பெங்களூர், செப்.23-
கிறிஸ்தவ ஆலயங்களை தாக்குவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கர்நாடக மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தாக்குதல்
கர்நாடகத்தில் மதமாற்றம் நடப்பதாக கூறி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, தும்கூர் போன்ற மாவட்டங்களில் இந்த தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடக பா.ஜனதா அரசுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.
ஆனாலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல் நேற்று முன்தினம் பெங்களூருக்கு பரவியது. இந்த தாக்குதலால் கர்நாடகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விவாதிக்க நேற்று காலை மந்திரி சபை அவசர கூட்டம் முதல்-மந்திரி எடிïரப்பா தலைமையில் நடந்தது. கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பேராயர் கோபம்
மந்திரி சபை கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி எடிïரப்பா பெங்களூர் மறைமாவட்ட பேராயர் இல்லத்திற்கு சென்றார். பேராயர் பெர்னார்டு மோரசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக அவர் சென்றார். அதன்படி பேராயரை எடிïரப்பா சந்தித்தார். அப்போது போலீஸ் மந்திரி வி.எஸ்.ஆச்சாரியா, மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.
முதல்-மந்திரியை பேராயர் பெர்னார்டு மோரஸ் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். ஆனால் முதல்-மந்திரி எடிïரப்பாவிடம் அவர் கடும் கோபம் அடைந்தார். வீட்டு வாசலில் நின்றபடியே எடிïரப்பாவிடம் பேராயர் கூறியதாவது:-
மனம் புண்பட்டு விட்டது
நீங்கள் எனது இல்லத்திற்கு வந்தற்காக நன்றி. நீங்கள் பதவி ஏற்றபோதும் இதே இல்லத்திற்கு வந்தீர்கள். அப்போது சிறுபான்மையின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று என்னிடம் உறுதி அளித்தீர்கள். ஆனால் சமீப நாட்களாக கர்நாடகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்கள் அனைவரும் மனவேதனை அடைந்து உள்ளனர். இந்த வேதனைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கூட தெரியவில்லை.
தாக்குதலை தடுக்காமல் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் அரசாங்கம் மீது எங்களுக்கு திருப்தி இல்லை.
இவ்வாறு பேராயர் பெர்னார்டு மோரஸ் கூறினார்.
அப்போது முதல்-மந்திரி எடிïரப்பா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே கூறினார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இருவரும் உள்ளே சென்றனர்.
அங்கு முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு பேராயர் இளநீர் கொடுத்தார். அவர்கள் 20 நிமிடம் ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது பேராயர் பெர்னார்டு மோரஸ், எடிïரப்பாவிடம் சில கோரிக்கைகளை வைத்தார். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எடிïரப்பா பதிலளித்தார்.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடிïரப்பா வெளியே வந்தார். அப்போது அவரது முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேராயர் பெர்னார்டு மோரஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பிக்கை
முதல்-மந்திரி எடிïரப்பாவுடன் பேசிய போது எனது முகத்தில் கோபம் இல்லை. மிகவும் வருத்தம் தொற்றி கொண்டு இருந்தது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் அல்ல. கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரது முகத்திலும் உள்ளது. தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று முதல்-மந்திரி கூறியுள்ளார். அவரது உள்ளத்தில் நல்ல எண்ணம் ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் இனியாவது பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பேராயர் பெர்னார்டு மோரஸ் கூறினார்.
Read more...