''சரத் ஹேவலாகே சரத் சந்திர ஃபொன்சேகா ஆகிய நான், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏழாவது ஷரத்தின் 31-வது பிரிவிற்கமைய, சட்டரீதியான அரசியல் கட்சியின் ஊடாக, அன்னப்பறவை சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன்!'' - இலங்கையில் ஜெய்ஹில்டன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஃபொன்சேகா இப்படி அறிவித்தபோது, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வயிற்றில் புளி கரைத்திருக்கும். அப்பாவித் தமிழர்களைக் கூட்டுப் போட்டு வேட்டையாடியவர்கள், இப்போது அரசியல் களத்தில் எதிரெதிரே சதிராடும் காட்சியைப் பார்க்க, உலகம் பளிச்சென்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது! இந்தியாவை ஜெயித்த ஃபொன்சேகா! இந்தியாவின் தெற்கே இருக்கும் குட்டித் தீவான இலங்கையின் அரசியலமைப்பை ஆள்வதென்னவோ... தற்போதைக்கு இந்திய ராஜதந்திரம்தான். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவினால், ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைக் காரணம் காட்டி, தற்காலிகமாக ராஜபக்ஷேவின் சீன சிநேகிதத் துக்கு தடை போட்டிருக்கிறது இந்தியா. ஃபொன்சேகா புயல், அலரி மாளிகையிலிருந்து தன்னை அகற்றிவிடுமோ என்ற பயம் பெருக்கெடுத்துவிட்ட நிலையில்... ராஜபக்ஷே மெதுவாக இந்தியாவின் சொல்பேச்சுக்குத் தலையாட்ட ஆரம்பித்துவிட்டார்! ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி என்றதுமே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்தது நம் மத்திய அரசாங்கம்.
ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ரணிலிடம், வேறு பல சமரசத் திட்டங்களை முன்வைத்தது இந்தியா. அதிபர் தேர்தல் முடிந்ததும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலையே பிரதமராக்க ராஜபக்ஷே தங்களிடம்(!) சம்மதித்திருப்பதாக இந்தியா சார்பில் சொல்லப்பட்டும், பிடி கொடுக்கவில்லை ரணில். அவர் இலங்கை திரும்பியதுமே, தனது அடுத்த கட்ட சித்து விளையாட்டுகளைத் தொடங்கியது இந்தியா. இலங்கையிலுள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத் மூலமாக ரணிலின் ஐ.தே. கட்சி முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. 'அதிபர் தேர்தலில் நிறுத்துவதற்கு நமது கட்சியில் வேட்பாளர்களே இல்லையா... ஃபொன்சேகாவை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?' என அவர்கள், ஐ.தே. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரணிலை நோக்கி விமர்சனம் கிளப்பினார்கள். 'ஃபொன்சேகா பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டால்... கட்சியையே உடைப்போம்!' என பகிரங்கமாகவே சில எம்.பி-க்கள் மிரட்டல் விடுத்தபோதும், எதற்கும் அசரவில்லை ரணில். இன்னொரு பக்கம், ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவந்த ஜே.வி.பி-யையும் விட்டுவைக் கவில்லை இந்தியா. அந்தக் கட்சியின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவரான அநுரகுமார திஸநாயக் கவிடம் ஃபொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதின் மூலம் ஜே.வி.பி-யின் அடிப்படை கொள்கையிலிருந்து மீறுவதோடு, தொண்டர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும் என வசமான ஆட்கள் மூலம் மிரட்டிப் பார்த்தது இந்தியா. அது வரை பொறுமையாக இருந்த ஜே.வி.பி., இந்த மிரட்டலுக்குப் பின், 'ஃபொன்சேகாதான் எங்கள் பொதுவேட்பாளர்; மற்ற கட்சிகளும் அவரை பொதுவேட்பாளராக ஏற்கவேண்டும்' என வெளிப்படையாக அறிவித்தது. இந்தப் பின்னணிக்கு இடையில்தான், அரசியல் களத்தில் கால் பதித்துவிட்டார் ஃபொன்சேகா. தோற்றது ஜூரிச் முயற்சி..! இலங்கைப் போர் வெற்றியின் ஹீரோவாகப் பார்க்கப்படும் ஃபொன்சேகாவால் முழுமையாக சிங்கள வாக்கு வங்கி உடையும் நிலையில், தமிழ் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு முழுமையாக விழுந்தால்தான் தனது வெற்றி சாத்தியமாகும் என கருதிய ராஜபக்ஷே, இதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தனது கூட்டணிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். கிட்டத்தட்ட இதே விஷயத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒரு புள்ளியில் கூடவைப்பதற்கான முயற்சியில் இறங்கியது இந்தியாவும். இது பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் சிலர், ''இலங்கையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணியில் இருந்த வரதகுமார் (வரதராஜ பெருமாள் அல்ல!) என்பவர் கடந்த 83-ம் வருடம் நடந்த இனக் கலவரத்தின்போது இந்தியா வந்துவிட்டார். அதன்பிறகு இந்திய அரசின் ஆதரவோடு வாழ்ந்த வரதகுமார், பின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார். இவர் தமிழர் தகவல் மையம் என்றொரு அமைப்பையும் நடத்துகிறார். இந்த அமைப்பின் சார்பாக இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அதன் மூலம் எல்லோரையும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாகத் திருப்பும்படி வரதகுமாருக்கு உத்தரவிட்டது இந்தியா. வரதகுமாரும் சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச் நகரில் மூன்று நாள் கூட்டம் ஏற்பாடு செய்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை அழைத்தார். அதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தலைவரின் செலவுக்காகவும் மூன்று லட்ச ரூபாய் பணத்தையும் வழங்கினார். கூட்டத்தில் சம்பந்தன், சேனாதிராஜா, மனோ கணேசன், ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டைமான், முத்துசிவலிங்கம், சந்திரசேகரன், சிவநேசத்துறை சந்திரகாந்தன், ரவூப் ஹக்கிம், பேரியல் அஸ்ரப், ஹிஸ்புல்லா உள்ளிட்ட 26 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்துவதற்கான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த இதன் நிகழ்ச்சி நிரலில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிப்பது என்றொரு விஷயமும் இடம்பெற்றிருந்தது. உடனே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், 'தமிழ் கட்சிகள் சார்பாக தனியாக ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தலாம்' என கருத்துத் தெரிவிக்க.... அரசுக்கு ஆதரவான டக்ளஸ் தேவானாந்தா அந்த நிகழ்ச்சி நிரலைக் கிழித்துவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு சலசலப்புகள் கிளம்பவும், 'தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடம் பொது இணக்கம் ஏற்பட நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், அதிபர் தேர்தல் தொடர்பான விஷயம் தேவையற்றது' எனக் கூறி அனைத்துத் தரப்பினருமே கூட்டத்தைப் புறக்கணிக்க... நிகழ்ச்சி நிரலில் அந்த விஷயம் நீக்கப்பட்ட பிறகுதான், கூட்டம் நடந்தது. அதன் பிறகு தனித்தனியாக பல கட்சிகளிடமும் பேசிப் பார்த்தும், யாரும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு தர விருப்பம் காட்டவில்லை! தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபடி மேலே போய், 'தேர்தலில் யாரை ஆதரிப்பது என இது வரை முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகளின் சார்ப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதே எங்கள் யோசனை!' என்றனர். மொத்தத்தில், ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக இந்தியா கூட்டிய கூட்டம் எதிர்பார்ப்புக்கு மாறாக முடிந்தது!'' என்றார்கள். 'அதிகாரம் இழக்க மாட்டேன்!' அதிபர் தேர்தலில் ஃபொன்சேகாவை பொதுவேட் பாளராகக் களமிறக்க நான்கு கண்டிஷன்கள் போட் டிருந்தார், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில். அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை பதவியேற்ற ஆறு மாதத்தில் ஒழிப்பது என்பது முக்கியமான கண்டிஷன். முதலில் இந்த கண்டிஷன்களுக்கு ஓகே சொன்ன ஃபொன்சேகா பிறகு, 'ஆறு மாதத்தில் அந்த முறையை ஒழித்துவிட்டால், அதன் பிறகு நான் அதிபர் நாற்காலியில் இருந்துதான் என்ன பயன்?' என்கிற ரீதியில் கருத்துத் தெரிவித்தார். இதனால் ரணிலே அதிபர் தேர்தலில் களமிறங்குவார் என்றொரு சூழலில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் இருவரையும் சந்தித்துப் பேசினர். இந்தச் சூழலில்தான் ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக அறிவிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் அறிவித்தது. பொது எதிரி ராஜபக்ஷேவை ஒழிப்பதே நமது குறிக்கோள் என இருவரையும் சமாதானப்படுத்தி, பொது வேட்பாளராக ஃபொன்சேகாவை களமிறக்க ஏகமனதாக முடிவெடுத்தனர். இதற்கிடையில், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக பொதுமக்களிடம் பரபரப்பைக் கிளப்பி வருகிறார் ஃபொன்சேகா. அரசாங்கம் தனது வீட்டை காலி செய்யச் சொன்னது தொடர்பாகவும், பாதுகாப்பைக் குறைத்தது தொடர்பாகவும் அரசின் முடிவுகளை எதிர்த்து அடிப்படை உரிமைச் சட்ட அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஃபொன்சேகா. அதோடு அவர், 'ராஜபக்ஷேவும், கோத்தபயவும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி, தன்னை முழு எதிரியாகப் பார்ப்பதாகவும், நாட்டுக்கு 40 ஆண்டு கால சேவையாற்றிய என் விஷயத்தில் இப்படியான ஒரு நிலையை இவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டாம். மீடியாக்களைக்கூட நான் தொடர்புகொள்ளக் கூடாது என கட்டாயப்படுத்துவது எப்படி நியாயம்?' என்றும் கொதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவரை வழிமறித்த பத்திரிகை யாளர்கள், 'அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், உங்களால் வெற்றி பெற முடியுமா?' என கேட்க.... 'என் வாழ்வில் இது வரை எந்த விஷயத்திலும் நான் தோற்றதில்லை!' என சிரித்தபடியே பதில் சொன்ன ஃபொன்சேகா, 'முக்கியக் கட்சிகள் எல்லாம் அதிபர் தேர்தல் தொடர்பான தங்களது நிலையை விளக்கி வருகின்றன. நானும் 29-ம் தேதி மாலை எனது நிலையை தெளிவாகக் கூறுவேன். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை செய்யும் பணிகளில் ஈடுபடுவேன்' என சஸ்பென்ஸாக கூறி, மொத்த இலங்கையையும் பரபரப்பின் பிடிக்குள் தள்ளினார். தமிழ் ஆடுகள்... திடீர் கேடயம்! அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதை அறிவிக்கும் முன்னரே ராஜபக்ஷே சகோதரர்கள் மீது சரவெடி தாக்குதல் தொடங்கியிருந்தார்ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷே தமிழ் வாக்குகளை குறிவைப்பதை உணர்ந்தவர், கொழும்பில் கடந்த 27-ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், ''இறுதிக்கட்டப் போரில் தமிழர்களை கொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அதிபரின் சகோதரரான கோத்தபயதான் இறுதிக்கட்டப் போரை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவிக்க எனக்கு உத்தரவிட்டார்!'' என ஒரு குபீர் குண்டை வீசினார். உடனே பதறிய ராஜபக்ஷே தரப்பு, அவசரமாக தனது அமைச்சர்களை வைத்து இந்த விஷயத்தை மறுத்தது. அதற்கடுத்த தினம், ''இது வரை இலங்கையில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். யாராலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற முடியவில்லை! நான் ராணுவத் தளபதியான பிறகுதான் புலிகளுடனான போரில் முழு வெற்றி கிட்டியது. அதனால் இந்த வெற்றிக்கு அரசியல்வாதிகள் யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது!'' என ராஜபக்ஷேவை சீண்டினார் ஃபொன்சேகா. அதோடு, 'போரில் எண்ணற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது உண்மைதான்!' என மற்றொரு குண்டையும் வீசியிருக்கிறார். 'விடுதலைப் புலிகளோடு அப்பாவித் தமிழர்களையும் ஆட்டுக் கூட்டத்தை வேட் டையாடும் ஓநாயாக சிதைத்துத் தீர்த்துவிட்டு, இப்போது தன்னை மட்டும் தற்காத்துக் கேடயம் பிடிக்கிறாரே' என்று தமிழ் உணர்வாளர்கள் அதிர்ந்துபோய்ப் பார்க்க... முன்னாள் தளபதி மனசாட்சிக்கு வேலை கொடுப்பதாக இல்லை. தொடர்ந்து அவரது சரமாரியான இந்தத் தாக்குதல்களால் திக்குமுக்காடிய ராஜபக்ஷே தரப்பு, தனது ஆதரவு அமைப்பு மூலமாக ஓர் அறிக்கை வெளியிட வைத்தது. இந்த அமைப்பின் தலைவரான குணதாச அமரசேகர, ''ஃபொன்சேகா எமது நாட்டு ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறார். யுத்தகாலத்தின் ராணுவ ரகசியங்களை வெளியிடுவது நல்லதல்ல. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்தான் இப்படியான செயல்களில் ஈடுபடுவார்கள். அமெரிக்காவின் தூண்டுதலோடுதான் ஃபொன்சேகா இப்படியெல்லாம் செயல்படுகிறார்...'' என பத்திரிகைகளிடம் பொங்கித் தீர்த்தார். இன்னொரு பக்கம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஃபொன்சேகாவுக்கு விழும் வாக்கு களைச் சிதறடிப்பதற்காக இடதுசாரி கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்சணாவை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ராஜபக்ஷே தரப்பு. அதோடு, தேர்தலில் வாக்காளர்களைக் குழப்ப, சரத் என்ற பெயரில் வேறு ஒருவரையும் களமிறக்க எண்ணமாம்! அதிரடி வள்ளல் அவதாரம்! நவம்பர் 29-ம் தேதி, ஜெய்ஹில்டன் ஹோட்டலில் தனது முதல் அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் ஃபொன்சேகா. இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள சுமார் 300 பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த அந்த சந்திப்புக்கு பளீர் வெள்ளை பைஜாமாவில் 'பச்சை' சிரிப்புடன் வந்திறங்கினார் மாஜி தளபதி. 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் வாயிலாக 'அன்னம்' சின்னத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதாக' அறிவித்தவர், அடுத்தடுத்து விட்ட ஸ்டேட்மென்ட்கள் பத்திரிகையாளர்களையே அதிர வைத்திருக்கிறது. ''எந்த ஒரு விஷயத்திலும் நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும் இயற்கை! அந்த வகையில் ராஜபக்ஷே எனக்கு விரோதியாகியிருக்கிறார். புலிகளுக்கு நான் நண்பனாகியிருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற எவர் எனக்கு ஆதரவளிப்பினும் ஏற்றுக் கொள்வேன். பிரபாகரனின் தாய் - தந்தையர் ஆதரவளித்தால், அதையும் ஏற்றுக் கொள்வேன். புலி ஆதரவாளர்களும் நண்பர்களும் என்னை ஆதரிக்க பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டும். தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக எல்லாரும் 13-வது சட்டத் திருத்தத்தைத்தான் சொல்கிறார்கள். அது 20 வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தமிழ் மக்களுக்கு பெரிதாக என்ன கிடைத்துவிடப் போகிறது? அன்றிருந்த நிலைமையும் இப்போதைய நிலைமையும் வேறு. கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்பன போன்ற உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் 13-வது சட்டத் திருத்தத்துக்கும் மேலான நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்து நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பு கொடுக்கக் கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்' என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்! மேலும், 'வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மக்களை இந்த அரசாங்கம் கவனிக்கும் விதத்தைப் பொறுத்த வரை எனக்குத் திருப்தி இல்லை. சுமார் மூன்று லட்சம் மக்களை பெரும் சிரமத்துக்கிடையில் மீட்டுள்ளோம். இருப்பினும் அந்த மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்கள் இப்படியரு துன்பத்தை அனுபவிக்க நேரும் என நான் நினைக்கவில்லை. இந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதுடன் அவர்களை எந்தச் சிரமமுமின்றி மீள்குடியேற்றம் செய்வதுதான் எனது முதல் பணி'' என தமிழர்களை வாழ்விக்க வந்த வள்ளலாகவே வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருக்கிறார்! 'துன்பக்கேணியில் அல்லாடும் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை, தரையில் ஓநாய்.... தண்ணீரில் முதலை... இதில் யார் கழுத்துக்கு அவர்கள் ஓட்டு மாலை சூட்டுவது?' என்பதுதான் இலங்கை பூமியில் எழுந்திருக்கும் முதல் தேர்தல் கேள்வி! |