சமீபத்திய பதிவுகள்

விண்வெளியில் உங்களின் "முகம்' மிதக்க ஆசையா?

>> Sunday, September 19, 2010


விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.


விண்வெளி வீரர்கள் போல, விண்வெளியில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு "விண்வெளி சுற்றுலா' திட்டத்தை வெளிநாடுகளில், பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  இந்த விண்வெளி சுற்றுலா திட்டம், வரும் 2012ம் ஆண்டு முதல்  செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், சாமான்யர்கள் இச்சுற்றுலாவில் தற்போது பங்கேற்க முடியாது. காரணம், இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டணம் தான்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் விண்வெளிச் சுற்றுலாவிற்கு 90 லட்ச ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது. இதற்கு சம்மதித்து, கிட்டத்தட்ட 300 பேர் முன் பணம் கட்டியுள்ளனர்.


 இந்நிலையில், விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது."பேஸ் இன் ஸ்பேஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும். இத்திட்டத்திற்காக, "பேஸ் இன் ஸ்பேஸ்' என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள், அதை இந்த இணையதளத்தில் "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும்  பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும்.


"பேஸ் இன் ஸ்பேஸ்' திட்டம் குறித்து, திட்ட மேலாளர் ஜான்ஷான்னான் கூறுகையில், "இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர்  மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை  பதிய வைக்கும்' என்றார்.


அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள், விண்வெளி சுற்றுலாவிற்கு ஏற்ற  உடல்நிலை, வயது இல்லாதவர்கள், நாசாவின் இந்த "பேஸ் இன் பேஸ்' திட்டத்தின் மூலம் தங்களின் விண்வெளி சுற்றுலா குறித்த ஆவலை ஓரளவிற்கு பூர்த்தி செய்து கொள்ளலாம். நாசாவின் இத்திட்டத்திற்கு அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.


பொதுமக்களுக்கு இதுதான் முதல் முறை : விண்வெளியில் பெயர்களை மிதக்கவிடும் திட்டங்கள் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1977ம் ஆண்டு, தொடக்க கல்வி மாணவர்களின் கையெழுத்துக்கள், "விண்வெளியில் மாணவர்களின் கையெழுத்து' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. "காசினி' விண்வெளி ஓடத்தின் மூலம், சனி கிரகத்தின் வெளிவட்ட பாதையிலும், "போனிக்ஸ் மார்ச் லேண்டர்' என்ற விண் ஓடத்தின் மூலம் செவ்வாய் கிரக வட்டப்பாதையிலும், மற்றொரு விண்கலம் மூலம் சந்திரனின் வெளிவட்ட பாதையிலும் இந்த கையெழுத்துக்கள் "டிவிடி' டிஸ்க்குகள் மூலம் மிதக்கவிடப்பட்டன.


இந்த வகையில் "வாயேஜர் 1' என்ற விண்கலம் மூலம், "போனோகிராப் ரிக்கார்டு' முறையில் பதிவு செய்யப்பட்ட  முத்தம், தாயின் அன்பான அரவணைப்பு, பூமியில் எழும் பல்வேறு வகையான சத்தங்கள் அடங்கிய டிஸ்க் விண்வெளியில் பறக்கவிடப்பட்டது. ஆனால், நாசா அறிமுகப்படுத்தியுள்ள "பேஸ் இன் பேஸ்' என்ற திட்டம் தான், பொதுமக்களும் தங்கள் புகைப்படங்களை விண்ணில் மிதக்கவிடும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. விண்வெளி வரலாற்றில் இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP