செம்மொழி மாநாட்டை ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்கான குரலாக ஒலிக்கசெய்யுங்கள் -விடுதலைப்புலிகள்
>> Monday, June 21, 2010
ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம்.
அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
தலைமைச் செயலகம், தழிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 15-06-2010
தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 - 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.
1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.
செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.
இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண்மீட்புக்கானதும் மொழிக்காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட்கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத்தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர்.
குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக்கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் "தமிழ்ப்பெயர்க் கையேடு - மக்கட்பெயர் 46,000" என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது.
இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு.
தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் "இருப்போடு" தொடர்புபட்டது என்றவகையில், தமிழ்மொழியைப் பேசும் ஓர் இனக்குழுமத்தின் இருப்பை உறுதிசெய்வது அனைவரினதும் கடமையாகும்.
ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக்கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு.
இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.
அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.
நன்றி.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
--
http://thamilislam.tk