20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை:ஆங் சான் சூகி 13ம் தேதி விடுதலை
>> Wednesday, November 10, 2010
யாங்கூன் : மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வரும் 13ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு ராணுவ அரசு தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காக போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.,) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு ராணுவ அரசை வற்புறுத்தி வந்தன. இந்நிலையில், அங்கு கடந்த 7ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஆங் சான் சூகி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. பொதுத்தேர்தலில் ராணுவ அரசுக்கு ஆதரவான ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங் சான் சூகி வரும் 13ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் ஜனநாயகத்துக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்ட பின், நாட்டின் அரசியல் நிலை மாறுமா என்பது இப்போது கணிக்க முடியாது. மேலும் இத்தேர்தலில் ராணுவ ஆட்சியாளர்கள், பார்லிமென்டின் இரு சபைகளிலும் 77 சதவீதத்திற்கு மேல் உள்ள இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன source:dinamalar
--
http://thamilislam.tk