபக்ச நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

நாற்காலியில் இருந்து திடீரென வீழ்ந்த ஜனாதிபதி - வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள் ஜோதிடர்கள் 
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில், மஹிந்தவுக்கு முதுகில் உபாதையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான உரையை நிகழ்த்தாமலே, விழாவில் இருந்து, வெளியேறியுள்ளார் அவர்.ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம், பின்பக்கம் சரிந்ததாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
உடனடியாக கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வேறு ஆசனத்தில் அமரச்செய்துள்ளனர். பின் கலாச்சார அமைச்சின் செயலாளர் நடாத்திய நன்றியுரைக்கு பின்னர், சிலருக்கு மட்டும் விருதுகளை வழங்கி கௌரவித்த ஜனாதிபதி, அங்கிருந்து அகன்றுள்ளார். வீழ்ந்ததினை படம்பிடித்த கமேராக்களின், படச்சுருள்களும் ஜனாதிபதி தரப்பினால் கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு பிறகு ஜனாதிபதிக்கு, நல்ல காலம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்த ஜோதிடர்கள், தற்போது இச்சம்பவம், ஜனாதிபதியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என தெரிவித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சனிப்பெயர்ச்சியானதே ஜனாதிபதிக்கு இப்பாதகமான பலன்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்
source:4tamilmedia

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மறைந்த இதயேந்திரன் இதயம் நின்று போனது: உறுப்புதான பெருமைக்கு சொந்தக்காரர்

 


 சென்னை: உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று இரவு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலி. இவர்களது மூத்த மகன் இதயேந்திரன் (17). மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தான். தனது நண்பனை பார்க்க மோட்டார் சைக்கிளில் பார்க்க சென்ற போது ( கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி ) நடந்த ஒரு விபத்தில்,சிக்கினான். செங்கல்பட்டில் சேர்க்கப்பட்டு பின்னர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பபட்டான். இதயேந்திரனுக்கு மூளை செயல் இழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.தானம் செய்ய முடிவு: இதனை அறிந்த டாக்டர் தம்பதியினர் மகனின் இதயம் , கண்கள் , சிறுநீரகம், நுரையீரல் , கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.  பெங்களூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அபிராமி (9) சென்னை ஜெ.ஜெ., நகரில் உள்ள செரியன் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்தார்,. இவருக்கு இதயம் தேவை என விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த இதயேந்திரன் பெற்றோர்கள் சிறுமி அபிராமிக்கு வழங்க முடிவு செய்தனர். இதன்படி 20 நிமிடத்தில் சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது.முதல்வர் கருணாநிதி பாராட்டு : இந்த உறுப்புதான சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாகவும் , பெருமையாகவும்  பேசப்பட்டது. மேலும் இது தொடர்பான விஷயத்தில் பெரும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொண்ட இதயேந்திரன் பெற்றோர்களுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டினார். மேலும் தாயாரின் செயலை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டது.மூச்சுத் திணறலால், அபிராமி அவதி : இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அபிராமி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள். அறுவை சிகிச்சை நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறலால், அபிராமி கடும் அவதிப்பட்டு வந்தாள். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செரியன் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு பரிதாபமாக இறந்தாள்.எங்கள் மகள் இனி உங்கள் மகள் : இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான இதயேந்திரன் இதயம் நேற்று இரவு நின்று போனது. எங்கள் மகள் இனி உங்கள் மகள் என இதயத்தை தானமாக பெற்றபோது அபிராமி தாயார்,  இதயேந்திரன் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால் இப்போது இரண்டு குடும்பத்தினருக்கும் சொந்தமான ஒரு உயிர் பிரிந்து விட்டது. இதயேந்திரன் குடும்பத்தினர் பெற்ற சந்தோசம் விரைவிலேயே முடிந்து விட்டது, என்றாலும் அவரது புகழ் என்றும் பேசப்படும் .


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

tamil eelam:சிறையிலடைக்கப்பட்ட திச நாயகமும், வன்னி மக்களும்

 

srlமக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது.

தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது.

ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள்.

இந்த மறுபார்வைக்குள் பன்முகப் பார்வை, ஜனநாயகச் சொல்லாடல்கள், ஒடுக்கும் பிராந்திய வல்லாதிக்கத்தினை நோக்கிய சரணடைவு, பேசித் தீர்க்கலாமென்கிற பழைய இற்றுப்போன் புராணங்கள் என்பன அடங்கியிருக்கின்றன.

சிறீலங்காவின் படைக்கட்டமைப்போடு மட்டும் விடுதலைப்புலிகள் போராடினார்கள் என்பது போன்று இருக்கிறது இந்த குருட்டுத்தன விரிவுரையாளர்களின் பார்வை.

"வென்றால் சரித்திரம், தோற்றால் தரித்திரம்' என்பதல்ல மக்கள் போராட்டத்தின் சித்தாந்தம். மறு ஆய்வு, மீள்பரிசோதனை, சுயவிமர்சனம் என்பவை ஆரோக்கியமான அரசியல் தளமொன்றினை உருவாக்குமென்பது நிஜமானது.

ஆனாலும், வதை முகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கும் போராட்டத்தை விட, "தமிழினி' என்ன செய்கிறார். "கே பிக்கும் கி.பிக்கும்" என்ன உறவு. பத்மநாதனிற்கு எதிராகச் சதி செய்வோர் பெயர்ப்பட்டியல் என்பவற்றில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயற்பாடுகள் தேவைதானா? வென்பதையிட்டு மக்கள் கவலை கொள்கிறார்கள்.

எரிகிற வீடு அணையுமுன்பாக, பிடுங்கிச் செல்ல வேண்டுமென்று சிலர் அவசரப்படுகிறார்கள்.

இவை தவிர, பழையனவற்றைத் தோண்டி எடுத்து புதிய விவகாரங்களை உருவாக்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சகல இன மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மகிந்தரும் அழைப்பு விடுக்கிறார்.

வதைமுகாமில் இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் அல்லல்படும்போது, யாழ் நகரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தத் தேர்தல் நடாத்தியவரல்லவா இந்த பெருந்தேசிய இன சனாதிபதி.

ஆதலால் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உடலங்களைத் தோண்டி எடுக்க, முயற்சிக்க வேண்டாமென மகிந்தர் கூறுவது போலுள்ளது. அதைவிட, இன்னுமொரு முக்கிய அமைச்சர், முகாம் மக்களை அடைத்து வைத்திருப்பதற்காகக் கூறும் வியாக்கியானங்களையும் கேளுங்கள்.

அதாவது வதை முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்தால், தென்னிலங்கையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அற்றுப்போய் விடுமாம். தமது பாதுகாப்பிற்கான உத்தரவாதம், தமிழ் மக்களை சிறையில் அடைப்பதால் உறுதிப்படுத்தப்படுகின்றதென சிங்களம் கூறும் விளக்கங்களை, சர்வதேசமும் ஏற்றுக் கொள்கிறதா?

ஊடகவியலாளர்களை கடத்துவதும், பின்னர் படுகொலை செய்து வீதியோரத்தில் வீசுவதும், இத்தகைய பாதுகாப்பு நியாயப்படுத்தலிற்கு உட்பட்டவைபோல் தெரிகிறது.

பத்தி எழுத்தாளர் திசநாயகம் அவர்களுக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதன் ஊடாக, சிங்களத்தின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதென, பெளத்த சிங்களப் பேரினவாதச் சக்திகள் ஆறுதலடைகின்றன.

ஆயினும், உலகெங்கும் இருந்து கிளம்பும் எதிர்ப்பலைகளையிட்டு சிங்களம் அதிர்ச்சியடையவில்லை. மகாவம்சக் கண்ணாடிக்கென்றொரு ஊடக சுதந்திரவரையறை உண்டு. இன ஒடுக்குமுறை குறித்து எழுதப்படும் எழுத்துக்களை, இக் கண்ணாடி, ஊடுருவிச் செல்ல அனுமதிக்காது.

எழுத்துச் சமராடிய திச நாயகத்தின் மாற்றுச் சிந்தனைகள், பேரினவாத ஊடக கட்டமைப்பிற்குள் உள் வாங்கப்படக்கூடிய கருத்துக்கள் அல்ல என்பதில், சிங்களம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகவே, தமது போக்கிற்கு ஒத்திசைவாக இயங்க மறுக்கும் ஊடகத்தாரை, சிறையில் அடைப்பதைத்தவிர, வேறு மார்க்கம் மகிந்த சிந்தனையாளர்களுக்கு இருக்க முடியாது.

இந்த ஆண்டிற்கான சர்வதேச சுதந்திர ஊடகவியலாளர் என்கிற விருதினை திச நாயகத்திற்கு வழங்குவதோடு, உலக ஊடக அமைப்புக்களின் கடமையும் நிறைவு பெறுகிறது. அவரின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்துமாறு அறிக்கை விடுவதோடு அமெரிக்காவின் ஜனநாயகக் கடமையும் முற்றுப்பெறும்.

சிங்களத்தின் சிறையில் மட்டுமல்ல, இடைத்தங்கல் முகாமில்கூட, தமிழ் மக்களின் உயிருக்கு உத்திரவாதமில்லையயன்பதை, எத்தனை காலத்திற்கு இந்த மேற்குலக ஜனநாயக ஜாம்பவான்கள் கூறிக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

83ஆம் ஆண்டு தமிழின அழிப்பில், நிர்வாணமாக, தனது இரு கைகளாலும் தலையைத் தாங்கி, அவமானமடைந்து குந்தியிருந்த அந்த தமிழ் இளைஞனின் புகைப்படம், உலகின் மனச்சாட்சியை உலுக்கியது.

அதைவிடக் கொடுமையான வக்கிரத்தின் உச்சப் படிநிலையை, அண்மையில் வெளியான, நாசிப் படுகொலைகள் போன்று அமைந்த கோரக் காட்சிகள், உலக மக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது.

30 இலட்சம் வியட்னாம் மக்களை, கம்யூனிசத்தின் பெயரால் கொன்றொழித்த உலக நாயகனிற்கும், இந்தக் காணொளி அதிர்ச்சியளித்ததாம். இனியாவது, வன்னிப்படுகொலைகளுக்கு, சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணையயான்று முன்னெடுக்கப்படவேண்டுமென இவர்களால் உறுதிபடக்கூற முடியுமா? சந்தேகந்தான்.

இந்தியா என்கிற பிராந்திய ஜனநாயக வல்லாதிக்கம், அதனையும் தடுத்து நிறுத்தப்படாத பாடுபடுமென்பதை நாம் புரிந்துகொள்வோம். ஆகவே சிங்களப் பேரினவாதச் செயற்பாட்டிற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளும், கருத்துக்களுமே மக்களுக்கு இப்போது தேவை.

பிராந்திய வல்லரசுகள் தமது சந்தைப் போட்டிக்காகவும், கேந்திர ஆதிக்கத்திற்காகவும், ஒடுக்குமுறையாளனாகிய சிங்களத்தோடு உறவாடி, தமிழின அழிப்பிற்குத் தொடர்ந்தும் துணை போவார்கள்.

தற்போது உலகப் பொருளாதாரச் சீரழிவு உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரளயம், ஒடுக்குதலிற்கு உள்ளாக்கப்படும் மக்களின் போராட்டங்களை, இயங்குநிலைக்கு முன் தள்ளிச் செல்கிறது.

அந்த முற்போக்கான வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தினை அதனோடு இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்காகப் பேசுபவர்கள், அறிக்கை விடுபவர்கள் எல்லோரும் எமக்காகப் போராட முன்வருவார்கள் என்கிற கற்பிதம் தவறானது.

ஒடுக்கப்படும் மக்களே அதனை உணர்ந்து கொள்வார்கள். அவர்களுடன் இணைந்து போராடுவதே விடுதலையைச் சாத்தியமாக்கும்.

இதயச்சந்திரன்.

ஈழமுரசு (11.09.09)--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP