சமீபத்திய பதிவுகள்

பாக்.,நட்சத்திர ஓட்டலில் 53பேரை பலி கொண்ட பயங்கரம்:துப்புத் தந்தால் ஒரு கோடி வெகுமதி

>> Tuesday, September 23, 2008

 
 
lankasri.comபயங்கரவாதம் என்ற புற்றுநோயை வேரோடு அழிப்போம் என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் இரவு, லாரி நிறைய வெடிகுண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப் படையினர், "மேரியாட்"என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் மீது மோதியதில் 53பேர் உடல் சிதறி பலியாயினர்;270 பேர் படுகாயமடைந்தனர்.

ஐ.நா., பொது சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, "டிவி"யில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எதற்கும் அஞ்சாத நாடு பாகிஸ்தான். பயங்கரவாதிகளின் இது போன்ற கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் பயந்து விட மாட்டோம். பயங்கரவாதம் ஒரு தொற்றுநோய். புற்றுநோய் போன்ற இந்த பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம். இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பயிற்சிக்களமாக பாகிஸ்தானை மாற்ற முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது.புனித ரம்ஜான் மாதத்தில் இது போன்ற நாசவேலையில் ஈடுபடுபவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு என் மனைவி பெனசிர் புட்டோவும் பலியாகியுள்ளார். இதே போன்று ஏராளமானோர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துள்ளனர். உறவினர்களை இழந்தவர்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் அரசு அவர்களை பாதுகாக்கும்.இவ்வாறு சர்தாரி பேசினார்.

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது:
அதிபராக பதவியேற்ற சர்தாரி, பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தற்கொலைப் படையினர் முதலில் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளனர். ஆனால், கடும் பாதுகாப்பு காரணமாக அவர்கள் மேரியாட் ஓட்டல் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் அமைச்சர்களுக்காக சில கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக மணல், செங்கல் போன்றவற்றை லாரியில் ஏற்றி வருவது போல மணலுக்கு அடியில் வெடிமருந்தை ஏற்றி தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த வந்துள்ளனர். மேரியாட் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பால் சாலையில் 20 அடிக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இங்கு வெடித்த குண்டு சத்தம் 30 கி.மீ., தொலைவுக்கு கேட்டுள்ளது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்தில் 290 அறைகளும் சேதமடைந்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் 100 மீட்டர் தூரத்துக்கு சிதறியுள்ளன.செக் நாட்டு தூதர் மற்றும் ஒரு அமெரிக்கர், ஜெர்மானியர் உட்பட 53 பேர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர். டென்மார்க், பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த 20 பேர் உட்பட 270 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவ்வாறு ரெஹ்மான் மாலிக் கூறினார்.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைப்பதற்காகவே இத்தாக்குதல் நடந்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் புஷ் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் அல்-குவைதாவுக்கு தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP