சமீபத்திய பதிவுகள்

சாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்குகிறார்

>> Saturday, August 9, 2008

சாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்குகிறார். அமெரிக்கர்களுக்கு அறிவு உண்டா?

கேரளாவை எந்தக் கட்சி ஆண்டாலும் இந்திராணி போல ஒரு வாசகம் நிரந்தரமாக இருக்கிறது. ``கடவுளின் சொந்த நாடு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுப்பதற்காக, கடவுள் மடமையைக் கம்யூனிஸ்ட்கள் உள்பட பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவலம், அங்கே!

படித்தவர்கள் விழுக்காடு அங்கேதான். முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும், பெண் கல்வியிலும் அதே நிலை. எவரெஸ்ட் சிகரத்தில் எட்மண்ட் ஹிலாரி ஏறி நின்ற போது `சாய், சாய் என்று ஒரு கேரளக்காரர் தேநீர் விற்றார் என்று கூறுவது உண்டு.

இது உண்மை யல்ல; ஆனாலும் உலகின் எந்த மூலைக்கும் சென்று பிழைத்துக் கொள்ளும் மலையாள மக்களின் தன்னம்பிக்கைக் குணத்திற்கோர் எடுத்துக் காட்டாகும்.

ஆனால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் அங்கே தான் அதிகம் என்பது ஒரு நெருடல்.

சமுதாயச் சீர்திருத்தத்தின் எல்லை - பொது உடைமை என்றார் தந்தை பெரியார். அத்தகைய பொது உடைமைக் கொள்கை பூத்துக் குலுங்கி ஆட்சி அமைத்திடும் வாய்ப்பு ஏற்பட்டதும், தொடர்வதும் அங்கேதான்.

கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்ற காரணத்தால், சபரிமலை மோசடிகளைக் கண்டு கொண்டும் கண்டிக்கும் நடவடிக்கைகளை எடுக்காமலும் இருக்கும் நிலையும் அங்கேதான்.

முற்போக்குக் கருத்துகள் முகிழ்ந்துள்ள மண்ணில் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான ஜோதிடமும், மாந்திரீகமும், தேவப் பிரஸ்னமும் கொடி கட்டிப் பறப்பதும் அதே மண்ணில்தான்.

இப்படிப் பிற்போக்குக் கருத்துகளும் முரண் பாடுகளும் மொத்தமாகக் குடியிருக்கும் மண்ணாக மலையாள மண் இருப்பது இன்னொரு அவலம்.

இதையெல்லாம் கண்டுதான் விவேகானந்தர் சொன்னார் `பைத்தியக் காரர்களின் நாடு என்று.அந்த நாட்டில் அண்மைக் காலக் கொடுமை சாமியார்களின் செல்வாக்கு பெருகுவதும், அவர்களின் கொடுமைகளுக்கு மக்கள் பக்தியின் பேரால் பலியாவதும்!

கடவுள் நம்பிக்கையை விட மோசமானது கடவுள் மனிதர்களை நம்புவது. ஏற்கெனவே, அமிர்தானந்தமயி எனும் சுதாமணி அம்மையார் தன் மடமை ராஜ்யத்தை இம்மண்ணில் தொடங்கி இந்தியா முழுக்க, அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளிலும் பரப்பி வருவதையே சகித்துக் கொள்ள முடியாத நிலை

புதுவகை தரிசனம்.
இந்நிலையில், குட்டிச் சாமியார்கள் கிளம்பி குட்டிச் சாத்தான்களாக விளங்கிக் குழப்பி வருகிறார்கள். சுதாமணி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து `ஆசீர்வாதம் செய்து பேர் பெற்று விட்டார். மேலை நாடுகளில் கட்டி அணைக்கும் சாமியார் (Hugging Swamy) என்றே பெயர்.

இந்த மயிலைப் பார்த்துப் பல வான்கோழிகளும் ஆடத் தொடங்கியுள்ளன.
32 வயது திவ்யா எனும் `சாமியாரினி திருச்சூருக்கு அருகில் உள்ள இரிஞாலகுடா பகுதியில் `ஆசிரமம் நடத்துகிறார். காலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். ஆசி வழங்குகிறார். எப்படி தெரியுமா?

மெல்லிய மேலாடை மட்டுமே அணிந்து பக்தர்கள் முன்னிலையில் `ஸ்நானம் செய்கிறார். ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்குகிறார். எல்லாரும் இதைக் காணவே நூற்றுக் கணக்கில் கட்டணம் செலுத்திக் கூடுகின்றனர். பணம் கூடுதலாகக் கட்டித் தரிசனம் செய்பவர்களைத் ``தொட்டு அருளாசி வழங்குவாராம்.

இதற்குப் பணக்காரர்களின் வரிசை பெரிது. பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.தரிசனம், விசேஷ தரிசனம் பற்றிய விவரங்களை இணைய தளத்தில் வெளியிட பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் வந்துகூடத் தொடங்கினர். ஆசிரமம் விரிவுபடுத்தப் பட்டது.கூடவே தொழிலும் விரிவானது.

திவ்யாவின் கணவர் ஜோஷி தம் மனைவியுடன் சேர்ந்து கொண்டு நோய்களைக் குணப் படுத்துதல், பேய் ஓட்டுதல் தொழிலைத் தொடங்கி விட்டார். வெளிநாட்டு வேலை, விசாவுக்கு ஏற்பாடு செய்தல் என்று தொழில் எல்லை விரிந்தது.

வந்தது ஆபத்து. இந்த வகையில் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் செய்தனர். காவல்துறை விசாரணை நடக்கிறது.

விஜயகுமாரி எனும் பெண் சேலை கட்டிக் குளித்து ஈரத் துணியுடனேயே தலையில் கிரீடம் வைத்து `தரிசனம் தந்து ஏமாற்றத் தொடங்கினார். கூலி வேலை செய்து வந்த அவரின் கணவர், ஷாஜிகுமார் ஜதிடர் வேடம் போட்டார். இரண்டு பேருமாகப் பணத்தை அள்ளத் தொடங்கினர்.

ஆசை அதிகமானது. நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக விஜயகுமாரி அவிழ்த்து விட்டார். கூட்டம் மேலும் கூடிப் பணம் குவிந்தது. கூடவே ஆபத்தும் வந்தது. நோய் தீராதவர்கள் புகார் செய்தனர்.

காவல்துறை நுழைந்தது. விசாரணையில் காலை தரிசனத்திற்கு வந்து போகும் வி.அய்.பி.களில் ஒருவர் மத்திய மந்திரியாக இருந்தவராம். விசாரணையின் முடிவில் என்னென்ன கிளம்பப் போகின்றனவோ?
(மதுரை `மாலை மலர் 15.6.2008-இல் இதை வெளிப்படுத்தியுள்ளது. சென்னைப் பத்திரிகைகளில் காணோம். யாரைக் காப்பாற்றுகிறார்கள்?)

அமெரிக்கர்களுக்கு அறிவு உண்டா?
அமெரிக்க நாடு அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குகிறது. அறிவியலாளர்களும் தொழில் நுட்பவியலாளர்களும் தங்கிப் பணியாற்றிட வாய்ப்பு கள் நிரம்பப் பெற்றுள்ள நாடு. ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உலக அளவில் 40 விழுக்காடு செலவழிக்கும் நாடு.

பணக்கார நாடுகளைச் சேர்ந்தவற்றில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோரில் 37 விழுக்காட்டினரையும் உற்பத்தியாளர்களில் 38 விழுக்காட்டினரையும் பெற்றுச் சிறந்து விளங்கும் நாடு.

நோபல் பரிசு பெற்றோரில் 70 விழுக்காடு பேர்கள் இந்நாட்டில் பணிபுரிகின்றனர். உலகிலேயே மிகச் சிறப்புடன் விளங்கும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் 66 விழுக்காடுக்கு மேல் இந்நாட்டில்தான் பணியாற்றுகின்றனர். உலகில் சிறந்த 20 பல்கலைக் கழகங்களில் முக்கால்வாசி இங்கேதான் உண்டு.

இத்தனைக்கும் காரணம் எது? ஆய்வே நடத்தப்பட்டுள்ளது. முடிவு இதுதான்:வெளி நாடுகளில் பிறந்த வளர்ந்த அறிவியலாளர்களும் பொறியாளர்களும் தான் இதற்குக் காரணம் என்று ராண்ட் கார்ப்பரேஷன் எனும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும்கூடச் சொல்லியிருக்கிறது - சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்திருப்பவர்களால்தான் இந்த உயர்நிலை எட்டப்பட்டிருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் வாழ்க்கை வசதிகள் வெளிநாட்டினரைக் கவர்ந்து அழைத்துப் பணியாற்ற வைத்ததால், அவர்களின் ஆற்றல் அமெரிக்காவின் ஆற்றலாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்த உயர் நிலைக்கு அமெரிக்கர்களின் அறிவோ, ஆற்றலோ உதவவில்லை என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

டார்வின் கொள்கையைப் பாடமாகப் போதிப்பதா என்பதற்கு இன்னும் வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கும் மூட மதியாளர்கள் நிறைந்த நாடுதானே அமெரிக்கா!

கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்று டாலர் நோட்டில் அச்சுப் போட்டு மடமையைப் பறைசாற்றும் நாடுதானே அமெரிக்கா! கடவுளோடு கலந்து பேசி விட்டுத்தான் ஈராக் நாட்டுடன் சண்டைக்குப் போனேன் என்று அதிபர் புஷ் பேசினாரே, அதுபோதாதா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நிலையில் அமெரிக்கர்களின் அறிவை எடை போடுவதற்கு?
 
சு. அறிவுக்கரசு

source:viduthalai.com
 
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP