"ஜப்பானுக்கு' நுரையீரல்; "இந்தியாவுக்கு' இதயம், கல்லீரல் : உடல் உறுப்பு தான பரிமாற்றத்தால் பரபரப்பு
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஆந்திர வாலிபரின் நுரையீரல், ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கும், இதயம் மும்பை நகை வியாபாரிக்கும், கல்லீரல் சென்னை கார்பென்டருக்கும் நேற்று "ஆபரேஷன்' மூலமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த உடல் உறுப்புகளின் அதிவேக பரிமாற்றத்தினால் சென்னை சாலைகளில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலைகள் நேற்று காலையில் மிகுந்த பரபரப்பாக இருந்தது. போக்குவரத்து போலீசாரும் தானியங்கி சிக்னல்களை நிறுத்தி வைத்து விட்டு, வழக்கத்திற்கு மாறாக பதட்டத்துடன் போக்குவரத்தை சீரமைத்து கொண்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் அனைத்து சிக்னல்களையும் வேகமாக கடந்து சென்றது. அதை பின் தொடர்ந்து கறுப்பு நிற "ஸ்கார்பியோ' கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மின்னல் வேகத்தில் சென்றது.வேடிக்கை பார்த்த பொதுமக்கள், ஆர்வமாக போக்குவரத்து போலீசாரிடம் விசாரித்தனர். உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்கின்றனர் என அவர்கள் கூறினர்.
அதன் பிறகு விசாரித்த போது கிடைத்த விவரங்கள் வருமாறு:ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் காடி தமோதி (20). சென்னையில் பணிபுரிந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவை இழந்திருந்த காடி தமோதியை டாக்டர்கள் குழு சோதித்த போது, அவருக்கு மூளைச்சாவு (பிரைன் டெட்) ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். தங்களை தேற்றிக்கொண்டு, பெருந்தன்மையுடன் காடி தமோதி உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்பவர்கள், அதை பெறப்போகும் நபர்களின் விவரங்களை சேகரிக்க, அரசால் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் அமலோர் பவநாதன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் இருவர் அந்த உறுப்புகளை தானமாக பெற தகுதியுடையவர்கள் என தெரிந்தது.காடி தமோதியின் உடல் உறுப்புகளை அவர்களுக்கு கொடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. நேற்று, காடி தமோதியின் உடல் உறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. குறித்த நேரத்திற்குள் இதயம் மற்றும் நுரையீரலை பாதிக்கப்பட்டவர்கள் உடலில் பொருத்த வேண்டும் என்பதால், சென்னை போக்குவரத்து போலீசாரின் உதவி கேட்கப்பட்டது. அதன்படி முகப்பேர், பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனை டாக்டர்கள் குழு, நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை வந்தது. பூக்கடை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ஜீப்பில் தயாராக நின்றிருந்தனர்.உடல் உறுப்புகளை எடுத்து செல்ல "ஏசி' வசதியுள்ள "ஸ்கார்பியோ' கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு எடுத்து வரப்பட்டது.
காடி தமோதி உடலில் ஆபரேஷனை துவக்கிய டாக்டர்கள் சரியாக காலை 10:08 மணிக்கு இதயம் மற்றும் நுரையீரல்களை பிரித்தெடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து பெட்டியுடன் வெளியேறிய டாக்டர் குழு "ஸ்கார்பியோ' காரில் ஏறியது. சரியாக 10:10 மணிக்கு அந்த வாகனங்கள் புறப்பட்டன. போக்குவரத்து போலீஸ் "ஜீப்' முன் செல்ல அதை தொடர்ந்து "ஸ்கார்பியோ' கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக சென்றது.பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்ற அந்த வாகனங்கள் அடுத்த சில நிமிடங்களில் அண்ணா "ஆர்ச்' சந்திப்பை அடைந்தது. அங்கிருந்து வலதுபுறம் திரும்பி அண்ணா நகர் ரவுண்டானா நோக்கி விரைந்தது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி அண்ணா நகர், 12வது அவென்யூ சாலை வழியாக திருமங்கலம் நூறடி சாலையை அடைந்தது. அந்த சாலையில் ஓரிரு வினாடி பயணித்து அம்பத்தூர் - திருமங்கலம் சாலை வழியாக முகப்பேர் பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை 10:22 மணிக்கு அடைந்தது.
சரியாக 12 கி.மீ., தூரம் பயணித்த இதயம் மற்றும் நுரையீரல் "ஆபரேஷன்' தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. தயாராக இருந்த மருத்துவமனையின் தலைவர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர்.நுரையீரல்கள், ஜப்பான் நாட்டை சேர்ந்த கட்டட தொழிலதிபர் சோதி சகேதா (67), இதயம், மும்பையை சேர்ந்த நகை விற்பனையாளர் வினோத் ஜெயின் (42) ஆகியோருக்கு வெற்றிகரமாக 6 மணி நேரத்தில் பொருத்தப்பட்டது. இதேபோல காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.
இது குறித்து பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டில் ஏராளமானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் நுரையீரல் தொடர்பான ஆபரேஷன்கள் நாட்டில் அதிகம் செய்வதில்லை. கடந்த 1997ம் ஆண்டு டாக்டர் செரியன் இந்த ஆபரேஷனை முதல் முறையாக செய்துள்ளார். தற்போது மருத்துவத்துறையில் நவீன வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ள நிலையில், நுரையீரல் ஆபரேஷன் செய்யப்படுகிறது.நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாரும் இந்தியாவில் இருந்து பதிவு செய்யாததால் ஜப்பான் நாட்டை சேர்ந்தவருக்கு அவை பொருத்தப்பட்டுள்ளது. அவர் கடந்த 25 நாட்களாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருபக்க நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரையும், இரண்டு பக்க நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு எட்டு லட்ச ரூபாய் வரையும் செலவாகும். இதயம் மாற்று ஆபரேஷனுக்கு ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், அதன் பிறகு 15 நாட்கள் வரை சாதாரண வார்டிலும் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவர்களுக்கு முதலில் நாள்தோறும், அதன் பிறகு 3 நாட்கள், 5 நாட்கள், வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என மருத்துவ சோதனை செய்யப்படும். உலகத்தில் மூன்று முறை ஒரே நேரத்தில் இரண்டு உடல் உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தற்போது நான்காவது முறையாக சென்னையில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.
இதயம் மற்றும் நுரையீரலை வேகமாக எடுத்து சென்ற பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் டிரைவர்களான, வில்லிவாக்கம் சீனிவாசன் (33), நாகர்கோவில் கிருஷ்ணன் (32) கூறியதாவது:உடல் உறுப்புகளை எடுத்து செல்வதற்காக அதிகாலை 4 மணி முதல் அரசு மருத்துவமனையில் காத்திருந்தோம். எந்த நேரத்திலும் உடல் உறுப்புகள் வாகனத்திற்கு எடுத்து வரப்படலாம் என்பதால் உணவு சாப்பிடவும், சிறுநீர் கழிக்கவும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து போலீசார் சிக்னல்களை நிறுத்தி வைத்து இயக்கிதால் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சென்று உடல் உறுப்புகளை கொண்டு சேர்த்தோம். எங்களால் இருவர் உயிர் பிழைத்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
source:dinamalar
--
http://thamilislam.tk
Read more...