சமீபத்திய பதிவுகள்

சமையல்:30 வகை கூட்டு !

>> Wednesday, February 23, 2011


ம்... காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்... இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்
''காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா... அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே!'' என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.
பிறகென்ன... காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!

தேவையானவை: சௌசௌ துண்டுகள் - 150 கிராம், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
 தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு - 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
தேவையானவை: கத்திரிக்காய் - 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு - 100 கிராம் (ஊற வைக்கவும்).
செய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
தேவையானவை: காலிஃப்ளவர் - 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி... கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
 தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை - கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.
தேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் - 150 கிராம், புளி - எலுமிச்சம்பழ அளவு,  துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
செய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு கீற்று, பால் - அரை டம்ளர், பச்சை மிளகாய் - 2, சர்க்கரை - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.
காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.
தேவையானவை: நறுக்கிய பாகற்காய் - 100 கிராம், புளி - எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -  தேவையான அளவு.  
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து... வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
 தேவையானவை: தக்காளித் துண்டுகள் - 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
தேவையானவை: நறுக்கிய அவரைக்காய் - 100 கிராம், பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ரசப்பொடி - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,  பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
 தேவையானவை: பாகற்காய் துண்டுகள் - 100 கிராம், எள்ளு - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தேவையானவை: கொண்டைக் கடலை - 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
 தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் - ஒரு டம்ளர், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து - 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.    
செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.
 தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு - 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், தக்காளி சாறு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!
 தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் - 250 கிராம், பூசணி வடகம் - 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து... ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.
செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு - 200 கிராம், தேங்காய்ப் பால் - ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து... தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!
 தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு - 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் - தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி,  கொத்தமல்லி தூவி கலக்கவும்.
தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) - 200 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க  வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் - 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை - 100 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து  கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் - 150 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையானவை: காராமணி - ஒரு கப், வேர்க்கடலை - அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி - எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 100 கிராம், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - கால் கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 50 கிராம், புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

 தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் - 150 கிராம், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் - தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர்,  கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி - பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP