பால் பாயசம்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி, பால் - இரண்டு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து, பால் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும்.
குறிப்பு: சாதாரண அரிசியைவிட, பாசுமதி அரிசியில் செய்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.
அவல் பாயசம்
தேவையானவை: அவல் - ஒரு கப், பால் - அரை லிட்டர் (காய்ச்சி, ஆற வைக்கவும்), சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: நெய் விட்டு அவலை லேசாக சிவக்க வறுத்து, ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அவலைத் தூவி, கிளறி வேகவிடவும். வெந்ததும் பாலை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்
ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
தேங்காய்அரிசி பாயசம்
தேவையானவை: அரிசி - அரை கப், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு, பால் - அரை லிட்டர்.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைக்கவும். அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடலாம். வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கிப் போடலாம். பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும்.
பைனாப்பிள்|பருப்பு பாயசம்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், பைனாப்பிள் - 2, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, பால் - 1 லிட்டர் (காய்ச்சி ஆற வைக்கவும்).
செய்முறை: பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவிடவும். வெந்த பருப்புகளுடன் வெல்லம் சேர்த்துக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி... ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு சேர்க்கவும். காய்ச்சிய பாலை இதில் விட்டுக் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.
குறிப்பு: பருப்பு, பால், பைனாப்பிள் என மணமும், ருசியும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாயசம். விருப்பப்பட்டால், சிறிது பாதாம், முந்திரியை அரைத்துச் சேர்க்கலாம்.
மசால் வடை
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, மிளகு - 10, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதில் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு சட்னி (அ) சாம்பார் பிரமாதமாக இருக்கும். மணக்கும் இந்த வடை, மழைக்காலத்துக்கு ஏற்ப மொறுமொறுவென்று இருக்கும்.
வெஜிடபிள் வடை
தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்.
மிளகு வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, மிளகு - 15, காய்ந்த மிளகாய் - இரண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரை மணி நேரம் உளுத்தம்பருப்பை ஊற வைக்கவும். பிறகு களைந்து, தண்ணீரை வடிகட்டி... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மிளகு, இஞ்சி வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.
தானியம்-பருப்பு வடை
தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய சோளம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், பூண்டுப்பல் - 4, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் சோளம், கொள்ளு, பாசிப்பயறு சேர்த்து... பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு போட்டு கெட்டியாக அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: புரதச்சத்து நிறைந்த வடை இது. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, வேக வைத்து குழம்பும் தயாரிக்கலாம். சிறிய குணுக்குகளாகவும் உருட்டிப் போட்டு பொரித்து சாப்பிடலாம்.
வாழைப்பூ வடை
தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - இரண்டு கைப்பிடி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி போட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அரைத்த மாவில் போட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இது லேசான துவர்ப்புச் சுவையில் இருப்பதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. இதே முறையில் வாழைத்தண்டை சேர்த்தும் செய்யலாம்.
கல்கண்டு பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, கல்கண்டு - அரை கிலோ, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மசிக்கவும். சூட்டில் கல்கண்டு கரைந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டுக் கலக்கவும்.
குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
ரவா பொங்கல்
தேவையானவை: ரவை - கால் கிலோ, முந்திரிப்பருப்பு, மிளகு - தலா 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். ரவையின் அளவில் நான்கு மடங்கு தண்ணீர் எடுத்து, நன்றாகக் காய்ச்சி, கொதிக்க விட்டு... அதில் ரவையைப் போட்டுக் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொடித்த மிளகு-சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை தனித்தனியே வறுத்து, எல்லாவற்றையும் வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதற்கு வெங்காய சட்னி சூப்பர் சைட் டிஷ்! கோதுமை ரவையிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.
வெண் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, பாசிப்பருப்பு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த மிளகு - சீரகம் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் அரிசியைப் போட்டு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பையும் சிவக்க வறுக்கவும். அரிசியும் பருப்பும் கலந்து, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு மடங்குக்கு 4 மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். பொடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, வெந்த பொங்கலில் சேர்க்கவும். கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போடவும். உப்பு சேர்த்து, நன்றாக மசித்து, மேலாக நெய் விட்டுக் கலக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி வேக வைத்த சாதத்தில் விட்டு மசித்து, சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டுக் கலக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: அரிசியை ரவை போல உடைத்து வேக வைத்தால் சீக்கிரம் குழையும். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொடுக்கலாம். பாலுடன் பழங்களும் சேரும்போது, ருசி அபாரமாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: அரிசி, பாகு வெல்லம் - தலா கால் கிலோ, பால் - 2 கப், நெய் - 100 கிராம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அரிசியுடன் பாலும், தண்ணீரும் கலந்து சேர்த்து (அரிசி அளவில் நான்கு மடங்கு இருக்க வேண்டும்), குக்கரில் வைத்து, ஆறு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்துக் கலக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு: சர்க்கரைப் பொங்கலுடன் சிறு வாழைப் பழத்துண்டுகள், பொடியாக நறுக்கிய பலாச்சுளை ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.
source:vikatan
--
http://thamilislam.tk
Read more...