சமீபத்திய பதிவுகள்

இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு

>> Thursday, July 31, 2008


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தலீபான்கள் மிரட்டல்
இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு


இஸ்லாமாபாத், ஆக.1-

பாகிஸ்தானின் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகள், இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகாரம் செலுத்த முற்பட்டு உள்ளனர். அவர்கள் இண்டர்நெட் மையங்களை மூடும்படியும், கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்தும்படியும், இசை தட்டுக்கள் மற்றும் சி.டி.க்களை விற்கும் கடைகளை மூடும்படியும் மிரட்டல் விடுத்து உள்ளனர். பர்தா அணியாத பெண்களின் முகங்கள் மீது அமிலத்தை வீசப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.

முசாபர்கர் நகரில் உள்ள 36 இண்டர்நெட் மையங்களுக்கும், மியுசிக் சி.டி.கடைகளுக்கும் கடந்த 18-ந்தேதி மிரட்டல் இ.மெயில்களும் கடிதங்களும் வந்து உள்ளன என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

இதுபோல கோட் அட்டு நகரில் உள்ள இண்டர்நெட் மையங்களுக்கு கடந்த 29-ந்தேதி மிரட்டல் கடிதங்கள் வந்து உள்ளன. அவர்கள் தங்களின் வர்த்தகத்தை மூடிவிட்டு இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட வர்த்தகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429224&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


வங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


டாக்கா, ஆக.1-

வங்காளதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக பரிசால் டிவிஷனல் அதிவேக விசாரணை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த அமைப்பு கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் 200 பேர் பலியானார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஷேக் அப்துர் ரகிமான் மற்றும் துணைத்தலைவர் சித்திக்குல் இஸ்லாம் என்கிற பங்களா பாய் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். இதனால் அந்த அமைப்புக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த 27 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 350 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=429229&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை


சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை


சவுதி அரேபியாவில் நாய், பூனை விற்பதற்கும், அவற்றை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரியாத் கவர்னர் இளவரசர் சட்டாம் இப்படி ஒரு தடையை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். மார்க்க அறிஞர்கள் கவுன்சில் கொடுத்த உத்தரவுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒழுக்க விதிகளை மேம்படுத்தும் கமிஷன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் கூறிய அறிவுரையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக இந்த கமிஷன் தலைவர் அகமது அல் கம்தி தெரிவித்தார். வீட்டுக்குள் நாய்களை வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வேட்டைக்காகவும், போலீஸ் வேலைக்காகவும், வீடுகளை காவல் காக்கவும், ஆடு, மாடுகளை விவசாயிகள் பாதுகாக்கவும் நாய்கள் வளர்க்கலாம் என்று விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429223&disdate=8/1/2008

StumbleUpon.com Read more...

எங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி

 
03.08.08      ஹாட் டாபிக் 
 

வெடிகுண்டுகள் வெடித்து அதனால் சிதறிய ரத்தம் காயும் முன் நெல்லையில்  சேக் அப்துல் கபூர் என்பவரை அமுக்கியிருக்கிறார்கள் போலீஸார். அதேபோல சென்னை மண்ணடியில் `இறைவன் ஒருவனே' என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர், ஹீரா ஆகியோரை போலீஸாரை  விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், `பெங்களூரு, குஜராத் குண்டு வெடிப்புகளில்கூட தப்பியோடிய இந்த இருவருக்கும் தொடர்பிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்அடிப்படையில் போலீஸார்  வலைவீசித் தேடி வந்தனர்.  போலீஸாரின் பிடியில் சிக்கிய அப்துல்காதரின் தாயார் பசீராவை நாம் மண்ணடியில்சந்தித்துப் பேசினோம்.

"காதர்தான் எனக்கு மூத்த பையன். துணிக்கடை வைத்து நல்லபடியாகத் தொழில் நடத்தி வந்தான். அந்தக் கடைக்கு போலீஸ் தேடும் தீவிரவாதிகளில் ஒருவரான தவ்ஃபீக் அடிக்கடி வருவார். என் மகனும் அவரோடு அடிக்கடி பேசுவானே தவிர, மற்றபடி அவனுக்கு  எந்தவித சம்பந்தமுமில்லை. முன்பு ஒருமுறை தவ்ஃபீக்கை தேடி போலீஸார் என் வீட்டுக்கு வந்து அப்துல்காதரைக் கைது செய்தனர். மறுநாள் பேப்பர் பார்க்கும்போது, `என் மகனைத் தீவிரவாதி' என்றும், லாட்ஜில் சதி வேலை செய்யும்போது அவனைப் பிடித்ததாகவும் தகவல் வெளியானது. நான் அதிர்ந்துபோனேன்.

அவனுக்கு ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்றெல்லாம் கோர்ட்டில் சொன்னார்கள். பிறகு ஜாமீன் கிடைத்து, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவனை, மீண்டும் கூட்டிப் போய்விட்டனர். கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தேவையில்லாமல் என் மகனைத் தீவிரவாதியாக மாற்றிவிட்டனர்'' என்ற பசீரா, உயர்நீதிமன்றத்தில் காதரை மீட்க ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கோர்ட்டில் வழக்கு வரவிருந்த சிறிது நேரத்திலேயே காதரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் போலீஸார்.

பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய `தவ்ஃபீக்கும், அபுதாகீரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம்' என்ற தகவல் பரவியதால், மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்திலேயே குவிந்து கிடந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அபுதாகீர் கோர்ட்டில் சரணடையப் போவதாகத் தகவல் பரவ, மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோர்ட்டில் சரணடையச் செல்வதற்கு முன்பு நாம் அபுதாகீரை, அவரது வக்கீல் ரஜினிகாந்த் உதவியோடு மண்ணடியில் சந்தித்துப் பேசினோம்.

"என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இந்த இரண்டு மாதத்தில் போலீஸார் என்னை `லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியாகவே மாற்றிவிட்டனர். மண்ணடியில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புதான் `இறைவன் ஒருவனே' தவ்ஃபீக் எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பேச்சுக்களால் கவரப்பட்டு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். ஒருநாள், அப்துல்காதர் என்னிடம், போலீஸ் தேடி வருவதாகச் சொன்னார். மறுநாள், `இந்து மதத் தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகவும், லாட்ஜில் சதித்திட்டம் போட்டதாகவும், நானும் தவ்ஃபீக்கும் தப்பியோடிவிட்டதாக' தகவல் வெளியானது. ஆனால், லாட்ஜில் பழனி உமர் மட்டும்தான் தங்கியிருந்தான். ஹீராவை எக்மோர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இரண்டு வேட்டிகள்தான் இருந்தன. ஆனால், வெடிகுண்டு, துப்பாக்கி இருந்ததாகப் போலீஸ் சொன்னது.

மரபுரீதியாக நாங்கள் பேசிய பல பேச்சுக்கள் சில இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு எங்கள் அமைப்புக்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு வருவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் தீவிரவாதியாக சித்திரிக்கப்பட்டதற்கு இதுதான் ஒரே காரணம். தவ்ஃபீக் மற்றும் எங்களில் சிலரை ஒழித்துக்கட்டினால்தான் நிம்மதி என்று அவர்கள் செயல்பட்டார்கள். கடந்த ஜனவரி 11_ம்தேதி நரேந்திரமோடி வந்ததற்கு, எங்களைக் கொடி பிடித்து போலீஸாரே எதிர்ப்பு காட்டச் சொன்னார்கள். நாங்கள் மறுத்ததும், பாதுகாப்புக் கைது என்ற பெயரில் பதினேழு நாட்கள் சிறையில் அடைத்தனர். இதற்கு அந்த அமைப்புகளின் தூண்டுதல்தான் காரணம்.

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பிக்கு பின்புதான், என் மீது சதித்திட்டம்,  நாச வேலைக்கு திட்டமிட்டது என்ற ரீதியில் வழக்குகள் போடப்பட்டன. அதற்கு முன்பு என் மீது ஓர் அடிதடி வழக்குகூட கிடையாது. தவ்ஃபீக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவர் வெளியில் வந்தால் போலீஸார் சுட்டுக் கொன்று விடுவார்கள். காரணம். ஒருமுறை போலீஸார் தவ்ஃபீக்கை என்கவுன்டரில் சுடப் போகும் தகவலைக் கேள்விப்பட்ட அவர் ஆவேசமாகி, `என்னை  எப்படிக் கொல்கிறார்களோ, அதேபாணியில்தான் அவர்களுக்கும் மரணம் நேரும்' என்றார். இது போலீஸாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

வேலூர் கோட்டையில் உள்ள மசூதி தொடர்பாக பிரச்னை வந்தபோது, `மசூதியை இடித்தால் எங்கள் கைகள் சும்மா இருக்காது' என இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை குறிவைத்து பேசினோம். உடனே `ராம.கோபாலன் உயிருக்குக் குறி' என்றார்கள். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு என்றதால் தலைமறைவாக இருந்தோம். இப்போது குஜராத் குண்டுவெடிப்பிற்கும் எங்களைக் கைகாட்டுகின்றனர். நாங்கள் வன்முறைப் பாதையை விரும்பவில்லை. அமைதியான வழியில்தான் இயக்க வேலைகளைச் செய்து வந்தோம்.

இரண்டு மாதமாக தலைமறைவாக இ,ருக்கிறேன். என் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்துவிட்டனர். என் அப்பாவை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பது, என் தங்கையை நடுரோட்டில் வைத்து விசாரிப்பது என போலீஸார் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அல்லாவை மட்டும்தான் நான் நம்புகிறேன். கோர்ட்டில் சரண்டரான பிறகு எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். இருப்பினும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை முழுமையாக எதிர்கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன்'' என்றபடியே எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டராக விரைந்தார் அபுதாகீர்.

நீதிமன்றத்திற்குள் அபுதாகீர்  நுழைந்தபோது, போலீஸார், மீடியாக்கள் என ஒரு பெரும்படையே அங்கே திரண்டிருந்தது. அபுதாகீரை `பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு' நீதிபதி முருகானந்தம் உத்தரவிட, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபுதாகீர்.

இறுதியாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். "தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அப்துல்காதரை விடுவித்துவிட்டோம். ஹீரா என்பவரை விசாரிக்க நெல்லை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அபுதாகீரை விரைவில் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது உள்பட சில வழக்குகள் அவர் மீது இருக்கிறன. விசாரணை முடிவில் பயங்கரவாத அமைப்புகளோடு இவர்களுக்கு உள்ள தொடர்புகள் வெளியில் தெரியவரும்'' என்றனர் அவர்கள்.

படங்கள்: ஞானமணி
ஸீ ஆ. விஜயானந்த்

http://www.kumudam.com Reporter

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP