சமீபத்திய பதிவுகள்

கலாநிதி, தயாநிதி - சி.பி.ஐ., தமாஷ்:

>> Tuesday, October 11, 2011


"ஏர்செல்' நிறுவனத்தை விற்க நிர்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, சன் "டிவி' கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதியின் வீடுகள் உட்பட ஒன்பது இடங்களில் மட்டும் நேற்று சி.பி.ஐ., பெயரளவுக்கு ரெய்டு நடத்தியது. பரபரப்பான இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மலேசியா, மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கில் இப்போதைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி, கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என, குற்றம் சாட்டப்பட்டது. "தயாநிதி கடந்த 2004 - 2007ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார்' என்று அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த மே மாதம் புகார் கொடுத்தார். ஜனவரி, மே மாதங்களில் எழுந்த ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தாமதமாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியது.


இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தயாநிதி, கலாநிதி வீடுகள், சன், "டிவி' அலுவலகம் மற்றும் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மட்டும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சன், "டிவி' நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. இதன் துணை நிறுவனங்கள் வேறு ஏராளமாக உள்ளன. அந்த அலுவலகங்கள் பக்கம் சி.பி.ஐ., கவனத்தைச் செலுத்தவே இல்லை.


தலைநகர் டில்லியில் சி.பி.ஐ., வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொலைத்தொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் (தயாநிதி), சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் (கலாநிதி), பிரிட்டன் மற்றும் மலேசியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர், மற்றொரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர், சென்னை, மலேசியா, பிரிட்டனில் இயங்கும் மேலும் மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், நபர்கள் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி), ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7, 12 மற்றும் 13 (1)(டி)யுடன் இணைந்த பிரிவு 13 (2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாநிதி மற்றும் கலாநிதி மீதான வழக்கு பற்றிய அத்தனை ஆவணங்களும் ஏற்கனவே எங்கள் வசம் உள்ளன. இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருப்பது, அவற்றுக்கான துணை ஆவணங்கள் மட்டுமே. இந்தச் சோதனையில் எந்த ஆவணமுமே கிடைக்காவிட்டாலும், வழக்கை நடத்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு வழக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி தான்.இன்னும் சில ஆவணங்கள், பத்திரிகைகள் மூலமாக, பொதுமக்களின் பார்வைக்கே வந்துவிட்டன. அந்த வகையில், கலாநிதி, தயாநிதி மீதான வழக்கு, சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது. கைது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாதையில், இந்த வழக்கும் செல்லும்.சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு இருப்பதால், எங்களுடைய செயல்பாடுகளில் எந்த வகையான அலட்சியமோ, கவனக்குறைவோ இருக்கப் போவதில்லை. இரு நாட்களுக்கு முன் தான், அவர்களிடம் டில்லியில் எங்கள் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து, மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகும் என இப்போது கூற முடியாது. அதன் பின் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு நடந்த ரெய்டு, குற்றப் பத்திரிகை தாமதம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, தயாநிதி, கலாநிதி மீதான நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று தான் கூறப்படுகிறது. "ஒன்பது மாதங்கள் கழித்து, ஒரு சில இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தி எவ்வளவு ஆவணங்களை கைப்பற்றி விட முடியும்?முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இன்னுமா இந்த அலுவலகங்களில் இருக்கும்? வழக்கை திசை திருப்பவும், மத்திய அரசு சந்தித்து வரும் பிரச்னைகளில் இருந்து மீடியாக்களின் கவனத்தை திருப்பவும் தான் இது போன்ற நாடகத்தை சி.பி.ஐ., நடத்துகிறது,' என, கம்யூனிஸ்ட், பா.ஜ., கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கை, நேற்று முன்தினம் பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன் தவிர, சன் டைரக்ட் மலேசிய கம்பெனிகளான, ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


அட்டை பெட்டிகளில் அள்ளி செல்லப்பட்டன:தயாநிதியின் டில்லி வீட்டிற்குள், காலை 7.30 மணிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தத் துவங்கினர். இடைவிடாது அவர்கள் சோதனையைத் தொடர்ந்தனர். மதியம் உணவு இடைவேளையின்போது கூட, வெளியில் யாரும் வரவும் இல்லை. தயாநிதியின் வீட்டின் முன், செய்தியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.யாரையும் உள்ளே நுழைய விடாது கேட் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே கார் பார்க்கிங் ஏரியாவில் டவேரா கார் நின்று கொண்டிருந்தது. சோதனையை 4 மணி வாக்கில் முடித்துவிட்டு அந்த காரில் கிளம்பி, அதிகாரிகள் வெளியில் செல்லலாம் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். சோதனையின் முடிவில், நான்கு பெரிய அட்டைப் பெட்டிகள் டவேரா காருக்குள் ஏற்றப்பட்டன. அந்த பெட்டிகளில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேறு ஒரு வழியாக அந்த டவேரா கிளம்பிச் சென்றுவிட்டது. பின்னர் நடந்தே வெளியில் வந்த அதிகாரிகள், வீட்டின் முன் வந்து நின்ற இன்னொரு காரில் ஏறிச் சென்று விட்டனர்.


"டிவி' தெரிந்த ரகசியம் : சென்னையில் உள்ள, சன், "டிவி' தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவே, பிரபல ஆங்கிலச் செய்தி சேனலின் நேரடி ஒளிபரப்பு வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் அந்த நிறுவனத்தின் நிருபர்கள் வந்தனர். பின்னர் தான் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு காரில் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். "சி.பி.ஐ., ரெய்டு குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்; அவர்கள் தான் எங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ரெய்டு எல்லாம் சும்மா ஒப்புக்குத்தான்' என அவர்கள் பேசிக் கொண்டனர்.


என்னென்ன பிரிவுகளில் வழக்கு?


இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி): குற்றச்சதி. இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தண்டனை வழங்கத்தக்க கிரிமினல் குற்றங்களுக்கு உரிய சதித் திட்டத்தைத் தீட்டுதல். இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாத சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கை. இப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 12: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இப்பிரிவின்படியும் ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (2) உடனான 13 (1)(டி): ஒரு பொது ஊழியர் லஞ்சமாகவோ, சட்டவிரோதமான வகையிலோ, தனக்காகவோ, பிறருக்காகவோ அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுநல நோக்கமில்லாத செயலைச் செய்து, அதற்காக பொருளோ, பயனோ ஆதாயமாக அடைதல். இத்தகைய குற்ற நடத்தையில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு, ஓராண்டுக்கு குறையாமல், ஏழாண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.


சென்னையில் ரெய்டு நடந்த இடங்கள் : 
1.போட் கிளப் ரோட்டில் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி வீடு
2.2வது அவென்யூவில் உள்ள கலாநிதி வீடு
3.7மந்தைவெளிபாக்கத்தில் உள்ள சன், "டிவி' அலுவலகம்
4.நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுனிதா ரெட்டி வீடு
5.கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அலுவலகம்



source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP