சமீபத்திய பதிவுகள்

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'

>> Thursday, April 14, 2011



"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.


புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.


பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:


* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.


* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.


கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.


* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.


சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.


தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.


நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.


இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP