|
முதல் முறையாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் நுழைய ஆன்மிக வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்தது! மத்திய, மாநில அமைச்சர்கள், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு விசிட் செய்யாதவர்களே இல்லை. செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும் ஓர் ஆன்மிக மையத்துக்குள்ளேயே நுழைந்து சுமார் 18 மணி நேரம் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது புயல் வேக அதிகாரிகள் குழு! பங்காரு அடிகளாரைத் தலைவராகக்கொண்டு செயல்படும் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகளில் சோதனை நடந்திருப்பது அரசியல்ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10.30 மணிக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பாத பூஜை செய்வது அடிகளாரின் வழக்கம். அவரைக் காண பலதிசைகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். மேல்மருவத்தூரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கடந்த 2-ம் தேதி வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல அடி களார் பாத பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தார். அவரைச் சுற்றி பக்தர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க, இரண்டு அதிகாரிகள் அடிகளாரை அணுகினார்கள். |
''உங்களிடம் இருந்து சில விளக்கங்கள் எதிர்பார்க் கிறோம். ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்!'' என இரண்டே வரிகளில் சொல்லிவிட்டு தாங்கள் யார் என்பதையும் சொன்னார்கள். இதற்குள் கோயிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது. அதிகாரிகள் முதலில் ஆங்கிலத்தில் கேட்க, அடிகளார் அமைதி காத்தார். அடுத்து தமிழில் அவரிடம் ஒத்து ழைப்பைக் கேட்க, மறு வார்த்தை பேசாமல் எழுந்த அடிகளார் பக்தர்களைப் பார்த்து வணங்கிவிட்டு அவர் களுடன் சென்றார்.
பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் அடிகளாரை அழைத்துப் போனார்கள். அறையிலேயே சுமார் 18 மணி நேரம் அமர்ந்திருந்தார் அடிகளார். அதாவது மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரையிலும் அடிகளார் முன்னிலையில் சோதனை நடந்தது.
ஆதிபராசக்தி சித்தர் பீடம், ஆதிபராசக்திபொறியியல் கல்லூரி, ஆதிபராசக்தி பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, கோயிலுக்குப் பக்கத்தில் அடிகளார் தெருவில் இருக்கும் பங்காருவின் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை அமர்க்களப்பட்டது. அடிகளார் தெருவுக்குள் இதுவரை தனியார் வாகனங்கள் நுழைந்ததுகூட இல்லை. அடிகளாரைப் பார்க்க வரும் வி.வி.ஐ.பி-க்களின் கார்கள்கூட தெரு முனையில் நிறுத்தப்பட்டுவிடும். அடிகளார் தெருவில் நடந்தேதான் அவரது வீட்டை அடைய முடியும். ஆனால், அன்று அடிகளார் தெருவுக்குள் அரசாங்கத்தின் 20 வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதே தெருவில் இருக்கும் மூத்த மகன் அன்பழகன். இளைய மகன் செந்தில்குமார். மகள் ஸ்ரீதேவி, மற்றும் அடிகளாரின் அதி முக்கிய உதவியாளர் களின் வீடுகள் என அனைத்திலும் சோதனை நடை பெற்றது. நேரமாக நேரமாக, பாதுகாப்புக் காரணம் கருதி காவலர்களின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது.
தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து சுமார் 2 மணி அளவில் அடிகளாரின் வழக்கறிஞர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
சோதனை தொடங்கியதுமே கோயிலைச் சுற்றியிருக் கும் கடைகள் மூடப்பட்டன. கல்லூரி விடுதி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சோதனையின்போது மௌனமாகவே இருந்த அடிக ளார், மாலை 4 மணிக்கு மேல்தான் அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினாராம். இரவு 8.30 மணிக்கு 'நீங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொள்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரலாம்' என அதிகாரிகள் சொல்ல, 'எனக்கு ஓய்வு தேவை இல்லை!' என்று சொல்லிவிட்டார் அடிகளார்.
ரெய்டு தகவல் கசியத் தொடங்கியதும், ஈரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினர், பெரும் படையாக மேல்மருவத்தூருக்குப் புறப்பட்டு வந்தனர். இவர்கள் சுமார் இரவு 12 மணிக்கு கோயில் வளாகத்தை முற்றுகை இட்டார்கள். சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் எதையோ எடுக்க வெளியில் நின்றிருந்த தங்கள் கார்களுக்கு வந்தபோது, அவர்கள் காதுபடவே வசை பாடியது ஒரு கூட்டம்.
மேல்மருவத்தூரில் சோதனை தொடங்கிய அதே நேரம், சென்னை அடையாறில் உள்ள அடிகளாரின் மகன் அன்பழகன் வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அடிகளார் மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகாவின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. ஸ்ரீலேகா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
மறுநாள் சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு விசாரணை முடித்து வெளியே வந்தார் அடிகளார். அப்போது பெண் பக்தர்கள் உட்பட சுமார் 400 பக்தர்கள் 'அம்மா... அம்மா' என்று கதற ஆரம்பித் தனர். எந்த ரியாக்ஷனும் காட்டாத அடிகளார், கோயிலைச் சுற்றி வந்து சாமி கும்பிட்டுவிட்டு கருவறையின் எதிரில் நிறுத்தப்பட்ட அவர் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டார். புதுச்சேரியில் உள்ள அடிகளாரின் பண்ணை வீடு, ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் செய்யூர் சாலையில் உள்ள ரைஸ் மில்லுடன் கூடிய பண்ணைகள் ஆகியவை சோதனையில் இடம் பெறவில்லை!
வழக்கமாக சோதனை முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் அதிகாரி கள் மேல்மருவத்தூரில் மட்டும் ஏனோ பத்திரிகையாளர்களை தவிர்த்தார்கள். ஒட்டுமொத்த சோதனைகளையும் படமெடுக்கவும், செய்தி சேகரிக்கவும் சென்றிருந்த நிருபர்களுக்கும், புகைப்படக்காரர்களுக்கும் மருவத்தூர் கோயில் வாசலிலேயே முரட்டு ஆசாமிகள் அர்ச்சனை செய்தார்கள். சிலரது இரு சக்கர வாகனங்களும், கேமராக்களும் உடைய, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால், உடனடியான நடவடிக்கை எதுவும் இல்லை! இதனால் ஆத்திரமான பத்திரிகையாளர்கள் மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கின!
மேல்மருவத்தூர்போலவே தமிழகத்தில் இருக்கும் இன்னும் சில கல்லூரிகளிலும் சோதனை நடைபெற்றது. ஆனால், சோதனைக் காலம் நீண்டது மருவத்தூரில் மட்டுமே. டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம். ''ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த நான்கு கல்லூரிகளில் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியும் ஒன்று. தேசாயே இந்தக் கல்லூரிபற்றிய விவரங்களைச் சொல்லி இருக்க வேண்டும். அதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் முறைப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வருமானவரித் துறை ஆகிய மூன்று துறைகளையும் கூட்டாக இணைத்து இந்த ரெய்டை நடத்தி இருக்கிறார்கள். சோதனையில் இடம்பெற்ற அதிகாரிகள் முழுக்கவே சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள்தான். இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே, தமிழ் பேசும் 20 அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒரு குழுவாக கடந்த மாதம் முழுக்கவே மேல்மருவத்தூரில் தங்கினார்கள். செவ்வாடை உடுத்தி கோயிலுக்குச் சென்று வந்தார்கள். அடிகளாரின் வீடு, கோயில், கல்லூரி ஆகியவற்றின் உட்கட்டமைப்பு, அவற்றுக்குப் போய் வர எத்தனை வழிகள் என்பது வரை நோட்டம் விட்டார்கள். அடுத்து ஒரு மாணவரைத் தயார் செய்து, வருவாய்ப் புலனாய்வு அதிகாரியே மருத்துவக் கல்லூரிக்குப் போய் எம்.பி.பி.எஸ். ஸீட் கேட்டு இருக்கிறார். அப்போது நடைபெற்ற பேரத்தை அப்படியே ரகசிய கேமராவில் பதிவும் செய்திருக்கிறார். பூர்வாங்க விசாரணைகளை முடித்துக் கொண்டுதான் களத்தில் இறங்கினார்கள் அதிகாரிகள். ஆனால், அதற்கு முன்பு மாநில அரசிடமும் அனுமதி கேட்டு இருக் கிறார்கள். முதலில் மறுப்புத் தெரிவித்த மாநில அரசு, 'எதுவானாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!' எனக் கேட்டுக்கொண்டது. தங்களிடம் இருந்த ஆதாரங்களை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு மாநில அரசுக்குச் சொன்னதும், சென்னை கோட்டையில் இருந்து மறுப்பு எதுவும் சொல்லப்படவில்லை' என்கிறார்கள்.
இந்தச் சோதனைக்கு அரசியல்ரீதியான காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதுபற்றி விவரமான வட்டாரங்களில் விசாரித்தோம். தங்கள் அடையாளங்களை மறைத்து நம்மிடம் பேசியவர்கள், ''அரசியல்ரீதியாக தன்னை எப்போதுமே வெளிப் படுத்திக்கொள்ளாத ஆதிபராசக்தி பீடத்துக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விசிறிகள்தான். முதலில் இந்தப் பகுதியில் பா.ம.க. வளரத் தொடங்கியபோது, இனரீதியாக அடிகளார் மீது பா.ம.க. பாசம் காட்டியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பா.ம.க-வின் ஏழு வேட்பாளர்களும் தனித்தனியாக அடிகளாரை சந்தித்து ஆசி வாங்கினார்கள். கூடவே தங்களுக்கு ஆதரவையும் வேண்டினார்கள். ஆனால், அப்போது அடிகளாரின் ஆதரவு தி.மு.க-வுக்குப் போனது. இதுவும் பா.ம.க-வின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம். இதையடுத்து, பா.ம.க-வின் மூத்த தலைவர் மேல்மருவத்தூரைச் சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு விசிட் அடித்து அடிகளாரைப்பற்றியும் அவரது பூர்வீகத்தைப்பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பேசினார். இன்னொரு பக்கம், தி.மு.க-வுடன் சாதகமாகவே இருந்தாலும், செம்மொழி மாநாட்டுக்காக ஒரு சிலர் கணிசமான தொகையையும் சில உதவிகளையும் கேட்க, அதற்கு மேல்மருவத்தூர் கோயில் செவிசாய்க்கவில்லை. இதுதான் சோதனைக்கு முதல் படி!'' என்றார்கள்.
டெல்லித் தலைவர்களுடன் நெருக்கம் பாராட்டும் சிலரோ, காஞ்சிபுரம் காங்கிரஸ் எம்.பி-யான விஸ்வ நாதன் மூலமாக, ப.சிதம்பரத்தையும் கோயில் தரப்பு தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால், 'எல்லாம் நடந்த பிறகு என்னால் எதுவும் செய்ய முடியாது!' என்று அவர் கை விரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
சோதனை மட்டும்தான் என்று உள்ளே நுழைந்த அதிகாரிகள், அடுத்தடுத்துக் கிடைத்த ஆதாரங்களை வைத்து அடிகளாரையே கைது செய்யும் எண்ணத்தில் இருப்பதாக மாநில உளவுத் துறைக்குத் தகவல் வர, கொதித்துவிட்டாராம் தமிழகத்துத் தலைவர். 'எனது ஆட்சியில் ஆன்மிகக் கைதுகள் இருக்கவே கூடாது. அது சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னை' என்று எச்சரிக்கும் தொனியில் பேசியதாகவும் தகவல்!
ஆனாலும் எந்நேரமும் கைதுப் படலம் இருக்கலாம் என்பதை எதிர்பார்க்கும் ஆதிபராசக்தி அறக்கட்டளை யினர் மாவட்டம்தோறும் இருக்கும் வழிபாட்டு மன்ற உறுப்பினர்களை செவ்வாடை உடுத்தி மருவத்தூருக்கு வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கைதுப் படலம் ஆரம்பமானால், இந்த செவ்வாடை பக்தர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்கிறார்கள்.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் பால்ய நண்பர்கள் வட்டாரத்திலும் பேசினோம்.
''சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் என்ற ஓர் ஊரையே அடையாளம் காட்டிய பெருமை அடிகளாரைத்தான் சாரும். அவரது குடும்பம் இந்தப் பகுதியில் செல்வாக்கான குடும்பம். அவரது முன்னோர்கள் பெரும் ரயில்வே ஒப்பந்தக்காரர்களாகவும், பெரும் நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். ஆனாலும், அடிகளார் படித்து ஆசிரியர் பணிக்குச் சென்றார். பக்கத்தில் இருக்கும் அச்சரப் பாக்கம், அமரம்பேடு ஆகிய ஊர்களில் ஆசிரியராக வேலை பார்த்த அடிகளார், பெற்றோர் பார்த்துவைத்த பெண் லட்சுமியை மணந்துகொண்டார். இவரும் ஓர் ஆசிரியை. 70-களில் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்த அடிகளார், அப்போதுதான் இந்தப் பகுதி மக்களுக்குப் பரிச்சயமானார். நெடுஞ்சாலை ஓரத்தில் புற்றுக் கோயிலாக இருந்த இடத்தில், 21 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடமாக அருள்வாக்கில் தெரிய வர, அதுதான் இன்று இவ்வளவு பெரிய ஆன்மிக சாம்ராஜ்யமாக விஸ்வரூபம் எடுத்தது.
ஆரம்பத்தில் சித்தர் பீடத்துக்கு வந்த பக்தர்களை, அன்னதானம், கண் நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கேட்டுக்கொண்டார். அதுதான் அவரது முதல் பொது வாழ்க்கைப் பணியாக இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் கூட்டம் குவிய, தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்தார் அடிகளார். அதன் பிறகு மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த நிதியில் முதலில் கல்வி நிலையங்களை அமைத்தார். மருவத்தூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, அவர்களை மதுராந்தகத்துக்கோ, செங்கல் பட்டுக்கோதான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். மருவத்தூரிலேயே பள்ளிகளைக் கட்டிய அடிகளார் அதன் பிறகுதான் தற்போதைய ஆலயத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். இப்போதும் தினமும் 9 மணிக்கு சரியாக கோயிலில் ஆஜராகிவிடும் அடிகளார், அம்மாவுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அருள்வாக்குச் சொல்லத் தவறுவதில்லை!'' என்றார்கள்.
சரி, வருமான வரித் துறை சோதனை, அடுக்கடுக் கான புகார்கள்பற்றி ஆதிபராசக்தி பீடம் என்ன நினைக்கிறது?
அடிகளாருக்கு அருகில் இருப்பவர்களிடம் பேசினோம். ''அரசியலுக்கும் எங்கள் ஆன்மிகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மாவின் (அடிகளாரின்) மகள் திருமணத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வந்திருந்தார். டாக்டர் ராமதாஸ் குடும்பத்தோடு வந்திருந்தார். தற்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்யாணம் முடியும் வரை அமர்ந்திருந்தார். இந்தக் கோயிலுக்கு, மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற சபா நாயகர்கள் என வந்தவர் களின் பட்டியலை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
தற்போது நடைபெற்று இருக்கும் சோதனையை நாங்கள் நன்மையாகவே எடுத்துக்கொண்டு இருக்கி றோம். எங்கள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை எவ்வளவு தூய்மையாக வைத்து இருக்கிறோம் என்பதற்கு இந்த சோதனைகளின் முடிவில் வரும் அறிவிப்புகளே சாட்சியாக இருக்கும். பல வருட உழைப்பில் உருவான கல்வி சாம்ராஜ்யத்தை முழுவதுமாகப் பரிசோதித்துப் பார்க்க பல மணி நேரம் தேவைப்படும். அவ்வளவு நேரமும் அம்மா அவர்கள் மிகவும் பொறுமையாக அதிகாரிகளோடு ஒத்துழைத்தார். எங்களிடம் எந்த அரசியல் கட்சியும் நிதி கேட்டதில்லை. நாங்களும் கொடுத்ததில்லை. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு நிதி கொடுக்காததால்தான் இந்த சோதனை என்று பரப்பப்படும் செய்திகள் வீண் வதந்திகள்தான். அதில் துளியும் உண்மை கிடையாது. மருவத்தூரில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் கட்டடங்களும் கல்வி நிறுவனங்களும் கோடானுகோடி பக்தர்களுக்கு சொந்தமானவை. அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும்தான் அம்மாவிடம் இருக்கிறது. மக்கள் கொடுத்ததை மக்களுக்காகவே பயன்படுத்தி வருகிறார் அம்மா!'' என்றார்கள்.
ஹ்ம்ம்ம்... இது மருவத்தூருக்கு வந்த சோதனை
source:vikatan